நூல் : ரெட் இங்க்
ஆசிரியர் : சக. முத்துக்கண்ணன்
விலை : ரூ.₹95
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]
பிள்ளைகளின் குதூகலத்தில் கொண்டாடி மகிழவும் அவர்களின் மனரீதியான அழுத்தங்களுக்காகச் செவிசாய்க்கவும் குழந்தைகளோடு குழந்தையாக பின்னிப்பிணைந்து ஒட்டி உறவாடவும் உள்ளார்ந்த பிணக்குகளைக் களையவும் என மழலை உலகின் மற்றுமொரு இனிய உறவாக அவர்களின் மனதில் உயர் மணி மகுடம் சூடி நிற்கும் மாண்பு ஆசிரியர் பெருமக்களையே சாரும். அதிலும் ஒரு தேர்ந்த பக்குவம் கொண்ட ஆசிரியர் ஒருவர்போதும், பள்ளி என்னும் நந்தவனத்தை மலர்களால் பூத்துக் குலுங்கச் செய்யதிட. உறவுகள் ஆயிரம் இருந்த போதிலும் பிள்ளைகளின் மானசீக நாயகர்களாக முன்மாதிரியாக இலக்காக எப்போதும் இருப்பது ஒரு ஆசிரியர் மட்டுமே. அனைத்து உறவுகளாகவும் ஒரு ஆசிரியர் பிள்ளைகளுக்குள் வாழ்ந்து விட முடியும் என்பதே உண்மை. ஆதலால் மட்டுமே ஆசிரியர் என்கிற உன்னத உறவை செகண்ட் மதர் ஆஃப் த சைல்டு second mother of the child. என்று வழங்கி வருகின்றனர். தாய்மையின் பேரூற்றை ஆசிரியரின் அரவணைப்பில் ஒரு பிள்ளை நிச்சயம் நீந்திக் களைப்பார முடியும்.தலைசிறந்த ஆசிரியர்களால் மட்டுமே பார்போற்றும் ஆகச் சிறந்த குடிமக்களை ஒரு தேசத்திற்கு உருவாக்கி வழங்கிட முடியும். பெற்றோர் கைவிடுத்து உறவுகள் புறக்கணித்து சுற்றம் ஒதுக்கி வைத்து நிலைக்குலைந்து நிற்கும் ஒரு பிள்ளையை அன்பான பாசமான ஆசிரியரால் இறுகப்பற்றி நெஞ்சோடு சேர்த்துக் கொண்டு உயரிய எதிர்காலத்தை நோக்கி கொண்டுச் சேர்த்திட முடியும். என்கிற ஒட்டு மொத்த ஆசிரியர் நல்லுள்ளங்களின் சார்பாக தோழர் முத்துக்கண்ணன் “ரெட் இங்க்” வழியே அனைத்து பிள்ளைகளுக்கும் நன்னடத்தை சான்றிதழில் கையொப்பமிட்டு வழங்குகிறார்.
ரெட் இங்க் இரண்டு வெவ்வேறு காலங்களை என் நினைவிற்குள் கொண்டு வருகிறது. ஒன்று என் மாணவப் பருவத்தை மீட்டுருவாக்கம் செய்யவும், அதே வேளை நிகழ்கால ஆசிரியர் பணியின் அனுபவங்களைப் பக்கங்கள் வழியே கடத்தியும் செல்கிறது.
த மு எ க ச வின் போடி பாலன் நினைவு சிறுகதைப் போட்டியில் பரிசுப் பெற்ற முதல் அத்தியாயம் “அவனே சொல்லட்டும்” முருகேசுவின் விளங்காத காலுக்கு ஆசிரியர் தந்தையின் இடத்தைத் தனதாக்கிக் கொண்டு எண்ணை போட்டு நீவிவிடும் போது ஒரு ஆசிரியராக மட்டும் இருந்திடாது தந்தைமையின் முழுமையாகவே தெரிகிறார். இன்றும் கிராமப்புறங்களில் ஒரு ஆசிரியருக்கு வழங்கப்படும் மரியாதையில் ஒருபோதும் குறைவிருக்காது. நகரத்து வாழ்வில் காணக் கிடைக்காத ஒன்று மதிப்பும் மரியாதையும். அது ஆசிரியர்களுக்கே உரித்தானது. பூர்வ குடி மக்களின் இயல்பு அதிலும் நம் ஆசிரியர் முத்துக்கண்ணன் போன்ற ஆகச் சிறந்த ஆசிரியர் அந்த ஊருக்கு மட்டுமே வாய்த்த அருமையான ஆசிரியர் என்று சிலாகிக்கலாம்.
திறமையும் அறிவும் இருந்தும் கூட பல நேரங்களில் வாய்ப்பும் சூழலும் தட்டிவிடும் என்பதை ஆசிரியர் தகுதித் தேர்வின் போது உடன் தேர்வு எழுதிய சகதோழன் அறிவிலும் தமிழிலும் மேம்பட்ட குமரேசன் பற்றிய “வாத்தியார்கள் தினம்” அத்தியாயத்தில் உருக்கமாக கூறியுள்ளது ஒரு ஆசிரியராக குமரேசனின் இழப்பையும் தமது தேர்ச்சிக்குப் பின்பாக நண்பனை சந்திக்கவும் பேசவும் விசனப்படும் ஆசிரியரின் மனநிலையும் உணர முடிகிறது. தனியார் பள்ளியில் வேலைக்கு போக மறுக்கும் குமரேசன், தந்தையின் பெயிண்டிங் வேலையைத் தனதாகிக் கொண்ட அந்த முடிவு என்னை நெகிழ்த்தியது.
தொடரும் காலங்கள் நண்பனை சந்தித்திர முடியாத சங்கடங்கள் அடுத்த தேர்விலும் மீண்டும் தோல்வி என ஒரு சிறந்த அறிவார்ந்த ஆசிரியரை மாணவச் சமூகம் இழந்தது ஆசிரியருடன் எங்களுக்கும் பெரும் வருத்தம்.
தொடரும் அத்தியாயம் “கீச் கீச்..” எனை வெகுவாக ஈர்த்தும் ரசிக்க வைத்தும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது. நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த ஒரு அத்தியாயம் என்று சொல்லலாம். காரணம் ஒரு ஆசிரியராக இதில் எனக்கும் அனுபவம் உண்டு மலரும் நினைவுகளாய் .சில ஆண்டுகள் முன் என் பிள்ளைகளின் சேட்டைகள் கூடிய கட்டத்தில் பள்ளியில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இன்றும் மறக்க முடியாது அந்த தருணங்களை.
கோழிக்குஞ்சுகளுக்காக பாடப் புத்தகங்களை எடைக்குப் போட்ட பிள்ளைமை சேட்டை தைரியமும் ஒருவித துணிச்சலும் பாம்பிற்கும் அஞ்சாத பிள்ளைகளின் இயல்பை நமக்கு உணர்த்துகிறது.
“நாலஞ்சு பேர் தமிழ் புஸ்தகத்தையும் போட்ருக்கானுங்க சார்.நோட்ஸ் இருந்ததால போதும்ன்னு விட்டேன்.”
என்கிற தமிழ் ஐயா போன்ற நல்ல ஆசிரியரும் தேவையற்ற விஷயத்தில் தலையிடாது பிள்ளைகளின் நலன் மட்டுமே அக்கறை காட்டும் கணக்கு டீச்சரும் இதே ஆசிரியர் சமூகத்தை உயர்த்தியும் பிள்ளைகளின் மனதில் உயர்ந்தும் மனிதத்தில் சிறந்தும் வாழ்கின்றனர் என்பதை ஆசிரியர் முத்துக்கண்ணன் சுட்டிக் காட்டுகிறார். விரல் விட்டு என்னும் அளவீடுகளிலேயே உன்னதங்கள் உண்டு என்பதும் ஒரு புறம் இருந்தும் இதே நல்லுள்ளங்கள் இந்த ஒரு சில ஆசிரியர்களுடன் நின்றுவிடவில்லை ஆசிரியர் முத்து கண்ணனின் பார்வையில் தொடர்கின்றன மேலும் சில தாயுள்ளங்கள் என்பதை அத்தியாயங்கள் மேடையேற்றுகின்றன.
“நைட் இவ்ளோ நடந்திருக்கு அவன் ஏன் ஸ்கூலுக்கு ஓடி வரனும்..”
என்கிற பாமா டீச்சரின் உளவெதும்பல் கேள்விகளாக “டிராப் அவுட்” அத்தியாயம்.. பத்து வயதே நிரம்பிய கார்த்தியின் உளவியலை சற்றே துணுக்காக உணர்ந்து மறுபடி மறுபடி புலம்பிய அந்த சம்பவத்தை ஆசிரியர் எழுதியுள்ளது பெற்றோர்களாலும் உறவுகளாலும் சமூகத்தாலும் நெருக்கமானவர்களாலும் கூட உணர முடியாத ஒரு பிள்ளையின் ஊமை மொழி வீட்டில் கிடைக்காத நிம்மதியும் அமைதியும் அன்பும் அங்கு அவனை பேரச்சத்தில் இருள் சூழ்ந்த கானகத்தில் தனித்து விடப்பட்ட அந்த இரவுகளில் இருந்து தன்னை மீட்க பள்ளிக்கு ஓடி வந்து தஞ்சம் புகுந்தது அந்தப் பிள்ளை தேடி வந்த பாதுகாப்பும் அரவணைப்புமே என்பதை நமக்குப் புலப்பட வெகு நேரம் பிடித்தது. சமூகத்தில் நாம் ஆராய்ந்தோமானால் ஒவ்வொரு பிள்ளையின் வாழ்க்கை சூழலும் குடும்ப பின்புலமும் ஒரு போல இருப்பதில்லை. பல்வேறு மனக்கசப்புகளைத் தாண்டியே அவர்களின் பள்ளிக்கூட பிணைப்பு.இதை எத்தனை ஆசிரியர் உணர்ந்திருப்பர். படிக்க முடியாமலும் படிப்பில் கவனம் செலுத்த இயலாமலும் பள்ளிக்கு வர தடைகள் என வெளிப்படுத்த முடியாத மர்ம தேசத்திலிருந்து பள்ளிக்கு வரும் அவர்களை எத்தனை ஆசிரியர்கள் அரவணைத்துப் புதைந்து கிடக்கும் மனதின் மர்மங்களைத் தாய்மையாலும் அன்பாலும் வெளிக் கொணரும் வல்லமை பெற்றிருப்பர். இந்தப் பேராற்றல் நம் நூலாசிரியருக்கும் பாமா டீச்சர் போன்ற இன்னும் அத்தியாயங்களில் உலவிக்கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கும் இயல்பில் அமையப்பெற்றது பிள்ளைகளின் பாக்கியம். இவர்கள் இப்படியான பிள்ளைகளுக்கும் பள்ளிக்கும் வாய்த்த மகான்கள்.
கார்த்தி மட்டுமல்ல “மே ஐ கம் இன் சார்” அத்தியாயத்தில் வரும் மாரி, எல்லா வசதியும் வாய்ப்பும் வழங்கப்பட்ட பிள்ளைகள் மத்தியில் இப்படியான சூழல்களால் புறக்கணிக்கப்பட்ட பிள்ளைகளையும் அடையாளம் காட்டுகிறது நூல். எட்டாவது படிக்கும் மாரி குடும்பத்தைக் கட்டி காத்துத் தம்பியை அரவணைத்து சத்துணவில் தரப்படும் முட்டையை தம்பிக்காகப் பத்திரப்படுத்தி உணவு அருந்தும் டப்பாவில் கொண்டு செல்லும் தமக்கை, தகப்பனுக்குத் தாய் போல் பொறுப்பாக உணவு சமைத்து வழங்கும் மகள், இதற்கிடையில் பள்ளியையும் பாடத்தையும் டெஸ்ட்களையும் வீட்டுப்பாடத்தையும் நிறைவேற்றி வருவது என்பது எத்தனை சிரமம். எத்தனை ஆசிரியர் உணர்ந்திருப்பர் மாரி போன்ற குழந்தைகளின் குடும்ப சூழல். அவர்களை அடித்தும் துன்புறுத்தியும் காயப்படுத்தியும் வீட்டில் மட்டுமல்ல வகுப்பறையிலுமே இப்படியான பிள்ளைகளின் போர்க்களம். நித்தம் நித்தம் அச்சத்தையும் நடுக்கத்தையும் உள்ளங்கை வேர்வையில் ஆசுவாசப்படுத்தும் இவர்களின் அன்றாடம் கண்ணீர்க் காதை. பிள்ளைகளின் கனவுகளுக்கும் வீட்டின் யதார்த்தத்திற்கும் இடையே பெரும் பள்ளம் உண்டு. இணைக்கவும் சமன்படுத்தவும் பெரும் மெனக்கிடல் தேவைப்படுகிறது.
“நீலப்பந்து” அத்தியாயத்தில் மு ராசாவும் பள்ளி வீடு என்கிற சமூக கட்டமைப்பில் வஞ்சிக்கப்பட்டு உயிரிழக்கிறான். எல்லா பிள்ளைகளும் அவர்களின் குணங்களும் அறிவுத்திறனும் ஒரு போல இராது என்பதை படிப்பறிவற்ற பெற்றோர் சமூகம் உணர மறுத்தாலும் தேர்ந்த அறிவுடைய ஆசிரியர் பெருமக்களும் மதிப்பெண், தேர்ச்சி விகிதம், சராசரி, முதல் மதிப்பெண் என கல்வி அறிவு தராசை முன்னிறுத்தியே தேர்வு சார்ந்த ஏற்றத்தாழ்வுகளை இறுக்கமாக பற்றிருப்பதன் காரணமாக மு.ராசா போன்ற பிள்ளைகள் கல்வியின் மீதும் பள்ளியின் மீது ஒருவித வெறுமையும் காழ்ப்புணர்ச்சிக்கும் ஆளாகி எதிர்காலத்தில் போக்கிரிகளாகவோ அல்லது வாழ்வையே தொலைத்த நடைப்பிணமாகவோ வாழ்கின்றனர் என்பதை இன்றும் சமூக வெளியில் நாம் கண்கூடாகக் காண்கிறோம்.
“ஸ்கூலுக்கு போயிருந்தா உசுரோடயாவது இருந்திருப்பியே… ஏய்யா இப்படி ஒன்ன பெயிலாக்கி கொன்னு போட்டாய்ங்களே… யெய்யா..”
நான்காம் வகுப்பில் பெயிலாகிய மு ராசாவை அடித்துப் பள்ளியை விட்டு நிறுத்திய பெற்றோர் அவனைத் தேர்வில் பைலாக்கிய ஆசிரியரும் பள்ளியும் என படிப்பைப் பாதியில் நிறுத்திய அவன் தந்தை என அவனின் மரணத்திற்கு இத்தனை பேர் காரியதர்சிகளாகி நிற்கின்றனர்.
பதின்ம பருவத்தில் மனரீதியான மற்றும் உடல் ரீதியான மாற்றங்களைச் செவ்வனே வெளிப்படுத்தும் பகுதியாக மலரும் நினைவுகளை மீட்டுருவாக்கம் செய்கிறது “பரு”. பக்கங்களை வாசித்தேன் என்று மேலோட்டமாகக் கூறிப் புத்தகத்தை மூடி விடுவதை விட வாழ்ந்தேன் நினைத்தேன் நனைந்தேன் என நினைவு போர்வைக்குள் உறங்கிடலாம். நினைவு கூடாரத்தின் மாதுரியம் இந்தப் பகுதி. மெர்லின் வருவதற்கு முன் மெர்லின் வருவதற்குப்பின் என பதின்ம வயது பருவ அதிர்வை கூடுதலாகவே சிலாகித்து எழுதியிருப்பது நினைவுகளை பள்ளிப்பருவத்தில் கடத்திச் சென்றது. சகபாலின ஈர்ப்பு என்பது பாலியல் பருவம் தொட்டு வயோதிக காலம் வரையிலும் அதிர்வை சிறிதேனும் ஏற்படுத்தும் என்பதே உடல் ரீதியான புரிதல் .அதிலும் பதின்மத்தை அப்போதே தொட்ட இரு பாலருக்கும் ஒருவித ஈர்ப்பு விசைக்குள் சிக்காது பருவத்தை கடத்திட முடியாது .அதிலும் ஒரு அழகிய மலராக வகுப்பிற்குள் உலா வரும் மெர்லின் போன்ற பெண் பிள்ளையை ஆண்பிள்ளைகள் அவள் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் செயல்படும் ஒவ்வொன்றும் சரித்திர சம்பவங்களே.. வாழ்வில் மறக்கவியலா நினைவுச் சின்னங்களே. தமக்குள் ஒளிந்திருக்கும் ஆகப்பெறும் திறமைகள் வெளிப்படும். அகமதும் அப்படித்தான். மெர்லின் முன் தன் மேதகுத் திறமைகளை அவளின் ஒற்றை பார்வைக்காக விஸ்தாரப்படுத்தினான். முகத்தில் பரு தோன்றுவது என்பது ஒருவித உடலில் ஏற்படும் பருவகால ரசாயன மாற்றம் என்பதே நிதர்சனம். ஆனால் வெகுவாக பருதோன்றுவதை பற்றிய பொத்தாம் பொசிலித்தனமான கருத்து என்பது இந்தப் பருவத்தில் ஏற்படும் எதிர்ப்பாலின ஈர்ப்பினால் மனதில் ஏற்படும் உணர்ச்சிப் பெருக்கால். உடலில் பருவாக வெளிப்படுகிறது என்பதும் அதற்கான தீர்வாக கிராமப்புறங்களில் பல வட்டார நம்பிக்கைகளும் உண்டு.என்பதை அத்தியாயத்தில் வெகு சிறப்பாக ஆசிரியர் தமது பருவ கால நினைவுகளை கொண்டாட்டத்துடன் இறக்கியுள்ளது சிறப்பு.
ஒருசில மனித உளவியல் சிக்கல் ஆசிரியர்களுக்கு உண்டு. இது மனித உளவியல் சிக்கல் என்பதைவிட ஆசிரிய மனோநிலைச் சிக்கல் என்பதே சரி .இதை நானும் எனது பள்ளிப்பருவத்தில் ஆசிரியர்களிடம் உணர்ந்துள்ளேன். மாணவர்களை குழந்தைகளாகவே கண்டு கொஞ்சிய ஆசிரியர்களுக்கு திடீரென பருவ வயதின் உடல் மாற்றம் அழகு செகிழ்ச்சி அந்த பருவத்திற்கே உரிய பிள்ளைகளின் மனமாற்றம் தமக்கு வழங்கப்பட்ட அழகிய தோற்றத்தைத் தக்க வைக்க சற்றே கூடுதல் மெனக்கிடலின் பொருட்டு மெருகேற்றும் செயலால் எரிச்சல் ஏற்படுத்துகிறது ஆசிரியர்களுக்கு. பிள்ளைகளின் நடத்தையில் கூட சில நேரம் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பர். ஆசிரியர்களுக்கு அவர்களின் பார்வைக்குள் ஒரு கடுப்பு தென்படுகிறது. படிப்பிலும் அனைத்திலும் சூட்டிகையான ஜெயந்தி பருவ வயதை அடைந்து தோற்றத்தில் பளபளப்பு கூட ராசாத்தி டீச்சர்..
“இனி இப்படி மினிக்கிட்டு வரக்கூடாது..”” என்ற கருக்கான வார்த்தை ஒரு வளரும் பிள்ளையின் மனநிலையை எப்படி எல்லாம் பாதிக்கிறது என்பதை உணர மறுக்கும் ஆசிரியர் சமூகம். தமது உடல் மாற்றத்தையும் பருவ வளர்ச்சியையும் எட்டிய கணத்தை வெறுத்தும் தமது தோற்றப் பொலிவை அருவருப்புடன் புறக்கணிக்கும் பெண் பிள்ளையின் சோர்வுற்ற மனதை வரிகளில் வழியே எடுத்துக்காட்டியுள்ளார் ஆசிரியர்.
ஒரு கணம் என் பள்ளிப்பருவ நாட்களின் நினைவுகள் ஆட்கொள்ள அப்பட்டத்தை எழுத்தில் உணர்ந்தேன். அதே வேளை சோர்ந்து போன ஜெயந்தியை தலைமை ஆசிரியர்…
“என்ன ஜெயந்தி டீச்சர் நீங்க என்ன சொல்றீங்க…”
என செல்லமாக சிலாகிக்க ஜெயந்திக்குத் தன்னை டீச்சர் என்று அழைத்ததில் பெரும் குதூகலம். ஒரு வலியை சமன்படுத்த வேறொரு வாழ்த்து வழங்கி சிறப்பிக்கும் பிள்ளைக்கேயான சமன்படுத்துதல் விதி நமக்கான நிரூபனம். அந்த பிஞ்சு மனதின் ஆறுதல் வாசிக்கும் எனக்கு ஒரு ஆசுவாசம்.
வேறுபட்ட சூழலிலிருந்து பெரும் மன உளைச்சலிலிருந்தும் வரும் பிள்ளைகளைப் பற்றிய மற்றொரு சரிதையை ரெட் இங்க் வெளிப்படுத்துகிறது.
ஜீவிதா- தந்தையின் குரூரத்தால் அழுதும் புரண்டும் வாழ்ந்தும் அதில் படித்தும் பத்தாவது இறுதி தேர்வில் பள்ளியில் இரண்டாம் இடத்தை பிடித்தும் துயரங்களுக்கு மத்தியில் வாழ சுவைக்கப் பழகிய அவளைப் போன்ற பிள்ளைகளுக்கான பெரும் ஆதரவாக தேன்மொழி டீச்சர் மற்றும் பன்னீர் சார்.
“டிராப் அவுட்* பாமா டீச்சர் போல தேன்மொழி டீச்சரும் பிள்ளைகளின் வாழ்வியல் பின்புலத்தை அறிந்து அதற்கு ஏற்ப அரவணைத்தும் ஆறுதல் வழங்கியும் ஆசிரியர்கள் என்கின்ற தமது பொறுப்பில் அடாது நின்றனர். இப்படியான மாந்தர்களையும் பேசுகிறது ரெட்இங்க். இவர்களே தேசத்தின் சமூகத்தின் எதிர்காலச் சிற்பங்களைச் சிதிலமடைய விடாமல் உயர்த்திப் பிடிக்கின்றனர்.
இந்த தொகுப்பில் ஆக சிறந்த வரிகள் என்று நான் பெருமிதத்துடன் ஆசிரியர் முத்துக்கண்ணனைச் சிலாகித்துப் பாராட்டும் வரிகளில் இதுவும் ஒன்று.. உறவுகளின் மேத்தகு நிலை..
“அதென்னக்கா சார் ஒங்கள்ட்ட பேசும் போது மட்டும் தோழர் தோழர்ன்னு பேசுறார்.”
தோழர்னா என்ன அர்த்தம்?
ஃப்ரெண்டு..
அவ்ளோதான்
அப்ப நானும் அப்படியே கூப்டவா?
பிடிச்சிருந்தா கூப்டு..”
” வெள்ளைப் பூக்கள்” மனநிலை குன்றிய தாச்சிக்கு தினம் ஐந்து ரூபாய் முறையாக எடுத்து வைக்கும், அவளை ஏளனம் செய்தும் இழிவுப் படுத்தியும் பேசும் சமூகக் கூட்டத்தை புறக்கணிக்கவும் தமது எதிர்ப்பை தெரிவிக்கக் குடித்துக் கொண்டிருந்த தேனீர் குவளையை பாதியிலேயே வைத்து விட்டு வீடு திரும்பும் ஆசிரியர் முத்துக்கண்ணன் மாண்புதனை போற்றத் தொகுப்பு முழுதும் ஏராளமான சாட்சிகள்.
ஆசிரியப் பணியில் நெளிவு சுளிவு ஏற்றத்தாழ்வு இண்டு இடுக்கு நல்லவை கெட்டவை என அனைத்து தரப்பிலும் ஒரு தேர்ந்த ஆசிரியரால் மட்டுமே தீர்க்கமாகக் கண்டறிய முடியும் என்பதை ஆசிரியர் முத்துக்கண்ணன் தமது இந்த நூலின் வழியே திறம்பட எடுத்துரைத்துள்ளார். தொகுப்பு முழுதும் வளமான மொழி என்பதை விட எளிமையான கதையாடல் என்றே கூறலாம். ஆசிரியர் தாம் கடந்த சாதித்த தேர்ந்த நிகழ்வுகளைத் தமது பள்ளிப் பருவம் கொண்டு ஆசிரியர் பணி வரையிலான பாதித்த அனைத்து சம்பவங்களையும் ஒரு கதாசிரியராக இல்லாமல் தோழராக வாசகரிடம் பகிர்ந்துள்ளார் என்பதே நிதர்சனம்.ஒவ்வொரு நிகழ்வுகளுக்குள்ளும் ஆசிரியரின் உணர்வுகள் உடைப்படும் போது வெளிப்படும் மொழியாகவே நூலின் மொழி தெரிகிறது.
வகுப்பறை விதி கட்டுப்பாடு என்னும் இறுக்கங்கள் ஏற்படும் போது உடைத்தெறிந்து விதிவிலக்கு நடத்தப்படும் என்பதை..
“அவங்கவங்ளுக்கு ஒரு கதவு இல்லாமல் இல்லை..”
என்கிற வரிகள் வசப்படுத்துகின்றன.
ஆசிரியரின் நகைச்சுவை உணர்வு என்பது பெரிதாக அலட்டிக் கொள்ளும் காட்சிகள் அல்ல. எள்ளலற்ற ஒரு நையாண்டித்தனத்தையே உரையாடல்களில் வெளிப்படுத்துதல் ஒருவித துள்ளலற்ற சீண்டல்களாகவே நமக்கு மகிழ்ச்சியை வழங்குகிறது.
“பேப்பர் கட்டு போட்டீங்ளா டீச்சர்..? இல்ல காசு கொடுத்தா..?”
இனது 9 பி கணக்கு டீச்சரை ஆசிரியர் நையாண்டியாக கோழிக்குஞ்சுக்காக கேலி செய்வது சிறப்பு.
எத்தனை ஆசிரியர்கள் ஊக்கப்படுத்துகிறார்கள் பிள்ளைகளின் திறமைகளை. அவர்களுக்கு பின்புலமாக இருக்கிறார்கள்… பன்னீர் சார் போன்ற நல்லுள்ளங்கள் படைத்த ஆசிரியர் இருந்தால் உயரம் பறந்தாலும் உச்சத்தையும் தொட்டிட முடியும்.
“நாங்கள் இருக்கிறோம் உயரப் பற..”
நல்லுள்ளங் கொண்ட ஆசிரியர்களின் இதயத்தின் உறுதிக்கான மொழி. இப்படித்தானே இருக்க வேண்டும். இதுதானே பிள்ளைகள் தங்கள் வாழ்க்கையை எதிர்கொள்ளும் அச்சத்தைப் போக்கி சாதனையை நோக்கிய இலக்கைத் தொட உதவும்.
வகுப்பறை என்பது பிள்ளைகளின் மன இறுக்கமாக இருக்கக் கூடாது. உயிருள்ள கலைக்கூடமாக இருக்க வேண்டும்.
“செத்த வகுப்பறை மெல்ல உயிர் பிடித்திருந்தது..”
இப்படி இப்படி என சிலாகித்தும் கொண்டாடியும் சிநேகித்தும் அடிகோலிட்டு எடுத்துச் சொல்ல ஆயிரமாயிரம் உள்ளன பக்கங்களின் புரட்டல்களில் .வாசித்தோம் என்று சொல்லிவிட்டுப் புத்தகத்தை மூடி விடுவதை விட ஒவ்வொரு நிகழ்வுகளுக்குள்ளும் நெருக்கமான இருத்தல் கொண்டோம் என்பதே சரியாக இருக்கும் .அதைவிட ஆசிரியர் ஒவ்வொரு நிகழ்வுக்குள்ளும் உடன் கரம் பற்றி காட்சிகளுக்குள் புகுத்தி சமூகத்திற்கான ஆசிரியர்களுக்கான அறிவு கண்ணை திறக்கும் பேழையாகவே இந்நூலை சமர்ப்பித்திருக்கிறார். பாமா டீச்சர் பன்னீர்சார் தேன்மொழி டீச்சர் தமிழ் ஐயா என இவர்களுடன் ஆசிரியர் முத்துக்கண்ணனும் இணைந்து ஒரு நல்ல ஆசிரியர் சமூகத்தை உருவாக்கியுள்ளார் காண்பித்துள்ளார் வாசகப் பரப்பிற்கு அடையாளம் காட்டி தானும் ஒரு சிறந்த மனிதநேயம் மிக்க ஆசிரியர் என்பதை உறுதி செய்துள்ளார்.
ஆசிரியரின் சிலேட்டுக்குச்சி நூலைத் தொடர்ந்து இந்த நூல் எனை வெகுவாகவே அணைத்துக் கொண்டும் மிக நெருக்கமான ஒரு பார்வையை பிள்ளைகள் மத்தியில் வழங்கியும் உள்ளது. வாழ்த்துக்கள் தோழர். இதுபோன்ற பிள்ளைகள் சம்பந்தப்பட்ட விழிப்புணர்வு நூல்கள் தொடர்ந்து எழுத என் வாழ்த்துகள்.
நன்றி.
– து.பா. பரமேஸ்வரி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.