நூல் : உரையாடும் வகுப்பறைகள்
ஆசிரியர் : சு.உமாமகேஸ்வரியின்
விலை : ரூ. ₹80
பக்கங்கள் : 88
வெளியீடு :
பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]
” உரையாடும் வகுப்பறைகள்”

நூலாசிரியர் : ஆசிரியை சு.உமா மகேஸ்வரி அவர்கள்.

பேசாதே; அமைதியாக இரு; வீட்டுப்பாடம் முடிச்சிட்டியா? அடி வாங்க போற… இப்படியான அதிகாரத் தோரணை மிகுந்த வார்த்தைகளால் வகுப்பறைகள் பெருகிவிட்ட இச்சூழலில் ஆசிரியை உமா மகேஸ்வரி அவர்கள் எழுதியுள்ள “உரையாடும் வகுப்பறைகள்” என்ற நூல் அனைத்து ஆசிரியர்களின் கையில் இருக்கக்கூடிய ஆசிரியர் வழிகாட்டி நூலாகவே பார்க்க முடிகிறது.

இதில் சிறப்பம்சம் என்னவென்றால் தன்னுடைய பள்ளி மாணவர்களிடம் தான் உரையாடிய உரையாடல்களையே கட்டுரையாக எழுதியதுதான்.

பாடத்திட்டங்கள் முடிக்கவே நேரம் போதாது இதில் எங்கே மாணவர்களிடம் உரையாடுவது என்று புலம்பித் தவிக்கும் ஆசிரியர் பெருமக்களுக்கு இவரின் உரையாடல் ஒரு முன் உதாரணம் என்பதில் சந்தேகமே இல்லை. பாடத்திட்டங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் தந்து குழந்தைகளின் உரையாடல்களை புறக்கணிக்காத வகுப்பறைகளை திட்டமிடுவது இன்றைய சூழலில் மிக மிக அவசியமாகிறது.

பேசாதே அமைதியாய் படி என்றே பெரும்பாலும் ஆசிரியர்கள் மாணவர்களை அமைதிப்படுத்திக் கொண்டே இருப்பது குழந்தைகளின் வாசிப்புத் திறனை பாதிக்கிறது என்பதை குழந்தைகளுக்கு வாய்ப்புகளையும் வழிகாட்டுதல்களையும் ஏற்படுத்திக் கொடுக்காமலேயே அவர்களுக்கு தமிழ் வாசிப்பு இல்லை ஆங்கிலம் படிக்கத் தெரியவில்லை என்று குற்றம் சாட்டிக் கொண்டுள்ளோம் என்று தன் உரையாடல் கட்டுரை மூலம் ஆசிரியர் தெளிவுபடுத்துகிறார்.

குழந்தைகள் பாடவும் நடிக்கவும் விரும்புகின்றனர் அதற்கு நாம் தளம் ஏற்படுத்தித் தரவேண்டும் என்பதைத் தன் அனுபவத்தின் மூலம் பகிர்ந்து உள்ளார்.

குழந்தைகள் வீட்டிலிருந்தும் தன்னைச் சுற்றியுள்ள சூழலில் இருந்தும் ஏராளமானவற்றை கற்றுக்கொண்டு தான் வருகின்றனர்.அதனை முறைப்படுத்தி கேட்டல், பேசுதல், வாசித்தல், திறன்களை வளர்த்தல் ஆசிரியர்களின் தலையாய கடமையும் பொறுப்பும் ஆகிறது. இது மொழிப்பாடங்களுக்கு மட்டுமல்லாது அனைத்து பாடங்களுக்குமே பொருந்தும் என்பதை ஆசிரியர்கள் உணர வேண்டும் என்று ஆசிரியர் அறிவுறுத்துகிறார். பதின் பருவ மாணவர்களின் கவனச் சிதறலையும் அவர்களின் மனச் சிக்கல்களையும் எப்படி கையாள்வது என்பதையும் தன் உரையாடல் மூலம் தெளிவுபடுத்தியது மிக மிக அருமையாக இருந்தது. மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்க்காத சூழலில் பாடம் என்பதும் வீண். ஆகவே வினாக்களை அது எதுவாக இருந்தாலும் வரவேற்போம் என்றும் அறிவுறுத்துகிறார்.
எப்போதும் சிறுசிறு புத்தகங்களை கையில் வைத்துக்கொண்டு பாட வேளைகளில் வாசிப்பிற்கான ஆவல்களையும் மாணவிகளிடையே உருவாக்கலாம் என்பதைத் தன் அனுபவம் மூலம் பகிர்ந்திருப்பது இன்றைய வாசிப்பில் ஆர்வமில்லாத நேரமில்லை என்று வாசிப்பு பழக்கத்தைத் தவிர்க்கும் ஆசிரியர்களுக்கு இது தூண்டுகோலாகவே உள்ளது.

தான் பெற்ற விருதினை மாணவிகளிடம் காட்டி அதற்கான விளக்கம் அளித்து அதன் மூலம் மாணவிகளிடம் கலந்துரையாடி பல செய்திகளை அதாவது தமிழக அரசியல் கட்சிகள், இன்றைய நாட்டு நிலைமை, சாதிய பிரச்சனை முதற்கொண்டு அனைத்து செய்திகளையும் தன் உரையாடல் மூலமே மாணவிகளுக்கு விதைத்து விடுகிறார் ஆசிரியர் .அது மட்டுமில்லாமல் ரயில் நிலையங்களில் சுற்றித் திரியும் பள்ளிக் குழந்தைகளைக் கண்டித்து காவலர் மூலம் அனுப்பி வைப்பது போன்ற செயல்கள் அவரின் பொறுப்புணர்வை வியக்க வைப்பதாகவே உள்ளது. பாடங்களைத் தாண்டி உரையாடல் மூலமே மாணவர்களிடம் ஆண், பெண் பாகுபாடு, Good touch,bad touch, தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள விழிப்படைய வேண்டும் உள்ளிட்ட அனைத்து செய்திகளையும் விதைத்து விடுகிறார்.
“வகுப்பறை வசப்பட ஒரு மென் சொல்லும் சிறு புன்னகையும் போதும்” என்று தன் அனுபவத்தின் மூலம் பகிர்ந்து உள்ளார். ஒவ்வொரு முறையும் குழந்தைகளுக்கு புத்தகங்களை பரிசளிப்பது, உற்சாகமூட்டி பாடங்களோடு சேர்த்து பொது விஷயங்கள் பற்றி உரையாடுவது என வகுப்பறையே கலகலப்பாக இருக்கக்கூடிய சூழலை உருவாக்கி விடுகிறார் ஆசிரியர்.

சிறிய கேள்வி மூலமே அஜித்தா என்ற மாணவியின் மனக் குறையை கேட்டு அவளின் மன அழுத்தம் குறைய வழி வகுத்து சிலபஸ் முடிப்பதை விட இப்படியான அணுகுமுறையே முக்கியமாக தோன்றுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.இவர் போன்ற ஆசிரியர்கள் இன்றைய சமுதாயத்தில் பெருக வேண்டும் என்று மனம் விரும்புகிறது. உரையாடல் மூலமே அனைத்து குழந்தைகளுக்கும் அறிவு புகட்டுவதோடு படிப்பில் ஆர்வம் வர வைப்பதுடன் மாணவிகளையும் தன் வசப்படுத்துகிறார் ஆசிரியர்.

வகுப்பறைகளில் உரையாடல் எவ்வளவு முக்கியம் என்பதை ஆசிரியை உமா மகேஸ்வரி அவர்களின் நூல் மிக அழகாக எடுத்துரைத்துள்ளது. தன் அனுபவ உரையாடல் மூலமே அனைத்தையும் பதிவு செய்துள்ளார்.

இன்றைய கல்விச் சூழலுக்கு தேவையான அனைத்து ஆசிரியர்களுக்குமான ஒரு அற்புதமான வழிகாட்டி நூலாகவே இது உள்ளது.

ஆசிரியை உமாமகேஸ்வரி அவர்களின் ஆசிரியர் பணியும் இது போன்ற சமுதாய விழிப்புணர்வு பணியும் சிறக்க

அன்பின் வாழ்த்துக்களுடன்
வலண்டினா

தூத்துக்குடி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *