நூல் அறிமுகம்: என்.மாதவனின் “காலந்தோறும் கல்வி” – சுமி ஹரி

நூல் அறிமுகம்: என்.மாதவனின் “காலந்தோறும் கல்வி” – சுமி ஹரி




நூல் : காலந்தோறும் கல்வி
ஆசிரியர் : என்.மாதவன்
விலை : ரூ. ₹90/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332934
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com

சமூகத்தில் வளரும் தலைமுறைக்கு வாழ்க்கை நெறிகள், உலகத்தின் மீதான பார்வை, வாழ்க்கை நடத்துவதற்கான அடிப்படைத் திறன் இவை அனைத்துமே கல்வி என்ற ஒன்றினால்தான் பெருமளவு கடத்தப்பட்டிருக்கிறது. ஒரு சமூகத்தினருக்கு கல்வியைத் தடை செய்திருந்த சமயமும் இருந்தது. அதற்காக நடத்தப்பட்ட போராட்டங்களும், இழப்புகளும் கல்வியின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் கொண்டு சேர்த்தது. அப்படி உலக அளவிலும், இந்தியாவிலும் கல்விமுறையில் ஏற்பட்டுள்ள பல மாற்றங்களை விளக்குகிறது இந்த நூல்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கல்விப் பணிகளில் தனக்கு கிடைத்த அனுபவங்கள்தான் இந்த புத்தகத்தை எழுத உதவியாக இருந்ததாக முன்னுரையில் குறிப்பிடுகிறார் ஆசிரியர். பல இடங்களில் கல்வி பற்றி உரையாடப் போகும்போது, மற்றவர் கேட்கும் கேள்விகளும், அதன் பதில்களும் கூடவே பதில் அளிக்க இயலாத கேள்விகளுக்கு தேடியவைகளுமே பல தகவல்களை பெற உதவியதாக கூறுகிறார். கல்வியாளர்கள் பலரின் கருத்தான குழந்தைகளுக்குச் சுதந்திரமான கல்வி அளிக்க வேண்டும் என்பதன் பலனை நேரில் கண்டு உணர்ந்ததையும் சொல்கிறார். அப்படி சுதந்திரம் கொடுக்கப்பட்ட குழந்தைகள் பொறுப்பானவர்களாக மாறியதையும் தன் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலான கல்விப்பணியில் நேரில் கண்டதைப் பகிர்ந்திருக்கிறார்.

சமூகத்தின் அடிப்படையாக இருப்பதில் மிகவும் முக்கியமானது குடும்பங்களும், பள்ளிகளும். மனித வாழ்க்கையில் பல்வேறு சிக்கல்களுக்குத் தீர்வு காண, பயிற்சி பெற வேண்டிய இடங்கள்தான் இவை இரண்டும். இதில் நகர்ப்புறத்தில் வாழ்கின்ற குழந்தைகளும், கிராமப்புற பிள்ளைகளும் இடையே பள்ளிச் சூழலில் இருக்கும் வேறுபாட்டை விளக்கியிருக்கிறார். நகரத்தில் இருக்கும் பிள்ளைகளின் பரபரப்பான காலை நேர பள்ளி செல்லும் வைபவம், கிராமப் பிள்ளைகளிடையே மிக அமைதியாகவே நகர்கிறது. காரணம் கிராமப்புறங்களில் உள்ள பிள்ளைகள் பெரும்பாலும் சுயசார்பு உடையவர்களாக தங்களின் வேலையை அவர்களே செய்து கொள்ளும் நிலையில் இருக்கிறார்கள். இந்நிலைக்கான சூழ்நிலையை குடும்பங்களில் நடக்கும் உரையாடல் வழியாக சிறப்பாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். இந்த இரு பள்ளிகளுக்கு இடையே மாணவர்களின் மாற்றம், வளர்ச்சி போன்றவை நம்மையும் யோசிக்க வைக்கிறது.

அடுத்த பகுதி, கல்வியின் பரிணாமம் எப்படி இருந்தது என்பதை விளக்குகிறது.

மன்னர் ஆட்சியிலிருந்த கல்வி முறை அப்போதைய தேவையின் அடிப்படையில் இருந்தது. போர் பயிற்சிகளான சிலம்பம், வாள், குதிரையேற்றம் போன்றவையும் கூடவே படைத் தேவைகளை கவனித்தல், வரிவசூல் கணக்கு, அதற்கான பராமரிப்பு இவையே கல்விமுறையாக இருந்தது. இதில் முக்கியமான ஒன்று முன்னேறிய பிரிவினருக்கு மட்டுமே இந்த வாய்ப்புகள் இருந்தன. மற்றவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. மன்னராட்சியின் தொடர்ச்சியாகத்தான் முதலாளித்துவம் வடிவெடுத்தது என்பதையும் மறுக்க முடியாது.

எனவே, மற்றவர்களுக்கு கல்வி பயிலும் வாய்ப்பைக் கொடுக்கவேண்டும் என்ற கவலை யாருக்கும் இல்லாமல் போய்விட்டது. மற்ற சமூகத்தினரிடையே கல்வி பற்றிய விழிப்புணர்வு இல்லாததும் கல்விப் பரவல் நடக்காமல் இருந்ததற்கு ஒரு காரணம். அனைத்திற்கும் மேலாக சமூகத்தில் மேலோங்கியிருந்த சாதிய ரீதியான பாகுபாடுகளும் கல்வியை அனைவருக்குமான ஒன்றாகப் பார்க்கப்படவில்லை.படைப்பிரிவு ஊழியர்களாக வாழும் நிலையே சாதாரண மக்களுக்கு வெகுகாலம் இருந்தது.

இதற்குப் பின் நாட்டில் பல இடங்களில் செயல்பட்டுக் கொண்டிருந்த முற்போக்கு இயக்கங்களும் பல்வேறு சிந்தனையாளர்களும் தொடர்ந்து கல்விக்கான சட்டங்கள் வேண்டி போராட்டங்களைத் தொடங்கினர். இதற்கு அடிபணிந்தே மக்களுக்குக் கல்வியைக் கொடுக்கும் முயற்சியில் அரசு இறங்கியிருக்கிறது. இது நம் நாட்டில் மட்டுமல்லாமல் உலகில் பல இடங்களிலும் நடந்திருக்கிறது.

கல்வியை ஒரு சமூக ஏற்பாடாக மாற்றுவதில் ஐரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சி முக்கியப் பங்கு வகித்திருக்கிறது. மேலும் பிளாட்டோ, அரிஸ்டாட்டில், டாலமி போன்ற கிரேக்க தத்துவ ஞானிகளின் படைப்புகள் ஐரோப்பாவில் பரவி சாதகமான விளைவுகளை ஏற்படுத்தியது. இந்தியாவில் சாதிய ரீதியான பிரிவுகள் பலமாக வேரூன்றி இருந்தது என்றால், மற்ற நாடுகளில் நிலப்பிரபுத்துவம் செல்வவளமும் அப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகளுக்கு வாய்ப்பாக இருந்தது.

இதைத்தொடர்ந்து தொழிற்புரட்சியினால் கல்விப் பரவல் எப்படியிருந்தது என்பதை விளக்குகிறார். இயந்திரங்களின் துணையோடு பொருட்களின் உற்பத்தி அதிகரித்த போது அதைப்பற்றிய அளவீடுகள், எண்ணறிவு, எழுத்தறிவு போன்றவை பணிபுரியும் தொழிலாளர்களுக்குத் தேவைப்பட்டது. உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டிய தேவையும் வளர்ந்தது. உலகம் முழுவதும் ஒரே மாதிரியான அளவீட்டு முறைகளைப் பின்பற்றத் தொடங்கினர். இதைப்பற்றி படிப்பறிவு உள்ள தொழிலாளர்களுக்கு அனைத்து நாடுகளிலும் வேலைவாய்ப்பு அதிகரித்தது. இது கல்விப் பரவலுக்கான அடுத்த நிலை என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர்.

குழந்தைகளுக்கான நர்சரி பள்ளிகள் தொடங்கியது இதே காலகட்டத்தில்தான். ஆண்களோடு பெண்களும் தொழிற்சாலைகளில் பணிபுரியத் தொடங்கினார்கள். ஆண்கள் பணிபுரியும் போது ஏற்படும் சிக்கலை விட பெண்கள் வேலைகளில் ஈடுபடும்போது குழந்தை பராமரிப்பு பெரிய சவாலாக இருந்தது. குழந்தை பற்றிய கவலை இல்லாமல் பணிபுரிய வேண்டுமானால் அவர்களின் பாதுகாப்பு முக்கியமானதாக இருந்தது. இதுவே நர்சரி பள்ளிகள் தொடங்கிய காலகட்டம். பின்னாளில் அது பணி புரியாத பெண்களும் உபயோகிக்கும் இடமாக மாறிவிட்டது. இப்போதோ இந்த மழலையர் கல்வியிலும் பாகுபாடு இருக்கத்தான் செய்கிறது.

நமது நாட்டின் அரசியல் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு சமூக ஏற்பாடுகளுக்கும் ஆரம்பகாலத்தில் உதாரணமாக அமைந்தது இங்கிலாந்து நாட்டின் சமூக ஏற்பாடுகள்தான். இந்த அமைப்பின் பல படிநிலைகளை கடந்துதான் ஆரம்பக்கல்வி கட்டாயம் என்ற சட்டம் இயற்றப்பட்டது. குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கையும் மெல்ல குறையத் தொடங்கியது. இந்த சமயத்தில் அரசாங்கம் இலவசமாகக் கல்வி கொடுக்கும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டிருந்தது. நிறைய பொருட் செலவு ஏற்படுவதை கருத்தில் கொண்டு தனியார் கற்பிக்கும் பள்ளிகளை அரசு ஊக்குவித்தது. இப்படித் தொடங்கியதுதான் இன்று வியாபாரமாக மாறி விட்ட தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்குக் காரணம்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் கல்விக்கான சுயமான முயற்சிகள் தொடங்கிய காலகட்டம். ஒருபக்கம் பிரிட்டிஷ் அரசின் ஆசியோடு செயல்பட்ட கிறிஸ்துவமத கல்வி நிறுவனங்கள் கல்விப் பணி செய்து கொண்டிருந்தன. மறுபக்கம் இந்தியாவின் கலாச்சாரத்தை காப்பாற்றுவதாகக் கூறிக்கொண்டு பிரம்ம சமாஜம் மற்றும் ஆரிய சமாஜம் இவை களத்தில் இருந்தன.

இந்த சமயத்தில் கல்விக்கான திருத்தங்களில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. கோகலே அவர்களும் கட்டாய ஆரம்பக் கல்விக்கான முயற்சியில் ஈடுபடுகிறார். இவர் அதற்கான பல ஆலோசனைகளைச் சொல்லி, சட்டசபையிலும் பல முயற்சிகளை மேற்கொள்கிறார். ஆனால் ஆதிக்க சக்திகளின் ஊடுருவலால் சட்டசபையில், ஆரம்பக் கல்வி அளிப்பதற்கு எதிராக முப்பத்தியெட்டு வாக்குகளும் ஆதரவாக பதிமூன்று வாக்குகளும் கிடைக்கின்றன. பல போராட்டங்களுக்குப் பிறகே இந்த மசோதா ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

அடுத்து, தொடக்கம் முதலே ஆசிரியர்கள் கடந்து வந்த விஷயங்களைப் பற்றிச் சொல்கிறார்.
ஆங்கிலேய அரசின் ஊழியர்களாக ஆசிரியர்கள் இருந்தபோது அவர்களுக்கு சற்றும் சுதந்திரம் இல்லாமல் இருந்தது அரசு என்ன சொல்கிறதோ அதை அப்படியே கேட்கும் இயந்திரங்களாகவே இருந்தனர். அரசு ஊதியம் மிகக் குறைவாக இருந்தது. எனவே தங்கள் பொருளாதார தேவைகளுக்காக அரசின் மற்ற வேலைகளிலும் ஈடுபட்டனர். உதாரணமாக கால்நடைகள் கணக்கெடுப்பு மக்கள் தொகை கணக்கெடுப்பு குடும்ப நலத் திட்டங்கள் போன்றவை. சில சமயம் கட்டாயப்படுத்தப்பட்டு இந்த பணிகளைச் செய்தனர். அதுவே இன்று வரை தொடர்கிறது. அந்த சமயத்தில் அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் தேவை என்ற போது ஐந்தாம் வகுப்பு முடித்தவர்கள் கூட ஆசிரியர்கள் ஆக்கப்பட்டார்கள். பின்னர் அவர்களுக்குப் பயிற்சியும் அளிக்கப்பட்டிருக்கிறது. இதற்குப் பிறகுதான் ஆசிரியர் கல்வி, மற்றும் பயிற்சி முறையில் பல்வேறு மாற்றங்கள் வந்திருக்கிறது.

அடுத்து தேர்வு முறையில் வர வேண்டிய மாற்றங்களைப் பற்றி சொல்லியிருக்கிறார் இன்று தேர்வு என்றாலே பயம் என்ற நிலை வந்துவிட்டது. மாணவர்கள் தேர்வு காலகட்டத்தில் மன அழுத்தத்திற்குத் தள்ளப்படும் நிலைக்கு வந்து விட்டார்கள். மதிப்பெண்கள் விரக்தி மனப்பான்மைக்குச் சென்று தற்கொலைக்குத் தூண்டும் விதமாக மாறிவிட்டது. இதை எப்படி மாற்றலாம் என்று தன் கருத்தையும் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

மனிதர்கள் அனைவரும் அடிப்படையில் சமமானவர்கள்தான். அதுபோல அவர்களின் கல்வி கற்கும் முறையும் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். சமூகம், அரசு இரண்டுமே பிள்ளைகளை அவர்களின் சொத்தாக கணக்கில் கொண்டு, கற்பிப்பதில் பாகுபாடே இல்லாமல் செய்ய வேண்டும். அது போன்ற கல்வி அவர்களை உன்னதமான இடத்திற்குக் கொண்டு செல்லும் என்பதில் சந்தேகமில்லை என முடித்திருக்கிறார். ஆரம்ப காலம் முதல் இன்று வரையான கல்வி முறையில் ஏற்பட்ட மாற்றங்களை பல உதாரணங்களைக் கொண்டு விளக்கியிருக்கிறார் ஆசிரியர். ஆரம்பத்திலிருந்து கல்வியில் ஏற்பட்ட மாற்றங்கள், அவற்றின் வளர்ச்சி நிலைகள் பற்றி அறிந்து கொள்ள அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.

Sumi Hari
சுமி ஹரி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *