நூல் : சாத்தானின் காதலி கவிதைத் தொகுப்பு
ஆசிரியர் : எஸ்தர் ராணி
விலை : ரூ.₹100/-
பக்கங்கள் 96

வெளியீடு : வேரல் புக்ஸ் வெளியீடு
வடிவமைப்பு: லார்க் பாஸ்கரன்

எஸ்தர் ராணியின் முதல் கவிதைத் தொகுப்பான
முலையெனும் தூரிகை
கைகளில் கிடைக்கப் பெற்ற உடனேயே அந்தத் தொகுப்பு குறித்து எழுதிட வேண்டும் என நினைத்து
மனசின் மயிர் பிளக்கும் நிறைய வேலைகள் இருந்ததால்
எழுத முடியாமல் போனது.

இரண்டாவது தொகுப்பான ‘சாத்தானின் காதலி” கையில் கிடைத்தவுடன் அப்படி இருந்திடலாகாது என மூளை செருப்பால் அடித்து சொன்னது எனக்கு.!

கவிதை தொகுப்பு முழுவதும்
“சாத்தானின் காதலி” எஸ்தர் ராணி
வார்த்தைச் சாட்டைகளின் நுனியில்
கூர்த்தீட்டப்பட்ட முள் கம்பிகளை பொருத்தி வாசிப்பவர்கள் மூளைக்குள்
ரத்தம் தெறிக்கும் சிராய்ப்புகளை நிகழ்த்திச் சொடுக்கி எடுக்கிறார்.
தனிமனித வலிகளும் துயரங்களுமாக.. பெண் உடலை, அவளின் எண்ண ஓட்டங்களை, சுதந்திரச் சிறகுகளை தினம் சிதைத்துக் கொண்டிருக்கும் சமூகத்தின் அத்தனை வேர்களையும் வெளிச்சத்திற்கு இழுத்து வந்து பொதுவெளியில் விசாரணைக்கு உட்படுத்துகிறார்.

எந்தத் தடுப்புக்கும் கட்டுப்படாத காட்டாற்று வெள்ளமாக வார்த்தைகள்
ஒன்றின் பின் ஒன்றாக வாசிப்பவர்களை அடித்து துவைத்து வாரிச் செல்கிறது.
கடவுள், புனிதம், பூஜைக்குரியது, மரியாதைக்குரியது, கௌரவத்திற்குரியது என்று கட்டமைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆணாதிக்கத்தின் அனைத்து அசிங்கங்களையும் தனது எதிர்ப்புக் குரலால் அடங்கமறுக்கும் சுயமரியாதையின் திமிர் மிகுந்த அழகால் எஸ்தர் ராணி தன் ராஜ்ஜித்தை நடத்தியிருப்பார்.

“என் மனசு போன
திசையிலே தலைமயிரை போய் பார்க்கச் சொன்னேன்
தலைமையிர் திரும்பி வந்து சொல்லுச்சு
மனசு எங்கே இருக்குது.?
மனசு முழுவதும் மயிரா போச்சுன்னு
மயிர் மனசு.!

தலை மயிறு போன திசையில்
என் மனசை போய் பார்க்கச் சொன்னேன்
மனசு திரும்பி வந்து சொல்லுச்சு
மயிறு எங்கடா இருக்கு.?
போன வாரம்
சாமிக்குத்தான் கொடுத்துட்டியே
முட்டாப் பயலே.!

மயிர்க் கடவுள்.!

மயிராப் போன மனசு..!
மயிராப் போன கடவுள்..!!

மனசும்.. கடவுளும் இங்கே
மனித மூளைக்குள் முன்னோடிகளாலும் மூத்தவர்களாலும் கட்டி எழுப்பப்பட்ட உணர்வுகளின் அடையாளமே.
நிஜத்தில் இரண்டுமே மனிதர்களின் தேவையின் பொருட்டு, அவசியத்தின் பொருட்டு பயன்படுத்திக் கொள்ளும்
மழித்து உதறி எறியப்படும் மயிர்களுக்கு சமமானவை.
மனசும் கடவுளும் உருவ வரையறுக்குள் கொண்டு வர முடியாத
மனித உணர்வுகளின் முட்டுக்களே.
அந்த முட்டுக்களுக்காக
மனிதர்களை அழகாக்கி காட்டிடும்
மயிரை
இல்லாத மனசையும்..
இல்லாத கடவுளையும்..
இணையாக நிறுத்திடலாமா.?
மனித மயிர்களால் வளர்ந்த திருப்பதி வெங்கடேச பெருமாளும்
பழனி ஆண்டவர்களும்
இங்கே ஓஹோன்னு இருக்கிறாங்க..
மயிர் கொடுத்த மனிதன் மட்டும்தான்
இல்லாத மனசுக்குள் முடங்கி கிடக்கிறான்.
மயிர் இல்லாத
ஆண்களும் பெண்களும் மயிருக்காக ஏங்கிக் கிடப்பதை “தலை மயிர் வியாபாரிகள்” அறிவார்கள்.. மயிர் பொருளாதாரம் இங்கே நடந்து கொண்டிருக்கிறது என்பதை அனைவருமே அறிவார்.
மயிர் மேலானது அல்லவா எஸ்தர்.

“பூவரச இலையுருட்டி
ஊது குழலாக்கி
ஆழ்கடலை உறிஞ்சி
குவளைக்குள் அடைத்து
மீன்களைப் பிரித்து எடுத்து
சட்டை பைக்குள் பத்திரப்படுத்தி
மீன்களற்று கடல் சாக
நான் உற்றுப் பார்க்க வேண்டும் மெல்ல மறிக்கும் ஆழ் கடலை
கையில் இருக்கும்
வெண் குழல் வத்தியுடன்..
என்கிற கவிதைக்குள்

கையில் புகைந்து கொண்டிருக்கும் வெண் குழல் வத்தியுடன்
என்று இருந்தால்
எஸ்தரின் திமிர் இன்னும் நிறைந்திருக்கும்..

“துள்ளி விளையாடும் மீன்களை
உன் பாக்கெட்டுக்குள் பத்திரப்படுத்தி” வைத்துக் கொள்ளும் பொழுது தெரிகிறது
உயிர்கள் மீது நீ கொண்டிருக்கும் பேரன்பின் நேசம்..
பூவரசன் இலை “பீப்பி” வழியாக
நீ ஆழ்கடலை உறிஞ்சி எடுக்கும் மூச்சுக்காற்றில் அறிய முடிகிறது உன் அசாதாரண தைரியத்தை..
நம்பிக்கையை.. உன் திராணியை.

மெல்ல சாகும் கடலை
நிறுத்தி நிதானமாக உற்று நோக்கிடும் உன் சிரிப்பில் தெரிகிறது
எதிரில் இருப்பவர்களின் கொலை பாதகச் செயல்களும்.. எண்ணங்களும்.

“போபாலின் நச்சுப்புகை
தேடி அலைந்து
மனிதர்களைத் தின்றதையும்
விபத்து என்று
பன்னெடுங்காலம் சென்று அறிவித்து தின்ற பிணங்களை
தன் திமிர்க்குறியால்
வன்புணர்ந்ததைப் போல்.

நீ போலச் செய்கிறாய்
பிறவாத என்னை
பிறக்கும் முன்பே
செத்து சிதையிலிடப்பட்ட என்னை
மெல்லத் தின்று சுவைத்துக் கொண்டே வல்லுறவுருகுகிறாய்
நீ செருகிய குறி
என்னிலிருந்து நழுவையில்
உலகிற்கு சொல்கிறது
She is an unborn bitch
நான் அவளை பிட்சாக்கிய
உத்தமோத்தமன்”

வாசித்து முடித்தவுடன் இதயம் ஆடித்தான் போகிறது.
படுகொலையை விபத்தாக்கிய அரசியல் சூட்சமம்தான் போபால்.. வியாபாரிகளின் குரூரத்தையும் கொடூரத்தையும் இன்றளவும் அனுபவித்துக் கொண்டிருக்கிறது போபால்.
நிதம் நிதம் இப்படித்தான் உலக சமூகம் முழுவதிலும் ஆணாதிக்கம் பல கொலைகளை நிகழ்த்தி அந்தக் கொலைகளையும் பாதிக்கப்பட்ட பெண்களின் வார்த்தைகளின் வழியாகவே மறைந்து குரூரமாக சிரித்து விபத்து என்று அறிவிக்கச் செய்து கொண்டிருக்கிறது
துடித்துக் கொண்டிருக்கும் ஆண்குறியின் திமிர்த்தனத்தால்.

எஸ்தர் தனது கவிதையில் மகாத்மா காந்தியையும் விசாரணை வளையத்திற்குள் இழுத்து வந்து நீதி கேட்கிறார் ஹலோ மிஸ்டர் காந்தி என்று.

இப்படி தனது கவிதைக்குள் உள்ளீடாக அரசியலையும் பேசி
தன் அம்மாவோடும் பேசியிருக்கிறார்..
அவலங்களின் சாட்சியாக நிற்கும்
மனித சமூகத்தில் உயிரோடு நடமாடிக் கொண்டிருக்கும் மனிதர்களோடும் பேசியிருக்கிறார்.

இதயம் சுருங்கி விரியும் கன நேரம் அதில் எண்ணங்களுக்குள் வரையப்படும் ஓவியங்களை உணர்ந்து மூளைகளுக்குள் பளிச்சிடும் அதற்கான வார்த்தைகளை விரலுக்குள் கொண்டு வந்து ஊழியாட்டத்தை வரைந்து தள்ளி இருக்கிறார் கவிதை தொகுப்பு முழுவதிலும் அழகியல் தளும்பும் சொற்சித்திரங்களாக.

சாத்தானின் காதலியாக இருந்து எதிர்ப்புக் குரலை ஓங்கி எழுப்பி இருக்கிறார். தேவதேவனின் ரத்தமும் விந்தும் பீச்சி அழுக்காகிக் கிடக்கும் புனித இடத்திற்குள் நுழைந்து கோயில் மணியைப் பிடித்து உலுக்கி இருக்கிறார்.

எண்ணம் போன போக்கில் கால்கள் போன போக்கில் எஸ்தர் ராணி வேண்டுமானால் வார்த்தைகளை படிமங்களை உவமைகளை அடுக்கிக் கொண்டும் வீசிக்கொண்டும் போகலாம்.
வாசகனின் வேகத்தையும் புரிதலையும்
கருத்தில் கொள்ள வேண்டியது படைப்பாளியின் ஆகப்பெரிய கடமை, பொறுப்பு என நினைக்கிறேன் நான்.
உங்களின் படைப்புகளை எந்த வரைமுறைக்குள்ளும் வைத்து பார்க்க வேண்டிய எண்ணமும் கட்டளையும் வாசகனுக்கு கிடையாது. உங்கள் கேள்விகளின் நியாயங்களுக்கும், தர்கத்தில் இருக்கும் நேர்மைகளுக்கும் பொதுவெளிக்குள் வலு சேர்க்க வேண்டும் என்று நீங்கள் நம்பினால்.. விரும்பினால்.. ஒவ்வொரு கவிதைக்குள்ளும் நேர்த்தியான கோர்வை அவசியம் என்பதை நான் உணர்கிறேன். வாசிப்பவர் “புரிந்தால் புரிந்து கொள்ளட்டும் இல்லை என்றால் விட்டுவிடட்டும்” என்றால் நீங்கள் நினைப்பீர்கள் என்றால் பதிப்பகம் சென்று பதிப்பிக்க வேண்டிய அவசியம் உங்களுக்கு வேண்டாமே. உங்களின் ஆத்ம திருப்திகான உங்களின் கவிதைகளை உங்கள் அருகிலேயே பத்திரமாக வைத்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

சராசரி வாசகனும் புரிந்து கொள்ளக்கூடிய சொற்பிரயோகம் கொண்ட கவிதைகளும் கலந்திருந்தால் உங்களின் தர்கங்களுக்கு கூடுதல் நியாயமும் ஆதரவும் பொதுவெளியில் சேர்த்திருக்கும் என நான் நம்புகிறேன்.
உங்களின் கவிதைகளை வாசித்துக் கொண்டிருக்கும் பொழுது பல இடங்களில் நான் உணர்ந்தது
நீங்கள் முதல் கவிதையில் எழுதிய அந்த வரிகளைத்தான்
..
மிட்டாய் சப்பிக் கொண்டிருக்கும் சிறுமியாய்
உடம்பெல்லாம் பற்களாய்
கடித்துக் கொண்டிருக்கிறேன் எழுத்துக்களை
புத்தகத்தில் மேதா விலாசமாய்
மேவித் திரியும் புத்தகப் பாம்புகள்
உரித்தெறிந்த சட்டைகள்
மேலேறி மேலேறி
எழுத்துக்களைக் கடிக்கிறேன்
வாய்க்குள் நுழையாத எழுத்துக்களின் மேல்
சிறுநீர் கழிக்கிறேன்
மெதுமெதுவாய் கடித்து
ஆசிவாசப்படுத்திக் கொண்டு நகர்கிறேன் வாய் திறந்து ஆவென.
…..

கொஞ்சம் எளிய வாசகனையும் கணக்கில் கொள்ளுங்கள் எஸ்தர் ராணி
இனிவரும் தொகுப்பிற்குள்.

புதியவர்களுக்கு கை கொடுக்கும்
வேரல் புக்ஸ்.. மிக சிறப்பான முறையில்
கவிதை தொகுப்பிற்கு உரிய கௌரவத்தோடு..அழகியலோடு.. வெகு நேர்த்தியாக மெச்சத் தகுந்த முறையில் வெளியிட்டு இருக்கிறார்கள்.
அதன் பொறுப்பாளர்
கவிஞர் அம்பிகா குமரன் அவர்களுக்கும் அன்பும் வாழ்த்துக்களும்.

மிக அழகாக
கவிதைகளின் உள்ளடக்கத்தை முழுவதுமாக உள்வாங்கி
கருப்பு மஞ்சள் வண்ணங்களுக்குள்
வடிவாக அட்டை படத்தை வடிவமைத்து இருக்கிறார், ஒவ்வொரு நாளும் வடிவமைப்பதில் புதுமையைக் கையாண்டு வரும்
வடிவமைப்பாளர் லார்க் பாஸ்கரன் அவர்கள். நிறைய அன்புகள் தோழா உங்களுக்கு.

பரவலாக கொண்டு செல்லப்பட வேண்டிய கவிதைத் தொகுப்பு
“சாத்தானின் காதலி”.

பேரன்பு வாழ்த்துக்கள் எஸ்த்தர் ராணி.
உங்களின் எதிர்ப்புக் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்
எல்லோருக்குமான வார்த்தைகளால்.

கருப்பு அன்பரசன்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *