‘யாத்வஷேம்’ – யூதர்களின் மரண ஓலங்கள் இன்றும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. வரலாற்றின் பக்கங்களிலிருந்து மறைக்கப்பட்ட ஒரு மிகப் பெரிய கொடூரத்தை, இனக் குழுவின் பெரும் கூட்டத்தை பெரும்பகுதி மக்களைக் கொன்று குவித்து அவர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதியை, ஈடுசெய்ய முடியாத கொடும் செயல்களை வாசிக்க வாசிக்க அடிவயிற்றிலிருந்து தீக்கனல் பரவிய உணர்வை ஏற்படுத்திய சம்பவங்களை, காலத்தாலும் வரலாற்றுப் பக்கங்களாலும் அழிக்கவே முடியாத மறக்கவே முடியாதக் கொடுஞ் செயல்களை சற்றும் பதற்றமின்றிக் காய்ந்த சருகுகளாய் தூள் தூளாக்கிய யூத இனத்தை நசுக்கி நாசப்படுத்திய ஹிட்லரின் நாஜிய அட்டூழியங்களைக் காட்சி பிம்பங்களாக,, ஹிட்லரின் யூத இனத்திற்கு எதிரான கொடுங்கோல் ஆட்சியைச் சுட்டெரிக்கும் சூரியனின் தீக்கதிர்களைப் போல தமது கூர்மையான ஆழமான எழுத்துக்களின் வழியே உலக வரலாற்றை தம் கூரிய பேனாவால் திறந்து உறங்கும் மக்களை தட்டி எழுப்பிய ஆசிரியரின் சாதனை பாராட்டுதலுக்குரியது..

யூத குழுவைப் பற்றிய தகவல்கள் சில பக்கங்களாகவே வரலாற்றுச் சுவடிகளில் பதிவிடப் பட்டிருந்தாலும் உலகம் முழுவதும் உள்ள மத குழுக்களில் சிறுபான்மை இனமாக பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய யூத இனத்தைப் பற்றிய புதையுண்ட சரித்திரத்தை, ஹிட்லர் என்கிற மனித மிருகத்தின் மதவெறிக்குப் பலியாகிய உயிர்கள், மூடநம்பிக்கைகளால் கொலைவெறிக் கொண்ட கண்கள், மனிதநேயத்தை இழந்து இரத்த காவுகளையும் சதைப் பிண்டங்களையேம் உண்டு களைப்புற்ற கண்கள் கருணையிழந்து ஈரமின்றி மனிதனை மனிதன் சின்னாபின்னமாக்கி கொன்று குவிக்கும் கொடுமையை ரசித்து களியாட்டம் போடும் அசுர நெஞ்சின் ஆர்ப்பாட்டத்தில் குடும்பத்தை இழந்து தாய் தந்தையரை இழந்து பிஞ்சு குழந்தைகள் பசி பட்டினியால் அழுவதற்கு கூட திராணியின்றி செத்து மடிந்து, உயிர் பிழைக்க வேண்டுமானால் உழைக்க வேண்டும் என்கின்ற ஒரே ஒரு குறிக்கோளையே தாரக மந்திரமாக ஜெபித்துக் கொண்டு ‘என்புதோல் போர்த்திய உடல் போல’ தோலின் அடியில் உள்ள எலும்பில் ஒட்டியிருக்கும் உயிரை மட்டுமே பெரும் சொத்தாக நம்பி வாழ்ந்து, பிழைத்துத் தப்பிய சிலர், காமப்பசிக்கு ருசியாகி உயிரை மாய்த்துக் கொண்ட பலர் என யூதர்கள் எதிர்கொண்ட நாஜிய ஹிட்லரின் கொடுங் கோல் ஆட்சியின் முர்க்கங்களை இந்நாவலின் மூலம் ஆசிரியர் நேமி சந்திரா உலகத்தாரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாஜிகளின் யூதர்களுக்கு எதிரான வன்முறையின் விளைவால் பூந்தோட்டமாகப் பூத்துக்குலுங்கிய ஹ்யானாவின் நந்தவனத்தைச் சிதைத்து சின்னாபின்னமாகி நாஜிகளின் பிடியில் சிக்கிய அக்கா ரெபேகாவையேம் அம்மா ஹேலனாவையும் தம்பி ஐசாக்கையும் இழந்து தந்தை ஹாரன் மோசஸுடன் இந்தியாவிற்கு வந்த 12 வயது சிறுமி ஹ்யானாவின் ஏக்கச் செறிவையும் மீண்டும் தம் அம்மா அக்கா தம்பியை சந்திப்போம் என்கின்ற ஒற்றைக் குறிக்கோளின் எதிர்பார்ப்பில் ஏங்கி ஏங்கி மீண்டும் தம் தாயகம் திரும்ப வழி பிறக்காதா என்கிற அவளின் பரிதவிப்பும் எதிர்பார்ப்பும் அவளுக்குள் ஒரு நீண்டகாலத் தேடலை தோற்றுவித்தது.

பால்யகால பருவகால இளமையை ஒதுக்கி நிகழ்கால தனிமையில் சிக்கித் தம் கசப்பான இறந்த காலத்தை நினைத்து தினம் தினம் அவளுக்குள் ஒரு போராட்டம், கண்களில் நீர் சுரபிகள் வற்றி வறண்டு போய்விட்டன, ஆனாலும் தம் அன்பான குடும்பத்தை என்றாவது ஒரு நாள் சந்திப்பேன், தம்மினத்தவர்களிடம் தம் மக்களிடம் போய் சேருவேன் என்கின்ற ஹ்யானாவின் உறுதியான நிலைப்பாடு,அதற்கான தேடல் முயற்சி வயதிற்கு மீறிய பக்குவம் என நாவலின் கதாநாயகியான ஹ்யானாவின் பாத்திரத்தை செதுக்கி சித்தரித்துள்ளது இந்த ஒரு ஹ்யானா மட்டுமல்ல இந்த உலகில் எண்ணற்ற சிறுபான்மை மதத்தினருக்கு எதிராக அந்தந்த காலகட்டத்தில் ஓங்கி நிற்கும் மதத்தினர் நிகழ்த்தும் வன்முறைகளுக்கும் ஹிட்லர் போன்ற மதவெறி அரசுகள் நிகழ்த்தும் தீவிரவாதத்திற்குமான ஒரு சிறு துளியாக ஆங்காங்கே ஹ்யானாக்கள் தோன்றி ஒடுக்கிய மக்களுக்கு எதிராக குரல் கொடுத்துக் கொண்டு தான் உள்ளனர்.

ஹ்யானாவைப் போன்ற எத்தனையோ சிறுமிகள் இன வேறுபாடுகளால் மதக் கலவரத்தால் தீவிரவாதத்தால் வன்மத்தால் சிக்கி சின்னாபின்னமாகிக் குடும்பத்தை இழந்து தன் சொந்த மண்ணை இழந்து வெவ்வேறு நாடுகளில் தஞ்சம்புகுந்து தன் அடையாளங்களை மறந்து மறைத்து இன்றும் வாழ்ந்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

உயிருடனும் மானத்துடனும் ஏதோ ஒரு மூலையில் வாழ்க்கையிஙன விஸ்தாரத்தில் ஓட்டிக் கொண்டு தம் விதியை நினைத்து அழுதுக் கொண்டே பிடித்தும் பிடிக்காமலும் கடமையே என்று வாழ்வைக் கழித்துக் கொண்டிருக்கும் எத்தனையோ ஹ்யானாக்களை நம் சரித்திரங்கள் தமக்குள் இடம் கொடுப்பதில்லை. மறைக்கப்பட்டப் பக்கங்களில் கிழித்தெறியப்பட்டக் தாள்களாக அவர்களின் அடையாளங்கள் அவர்களுடனேயே மண்ணோடு மண்ணாகக் கலந்துக் கரைந்து விட்ட சோகங்கள் எண்ணற்றவை.

ஹ்யானாவின் உணர்வுகளின் மூலம் ஆசிரியர் பல எண்ணற்ற கதறல்களை ஆழ் மனதின் குரல்களை, அழுத்தங்களை, ஏக்கங்களை, தேடல்களை, எதிர்பார்ப்புகளை, ஆதங்கங்களை கதாநாயகியின் உணர்ச்சிப் பெருக்குகளுடன் வெளிப்படுத்தியிருப்பது ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட இனங்களின் ஆத்மீக கதறுலுக்கான எதிரொலியாகவே ஒலிக்கிறது.

ஹிட்லரின் சதியால் அம்மா, அக்கா, தம்பியை இழந்த ஹ்யானா இந்தியாவில் பெங்களூருக்குக் இடம் பெயர்கிறாள் அங்கு விவேக்கின் குடும்பத்துடன் சேர்ந்து வாழ்ந்துக் கொண்டிருந்த அந்தச் சிறுமி வெளிப்புறத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாலும் உதடுகளின் ஓரத்தில் தம் குடும்பத்தினரையும் தம் சொந்த மண்ணையும் மக்களையும் பந்துகளையும் பிரிந்தத் துயரங்களைச் சுமந்துக்கொண்டு அவர்களுக்கு என்ன நேர்ந்ததோ என்கிற பயத்தை நெஞ்சுக் கூட்டில் அழுத்திக்கொண்டு ஒருவித வெறுமையை மௌனமான புன் சிரிப்புடன் வெளிப்படுத்துகிறாள். இந்த துயரங்களுக்காண முற்றுப்புள்ளி முடிவில்லா தொடர் புள்ளிகளாகத் தொடர்ந்துக் கொண்டிருந்த வேளையில் தந்தையையும் இழக்கிறாள் அந்த அபலைச் சிறுமி ஹயானா.

13 வயது பெண் பிள்ளையின் வாழ்க்கையில் விதியின் திருவிளையாடல் வெறி விளையாட்டாகவே ஆட்டம் காட்டுகிறது. விவேக்கின் தாயின் அரவணைப்பிலும் தங்கை சுமியின் களங்கமற்ற நட்பிலும் மற்ற பிள்ளைகளின் அன்பிலும் திளைத்திருந்தாலும் ஹ்யானா எப்போதும் தனிமையின் நிழலையும் மௌனத்தின் பிடியையும் வார்த்தைகளின் சிக்கனத்தையும் ஊன்றுகோலாகவே பற்றிக்கொண்டு என்றாவது தன் குடும்பத்தைச் சந்திக்கும் வாய்ப்பிற்காக ஏக்க விழிகளுடன் காலத்தின் வரவுக்காக காத்துக் கொண்டிருக்கிறாள்.

கோரிப்பாளையம் இடுகாட்டில் யூதர்களுக்கான இடத்தில் அமைதியாய் ஆழ்ந்த நித்திரையில் உறங்கிக்கொண்டிருக்கும் தந்தையின் சமாதியே ஹ்யானாவின் நிம்மதிக்கான நுழைவாயில். கண்களை மூடி தந்தையின் சமாதியின் முன் முட்டிப் போட்டுப் பிரார்த்தனைச் செய்யும் ஹ்யானாவைத் தம் கனவுக் கன்னியாக வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக்கொள்ளும் விவேக்கின் ஆத்மீக காதல்.

யூதர்களே ஜெர்மனியின் வீழ்ச்சிக்குக்கான காரணம் என்கிற கண்மூடித்தனமாக மூடநம்பிக்கையால் யூத சமூகத்தையே வெறுத்து ஒதுக்கும் நாஜிக் கூட்டம். ஆனால் எத்தனையோ மதங்களும் எண்ணிலடங்கா ஜாதிகளையும் கணக்கிட முடியா இனக் குழுக்களையும் சுமக்கும் நம் இந்திய நாட்டில் முற்றிலும் சம்பந்தமற்ற மதப் பிரிவிலிருந்து வந்தத் தனக்கு கேள்வியே இல்லாமல் பாரபட்சமின்றி ஒதுங்க இடம் கொடுத்த படிப்பறிவில்லாத விவேக்கின் அம்மாவின் பகுத்தறிவையும் களங்கமற்ற அன்பையும் கண்டு வியக்கிறாள் ஹ்யானா..ஏதாவது ஒரு வாய்ப்பு ஏற்பட்டால் தம் தாயகம் திரும்பும் ஏக்கத்தில் அதற்கான தேடலில் முழுவீச்சாக இறங்கி முயன்று கொண்டிருக்கும் ஹ்யானாகிய அனிதாவிற்கு காந்தி, புத்தர், மகாவீரர் பிறந்த இந்த இந்திய மண்ணின் மீது அளப்பரிய மதிப்பும், ஆச்சார அனுஷ்டானங்களைக் கடைப்பிடிக்கும் வம்சம் குஞ்சிடிகர் வம்சம் என்று எப்போதும் தம் வம்சத்தை உயர்த்திப் பேசும் அம்மா, தம் நாட்டிற்கும் இனத்திற்கும் மதத்திற்கும் ஜாதிக்கும் முற்றிலும் மாறுபட்ட ஒரு வெளிநாட்டு பெண்ணின் மீது கொண்ட களங்கமற்ற நிரம்பிய அன்பைப் பொழியும் அம்மாவின் மீது கொண்ட எல்லையற்ற பாசம் அவளை இந்திய மண்ணிலேயே விவேக்கின் காதலிலேயே, மதத்திலும் இறை வழிப்பாட்டிலும் பேதமற்ற நோக்கைக் கொண்ட அம்மாவின் அன்பிலேயேக் கட்டிப்போட்டது.

எனினும் அவளின்ஆழ் மனதில் தன் இறுதிக்காலத்திற்குள் ஒருமுறையேனும் தன் தாயகத்தை தான் பிறந்த மண்ணைக் கண்டுவர வேண்டும் என்ற குறிக்கோளும்,, தன் குடும்பத்தினருக்கு என்ன நிகழ்ந்தது என்று தெரிந்து கொள்ளும் ஆர்வமும், தன் குடும்பத்தில் யாரேனும் உயிர்தப்பி பிழைத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா என்ற எதிர்பார்ப்பும் ஹ்யானாவை உறுத்திக்கொண்டே இருந்தது. அதற்கான வாய்ப்பிற்காக காத்திருந்தாள்

தம் மகனின் மூலம் தம் குடும்பத்தை வெளிநாட்டில் தேடும் வாய்ப்பைப் பெற்ற ஹ்யானா.

*தம் குடும்பத்தினரை எவ்வாறு சந்தித்தாள்?
*முகாமில் ஹ்யானாவின் அம்மாவிற்கும் அக்காவிற்கும் தம்பிக்கும் நாஜி டகாவ் முகாமிற்கு அழைத்துச் சென்றபோது நடந்தது என்ன?
*இதில் யார் யார் தப்பி பிழைத்து மீண்டு வந்தார்கள் ?
*யூதர்களுக்கு நிகழ்ந்த வன்மம் என்ன ?
*இந்த முகாமில் அடைக்கப்பட்ட ரகசியங்கள் என்னென்ன? *யூதர்களை நாஜி விஞ்ஞானிகள் எவ்வாறெல்லாம் தம்முடைய விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்கும் மருத்துவ ஆய்வுகளுக்கும் இயந்திர பரிசோதனைகளுக்கும் பயன்படுத்திக் கொன்றுக் குவித்தார்கள்?….
இந்தக் கேள்விகளுக்கான விடைகளைத் தேடி ஹ்யானாவுடன் அடுத்தடுத்த அத்யாயங்களில் ஆர்வத்துடன் நானும் பயணித்தேன்.

நின்று கைகட்டி வேடிக்கைப் பார்த்த இந்த உலகத்தின் கையாலாகாதத் தனத்தையும் வரலாற்றில் மூடியப் பக்கங்களைச் சரித்திரத்தில் பதிவிட மறந்த கொடூரச் சம்பவங்களையும், உலக வரலாற்றையும், உலகப்போரின் சரித்திரத்தையும்
வாசித்த,
வாசித்துக் கொண்டிருக்கும், வாசிக்கப் போகும்
எதிர்காலத் தலைமுறையினர் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய, நெஞ்சை நடுநடுங்க வைத்த நாஜி அட்டூழியங்களை அடுத்தடுத்த அத்தியாயங்களில் பதிவிட்டுள்ளார் ஆசிரியர்.

உலக வரலாற்றைத் திருப்பிப் போட்ட உற்றுநோக்கச் செய்த ஒரு சரித்திர நாவலான இந்த நாவலை ஒரு முழுமையான தரவுகளுடன் கூடிய உண்மைச் சம்பவங்களைக் கால பகுப்பின் துல்லியத்துடன், நமக்கு என்ன? இது நம் நாட்டையோ நம் இடத்தையோ நம் மாநிலத்தையோ நம் ஊரையோ சார்ந்த கொடுமைகள் அல்ல, நம் இன மக்களுக்கு நிகழ்த்தப்பட்ட அநீதியோ அல்ல என்பதையெல்லாம் கடந்து உலகத்தின் மூலையில் ஏதோ ஒரு இனக் குழுவிற்கு ஏற்பட்ட வன்முறைக் கொலை பாதகங்களை உலகத்தாரின் பார்வைக்குக் கொண்டுவர வேண்டும் என்ற மனிதநேய அக்கறையுடன் அதற்கான கால விரயம், பொருள் விரயம், உடல் உழைப்பு, சிரத்தைகள், தியாகங்கள் என ஆசிரியரின் இந்த இலக்கியச் சேவை ஒரு மாபெரும் சரித்திரப் புரட்சி.

இந்த படைப்பின் மூலம் ஹிட்லரின் யூதர்களுககெதிரான வன்மத்தை மக்களிடம் கொண்டுச் சேர்க்க வேண்டும் என்பதில் பெரிதும் மெனக்கெட்டு உள்ளார் ஆசிரியர் என்பது போற்றுதலுக்குரிய விஷயம்.

நாஜிகளின் முகாமில் நிகழ்த்தப்பட்டக் கொடுமைகள் ஆசிரியரின் வரிகளில் வாசிக்கும்போது காட்சிப் பிம்பங்களாகக் கண்முன் பிரதிபலித்தன.. பல நாட்கள் எனக்குள் அந்த சம்பவங்களின் தாக்கம் மனதை அலைக்கழித்தன. நிலைகுலையச் செய்தன. அன்று ஜெர்மனியில் ஹிட்லரின் கொடுங்கோலாட்சி யூதர்களுக்கு எதிரான வன்முறை.. நாளை நமக்கும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கலாம். ஹிட்லர் இறக்கவில்லை ஒவ்வொருவருக்குள்ளும் பிறந்துக் கொண்டுதான் இருக்கிறான் என்பதே இந்த கதையின் இந்த நாவலின் சாராம்சம். ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்திருக்கும் ஹிட்லர் நாளை வெளியே வரலாம், இந்த யூத இனத்தை போல் வேறு ஒரு இனக் குழுவிற்கும் இதே போன்ற ஒரு வன்மங்கள் ஏற்படலாம் என்பதே ஆசிரியரின் பெரும் ஆதங்கம். அந்த ஆதங்கத்தின் வெளிப்பாடே இந்நாவல்.

ஒவ்வொரு சம்பவங்களையும் அந்தந்தப் பகுதிகளுக்குச் சென்று அவற்றைப் பற்றிய முழு விவரங்களைத் தரவுகளுடன் சேகரித்த ஆசிரியரின் அர்ப்பணிப்புக்கு என் உளமார்ந்த வணக்கங்கள்.

இறுதி அத்தியாயத்தில் ஆசிரியர் நேமி சந்திரா இந்த நாவலைப் படைக்க அவர் மேற்கொண்டச் சிரத்தைகளைப் பற்றி விவரித்துள்ளது மிகுந்த ஆச்சரியத்தையும் ஒரு பெண்ணாக இருந்து இப்படியொரு படைப்பிற்காக எடுத்துக்கொண்ட வியத்தகு முயற்சிகள், அளபரியா தியாகங்கள் அனைத்து பெண் எழுத்தாளர்களுக்கான ஒரு மிகப் பெரிய உந்துதல். செயற்கரிய செயல். தொடர்ந்து வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் போடும் பல படைப்புகள் வெளிவர வேண்டும் என்பதே எனது விருப்பம்.

D.P.Parameswari
து.பா.பரமேஸ்வரி
சென்னை
9176190778
நூல்: யாத்வஷேம்
ஆசிரியர்: நேமிசந்த்ரா
மொழிபெயர்ப்பு: கே. நல்லதம்பி

விலை: ரூ. 399/-
வெளியீடு: எதிர் வெளியீடு
விற்பனை: 24332924 

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/yaad-vashem-nemachandra/

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *