நூல் அறிமுகம்: தமிழில் ப. ஜீவகாருண்யனின் சிறந்த சிறார் கதைகள் 111 – பெரணமல்லூர் சேகரன்

நூல் அறிமுகம்: தமிழில் ப. ஜீவகாருண்யனின் சிறந்த சிறார் கதைகள் 111 – பெரணமல்லூர் சேகரன்




பல்சுவையாகும் சிறார் கதைகள்
ஒரு காலத்தில் சிறுவர்களுக்கென்று காமிக்ஸ் நூல்கள் தவிர வேறெந்த நூல்களும் கிடைக்காது. இன்று சிறுவர் இலக்கியம் என்பது தனித்த ஒரு இலக்கியத் துறையாகவே வளர்ந்திருக்கிறது. குழந்தை இலக்கியத்திற்கென்று `பால புரஸ்கார்’ என்ற பெயரில் சாகித்ய அகாதமி ஒரு விருதையே வழங்குகிறது. தமிழகத்தின் முன்னணிப் பதிப்பகங்கள், அழகிய வண்ண அட்டைகள் மற்றும் ஓவியங்களோடு குழந்தைகளுக்கான புத்தகங்களைப் பதிப்பித்து வெளியிடுகின்றன.

சிறார் இலக்கியத்தின் முக்கியத்துவம் குறித்தும், சிறுவர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை வளர்க்க வேண்டியதன் அவசியம் குறித்தும், சிறார் இலக்கியம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் கீழ்க்கண்டவாறு பேசுகிறார் சிறார் இலக்கியத்தின் முக்கிய ஆளுமைகளில் ஒருவரான எழுத்தாளர் உதயசங்கர்.

“பொதுவாகவே குழந்தைகள் எதையும் சுலபமாக நம்பி விடுவார்கள். அவர்களுடைய குழந்தமை அவர்களுக்கென்று ஒரு உலகை உருவாக்குகிறது. அந்த உலகத்தில் மரப்பாச்சி பொம்மை அம்மாவாக, மகளாக, மாறிப்போகும். மரப்பாச்சி பொம்மை பல் தேய்க்கிறது. குளிக்கிறது. பள்ளிக்கூடம் போகிறது. டீச்சரிடம் பாடம் கேட்கிறது. மரப்பாச்சிக்குக் காய்ச்சலோ வயிற்றுவலியோ வருகிறது. டாக்டரிடம் போய் மருந்து வாங்கிக் கொடுக்கிறாள் அம்மா. கசப்பு மருந்தைக் குடிக்க கஷ்டப்படுகிறது. டாக்டர் ஊசி போடும்போது அழுகிறது. தூங்க மறுக்கிறது. அப்போது அம்மா பூச்சாண்டி வந்துருவான் என்று பயமுறுத்துகிறாள். மரப்பாச்சி சமர்த்தாய் உறங்குகிறது. எல்லாவற்றையும் உயிருள்ள குழந்தையைப் போல மரப்பாச்சி செய்கிறது.

இந்தப் போலச்செய்தலைக் குழந்தை உண்மையாக நம்புகிறது. இதில் எங்கெல்லாம் எதையெல்லாம் யதார்த்தமாய் செய்யமுடியாதோ அங்கெல்லாம் அதையெல்லாம் ஃபேண்டஸியாக மாற்றுகிறது. இரண்டடி இடத்திலேயே வீடு, பள்ளிக்கூடம், ஆஸ்பத்திரி, கார், பைக், என்று நொடிக்கு நொடி எல்லாவற்றையும் மாற்றுகிறது. கைக்குக் கிடைக்கிற பொருட்களின் வழியே தன் கற்பனையின் எல்லைகளை விரிப்பதில் குழந்தமைக்கு எந்தத் தடையுமில்லை. அது தான் குழந்தைமையின் மாயாஜாலம்.”

இந்நிலையில் காலங்காலமாக சொல்லப்பட்டு வந்த வாய்வழிக் கதைகளும், புராணக் கதைகளும், காட்டு விலங்குகள், வீட்டு விலங்குகள், இணையற்ற இயற்கைக் கொடைகள் ஆகியவற்றுடனான கதைகளும் சிறார் கதைகளாகப் பரிணமித்துப் பல நூல்கள் வந்த வண்ணமுள்ளன. இவை புத்தகக் கண்காட்சிகளில் சிறார்களாலும் பெற்றோர்களாலும் விரும்பி வாங்கப்படுகின்றன. இத்தகைய நடைமுறை சிறார்களுக்கு வாசிப்பு வாசலைத் திறந்து வைக்கிறது. இது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. சிறு வயது முதலே வாசிப்பு வசப்படுமாயின் பசுமரத்தாணியாய் அப்பழக்கம் பிஞ்சு மனதைப் பற்றிக் கொள்ளும். அவ்வகையில் சிறார் கதைகளும், பாடல்களும், ஓவியங்களும் இன்ன பிறவும் சிறார் இலக்கிய உலகில் வரவேற்கப்பட வேண்டியவை.

பல்வேறு மொழிகளில் சிறார்களுக்கான படைப்புக்கள் விரவிக்கிடக்கின்றன. அவற்றை அடையாளங் கண்டு தமிழில் மொழிபெயர்த்து நூல் வடிவில் வெளியிடுதல் மெச்சத்தக்க பணி. அப்பணியைச் செவ்வனே செய்துள்ளார் சிறந்த எழுத்தாளரான ப.ஜீவகாருண்யன்.

சிறுகதைகள், நாவல்கள் என தமிழ் இலக்கியத்தில் தடம் பதித்த ஜீவகாருண்யன் சிறார் இலக்கியத்திலும் தடம் பதித்துள்ளது வரவேற்கத்தக்கது. அதன் ஒரு பகுதியாக ஜார்ஜ் இம்மட்டியின் மலையாள சிறார் கதைகள் 111 ஐத் தமிழில் மொழிபெயர்த்து வழக்கம் போல நிவேதிதா பதிப்பகம் மூலம் அழகுற வெளியிட்டுள்ளார் ஜீவகாருண்யன்.

இந்நூலில் இடம் பெற்றுள்ள பல கதைகள் காலங் காலமாக சிறார்களுக்குச் சொல்லப்பட்ட கதைகள். கற்பனைக் கதைகள் மூலம் அறிவுரைகள் கூறினால் மட்டுமே சிறார்களின் சிந்தையில் பதியும். அவ்வகையில் இந்நூலில் கதைகள் விரவியுள்ளன. அனைத்துக் கதைகளையும் இங்கு குறிப்பிட வேண்டியதில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக தொட்டுச் சென்றாலே போதுமானது.

வடிவத்தில் சிறியவை ஆயினும் எறும்புகளை ஏளனமாக எண்ணக்கூடாது என்பது யானை அறியாதது. ஒரு நிகழ்வின் மூலமாக சிற்றெறும்புகளின் தனித்தன்மையை யானைக்கு மட்டுமல்ல, சிறார்களுக்கும் உணர்த்தும் கதையொன்று வருகிறது.

சிலந்தி தனது விடாமுயற்சியால் வெற்றி கண்டதைச் சிறையில் கண்ட புரூஸ் அரசன் விரக்திக்கு முடிவு கட்டி மீண்டும் படை திரட்டி வெற்றி கண்டு அரசனாவது சிறார்களுக்கு நம்பிக்கையை நங்கூரமாக்கும் கதை.

பேராசை பெருநஷ்டம் என்பதைப் பல கதைகள் மூலம் இந்நூல் மூலம் சிறார்களுக்கு உணர்த்தப்பட்டுள்ளது. அவற்றுள் வழக்கமாய் சொல்லப்பட்ட கதைகளும் உண்டு. புதிய கதைகளும் உண்டு.

“ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்”
என்றார் திருவள்ளுவர். அத்தகைய ஒழுக்கத்தைக் கற்பிக்கும் கதைகள் பல இத்தொகுப்பில் உள்ளன.

நட்பு குறித்து திருவள்ளுவர் ‘நட்பு’, ‘கூடாநட்பு’, ‘தீ நட்பு’ போன்ற அதிகாரங்களில் விளக்கியுள்ளார். அதைக் கருத்தில் கொண்டு இந்நூலில் மூன்று வகையான நட்புகளையும் கதைகள் மூலம் உணர்த்தப்பட்டுள்ளது.

“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு” என்றார் பாரதியார். அதை உணர்த்தும் வகையில் சில கதைகள் மூலம் இத்தொகுப்பில் உணர்த்தியுள்ளார் நூலாசிரியர்.

“முள்ளை முள்ளால் எடுப்பது” என்பது இன்றளவும் கிராமத்தின் பழமொழி. ‘குல்லாய் வியாபாரியும் குரங்குகளும்’ என்னும் கதை மூலம் சுவைபடச் சொல்லியுள்ளார் கதாசிரியர்.

சூழ்ச்சி, வஞ்சகம், பொய், புறங்கூறுதல் போன்ற தீய செயல்களால் கேடுகளே விளையும் என்பதை சிறார்களின் சிந்தையில் தமது கதைகள் மூலம் ஆழப் பதிந்துள்ளார் நூலாசிரியர்.

மனித நேயம் மகத்தானது. அதே போன்று விலங்குகள் தங்களுக்குள் நேயத்துடன் உதவுவதும் பழகுவதும் பாராட்டத்தக்கது. பின்பற்றத் தக்கது. இதற்கான கதைகளுக்கும் இத்தொகுப்பில் பஞ்சமில்லை.

நம்பிக்கை இல்லாமல் வாழ்க்கையில்லை. அத்தகைய நம்பிக்கை விதைகளைச் சரியாக விதைத்த விட்டால் அவை முளைத்து செடியாகி, மரமாகி, விருட்சமாகி வரலாறு படைக்கும் என்பதில் ஐயமில்லை. அத்தகைய நம்பிக்கை விதைகளை விதைக்கும் கதைகள் பல இடம் பெற்றுள்ளது பாராட்டத் தக்கது.

ஒரு நாடு நல்ல நாடாக விளங்குவது அந்நாட்டு அரசின் செயல்பாடுகளைப் பொறுத்தது. அது அக்காலத்திய மன்னராட்சியாக இருந்தாலும், இக்காலத்திய மக்களாட்சியாக இருந்தாலும் மக்களின் நலனை முன்னிறுத்திச் செயல்பட வேண்டியது அவசியம். அதை மன்னராட்சி மூலமாக உணர்த்தும் கதைகள் வரவேற்கப்பட வேண்டியவை.

‘பீம சேனனும் அரக்கனும்’ போன்ற புராணக் கதைகளும் உண்டு. ‘புலி வருது புலி வருது’ போன்ற பழங்கதைகளும், ‘விளையாட்டு வினையாகும்’ கதைகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘சீச்சி திராட்சை புளிக்கும்’ என்னும் பழங்கதையை மாற்றி ‘புளிக்காத திராட்சை’ என வழங்கப்பட்டிருக்கும் கதை பாராட்டத்தக்கது.

ஒவ்வொரு கதைக்கும் பொருத்தமான படங்களை இடம்பெறச் செய்தமை சிறப்பு.

இந்நூலில் இடம்பெற்ற கதைகளை மலையாளத்தில் வழங்கிய ஜார்ஜ் இம்மட்டியும் எளிய தமிழில் மொழிபெயர்த்து வழங்கிய எழுத்தாளர்
பா. ஜீவகாருண்யனும் பாராட்டுக்குரியவர்கள். அனைத்து இல்லங்களிலும் நூலக அலமாரியில் இடம் பெறச் செய்து சிறார்களைப்
படிக்க வைக்க வேண்டியது பெற்றோர்களின் கண்ணான கடமை.

– பெரணமல்லூர் சேகரன்

நூல் : சிறந்த சிறார் கதைகள் 111
ஆசிரியர் : தமிழில் ப. ஜீவகாருண்யன்
விலை : ரூ: 200
வெளியீடு : நிவேதிதா பதிப்பகம்

தொடர்புக்கு : 044 – 24332924

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 1 Comment

1 Comment

  1. Abi

    Is this book available online to order ? If so, please let me know.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *