“கலை இனியும் அழகுக்கு சேவை செய்யாது” என்கிற மேற்கோளுடன் இந்திரனின் மேசை மேல் செத்த பூனை நம் கவனத்தை ஈர்க்கத் தொடங்குகிறது. “பூனை காணாமல் போனதைக் கவிதையாக்கிய கவிஞன் எழுதிய கவிதையின் கடைசி வரியில்தான் காணாமல் போன அப்பா கவனத்திற்கு வருகிறார். இப்பொழுதெல்லாம் அப்பா எதுவுமே சாப்பிடாமல் படுத்துவிடுகிறார் என்ற அம்மாவின் உரையாடலின் போதுகூட கவிஞனுக்குக் கட்டிலின் கீழே படுத்திருந்த பூனை கத்துவதைப் போலத்தான் பிரம்மை தட்டுகிறது; குறைந்தபட்சம் தன் குடிகார அப்பாவின் உளறல் சப்தமாவது கேட்டிருக்கலாமில்லையா? இல்லை. சாப்பாட்டு மேசைமேல் இருந்த பூனை செத்துப் போனதாக அம்மா சமையலறையிலிருந்து கத்தினாள். காலையிலிருந்தே காணாமல் போன அப்பா செத்தாரா இருக்கிறாரா என்று யாருமே கவலைப்படவில்லை. ஒரு குடிகார நகரத்து அப்பா பூனையைவிட மேலானவர் இல்லை என்று நகரம் சொல்லாமல் சொல்கிறது. இது ஒருவகையில் கால காலமாக கவிதைகள் போற்றுகிற அழகியலைக் கலாபூர்வமாகக் குலைத்துப் போடுகிற வேலைதான். ஆனால் இந்தக் கலாபூர்வம் எதிர் கவிதைக்கு எதிரான அம்சம் இல்லையா?

“நகைச்சுவை, கிண்டல், கேலி, நக்கல், நூலாசிரியர் தன்னைத்தானே மட்டுமல்லாமல் மொத்த மனித குலத்தையும் நக்கலடித்துக் கொள்வது என்று நடைபெறுகிறபோது நூலாசிரியர் பாடுவதற்குப் பதிலாக கதை சொலலத் தொடங்குகிறார் என்று அர்த்தம் – இதுதான் எதிர்கவிதை. மொழியின் சர்வாதிகாரத் தன்மையிலிருந்து கவிதையை விடுவிப்பது எதிர் கவிதையின் முக்கிய குணாம்சம். காலம் காலமாகக் கவிதைக்கென ஸ்தாபிககப்பட்டிருக்கும் கல்யாண குணங்களைப் புறக்கணித்துச் சுதந்திரமான ஒரு வெளியில் இயங்குவதே எதிர் கவிதை.” இப்படித்தான் இந்திரன் முன்னுரையில் குறிப்பிடுகிறார். இவற்றின்படி மேற்குறிப்பிட்ட கலாபூர்வமாக வெற்றிபெற்ற ஒரு கவிதை எதிர் கவிதையாகாது. ஆனால் அவரே குறிப்பிடுவதைப்போல “சோகமான நிகழ்வுகளை வேடிக்கையாக எழுதி கண்ணீரைச் சிரிக்க விடுவது. எல்லாவற்றிலும் கிண்டல் கேலி. ஒரே நேரத்தில் சோகம், விளையாட்டு ஆகியவற்றை இணைப்பது.” எதிர்கவிதையாகும் என்கிறார். இந்த அம்சம்தான் இதனை ஓர் எதிர் கவிதையாக நிலைப்படுத்துகிறது. தனது சொந்த அப்பாவைவிட பூனை முக்கியமாகப் போய்விடுகிற அம்சத்தை எதிர் கவிதையின் மூலம் எள்ளல் படுத்திவிடுகிறார் கவிஞர். இயந்திரத் தனமாகப் போய்விட்ட நகரத்து வாழ்க்கையை எதிர் கவிதையின் மூலம் பகடி செய்கிறார் இந்திரன்.

“சிரியாவில் செத்த குழந்தைகளுக்காக
என் முகநூலில்
ரத்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும்போதே
என் தங்கை பதிவிட்ட
பிறந்தநாள் வாழ்த்துக்கு
நான் ரோஜாப்பூ ஏந்திய நாயின்
சிரிக்கும் படத்தைப்
பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

“உண்மையைச் சொல்வதெனில்
ஒவ்வொரு துக்கத்தின் பின் ஒளியும் நிழலிலும்
ஒரு சந்தோஷம் ஒளிந்து விளையாடுகிறது.
ஒவ்வொரு மகிழ்ச்சியும் தன் கையில்
கண்ணீரில் நனைந்த ஒரு கைக்குட்டையை
மறைத்தே வைத்திருக்கிறது.”

வாழ்க்கையின் அபத்தத்தைப் பதிவு செய்கிறது மேற்குறிப்பிட்ட கவிதை. அபத்தமும் எதிர்கவிதையின் அம்சமாகக் கொள்ளத்தக்கதுதான்.

சிலியில் பாப்லோ நெரூடா உருவாக்கிய கவிதையின் தாக்கத்திற்கு வேறொரு வகை ஈடேற்றமாக நிக்கனார் பர்ரா எதிர் கவிதைகளைப் படைத்தளித்தார். என் கருத்தில் இந்த எதிர் கவிதை அம்சத்தைத் தமிழ்க் கவிதையுலகம் நெடுநாள்களுக்கு முன்பே சாதித்துவிட்டதாகத்தான் கருதுகிறேன். “ “மணமகனே பிணமகனாய் மணப்பறையே பிணப்பறையாய்
அணியிழையார் வாழ்த்தொலிபோய் அழுகையொலியாய்க் கழியக்
கணமதனிற் பிறந்திறுமிக் காயத்தின் வரும் பயனை
உணர்வுடையார் பெறுவருணர் வொன்றுமிலார்க்கு ஒன்றுமிலை”.
என்று திருவிளையாடற்புராணம் (கூடற் காண்டம்) பாடலும்
“படுமகன் கிடக்கை காணூ” என்று புறப்பாட்டும் குறிப்பிடுகின்றன. எதிர் கவிதை அம்சங்களுடனான பாடல்கள் இவை என்று சொல்ல முடியாவிட்டாலும் எதிர் கவிதையின் கூறுகளை நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழ்க் கவிதையுலகம் தொட்டுவந்திருக்கிறது ஆச்சரியம்தான்.

எதிர்கவிதை பற்றி தமிழ்க்கவிதையுலகில் அறிமுகம் என்கிற அளவில் பிரம்மராஜன் கட்டுரை எழுதியுள்ளார். எதிர்கவிதையை ஓர் இயக்கமாக ஒரு தொகுப்பின் மூலமாக அறிமுகப் படுத்துகிறார் இந்திரன். எதிர் கவிதையில் பல கூறுகள் இருந்தபோதும் சோகத்தை விளையாட்டாகச் சொல்வதும், அனைத்தையும் பகடி செய்வதாகவும் ஆன இரு கூறுகளை முக்கியமாக எடுத்துக் கொண்டு “மேசை மேல் செத்த பூனை” யைத் தமிழ் இலக்கிய உலகத்திற்கு அடையாளம் காட்டுகிறார் இந்திரன்.

“இன்று
சுமக்க முடியாத வால்களைத்
தூக்கிக் கொண்டு அலைந்த
டைனோசர்கள்போல்
காதலைச் சுமந்துகொண்டு அலைகின்றனர்
ஆதாம் ஏவாள்களின் வாரிசுகள்”
என்று காதல் உலகினைப் பகடி செய்கிறார் கவிஞர்.

கவிழ்த்துப் போட்ட பிளாஸ்டிக் பக்கெட்,, மர பெஞ்சு, டிபன் பாக்ஸ், எவர் சில்வர் தட்டு, பேருந்தின் தகரச் சுவர், கைகள், ஷு அணிந்த கால்கள் ஆகியவற்றை இசைக்கருவிகளாகப் பயன்படுத்தும்
“மரண கானா
மாச்சுப் பொட்டி மாணிக்கம்தான்
இன்றைய மகாகவி.
அவனுக்குத் தெரியும்
இந்த அபத்த வாழ்க்கையில்
அர்த்தத்தைவிடவும் சத்தம் ரொம்ப முக்கியம் என்று.”

“தேசப் பிதாவானவரை நாம் கதா காலமும் ஜெபிக்கும் விதமாக
அரசாங்கம் நமக்குக் கொடுத்துள்ள கட்டளை
நீங்கள் நாடெங்கிலும் போய்
மதுககடைகள் மூடப்பட்ட காந்தி ஜெயந்தியன்று
கள்ளச் சந்தையில்
மதுவை வாங்கி அருந்திக் களியுங்கள்” என்பதே என்கிறார் கவிஞர். பகடியின் அர்த்தத்தை மேலும் கூர்மைப்படுத்துவதாக இருக்கிறது அவரது இரண்டு வரிகள்…
“நீங்களும் இந்த எளிய ஊழியத்தைச் செய்யலாமே.
தேசப்பிதாவுக்கென்று எதையாவது செய்வோம்.”

பைபிளில் வரும் யேசுவின் பன்னிரண்டு சீடர்களுடனான கடைசி இரவு விருந்து சமகாலத்தில் காட்டிக் கொடுப்பவர்களாக மாறிக் கொண்டிருக்கும் அல்லது மாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் பலரும் பொருத்திக் காட்டுகிற கவிதை ‘கடைசி இரவு விருந்து’.

தன்னை மட்டுமல்லாமல் அனைத்துக் கவிஞர்களையும் பொய் சொல்லும் ‘புலவர்கள்’தான் என்று பகடிமயமாக ‘அடுத்த கிரகத்திலிருந்து ஒரு கடிதம்’.

ஒவ்வொரு கவிஞனும் மனைவி என்கிற ஓர் அந்தஸ்தை வழங்கி எப்படி ஒரு பெண்ணின் கனவுகளைக் கபளீகரம் செய்கிறார்கள் என்கிற ஆணியப் பகடி தான் ‘மனைவி தேவை’.

எதிர் கவிதையில் எதுவும் கவிதையாகும் என்கிற இலக்கணத்தின்படி வீதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு வெறுமனே அலைபேசி உரையாடலாக இருக்கிற ‘கைபேசி உரையாடல்’.

தற்கொலை செய்துகொண்ட குழந்தையின் தலைமேல் மொய்க்கிறது மரணம்…சாவுக்காக வீட்டுக்கு வந்த சொந்தக் காரக் குழந்தைகளோடு குதூகலமாக விளையாடிக் கொண்டிருக்கிறது குழந்தை என்று சோகம் சர்வ சாதாரணமாகச் சொல்லப்படுகிற ‘குழந்தையிடம் தற்கொலை பற்றிப் பேசுதல்’.

பெரும்பாலானோர் வெறுத்து ஒதுக்கக் கூடியதாக இருந்தாலும், செல்லப் பறவையாகக் கவிஞரால் கொண்டாடப்படும் ‘ஆந்தை”.

பொன் வண்டுகளையும் பட்டாம் பூச்சிகளையும் பாடிய காலம் முடிந்துபோனதெனக் கவிஞரால் பாடப்படும் ‘கரப்பான் பூச்சிகள்’.

வயது வித்தியாசமில்லாமல் எல்லோரும் காத்திருக்கும் மரணமாகக் காட்சியளிக்கும் ‘லெவல் கிராசிங்’.
எழுதி முடிக்கப்படாத ஒரு கவிதையை நேசிப்பது போல கவிஞர் நேசிக்கிற “கடலை நோக்கி சோம்பேறித்தனமாய்ப் படுத்திருக்கும் எல்லா வீதிகளையும் எனக்குப் பிடிக்கும்” என்கிற ‘தெபாசே தெரிஸ்மா வீதி’

கார்களின் மீது பெய்யும் மழையில் குதிக்கும் நீர்த்தவளைகள் என எந்திர அழகியல் பேசும் ‘நகரத்தில் பெய்கிறது மழை’.

ஒரு நகரத்தில் தூக்கத்தில் நடப்பவன்கூட நகரத்தின் தவிர்க்க முடியாத சுற்றுலா பயணியாகிறான்.

ஒரு எழுத்தாளர் ஒரே விஷயத்தைத்தான் திரும்பத் திரும்ப எழுதுகிறார் என்று அசோகமித்திரன் ஒரு முறை சொன்னதாக ஞாபகம்.
உதாரணத்திற்கு ஒன்று… கவிஞனின் முதல் தொகுப்பில் அந்நியன் என்கிற கவிதை இடம்பெறுகிறது.
“முகத்தில் சோப்புத் திரளுடன்
சவரக்கத்தி ஆயுதம் தரித்து நிற்கையில்
ஓர் அந்நியனைச் சந்தித்தேன்
… உடல் குலுங்க நான் சிரிக்கிறபோதெல்லாம்
உதடு துடிக்க அழும் இவன் யார்?…
சொல்லுங்கள் ஐயா
எனக்குள்ளிருக்கும் இந்த அந்நியன் யாரென்று?”
1982 இல் வெளிவந்த தொகுப்பில் இடம்பெற்ற மேற்குறிப்பிட்ட அந்நியன் கவிதையின் இதே சாயல் 2018 இல் வெளிவந்த தொகுப்பில் அந்நியம் என்கிற தலைப்பில் தொடர்கிறது.
“சில நேரங்களில்
என்னுடைய உடம்பே
எனக்கு அந்நியமாய்த் தெரிகிறது….
நான் என்பது
எப்போது எனக்கு
சொந்தமாகப் போகிறதென்று தெரியவில்லை”

அந்நியன் தொகுப்பில்
“சொற்கள்
கா.. கா.. கா.. வென
ஒரு கவளம் சோற்றுக்குப் பறந்து வந்துது
கூடும் காககைக் கூட்டமாய்
என்னைச் சுற்றிவந்து கூடும்…..
துரத்தினாலும்
பறப்பது போல் பாவனை காட்டி
மீண்டும் வந்து அமர்ந்து தொலைவிலிருந்தே
ஒரு பக்கமாய்த் தடிடி சாய்த்துப் பார்த்து
அலகை நீட்டிய” அதே காக்கைதான்
“மேசை மேல் செத்த பூனை”யில்
“என் முதுகுக்குப் பின்னாலிருந்து
மீண்டும் பறந்து வந்து
என் தலையைத்
தன் கரிய சிறகுகளால் மெலிதாய்க் கீறிப்
பறந்து சென்றது” என்கிறார்.

அவருடைய ஒட்டுமொத்தக் கவிதைகளைக் கூர்ந்து படித்தவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள முடியும். இந்திரன் தன்னைப் பற்றிய அவதானிப்பு, மானுட வாழ்க்கையின் சில தரிசனங்கள், மொழியின் அல்லது வார்த்தைகளின் நம்பகத்தன்மை, நகரத்து மனித வாழ்க்கையின் அபத்தக் குறியீடுகள் ஆகியவற்றைத்தான் திரும்பத் திரும்பச் சொல்கிறார். இவை தவிர ஏராளமான கருத்துலகத்தைத் தமிழ் இலக்கிய உலகிற்குப் புதிது புதிதாக அறிமுகப் படுத்திக் கொண்டேயிருக்கிறார். இவருடைய இந்த அயராத பணியினால்தான் இன்றைய இலக்கிய உலகம் இந்திரனை வியந்து பார்க்கிறது.

– நா.வே.அருள்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



One thought on “நூல் அறிமுகம்: இந்திரனின் “மேசை மேல் செத்த பூனை” – நா.வே.அருள்”
  1. அருமையான விமர்சனம் கவிஞர் அருள்.”ஏராளமான கருத்துலகங்களை தமிழ் இலக்கிய உலகத்திற்கு இந்திரன் அறிமுகப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்” எதிர் கவிதை, வாசக மைய விமர்சனம் என்பன போன்று. கவிதை, ஓவியம், சிற்பம் , கலை விமர்சனம் என பன்முகத்திறன் படைத்ததோடு, பாசாங்கற்றவராய் அவர் இருப்பது மேலும் சிறப்பு. பேரன்புடன் – சுதா முருகேசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *