முன்னுரை:
இத்தா என்பது இஸ்லாமியப் பெண்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட சாங்கியமா அல்லது அவர்கள் மீது வலுக்கட்டாயமாக தினிக்கப்பட்ட சங்கடமா என்ற கேள்வியை தன் நாவல் மூலம் வாசகர் மனங்களில் விதைக்கிறார் ஆசிரியர். 1998 பிப்ரவரி 14 ம் நாள் கோவையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தின் பின்னணியாக இஸ்லாம் சமூகத்தை சேர்ந்தவன் என்ற ஒன்றைத் தவிர வேறெந்தத் தவறும் செய்யாத நியாஸ் என்பவன் திருமணம் முடிந்ததும் அதே மேடையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறான். அவனைப்போல் பல இஸ்லாமிய இளைஞர்கள் மதப் பாகுபாடு, அரசியல் மற்றும் வணிகப் போட்டி காரணமாக கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் ஒவ்வொருவரின் கதையையும் ஒரு நாவலாக எழுதலாம். அதன் தொடக்கமாக நியாஸின் கைதுக்குப் பின் அவன் மனைவி மரியம் என்ன ஆகிறாள் என்பதையும் அவளை சுற்றி நடக்கும் சம்பவங்களையும் தமது புனைவின் வழியே விவரிக்கும் கதை. இது புனைவா அல்லது உண்மைச் சம்பவமா என்று பிரித்தறியா வண்ணம் கதை நகர்கிறது. நகர்கிறது என்று கூறுவதை விட ஓடுகிறது என்றே கூறலாம். ஆசிரியர் கீரனூர் ஜாகிர் ராஜா அவர்களின் பத்தாவது நாவல் என்ற பெருமையோடு நாவல் வீறு நடை போடுகிறது.
ஆசிரியர் ஜாகிர் ராஜா
2006 ஆம் ஆண்டு “மீன்காரத் தெரு” என்ற தன் முதல் நாவலை எழுதிய ஜாகிர் ராஜா அவர்கள் “இத்தா” என்னும் தன் பத்தாவது நாவலை பதினைந்து வருடங்களில் அளித்துள்ளார். அவரது ஒவ்வொரு நாவலும் முத்திரை பதிக்கும் விதமாக பல்வேறு கருக்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது.. அவற்றில் இத்தா நாவல், கோவையில் அவர் வாழ்ந்த காலத்தில் நடைபெற்ற கலவரத்தை பின்னணியாகக் கொண்டு இஸ்லாமிய சமூகத்தில் கணவரை இழந்த அல்லது கணவரை விட்டுப் பிரியும் பெண்கள் மேற்கொள்ளும் ஒரு வகை சம்பிரதாயத்தை, அது உருவாக்கப் பட்டதன் நோக்கம் என்ன என்பதை புரிந்துகொள்ளாமல் ஜமாத்தில் இருக்கும் பொறுப்பாளர்கள் எல்லா பெண்கள் மீதும் திணிக்கும் அவலத்தை, படித்தவராலும் தட்டிக் கேட்க இயலாத நிலையை தன் புனைவின் வாயிலாக அனைவர் மனதிலும் விழிப்புணர்வை விதைக்கும் விதமாக எளிமையான நடை மற்றும் காட்சி அமைப்புடனும் ஆங்காங்கே நகைச்சுவையும் சேர்த்து ஒரு அறுசுவை கலவையாக நமக்கு அளித்திருக்கிறார். நாவலில் வரும் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் அதற்கே உரித்தான கண்ணியத்தை காப்பாற்றும் விதமாகவும் வழக்கமான எதிர்மறை நிகழ்வுகளை கூறாமல் ஆக்கப்பூர்வமான இடத்திற்கு கதையை கொண்டு சேர்க்கிறார்.
“முஸ்லிம், இந்து, கிறிஸ்தவர் எல்லாம் சேர்ந்து வாழுறது ஒரு கொடுப்பினை அது தான் இந்தியா.” என்று அவர் கூறும் வரிகளில் இந்தியாவின் பன்மைத்துவத்தையும் கோடிட்டு காட்டுகிறார்.
எழுத்தாளருக்கு முன் தான் ஒரு வாசகன் என்பதை, “இந்தியன் ஸ்வந்தர்ய சமர சரித்திரம்”, “நள்ளிரவில் சுதந்திரம்”, “புத்தம் வீடு”, “ஒரு கடலோர கராமத்தின் கதை”, “அம்மா வந்தாள்”, “லியோ டால்ஸ்டாய் எழுதிய வார் அண்ட் பீஸ் நூலின் தமிழாக்கமான போரும் அமைதியும்”.என பல நூல்களை ஆங்காங்கே அறிமுகம் செய்கிறார்.
பெண்களின் உணர்வுகள் வார்த்தையால் மட்டுமே வெளிப்பட வேண்டிய அவசியம் இல்லை என்பதை கதீஜா அபிதா என்ற வாய்ப்பேச முடியாத இரு பெண்களை கொண்டு நிரூபிக்கிறார்.
“மரியம்மின் சாந்தம் பரவிய முகத்தை பார்க்கையில் மனதுக்குள் மல்லிகைப்பூ மலர்ந்து மணம் வீசுவது போல் உணர்வான் சாகுல்”. எனும் அடை மொழியில் சாகுலிற்கு மரியம் மீதான ஈரப்பையும் முன்னரே தெரிவித்து விடுகிறார்.
அவளது மாமியின் பெயரும் மாமியாரின் பெயரும் ஆமீனா பீவி, அவள் தாய் மாமன் பெயரும் மாமனார் பெயரும் அப்துல் காதர், அவள் விரும்பிய நியாஸின் பெயரிலேயே அவள் மணவாளன். அவளது பள்ளி நண்பன் மன்சூர் பெயரிலேயே ஒரு நட்பு என ஒரு நாவலின் கருவை அழமாக்குவதற்கு அதிகப்பெயர்களை பிரயோகிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதற்கான அவரது எழுத்தின் சாட்சியாக பார்க்க முடிகிறது.
மரியம்:
மரியம் என்ற இளம் பெண், சிறுவன் மன்சூருடன் பட்டம் விடுவதாக வர்ணனைகளுடனான அறிமுகம். அவளை சுதந்திரப் பெண்ணாக மனதில் உருவகப்படுத்தும் அதே நேரத்தில் அவள் கண்கள் கலங்கியதாக கூறும் இடத்திலேயே அவளது மனதில் பெரும் பாரம் இருப்பதை நாவலின் முதல் அத்தியாயத்திலேயே தெரிவித்து அதனை அறிந்துக்கொள்ள நாவலை தொடர்ந்து வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்திவிடுகிறார். தெங்குவிளை கிராமத்தில் பிறந்த மரியம், பள்ளிப் பருவத்தில் தான் சந்தித்த நியாஸ் என்னும் இளைஞனை “நான் மனதுக்குள் அவனை வரைந்துக்கொள்ள தொடங்கி வீட்டிருந்தேன் எவ்வித விகல்பமுமில்லாமல்.” என்னும் வரிகள் மூலம் அவளது முதல் காதல் அனுபவத்தை நம்முடன் பகிர்வதில் பதின்ம வயதுப் பெண்ணின் மென்மையான உணர்வுகளை சொன்ன அதே வேளையில் இத்தாவிற்கு உட்புகுத்தப்படும் போது “புயலில் சீறும் அலை கடல் போல அவள் மனம் பொங்கியது”. “இவள் பெண் தானே இதையும் அனுபவித்துப் போகட்டும் என்ற அலட்சியம்”. “கொதிகளனாக இருந்த அவளது மனம் சம்பிரதாயமான மரியாதைகளை எல்லாம் துறந்து எதையும் நேரிட எதிர்கொள்ள காத்திருந்தது.” என்ற வரிகளில் பெண்ணுக்குள் ஒரு போராளி இருக்கிறாள் என்பதையும் நமக்கு புரிய வைத்து விடுகிறார்.
மரியமின் நாட்குறிப்பு:
ஐந்தாவது வயதில் பெற்றோரை இழந்து, குழந்தை இல்லாத தன் தாய்மாமன் காதர் மைதீன் மற்றும் மாமி ஆமீனாவின் அன்பான வளர்ப்பில் தென்குவிளை என்ற கிராமத்தில் தன் துயரை மறந்தவள். மாமனின் தாலாட்டுப் பாடலில் திளைத்தவள், வேதம் கற்றறிந்த முஸ்லியாரும் மோதினும் பாங்கு சொல்வதை கேட்டு வளர்ந்தவள். அதன் தாக்கமாக இறைத்தூதரை அவள் கனவில் சந்தித்து செம்பருத்தி மலர், புளி உருண்டை, சிறுவாணித் தண்ணீர் வழங்கியதும் அவருடன் இஸ்லாம் மார்க்கத்தின் நோக்கத்தையும் நாளடைவில் அதில் புகுத்தப்பட்ட முரண்பாட்டையும் தனக்கு தெரிந்தமுறையில் கலந்துரையாடுதலும் அவள் ஆழ்மனதின் இறை நம்பிக்கையை விளக்கும் விதமாக ஆசிரியரின் எழுத்து உணரச் செய்கிறது.
அந்த ஊரில் செல்வந்தராக வாழ்ந்த மன்சூரின் தந்தை குடும்பம் பெருமிதக்காரர் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுவதும் அவர் இறந்தவுடன் அவருக்கு இறுதி சடங்குகளை செய்து உடலை சுத்தம் செய்யக்கூட யாரும் முன்வராததும் அவர் மனைவி இத்தா இருப்பதற்கு இடம் அளிக்காத சுற்றமும் உறவும் என அனைத்தும், “இந்த உடலில் உயிர் என்ற ஒன்று இருக்கும் வரை மட்டுமே. அது உடலைப் பிரிந்து விட்டால் எல்லோரும் ஒன்றே (சவமே)” என்ற வாழ்வியல் தத்துவத்தை ஆழமாக நம் மனதில் பதிக்கிறது.
நிமிடத்திற்கு நூறு முறை இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டிருக்கும் மாமி, அதற்கு நேரெதிராக ஆன்மீக வாசமே நுகராத மாமன் இவர்கள் இருவருக்குள்ளும் இருக்கும் அன்பும் இணக்கமும் அவர்களின் வாழ்க்கைப் பாதை வேறாக இருப்பினும் ஒருவரை ஒருவர் புரிந்து உண்மையான அன்பைப் பொழிய முடியும் என்று நமக்கு ஒரு பாடமாக ஆசிரியர் புகட்டுகிறார். “சிரிப்பவர்களுடன் சேர்ந்து சிரிக்காதே ஆனால் வருத்தப்படுபவர்களுடன் சேர்ந்து வருத்தப்படு” என்பதை கொள்கையாக கொண்ட மாமி நம் முன் பெரியவளாகத் தெரிகிறார்.
பள்ளித் தோழன் மன்சூரின் முதல் புன்னகை, அவனுடனான பள்ளிப் பருவ நிகழ்வுகள், வாய்ப் பேசமுடியாத தோழி ஆபீதாவுடனான நட்பு, அவளின் ஒவ்வொரு அசைவையும் இவள் ரசித்தது அவளது திடீர் மரணம். “கூட்டைக் களைத்தவனை கொட்டியெடுக்கும் தேனீக்களைப் போல நியாஸின் நினைவுகள் மரியத்தை வாட்டின”. எனும் வரிகளில் நியாஸ் அவளது மனதில் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தியது என நவரச உணர்வையும் நவிலும் விதம் ஆங்காங்கே அழகிய உவமைகளுடன் நாவலை நகர்த்தி செல்லும் விதம் அருமை.
மன்சூர்:
முறுக்கு தின்றுக்கொண்டு பட்டம் விட்டுக்கொண்டு பள்ளியில் படிக்கும் சிறுவனாக உலாவருபவனாக மன்சூர் இருந்தாலும் அவனே மரியத்தின் மனதை ஆற்றுப்படுத்தும் மருந்தாக நாவல் முழுதும் வலம் வருகிறான்.
மாஷே:
மாஷே பஷீர் என்ற பெயர் கொண்ட எம். ஏ., எம். பில்., பி. ஹெச். டி., படித்த, வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டு, தன் நண்பரின் மகனுக்கு மரியத்தை திருமணம் செய்து வைப்பது, கதீஜா என்ற வாய் பேச முடியாத பெண்ணுக்கு ஆதரவளிப்பது, நியாஸின் விடுதலைக்காக காவல் நிலையத்திற்கும் வக்கீல்களிடமும் பேசுவது, மரியத்தின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக மரியத்தின் மறுமணத்திற்கு காதர் ராவுத்தரிடம் அனுமதி பெற்று நியாஸிடம் தலாக் பெற்று சாகுலை திருமணம் செய்து வைப்பது, சமூக சேவைகள் செய்வது என ஒரு உயர்ந்த மனிதராக மாஷேவை வடிவமைத்து இந்த உலகத்தில் மனிதாபிமானம் இன்னும் இருப்பதற்கான அடையாளப்படுத்துகிறார் ஆசிரியர். மாஷேவின் ஒரே வார்த்தைக்கு மதிப்பளித்து இத்தாவிற்கு சம்மதம் தெரிவிக்கும் மரியம் மூலம் மாஷேவின் பாத்திரப்படைப்பின் பலம் புலப்படுகிறது.
நியாஸ் அகமது:
“உருக்குலைந்த சிலையை போல வந்து நின்றான்” என்ற வரிகள் நமக்குள் வலியை கடத்துகின்றது.
“தலாக் விஷயத்தை சொன்னபோது அதிர்ச்சி எதுவும் அடையாமல் மெல்ல புன்னகைத்தான்”. அவனால் வேறெதுவும் செய்ய இயலாத நிலை. நாவலின் மையக் கருவாக இருக்கும் நியாஸ் கதாப்பாத்திரம் கதை முழுதும் அவனைப் பற்றி ஒவ்வொருவரும் பேசினாலும் ஒரே ஒரு வார்த்தை கூட பேசாமல் நம் அனைவரின் மனதையும் நிறைத்து சென்றவன்.
அப்துல் காதர் ராவுத்தர்:
மரியத்தின் மாமனாராக வரும் காதர் ராவுத்தர் இந்த நாவலின் மிக உன்னதமான ஆண்மகன். தண்டபாணி மூலம் “நியாஸின் கைதில் தொழில் போட்டி காரணமாக இருக்கும்” என்று தெரிந்து செய்வதரியாமல் திகைப்பதும், “அன்னாடும் அவளை பாக்கரபோதெல்லாம் தப்பு பணனிட்டோம் தப்பு பண்ணிட்டோம்னு மனசு பதபதைக்கும்” என்று தவிக்கும் தருணத்திலும், “மனித மனங்களின் விநோதங்களை கண்டெடுப்பதில் உள்ளூர ஆர்வம் அதிகம். மொழி கடந்த பிரதேசம் கடந்த அன்பும் பரிவர்த்தனைகளும் கிடைக்கப்பெற்றால் அனைவரும் மகிழ்வாக இருந்துவிட முடியும்.” என்று கூறும்போதும் உணர்வுகளின் உறைவிடமாக இருக்கிறார்.
சாகுலுக்கும் மரியத்திற்கும் கடிதம் மூலம் தனது மனதில் இருப்பதை வெளிப்படுத்திய விதம் ரசிக்கும்படியாகவும் மரியாதைக்குரியதாகவும் இருக்கிறது. மாமனார் வீட்டில் நான்கு வருடங்கள் இருந்த காரணத்திற்காக மரியம் இத்தா இருக்கவேண்டும் என்று ஜமாத்தில் சொன்னதும் காதர் ராவுத்தர் மனம் கொண்ட வேதனை மிகப்பெரியது. அதை மரியத்திடம் கூறாமல் அவளுடைய கோபத்திற்கு ஆளானாலும் பரவாயில்லை அவளை இத்தா இருக்கச் செய்து அவள் மீது எந்த வித கலங்கமும் இல்லை என்பதை நிரூபிக்க நினைத்த மாமனாராக அவர் அனைவர் மனதிலும் உயர்ந்து நிற்கிறார்.
ஆமீனா பீவி:
அவள் மகனை நினைத்து புலம்புவது, தொழுகை செய்வது, கண்ணீர் விடுவது என ஐம்பது வயது கடந்த பெண்ணின் அனைத்து குணங்களையும் கொண்ட சராசரி பெண்ணாக உருவகப் படுத்தப்படுகிறாள். “இந்த மலையாளத்துக் காரனுங்களே இப்பிடிதான் நம்பவெச்சு கழுத்தருத்துருவானுங்க” என்று தன் மகனைப் பார்க்க முடியாமல் போனதற்காக மாஷேவை திட்டும்போது அவளது இயலாமை நம்மையும் இணைத்துக்கொள்கிறது. தன் மகன் பொலீசாரால் பிடிபட்டதற்கு மரியம் வந்த நேரம் தான் காரணம் என்று கூறாமல் அவளை தன் வீட்டில் வைத்துப் பார்த்துக் கொள்வதிலும் இத்தாவில் இருக்கும் மருமகளுக்காக கறி வாங்கி சமைத்துக் கொடுப்பதிலும் அவளது மறுமணத்திற்கு சம்மதம் தெரிவிப்பதிலும் ஒரு சராசரி மாமியாராக இல்லாமல் தனது தாயுள்ளத்தை வெளிப்படுத்தி ஆமீனா மாறுபட்டு நிற்கிறாள்.
இஸ்லாமியரின் இறுதிச் சடங்கு:
மகுத்தான முஸ்லிம் வீடுகள் மற்ற மதத்தவரின் துக்க வீடுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. கொட்டுச் சத்தமோ ஒப்பரியோ அழுகையுடன் கூடிய பேரோலமோ, பாடை கட்டுதல், இறந்தவர் சடலத்தின் மீது பூமாலை சாத்துவது போன்றவை இருக்காது. ஆண்கள் வெளியிலும் பெண்கள் வீட்டுக்குள்ளும் இருக்க வேண்டும். ஆட்டம் பாட்டம் கேளிக்கைகள் இல்லை. அனாவசிய உரையாடல்களுக்கு அனுமதி இல்லை. இறந்தவரின் தலை மாட்டில் அமர்ந்து ஊதிக்கொள்ளவும் ஊதுவத்தி கொளுத்தி நறுமணம் கமழவிடவும் தடை இல்லை. மகுத்திற்கு வந்தவர்கள் தாகத்துடனும் பசியுடனும் அமர்ந்திருக்கத் தேவை இல்லை. தேநீர் காபி அருந்தலாம். மதிய உணவு உண்டு. இறந்தவரின் சடலத்தை சுத்தம் செய்வதற்கென்று சிலர் இருப்பர். அவருக்கு மய்யித்து குளிப்பாட்டி என்று பெயர். அவர்கள் முதலில் மய்யித்தின் பிறந்த மேனியை குளிப்பாட்டுபவர் கண்களால் கண்டு ஒப்புக்கொள்ளவேண்டும். பிறகு மய்யித்தின் ஒன்பது துவாரங்களிலும் தன் கை விரல்களை நுழைத்து கழிவுகளை வெளியேற்றுவதுடன் உடல் முழுவதையும் நீரால் கழுவி சுத்தப்படுத்த வேண்டும் என்பவை இஸ்லாம் சமயத்தவரின் இறுதிச் சடங்கின் போதான நடைமுறையை மற்ற மதங்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.
இத்தா:
விவாகரத்து பெற்ற அல்லது கணவரை இழந்த ஒரு முஸ்லிம் பெண் 130 நாட்கள் தனிமையில் காத்திருப்பதற்கு “இத்தா” என்று பெயர். கணவன் இறந்து விட்டாலோ கணவனால் “தலாக்” என்னும் விவாகரத்து பெற்றிருந்தாலோ அந்தப் பெண் கர்ப்பம் தரித்திருக்கின்றாளா இல்லையா என்பதை அறிய கடைபிடிக்கும் சடங்கு. போர்களில் கணவனை இழந்த விதவைகளான பெண்களுக்காகப் பரிந்து கொண்டுவந்த நடைமுறை. தனி அறையில் சொந்த பந்தம் பிறத்தியார் பார்வை படாமல் குறிப்பாக ஆண்களின் பார்வையில் படாமல் குளிப்பது தவிர வேறெந்த அலங்காரமும் செய்துகொள்ளாமல், இறை வணக்கத்தில் இத்தா நாட்களை கழிக்க வேண்டும். உடலுறவு கொள்ளவில்லை கணவன் மனைவி தனியாகவும் இருக்கவில்லை. இந்த நிலையில் தலாக் கொடுத்தால் இத்தா இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பெற்ற மகன் சிறுவனாக இருந்தால் அவனைப் பார்ப்பதில் இத்தா இருக்கும் தாய்க்கு தடை இருக்கக் கூடாது. அதே போல கர்ப்பிணி பெண்ணை பார்க்கக்கூடாது என்றெல்லாம் இல்லை..
காலப்போக்கில் அவற்றை மாற்றி இருட்டறையில் இருக்க வேண்டும். பெற்ற மகனைக் கூட பார்க்கக்கூடாது. கர்ப்பிணிப் பெண்களை கண்டிப்பாகப் பார்க்கக்கூடாது காரணம் அந்த கர்ப்பத்தில் இருக்கும் பெண் ஆணாக இருந்தால்? எனவும் பெண் தன் தலையை எண்ணைய் பூசி கோதிக்கொள்வது கூட குற்றம். என புதுக் கட்டுப்பாடுகள் தினிக்கப்பட்டிருக்கிறது.
முடிவுரை:
“திருமண மண்டபத்துக்குள் போலீஸ் நுழையாமல் இருந்திருந்தால் மணக்கோலத்தில் இருந்த நியாஸை அழைத்து செல்லாமல் இருந்திருந்தால் ?”
“168 பேர் அரெஸ்ட்னு லிஸ்ட் தராங்க ஆனா கொள்ளப்பேர் காணாமல் போகிறார்கள் ?”
“வெடித்தது ஆர் டி எக்ஸ் ஆ இல்ல ஜெலட்டினா எதுவனாலும் போனது 58 உயிர்களல்லவா ?”
“எத்தனைப் பெண்களின் புலம்பலைத்தான் இந்த பூமாதேவி கேட்டு சகித்துக் கொண்டிருப்பாள் ?”
“எந்த முஸ்லிம் பெண் வாழ்க்கையை தென்னத்தோப்புக்குள் எல்லாம் புகுந்து ரசித்து வாழ்ந்திருக்கிறாள். அவளுக்கானது நான்கு சுவர்களும் ஒற்றைச் சன்னலும் மட்டும் தானே ?”
“காலம் யார் யாரை எங்கே எப்போது இருத்துவதென்று ஏற்கனவே தீர்மானித்திருக்கும் போல ?”
“சம்பிரதாயமான சொற்களுடன் தானே நம்முடைய எல்லா சம்பாஷணைகளும் ஆரம்பிக்கின்றன ?”
“கணவன் மரித்தால் அடுத்த கணமே ஒரு பெண்ணின் ஆளுமை அதிகாரம் கைவிட்டுப் போய்விடுமா.?”
“பகுத்தறிவு மார்க்கத்தில் பெண்கள் மீது மட்டும் இத்தனை கட்டுப்பாடுகள் சுமத்துவது நியாயம் தானா ?”
“ஒரு பெண் மறுமணம் செய்துக்கொள்ளும் எண்ணத்தில் இல்லை என்றாலும் இந்த வழிமுறை, தனிமைத் துயரை கடைபிடிக்க வேண்டுமா ?
“ஒரு பெண் கருவுற்று இருக்கிறாளா என்று கண்டறிய இந்தச் சிறைவாசம் தேவையா, வேறு வழியே இல்லையா ?”
என நாவல் முழுவதும் தனது கேள்விகளால் நிரப்பி இருக்கும் ஆசிரியர், நிறைய பிரச்சனைகளுக்கு மத்தியில் எழுதும் போது ஃபிக்ஷன் ரைட்டிங் நல்லா வரும் என்று கூறிவிட்டு, தன் இயல்பான எழுத்தினால் இஸ்லாமியப் பெண்களின் நிலையை ஆன்மீகம் என்ற பெயரிலும் சம்பிரதாயம் என்ற பெயரிலும் சடங்குகளின் மெய்யான நோக்கத்தை காலத்தின் கட்டாயத்தில் மாற்றியும் திரித்தும் தினிக்கப்படும் கட்டுப்பாடுகளையும் அவலத்தையும் அதனை களைவதற்கான மார்க்கம் என்ன என்ற கேள்வியையும் நம் மனதில் விதைத்து கோவை மத்திய சிறைச் சாலை மட்டுமல்ல நம் ஒவ்வொருவரின் மனமும் மர்மத்தின் பிறப்பிடம் மௌனத்தின் இருப்பிடம் என்பதை புரிய வைக்கிறார்.
நம் ஒவ்வொருவரின் பாதையும் பயணமும் நீண்டு செல்கிறதே தவிர இலக்கை அடைய முடியவில்லை என்று கூறும் ஆசிரியர், மரியம் சாகுலின் திருமணம் மூலம் அந்த இலக்கை அடைவதற்கான முதற்படி எடுத்து வைத்து நம்மையும் தன்னுடன் பயணிக்க உந்துதல் அளிப்பதாக உணர்கிறேன்.
ஒரு நாவலின் வெற்றி அதனை வாசிக்கும் போது வாசகரின் மனதில் ஏற்படுத்தும் விறுவிறுப்பு, ரசிப்புத் தன்மை, நாவலை படித்துக்கொண்டு இருக்கும்போது அதனை முழுமையாக படித்து முடிக்கவைக்கும் யுக்தி, அதன் மூலம் நமக்கு கூற வரும் செய்தி அல்லது அறம் என அனைத்தையும் பொறுத்தே அமையும். இந்தக் கூறுகள் அனைத்தும் பொருந்திய படைப்பாக இத்தா நாவல் அமைந்துள்ளது.
நன்றி,
பிரியா ஜெயகாந்த்,
சென்னை,
தொ. பே: 9840308787
மின்னஞ்சல்: [email protected]
நூல் : இத்தா (நாவல்)
ஆசிரியர் : கீரனூர் ஜாகிர் ராஜா
விலை : ரூ.₹280
வெளியீடு : நன்னூல் பதிப்பகம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.