சஞ்சீவி மாமா – சிறார் நாவல்
ஆசிரியர் : கொ.மா.கோ.இளங்கோ
விலை : 90/-

வெளியிடு: புக்ஸ் பார் சில்ரன் (பாரதி புத்தகாலயம்)
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
7, இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை , சென்னை
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

தூய்மைப் பணியாளர்களின் மகத்துவம்


 

காலை ஆறு மணிக்கு வாக்கிங் செல்லும் வழக்கமிருந்தால், அனைவரும் காணும் காட்சி ஒன்று இருக்கும்.

முந்தைய நாள் முழுவதும் மனிதர்களால் அசுத்தமான சாலையை, முதுகுத்தண்டு வலிக்க வலிக்கப் பெருக்கித் தூய்மை செய்து கொண்டிருப்பர் சிலர்.

நிரம்பிக் கிடக்கும் குப்பைத் தொட்டியில், மேலும் மேலும் தாராளமாய் கொட்டிச் செல்பவர்களை எட்டிப் பார்த்து கேள்விக் கேட்டுக் கொண்டிருக்கும் குப்பைகளை, அள்ளியெடுத்து வண்டியில் திணித்துக்கொண்டிருக்கும் சிலரையும் பார்ப்போம்.

இவர்கள் இவ்வாறு தெருவை, சாலையை, குப்பைத் தொட்டிகளை சுத்தப்படுத்தாமல் இருந்தால்?

கொ.மா.கோ.இளங்கோ அவர்களின் ‘சஞ்சீவி மாமா’ புத்தகம், தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கை நிலையை, அவர்கள் சமுதாயத்தால் அடையும் மனவேதனையை, தூய்மைப் பணியாளர்களின் சகிப்புத்தன்மையும், உழைப்பும், இவர்களின் சேவையால், மனிதர்களின் வாழ்வை மலரச் செய்யும் விதத்தை பற்றிப் பேசுகிறது.

பேச்சிராசு என்ற பத்து வயது மாணவன் தொடக்கப் பள்ளியிலிருந்து உயர்நிலைப் பள்ளிக்கு ஆறாம் வகுப்பு பயிலச் செல்கிறான்.

புதிதாக உருவாகிவரும் குடியிருப்புப் பகுதியில் பேச்சிராசு அவன் அக்காள் வேணி, அப்பா அம்மாவுடன் வசித்து வருகின்றனர்.

முப்பது வருடங்களுக்கு முன்பு கூட, மனிதக் குடியிருப்புகளில் மனிதர்களின் கழிவை அகற்ற மனிதர்களே பயன்படுத்தப்பட்டனர்.

சதுர வடிவிலான தகரக் கதவு மூலம் மறைக்கப்பட்ட பொந்தின் வழியாகத் தினமும் மனிதர்களின் கழிவுகளை மனிதர்களே அள்ளிச் சென்றனர் என்பதை தற்போதுள்ள தலைமுறையினர் நம்பவே மறுப்பார்கள்.

புதிய குடியிருப்பு பகுதியில் கழிப்பறை தூய்மைப்பணி செய்யவும், சாலையைத் தூய்மை செய்யவும் சஞ்சீவி என்ற நபர் நகராட்சியினரால் பொறுப்பில் அமர்த்தப்பட்டிருப்பார்.

மாலையில் அந்தக் குடியிருப்பு பகுதியிலேயே தனக்கும், தன் குடும்பத்திற்குமான உணவுத் தேவைக்கு, ஒவ்வொரு வீட்டிலும் கொடுக்கும் மீதமான உணவைப் பாத்திரத்தில் பெற்றுச் செல்வார்.

பேச்சிராசுவுக்கு சஞ்சீவியின் மலர்ந்த முகம் பிடித்துவிடுகிறது. சட்டையின் மீது ஒட்டிக்கிடக்கும் பீ நாற்றத்தை பொருட்படுத்தாமல், முகமலர்ச்சியுடன் சேவை செய்யும் செயல் பிடித்துவிடுகிறது. தன் தாய் உட்பட, அந்தக் குடியிருப்பில் உள்ளோர் சஞ்சீவியை மனிதனாக நடத்தாமல் இழிபிறவியாய் நடத்தும் செயலால் மனதுக்குள் துன்பப்படுகிறான். கூடவே சஞ்சீவியின் மேல் அளவுகடந்த பாசத்தையும் வைக்கிறான். தெருவினரும், வீட்டினரும் பார்க்காத சமயங்களில் சஞ்சீவியிடம் உரையாடுவதும், ‘தண்ணீர் தாகம் கொஞ்சம் தண்ணீர் கொடு ராசு’ என்று கேட்கும் சஞ்சீவியின் கைகளில் வீட்டிலுள்ள அனைவரும் அருந்தும் பித்தளை சொம்பை நீட்டுவதுமாக, சஞ்சீவியிடம் நீயும் நானும் சமம் என்று சொல்லிக் கொண்டேயிருக்கிறான்.

பேச்சிராசுவின் அன்பை புரிந்துகொண்டாலும், சஞ்சீவி ராசுவிடம் மரியாதையாகவே நடந்துகொள்கிறார்.

மழையில்லாத கோடைக்காலத்தில், யாரேனும் சிறுவன் ஒருவனை மொட்டையடித்து, கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, கழுதை மேல் அமரவைத்து ஊர்வலம் சென்றால் மழை பொழியும் என்ற மூடநம்பிக்கைக்கு பலியாகிறான் சஞ்சீவியின் மகன்.

பேச்சிராசு, சஞ்சீவி காயப்படும் தருணங்களை எல்லாம் மனதில் மிகுந்த வெம்மையோடு கடக்கிறான். ஒருநாள் தன் அப்பா பணிபுரியும் ஆலையின் ஆண்டுவிழா நாளில், மாறுவேடப் போட்டியில் கலந்துகொள்கிறான்.

“இந்தியாவுக்கு மாமா நேரு. எங்க தெருவுக்கு சஞ்சீவி மாமா. உங்களுக்கு உடம்பு முடியலன்னு வேலைக்கு லீவு போட்டுலாம். ஒருநாளைக்கு சஞ்சீவி லீவு போட்டா உங்க தெரு என்னாகும்?” என்று மாறுவேடப் போட்டியில் சஞ்சீவி வேடமணிந்த பேச்சிராசு பேசுகிறான்.

கூட்டத்திலுள்ள அனைவரும் வாயடைத்து நிற்கின்றனர். உண்மையை உடைத்து விட்ட பேச்சிராசு முதலாம் பரிசு பெறுகிறான்.

புத்தகத்தின் ஆசிரியர் கொ.மா.கோ.இளங்கோ குழந்தைகளுக்கான எழுத்தாளர். குழந்தைகளுக்காகவே நூறு புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ளார். சிறுவயதில் சஞ்சீவி மாமாவாக மாறுவேடம் அணிந்து பரிசும் பெற்றுள்ளார். தனக்கு கிடைத்த சமூக நீதிப் பார்வையை, புத்தகத்தின் வழி அனைவரின் மனதுக்கும் கடத்த முயற்சி செய்துள்ளார்.

நீங்களும் வாசித்துப் பாருங்கள். சஞ்சீவி, நமக்கெல்லாமும் மாமா தானே!

– ஆர். உதயலஷ்மி

நன்றி: தமிழ் இந்து

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *