நூல் : ஹீரா பிஜ்லி வரலாற்று நாவல்
ஆசிரியர் : கலைச்செல்வன்
விலை : ரூ.₹990/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

இந்த ஆண்டின்(2023) சென்னை புத்தகக் காட்சியில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் அவர்கள் வெளியிட்டு பாரதி புத்தகாலயம் கொண்டு வந்திருக்கும் ஹீரா பிஜ்லி வரலாற்று நாவல் தமிழ் இலக்கிய உலகிற்கு பெருமை சேர்க்கும் ஒரு புதுவரவு.

நூலாசிரியர் தோழர். கலைச்செல்வன் அவர்கள் சிறந்த மொழிபெயர்ப்பாளர். பல மார்க்சீய நூல்களை, ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குத் தந்திருக்கிறார். திரைப்படத்துறையிலும் படைப்புக்கள்,பயிற்சிகளை வழங்கியிருக்கிறார்.வீதி நாடகக் கலையில் வித்தகர் அவர். தமிழில் நாவலாசிரியராக தன் முதல் படைப்பிலேயே முத்திரை பதித்திருக்கிறார் என்பதில் எதுவும் மிகையில்லை. படைப்பாளருக்கு இதுதான் முதல் நாவல் என்பதை மனம் ஏற்க மறுக்கிறது. அந்த அளவிற்கு அனுபவம் செறிந்த படைப்பாற்றல் மிக்கதாக, அந்த வரலாற்று காலகட்டத்தை நம் கண்முன் நிறுத்துவதாக, நம்மையும் சக பயணியாக இணைத்துக்கொண்டு பயணிப்பதாக வெற்றி பெற்றிருக்கிறது இந்த படைப்பு.

வரலாற்று நாவல்களில் பெண்ணை துணப் பாத்திரங்களாகவே பார்த்திருந்த நமக்கு, ஹீரா பிஜ்லியில் நாயகன் வேலனுக்கு இணையாக கதை முழுக்க ஆற்றலோடு இடம் பிடித்திருக்கிற நாயகி முத்தம்மாள் தமிழுக்கு ஒரு புது மகுடம். பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினத்தில் கூட வந்தியத் தேவனைச் சுற்றியே கதைக்களம் பின்னப்பட்டிருக்கும். போர்க்களம் என்பது ஆண்களுக்கு மட்டுமேயானது; மன்னர்களும், தளபதிகளும், வீரர்களும் தான் அங்கு பங்காற்றமுடியும் என்பதை மாற்றிய புதினமாக புதிய வரலாற்றையும், வரலாற்று நாவல்களில் புதுமையையும் பேசும் படைப்பாக இது அமைந்திருக்கிறது.

வரலாற்றுக் கதைகள் நடைபெற்ற நிகழ்வுகளையும், சம்பவங்களையும் அடிப்படையாகக் கொண்டாலும் வாசகனின் ரசனை கருதி பெரும்பாலும் புனைவுகளால் பின்னப்பட்டிருக்கும். அந்த பழைய கதாசிரியர்களின் நியதியையும் மீறிய வகையில், ஆவணங்களின் அடிப்படையிலான கடந்த காலத்தின் பதிவுகளை மையமாக்கிய சம்பவங்கள் தான் அதிகமும் இந்தப் படைப்பை வழிநடத்திச் செல்கிறது. புனைவுகள் குறைந்திருந்தாலும் ரசனை குறையாத புதுமையையும் நிகழ்த்தியிருக்கிறது நாவல். அதுவும் இங்கே பேசப்படவேண்டிய ஒரு தனித்துவம் தான். பொதுவாக வரலாற்றுப் புதினங்கள் மன்னர்கள், அவர்களை ஒட்டிய மேல்தட்டு மக்கள் சார்ந்ததாக மட்டுமே இயங்கும். இதில் அந்த காலகட்டத்தின் சமூக நடப்புக்கள், மலைவாசிகள், நூனியாக்கள் போன்ற எளிய மக்களின் வாழ்க்கை, கிராம மக்களின் அன்றாடப் போராட்டங்கள் என்று மக்கள் வரலாறும் இணைந்தே பயணிக்கிறது. அந்த வகையில் ஒரு வரலாற்று நாவல் எப்படி எழுதப்படவேண்டும் என்பதற்கான ஒரு முன்னோடி என்றும் இதைச் சொல்லலாம்.

ஹீரா பிஜ்லி எனும் மின்னல் வைரத்தை தேடும் பயணம் கதையை நீட்டித்து பல்வேறு களங்களுக்கும் இட்டுச்செல்கிறது. இந்த நெடுங்கதையின் நீட்சிக்கு அதுவே கருவாக அமைந்திருக்கிறது. இந்தத் தேடலில் தொடர்கிற பயணத்தில் வேலனும், முத்தம்மாவும் இணையாகின்றனர். இருவருமே வெள்ளையர்களின் வெறியாட்டத்தில் பெற்றோரை, உறவினரை, ஊர்க்காரர்களை பறிகொடுத்து அதற்காக பழிவாங்கப் புறப்பட்டவர்கள். இந்த இரு கதாபாத்திரங்கள் வழியாக கதை பயணிக்கிறது. உள்நாட்டு மன்னர்கள் மக்களை உச்சத்தில் வைத்திருந்தது போலவும்,”வந்தார்கள், வென்றார்கள்” என்ற இஸ்லாமிய படையெடுப்பு பற்றி மட்டுமேயான வெறுப்புப் பிரச்சாரமாக அமையாமல் எந்த பக்கச்சாய்வுமில்லாத சமூகமயமான வரலாற்று நாவலாக அமைந்த இப் படைப்பு வரலாற்றுக்கும், சமூக வாழ்வியலுக்கும் நியாயம் சேர்த்திருக்கிறது.

காலனியாதிக்கத்திற்கு எதிரான பாளையக்காரர்களின் கிளர்ச்சியிலிருந்து கதை துவங்குகிறது. இந்தியாவில் ஆங்கிலேயரை எதிர்த்த முதல் பாளையக்காரரான பூலித்தேவரிலிருந்து தொடங்கும் கதை, வாங்கிய கடனை திருப்பித்தரமுடியாத ஆற்காட்டு நவாப் மதுரை, திருநெல்வேலி வரிவசூல் உரிமையை ஆங்கிலேயனிடம் கொடுக்க அதை ஏழு லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கும் யூசுப்கான் பின்னர் ஏற்பட்ட பிணக்கில் ஆங்கிலேயர்களாலேயே கைது செய்யப்பட்டு ஆற்காட்டு நவாபிடம் ஒப்படைக்கப்பட்டு கொலை செய்யப்படுவதோடு தொடர்கிறது. தில்லி பாதுஷாவின் தளபதியாக தக்காணத்தின் மீது படையெடுத்து வந்த நிசாம் உல் முல்க் மராத்தியரின் ரகசிய ஆதரவோடு ஹைதராபாத்தில் புதிய அரசை நிறுவி தன்னை நிசாமாக அறிவித்துக்கொண்டார். அவரால் ஆளுநராக நியமிக்கப்பட்டவர்தான் ஆற்காட்டு நவாப். ஆற்காட்டு நவாபும், அவரை நவாபாக நியமித்த ஹைதராபாத் நிசாமும் ஆட்சி அதிகாரம் பெற்றது எப்படி என்பதையும் நாவல் சொல்லிச் செல்கிறது.

பாளையக்காரர்களும், சுதேசி மன்னர்களும் படையைத் திரட்டித்தான் போரடினார்கள்; மக்களைத் திரட்டவில்லை; சொந்த மக்களை வரிகள் மூலம் இவர்களும் சுரண்டினார்கள் என்பதால் சொந்தநாட்டு மன்னரா? அன்னியரா? என்பதில் மக்களைப் பொறுத்து ஒன்றும் வித்தியாசமில்லை. வியாபாரிகளிடமும் அவர்கள் விதித்த கெடுபிடிகள், அதிகப்படியான வரிகள், வழிப்பறியிலிருந்து பாதுகாப்பற்ற தன்மை இவற்றால் உள்நாட்டு வியாபாரிகளே ஆங்கிலேயர் ஆதரவு நிலையெடுத்தமை என இங்கிருந்த குழப்பங்கள் யாவும் தெளிவாகப் பதியப்பட்டுள்ளன. கூடுதலாக பங்காளி, தாயாதி அரசுரிமைச் சண்டையில் தத்தம் தரப்பு ஆதரவு கோரி அன்னியனை இவர்களே பணம் கொடுத்து போரில் ஈடுபடுத்தியது, அன்னியனிடம் பணம் பெற்றுக்கொண்டு சொந்த மண்ணுக்கும், மன்னனுக்கும் செய்த துரோகம் என சுதேசிய நிலைமைகளையும் பதிவாக்கிப் பயணிக்கிறது கதை. அன்னியரின் வெற்றிக்கு உள்நாட்டிலேயே திரட்டிக்கொண்ட இந்திய கூலிப்படைகள், ஆங்கிலேயருக்குத் துணையாகப் போரிட்ட சுதேசி மன்னர்கள், நவாப்புக்கள் மற்றும் பாளையப் படைகள், சண்டையில் எதிரிக்குத் துணைபோனவர்கள் என்று இவற்றையும் முன்வைத்து நகர்கிறது கதை. தில்லி சுல்த்தான், மொகலாயர், அய்ரோப்பியர் என மாறி, மாறி இந்தியா அடிமையாய் இருப்பதற்கு முதன்மையான காரணம் சாதியும், மதமும் தான் என்பதையும் அழுத்தமான பதிவாக முன்வைக்கிறது. திப்புசுல்தான், தீரன் சின்னமலை, வீரமங்கை வேலுநாச்சியார், மருதிருவர், வீரபாண்டிய கட்டபொம்மன், வேலூர் சிப்பாய்கள் என்றுவிடுதலை வரலாற்றில் இடம் பிடித்தவர்கள் கதை நெடுகிலும் நிறைய பக்கங்களில் இடம் பெற்றிருக்கிறார்கள்.

மொகலாயர் வெளிநாட்டு வியாபாரிகளிடம் வரி வசூலிப்பதில் மட்டும் குறியாக இருந்தனர். நமது வியாபாரிகளின் கடல் வணிகத்தை துளியும் ஊக்குவிக்கவில்லை. ஒரு படைத்தலைவன் இறந்தால் அவனுக்கு வரிவசூல் செய்துகொள்ள மானியமாக கொடுத்திருந்த கிராமங்கள், சொத்துக்கள் அரசுக்கு சொந்தமாகிவிடும் என்பது மொகலாயரின் ”மான் சப்தாரி” முறை. அதனால்தான் இஸ்லாமியத் தளபதிகள் யாரும் போரில் சாக விரும்புவதில்லை. அப்படி இறந்தால் அவனது வீரர்களுக்கு சம்பள பாக்கியைக்கூட அரசு பொறுப்பேற்காது என்பதால் வீரர்களும் போர்க்களத்திலிருந்து ஓடி விடுவார்கள். இதெல்லாம் இங்கிருந்த பலவீனங்களின் பட்டியலாக கதை விவரிக்கிறது. மக்களிடமிருந்து வரி என்ற பேரில் சிற்றாசர்கள் கொள்ளை, அவர்களிடமிருந்து கப்பம் என்ற பேரில் பேரரசர்கள் கொள்ளை, குவிந்த செல்வத்தை மதம் (அ) இனத்தின் பெயரால் அண்டை நாட்டு பேரரசுகள் மொத்தமாக கொள்ளை என்று அன்றைய மன்னராட்சிக்கு விளக்கம் சொல்கிற இடம் சிறப்பு.

உலகிலேயே பங்குதாரர்களை சேர்த்து வணிகம் நடத்திய முதல் நிறுவனம் டச்சு கிழக்கிந்திய கம்பெனிதான். அதனிடம் 250 சரக்குக் கப்பல்,40 போர்க்கப்பல், 50,000 ஊழியர்கள், 10,000 போர் வீரர்கள் இருந்தனர் என்பதும், கடற்கொள்ளையில் ஈட்டிய பணத்தில் தொடங்கியதுதான் கிழக்கிந்தியக் கம்பெனி என்பதுமான குறிப்புக்கள் சுட்டப்படுகிறது. இருபது லட்சம் பேர் கூடத் தேறாத ஒரு குட்டித் தீவு இங்கிலாந்து. அதில் ஒரு சின்ன வியாபாரக் கம்பெனி பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி. அதன் நிரந்தர ஊழியர்கள் 35 பேர்தான். அவர்கள்தான் 20 கோடி பேர் கொண்ட இந்தியாவை அடிமையாக்கினார்கள் என்ற செய்தியை பொட்டில் அடித்தார்போல் சொல்கிறது கதை.

முதலில் வியாபார உரிமை, பிறகு வரிவசூல் உரிமை, இறுதியாக நேரடி ஆட்சி என்று காலனிய ஆட்சியின் பரிணாமத்தை விவரித்துச் செல்கிறது நாவல். தெளிவான வெற்றியை ஈட்டும்வரை எதாவது ஒரு மன்னரின் கட்டளையின் கீழ் ஆள்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினர். அவர்களுக்கு அரண்மனையும், இவர்களுக்கு அலுவலகமும் ஆக பிரிந்தே இருந்த தோற்றம் இருந்தது. அதுவரை அவர்கள் வட்ட வேலிக் கொள்கை (ரிங் ஃபென்ஸ் பாலிச) யைத்தான் பின்பற்றினர். ஆபத்து எனில் கடல்வழியாக தப்பிக்கும் உபாயம் கருதி கடற்கரை ஓரமாக சென்னை, பம்பாய், கல்கத்தா என்ற மூன்று வட்ட வேலிக்குள் தான் கம்பெனியின் செயல்பாடுகள் இருந்தன என்பதும் கவனங்கொள்ள வைக்கும் பதிவுகள்.

ஆங்கிலேயன் தன் சாயப்பட்டறைக்காக வட இந்தியாவில் அவுரிச் சாகுபடியை கட்டாயமாக்கி விவசாயத்தை அழித்ததைப் போல-அயர்லாந்து முழுக்க இங்கிலாந்துக்காரர்களின் தோட்டமாக்கி, உரோமத்திற்காக ஆட்டுப்பண்ணைகளையும் பெருக்கி விவசாயத்தை அழித்தார்கள். இதனால் ஏற்பட்ட பஞ்சத்தால் 5 லட்சம் ஐரிஷ்காரர்கள் இறந்து போனார்கள். தப்பித்துப் பிழைத்தவர்கள் அமெரிக்காவிற்கு ஓடினார்கள்; கிழக்கிந்தியக் கம்பெனியில் சேர்ந்தார்கள்; பலவந்தமாகவும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். ஒரு பிரிவினர் கடற்கொள்ளையராகவும் மாறினார்கள் .நமது குழந்தைகள் பாடுகிற ”பாபா பிளாக் ஷீப்” பாடல் உண்மையில் ஐரிஷ்காரர்களின் துயரம் தோய்ந்த ஒப்பாரிப் பாடல் என்கிற பதிவு வாசகரை நெகிழச்செய்யும் இடங்களில் ஒன்று.

சென்னைக் கோட்டையை பிடித்த பிரஞ்ச் தளபதி பூர்தானே ஆங்கிலேயரிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு கோட்டையை திரும்பக் கொடுத்துவிட்டு லண்டனில் தஞ்சமடைந்த அன்னியர்களுக்குள் நடந்த துரோகமும், பிரஞ்ச் அதிகாரிகளின் ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுத்த ஜெனரல் லாலி ஊழல் அதிகாரிகளாலேயே ஊழல் குற்றவாளியாக்கப்பட்டு தண்டிக்கப்பட்டதும். பதிவாகிறது.

போர்களின் காரணமும், வழியும், முடிவும் வியாபாரம் தான். எல்லாப் போரும் ஒரு வியாபாரம் தான்; எல்லா வியாபாரமுமே ஒரு போர் தான். சாதாரண மக்களுக்குத்தான் சாதியும், மதமும்-ராஜாக்களுக்கும், திருடர்களுக்கும் அதெல்லாம் முக்கியமில்லை. பஞ்சமெல்லாம் பயிர்செய்யும் விவசாயிகளுக்குத்தான்; நகரங்கள் உழுவதுமில்லை; விதைப்பதுமில்லை, உணவுப் பொருட்களோ அங்கு வந்து குவியும். நேரமும், நீரோட்டமும் யாருக்காகவும் நிற்காது. இந்தியர்களின் அச்சம்தான் எங்கள் மிகப்பெரிய ஆயுதம்-மற்ற ஆயுதங்கள் எல்லாம் அப்புறம் தான். பசி மனிதர்களின் சிந்தனையை கூராக்குகிறது. சண்டை போட்டுக்கொள்வது ஆண்களென்றாலும், பாதிக்கப்படுவது எப்போதுமே பெண்கள்தான். வணிகர்கள் ஆட்சியில் வட்டிதான் கடவுள்; கடன் பத்திரம் தான் வேதம். இவையெல்லாம் கதைமாந்தர் உரையாடலில் இழைந்து கதையை செழுமையாக்கும் கருத்துக் கருவூலங்கள்.

பாரசீக மன்னன் நாதிர்ஷாவின் தில்லி படையெடுப்பு மிகக் கொடூரமானது. கொலை, கொள்ளையில் தொடங்கி குடும்பத்தினர் கண்முன்னே பெண்கள் கற்பழிக்கப்பட்டதை கண்டு வெகுண்டெழுந்த தில்லி மக்கள் மூவாயிரம் பாரசீக வீரர்களைக் கொன்றனர். பதிலாக நாதிர்ஷா ”கத்தில் ஏ ஆம்”(பொது மக்களை கொலை செய்தல்) -ஆணைக்கு உத்தரவிட்டான். அன்று ஒரு நாள் முழுவதும் இந்துக்கள், இஸ்லாமியர் என்று எந்த வேறுபாடும் இல்லாமல் பொதுமக்கள் வெட்டித் தள்ளப்பட்ட கடந்த காலத்தின் கரிய பக்கங்களும் பதிவாக்கப்பட்டிருக்கிறது. இது ரஷ்யாவில் ஜார் மன்னனின் படைத் தளபதிகள் நடத்திய” பாக் ரோம்” எனும் யூதர்களை தெருவிற்கு இழுத்துவந்து கொலைசெய்யும் இன அழிப்பு பயங்கரத்தை நினைவூட்டுகிறது. மதிப்பிலுயர்ந்த மயிலாசனமும், அதில் பதித்திருந்த கோகினூர், தரியானார் வைரங்களும் கொள்ளைபோயின. கொள்ளியிட்ட பொருட்களை 700 யானைகள்,4000 ஒட்டகங்கள், 12,000 குதிரைகளில் நாதிர்ஷா எடுத்துச் சென்றான். அதன் மதிப்பு அன்றைய இந்துஸ்தானின் 20 கோடி மக்களுக்கும் இரண்டு வருடங்களுக்கு உணவு, உடை, வீடு கொடுத்திருக்க முடியும். அடுத்த மூன்று வருடங்களுக்கு அவன் பாரசீகத்தில் வரியே விதிக்கவில்லை. நாவலுக்குள் கதைக்குள் கதையாக, கிளைக் கதைகளாக இப்படியான நிறைய நிகழ்வுகள் பதியப்பட்டிருக்கின்றன.

மராத்தியப் படையில் சொந்தக் குதிரையோடு வந்து படையில் சேர்கிறவன் ஷில்லாதார் என்றும், அரசின் குதிரையில் வந்து சண்டையிடுகிறவன் பார்கீஸ் என்றும் பெயர்.திடீரென்று தாக்கி கொள்ளையடிப்பதில் பிரசித்தி பெற்றவர்கள் இந்த மராத்திய பார்கீஸ்கள். ஒவ்வொரு ஆண்டும் தசரா சமயத்தில் மகாராஷ்டிராவிலிருந்து புறப்பட்டு நர்மதை நதி தாண்டி வழியெங்கும் கொள்ளையடித்துக்கொண்டே வங்காளம் வரை சென்று- மழைக்காலம் தொடங்கி நர்மதையில் வெள்ளம் வருவதற்கு முன்பாக தங்கள் பகுதிக்கு திரும்பிவிடுவார்கள். முதலில் முஸ்லீம்களை தாக்கி கொள்ளையிட்டதால் அவர்கள் தூரக்கிழக்கான டாக்கா, சிட்டகாங்குக்கு தப்பியோடியபிறகு இந்து, பிராமணர், ஜெயின், சூத்திரர்ன்னு எல்லோரும் அவர்களின் கொள்ளைக்கு இலக்கானார்கள். ஏழு வருடங்களில் 4 லட்சம் பேர் இவர்களால் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அந்தப் பிரந்தியங்களில் விவசாயம் அழிந்து நிலங்கள் தரிசாகி காடாக மாறிப்போனது. அடுத்து பர்க்கீசை விட பத்துமடங்கு மூர்க்கமான பீகாரிலிருந்து வந்த பிண்டாரிகள் கொள்ளையைத் தொடர்ந்தார்கள். கொள்ளையடிக்கும் உரிமைக்காக இவர்கள் மராத்திய பேஷ்வாக்களுக்கு வரிகொடுத்துவந்தார்கள். பிறகு ராஜஸ்தானத்துத் தக்கிகள்- இந்த தக்கிகளின் ஒரு பிரிவினர் தான் காசியின் புனிதப் பயணிகளை தாக்கி கொள்ளையிட்டு கொலை செய்பவர்கள்-என்று கொள்ளையர்களை வரிசையாக பதிவாக்குகிறது நாவல்.

பிரிட்டிஷ்காரர்கள் பஞ்சாங்கம் பார்த்துப் போருக்குப் போவதில்ல; கணக்குப் போட்டு காயை நகர்த்துகிறார்கள் எனும்போதும் -ஹீரா பிஜிலி இருக்கும் இடத்தில் அதிர்ஷ்டம் இருக்கும் என்று சிராஜுதீன் சொல்கிறபோது, வைரத்தை வெட்டியெடுக்கும் தொழிலாளர்கள் வாழ்நாள் அடிமைகள் தானே, இதில் அதிர்ஷ்டம் எங்கேயிருக்கிறது? என வினவும் போதும் வெற்றுக் கதைப்போக்கு என்பதாக அல்லாமல் மூடநம்பிக்கைக்கெதிரான முழக்கமாகவும் ஒலிக்கிறது.

துப்பாக்கி தொடங்கி கோட்டையைத் தகர்க்கும் கனரக பீரங்கி வரை வெடிமருந்து தான் அடிப்படை. அதன் மூலப்பொருளான வெடியுப்பு பற்றிய விவரணை நாவலில் ரசனைமிக்கது. அதன் பெளதீக, ரசாயன தன்மைகளை, போரில் அதன் பயன்பாட்டை விளக்கும் விதம் அறிவியல் உலகிற்குள் நம்மை இட்டுச் செல்கிறது. இந்த வெடியுப்பு அமெரிக்கா, ஐரோப்பாவில் பறவைகளின் எச்சத்திலிருந்து சிறிதளவே கிடைக்கிறது. மாட்டுச்சாணம், மூத்திரம் இவை மழைக்காலத்தில் மண்ணோடு வினைபுரிந்து உருவாகும் வெடியுப்பு. அதிகமாக மழைபொழியும் வங்காளம், ஒரிசா, பீகாரில் அபரிமிதமாகக் கிடைப்பதையும், மண்ணிலிருந்து அதைப் பிரித்தெடுக்கும் நுணுக்கம் தெரிந்த நூனியாக்கள் பற்றியும் பேசுகிறது கதை. அதை வீரியமாக பயன்படுத்தும் நுட்பம் நம்மிடமில்லை; ஆங்கிலேயர் வெடியுப்பை கரித்தூள், கந்தகத்தோடு சேர்த்து மலைகளையே பிளக்கும் வெடிமருந்தை தயாரித்தனர். இந்தியாவில் உற்பத்தியான வெடிமருந்தைக் கொண்டே இந்நாட்டை வெற்றிகொண்ட ஆங்கிலேயனின் திறனையும் சேர்த்தே பேசுகிறது நாவல்.

மரபு வழியான ஆயுதங்கள்,வெடிமருந்து, முனையில் வெடி மருந்து தோய்த்த அம்புகள், பின்னால் வெடிமருந்து கட்டி செலுத்தும் அம்புகள், பழுக்கக் காய்ச்சிய இரும்பு குண்டுகளை வீசி எதிரியின் கப்பல்கள், கோட்டைகளை அழிக்கும் ஹாட் ஷாட் பீரங்கி, மராத்தியரின் 20 அடிநீள ஈட்டி, சீக்கியரின் சாலிக்கர் எனும் சக்கரம், தென்தமிழ்நாட்டின் 21 அடி நீளமுள்ள ஈட்டி,வளரி, அரை மைல் தூரம் வரை சென்று தாக்கும் திப்புவின் ராக்கெட்டுகள் என்று வாசகனை பிரமிக்க வைத்து ஆயுதக் கிடங்குகளையும் சற்றே எட்டிப்பார்க்க வைக்கிறது கதை.

”சத்ரபதி சிவாஜி வெறும் இந்து ராஷ்டிரத்தைக் கட்ட விரும்பவில்லை. அப்போது மராத்தாவில் இருந்ததும் முழுமையான முஸ்லீம் ராஜ்யம் இல்லை. முஸ்லீம் கவர்னருக்குக் கீழே இந்து நில பிரபுக்கள் ஆட்சிதான் நடந்துகொண்டிருந்தது. நிலபிரபுக்களும், கவர்னரும் இல்லாமல், அரசாங்கத்துக்கு மக்கள் நேரடியாக வரி கொடுக்கும் ஏழை, எளிய மக்களுக்கான ஒரு சாம்ராஜ்யத்தைதான் சிவாஜி கட்டினார். ஆனால் அது அவர் மகன் சம்பாஜியோடு முடிந்துபோனது. பேஷ்வாக்கள் தலைமையில் மேல்சாதி நிலபிரபுக்கள் ஆட்சி திரும்பவும் வந்துவிட்டது என்ற பதிவும் குறிப்பிடத்தக்கது.

முஸ்லீம் கவர்னர், இந்து நிலபிரபுக்களின் கொடுமைகளுக்கு எதிராக உருவாக்கப்பட்டது தான் சீக்கிய மதம். இப்போது தலைகீழாக மாறிப்போய் சீக்கிய கவர்னருக்குக் கீழே சீக்கிய ஜமீன்தார்களின் கொடுமையாகி, சீக்கிய குருக்கள் சிந்திய ரத்தம் வீணாகிப் போனது. பெண்களுக்கான கல்வியை வலியுறுத்திய அது சீக்கியர்கள் கட்டாயம் வீட்டுக்கு ஒரு புத்தகமாவது வைத்திருக்கச் சொன்னது. அதன்படியே இப்போது ஒவ்வொரு சீக்கியர் வீட்டிலும் ஒரு புத்தகமாவது இருக்கிறது; படிக்க அல்ல-பூஜை செய்ய. இப்படி ஆதிக்கத்திற்கு எதிராக தோன்றிய மதங்கள் பின்நாளில் ஆதிக்கத்தின் முகமாகிவிடுவதையும் பதிவாக்கும் விதம் நன்று.

கொஞ்சம் எழுத்துப் பிழைகளும், கூறியது கூறலும் மட்டுமே இந்த நாவலின் எதிர்மறை விமர்சனமாக சொல்லலாம். மற்றபடி எல்லா தரப்பு வாசகரையும் வசீகரிக்கும் கதையின் செறிவு, எழுத்து நடை, வரலாற்று விவரனை, துல்லியமான நிகழ்வோட்டங்கள், எங்கேயும் நின்றுவிடாத சொற்களின் தொடரோட்டம், துலக்கமான தரவுகள், நிகழ் கணத்திற்கும் பொருந்தக்கூடியதாக கதை அடுக்கிச் செல்லும் அனுபவங்களின் படிப்பினைகள் என நாவல் வாசகனை நிறைவு செய்திருக்கிறது. சமூக அக்கறையும், விடுதலை நாட்டமும், கொண்ட ஒவ்வொருவரும் வாசிக்கவேண்டிய அற்புதமான படைப்பு. எதிர்கால வரலாற்றை படைக்க நினைக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் கடந்த காலத்தின் இந்த ஹீரா பிஜ்லி சமூக வரலாற்று நாவலை நாம் பரிந்துரைக்கலாம். தமிழ் இலக்கிய தடத்தில் இதுவும் மற்றுமொரு படைப்பு என்று வெறுமனே கடந்து போய்விடாமல், வாசகனை கடத்திக்கொண்டு பயணிக்கிற வரவாக பதிப்பு கண்டிருக்கிறது ஹீரா பிஜ்லி.

– பாவெல் சூரியன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *