நூல் : ஹீரா பிஜ்லி வரலாற்று நாவல்
ஆசிரியர் : கலைச்செல்வன்
விலை : ரூ.₹990/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

999 பக்கங்களைக் கொண்ட இந்த நாவலின் காலம் வெறும் 56 ஆண்டுகள் தான். 1750 முதல் 1806 வரை மட்டுமே. கதைக்குள் கதையாகக் கிளர்ந்து, வீரமும் துரோகமும் நம்புதற்குரிய சம்பவங்களும் நிறைந்த வியத்தகு வரலாற்றின்
பக்கங்கள் நம்மை வேகமாக இழுத்துச் செல்கின்றன.

1751ஆம் ஆண்டு முதல்முதலாக “வெள்ளையனே வெளியேறு” என்று வீர முழக்கமிட்ட மாவீரன் பூலித்தேவர். பல ஆண்டுகள் கழித்து 1767 ஆம் ஆண்டு, ஒரு இளம் ஆங்கிலத் தளபதி அவரைக் கை விலங்கோடு பாளையங்கோட்டையிலிருந்து தண்ணீர்கூட தராமல் நடத்தி இழுத்துச் செல்வதாகவும், அவர் தந்திரமாக தப்பித்து
தலைமறைவானார் என்றும் கதை தொடங்குகிறது. ஆங்கிலேயர் வரவுக்குப் பின்னும் பாளையக்காரர்கள் தமது ஆட்சியில் கட்டுக் கோப்பாக இருந்ததை பூலித்தேவர் தப்பிச் செல்ல உதவிய அவரது விசுவாசிகள் நிரூபிக்கிறார்கள். கம்பெனி அதிகாரிகள் என்போர் பலரும் வஞ்சகமாக தாயகத்திலிருந்து இந்தியாவுக்கு வலுக்கட்டாயமாக அழைத்து வரப்பட்டனர் என்பதை கள்ளுக்கும் கறிக்கும் ஆசைப்பட்டு கைதி பூலித்தேவரைத் தப்பவிட்டு மயங்கிக் கிடக்கும் ஆங்கில அதிகாரி நிரூபிக்கிறார். 1806 ஆம் ஆண்டு வேலூர் சிப்பாய் புரட்சி தோல்வியடைந்தாலும், விடுதலை நெருப்பு பற்றிய திருப்தியில் நாயகனும் நாயகியும் சென்னை திரும்புவதாக நாவல் முடிவடைகிறது.

1750 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கம்பெனி ஆட்சியை நிறுவ திருச்சிக்கு வந்து ராபர்ட் கிளைவ் தமிழ்நாட்டு பாளையக்காரர்கள் தன்னை வந்து பேட்டி காணவேண்டுமென ஆணையிட்டதை அறிந்து 1751 இலேயே ஆங்கிலேயரை தோற்கடித்தார் பூலித்தேவர். பலமுறை அடுத்தடுத்து போரிட்ட போதும் ஆங்கிலேயர்களால் மைசூரு
மன்னர் திப்புவின் ஆதரவு பெற்ற தமிழ்நாட்டு தெற்கத்திய சீமை பாளையக்காரர்களை வெல்ல முடியவில்லை.

அப்போது பலமான ராஜ்யமாக விளங்கிய வங்காளத்தின் பக்கம் செல்கிறார் கிளைவ். நவாப் சிராஜ் உத்தௌலாவை பிளாசிப் போரில் தோற்கடிக்க திட்டமிட்டு தளபதி மீர் ஜாபருக்கு கிளைவ் லஞ்சம் கொடுத்து துரோக வரலாற்றை முதலில் அரங்கேற்றுகிறார். ஓமிசந்த் என்ற மிகப் பெரிய வியாபாரி மூலம் பேரம் பேசப்பட்டு, மீர்ஜாபரையே நவாப் ஆக்க கிளைவுக்கு லஞ்சம் தரப்பட்டது ! உள்நாட்டு சண்டையை சாதகமாக எடுத்துக் கொண்டு, பிளாசிப் போரில் கம்பெனி வெல்கிறது. (ஜூன் 23, 1757) . பக்சார் போரில் கம்பெனி வென்றதும் பழையஒப்பந்தங்கள் காலாவதியாகின. பணம், தங்கம், மயக்க மருந்து, விஷம் என துரோகம் பல வடிவங்கள் எடுத்தது. மீர் ஜாபர் துரோகத்தால் வங்காளம்
கம்பெனியின் வசமாகியது. ஆற்காடு நவாப் மூலம் வட தமிழ்நாடு முழுக்க கம்பெனிக்கு கை மாறியது.

துரோக வரலாறு தொடர்கிறது. குறுநில மன்னர்களும் நவாபுகளும் அண்டை அயலில் உள்ள ஆட்சியாளர்களை சகோதரர்களாக மதிக்காமல், ஒழித்துக் கட்டும் முனைப்பிலேயே உளவாளிகளோடும் வியாபாரிகளிடமும் லஞ்சம் கொடுத்துக் காரியம் சாதித்துக் கொண்டார்கள். எந்த ஆட்சியாளரும் நிம்மதியாக இருக்க விடாமல் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டே இருந்திருக்கிறார்கள்.

இதில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் சுலபமாக நாட்டை வென்றதில் வியப்பென்ன இருக்கிறது? ஒவ்வொரு ராஜ்ஜியமாக கம்பெனி கையில் வீழ்கிறது. விடுதலைப் போரில் வீழ்ந்த அஞ்சாநெஞ்சங் கொண்ட வீரர்களின் கதைகள் மலைக்க
வைக்கின்றன.

ராஜாக்கள் ராணுவம் வைத்திருந்தார்கள். ஆனால் மதுவுக்கு அடிமையாக இருந்தார்கள். ராணுவம் மக்களை கொள்ளையடித்தது. ஆனால் வணிகர்கள் தம் செல்வத்தை பாதுகாத்துக் கொள்ள தனி ராணுவம் வைத்திருந்தார்கள்…!

கதாநாயகன் வேலன் வெடியுப்பை வாங்கி வந்து டேனிஷ் நிறுவனத்திற்கு விற்பனை செய்கிறான். அதன் பொருட்டு நாடு முழுதும் குறுக்கும் நெடுக்குமாக பயணிக்கிறான். பீகார், ஒரிசா, ராஜஸ்தான் தொழிலாளர்கள் வெடியுப்பு தயாரிப்பில் நிபுணர்களாக இருந்திருக்கிறார்கள். கல்கத்தா மிகப் பெரிய வெடியுப்பு விற்பனைத் தளமாக இருந்துள்ளது. வணிகர்கள் நாடெங்கிலுமிருந்து வண்டி கட்டி வந்து லட்சக் கணக்கில் வெடியுப்பு வாங்கி நாடு முழுதும்
சப்ளை செய்திருக்கிறார்கள்.

வேலன் ஒவ்வொரு களத்திலுமுள்ள நிலைமைகளை துல்லியமாக அறிகிறான். தாய்நாட்டை நேசிக்கும் வீரர்களை சந்திக்கிறான். கம்பெனி எதிர்ப்பு ஆட்சியாளர்கள் ஒருபுறமும், ஆட்சியைக் கைப்பற்ற நினைக்கும் துரோகிகள்
இன்னொருபுறமும், கம்பெனி ஆதரவு வியாபாரிகள் மறுபுறமுமாக துரோகங்களும் வீரச் சாவுகளும் நடந்து வருகின்றன. பூலித் தேவரின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்த யூசூப்கானைத் தன் கையால் வெட்டித்தள்ள ஆசைப்பட்ட வேலன் அவரை ஆங்கிலேயரை எதிர்க்கும் விடுதலை வீரராக மதுரையில் சந்திக்கிறான். ஆனால் விதி விளயாடுகிறது. யூசூப்கானின் உடலைத் தன் கையாலேயே கண்டதுண்டமாக வெட்டியெறிகிறான்.

பக்சார் போரில் (1764) வங்காள நவாப், ஆவாத் நவாப், முகலாய மன்னர் ஆகிய மூவரும் வீழ்த்தப்பட்டு, வங்காளம், பீகார், ஒரிசா இவை மூன்றும் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டன. இந்தியாவின் முதல் அடிமை சாசனமான 1765 அலகாபாத் உடன்படிக்கை கையெழுத்தாகிறது.

மராட்டிய மன்னரும், மைசூரு மன்னரும், தில்லி பாதுஷாவும் கம்பெனிக்கு பெரிய சவால்களாக இருந்தனர். மைசூரு மன்னர் ஆதரவால் தென் தமிழ்நாட்டைப் பிடிப்பது சிக்கலாக இருந்தது. எனவே அடுத்து மைசூரு மன்னர் மீது பலமுறை ஆங்கிலேயர் போர் தொடுத்தனர். மீண்டும் துரோகம் வென்றது. 1799 ஆம் ஆண்டு திப்பு வஞ்சகமாக கொல்லப்பட்டார். 1803 ஆம் ஆண்டு தில்லி ஆங்கிலேயர் வசமானது. திப்பு மாண்ட பிறகு, தமிழ்நாட்டில் கம்பெனி ஆட்சியை நிறுவ திட்டம் தீட்டப்பட்டது.

திப்பு சுல்தான் கொல்லப்பட்டபின் தமிழகத்தில் விடுதலைப் போர்களை நடத்த பணமின்றி விலை மதிப்பில்லாத ஹீரா பிஜ்லி என்ற வைரத்தைத் தேடி அலைகிறான் வேலன். அதையே பல வணிகர்களும் தேடுகின்றனர்…. இதற்காக எத்தனை சண்டைகள், கொலைகள் … ஓமிசந்திடம் பணியாற்றியவர் ஒருவரும், ஏன் மக்களில் சிலரும் கூட இந்த வைரத்தைக் கைப்பற்றிவிட வேண்டும் என கடுமையாக முயன்றிருக்கிறார்கள். இறுதியாக அது கதாநாயகன் நிலக்கோட்டை வேலன் வசம் வந்து, பதுக்கி வைக்கப்படுகிறது.

திப்பு கொல்லப்பட்டு சரியாக ஆறே மாதங்களில் தமிழ்நாட்டில் மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், செவத்தையா, ஊமைத்துரை, விருப்பாச்சி கோபால் நாயக்கர் உள்ளிட்ட பாளையக்காரர்கள் தூக்கிலிடப்பட்டு, 72
பாளையங்கள் கம்பெனி ஆட்சியின் கீழ் வந்தன. கடைசியாக கொங்கு நாட்டு தீரன் சின்னமலை 1805ஆம் ஆண்டு சங்ககிரி கோட்டையில் தூக்கிலிடப்பட்டார்.

1805 ஆம் ஆண்டு மெட்ராஸ் ஆங்கிலேயப் படையின் முதன்மை தளபதி சர் ஜான் கிரட்டாக் சிப்பாய்களின் சீருடையை மாற்றினார். இது இந்துக்கள், முகமதியர் இருதரப்பிலும் அதிருப்தியையும் கோபத்தையும் உண்டாக்கியது. மேலும்
திப்புவின் குடும்பம் வேலூர் கோட்டையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. அதை திப்பு என்ற வீரஞ்செறிந்த அரசனுக்கு செய்த அவமரியாதை என்று கருதினர் தமிழ் சிப்பாய்கள்.

1806 ஆம் ஆண்டு வேலூர் கோட்டையில் இருந்த 1000க்கு மேற்பட்ட மெட்ராஸ் படை தமிழ் சிப்பாய்கள் செய்த கலகம் தோல்வியில் முடிந்தது. வேலூர் புரட்சி தோல்வியடைந்தாலும், பிரிட்டிஷ் ஆட்சிக்கு அது முதல் இந்திய விடுதலைப்
போருக்கான எச்சரிக்கையாக அமைந்தது என்பதுதான் உண்மை.

இவற்றுக்கு மத்தியில் ஒரு காதல் கதை ! சினிமாவுக்குரிய அனைத்து அம்சங்களும் இந்த நாவலில் உள்ளன. எதற்கும் அஞ்சாத சில சாகச வீராங்கனைகள் தங்கள் பன்முகத் திறமையை வெளிப்படுத்த கதையின் இடையே வருகிறார்கள்.
கதாநாயகி முத்தம்மாவை பாண்டிச்சேரியில் சந்திக்கிறான் வேலன். கதாநாயகனின் தலைக்கு வரும் ஆபத்துகள் அவனது அறிவுக் கூர்மையினாலும், போர்த் திறனாலும், சமயோசித செயல்பாடுகளாலும் விலகிப் போகின்றன.

வேலனும் முத்தம்மாவும் காதலிக்கிறார்கள். ஆனால் சினிமாவில் வருவதுபோல பூந்தோட்டங்களில் ஆடிப்பாடாமல் காரியத்தில் கண்ணாக இருக்கிறார்கள். அவர்கள் அநாவசியமாக திருமணம் போன்ற தேவையற்ற சடங்குகளில் ஈடுபடுவதில்லை. அவரவர் செயல்படும் களம் குறித்து முரண்படுவதுமில்லை. முத்தம்மா பெரும்பாலும் ஆண் உடுப்புடன், ஆபத்தான இடங்களில், முக்கியமான வேலைகளை செய்து முடிக்க வருகிறாள். அவள் கருவுற்ற போதும் உயிருக்கு ஆபத்தான சண்டைகளில் இறங்குகிறாள். குரூரமான போர்ச் சூழலிலும் கடுமையான நெருக்கடியிலும்
அவர்கள் நாட்டிற்காக செயல்படுகிறார்கள். இறுதியில் வேலூர் சிப்பாய் புரட்சி என்கிற ஒரு ஆறுதலான நிகழ்வின் பின்னர் மறுபடி சந்தித்து, சற்றே இறுக்கம் தளர்ந்து சென்னை திரும்புகிறார்கள். அவர்களுக்கு எதிரே சாமி ஊர்வலம் வருகிறது ! வேலூரில் நடந்தது நாடு முழுதும் நடந்தால்தான் நாட்டு விடுதலை சாத்தியம் என்ற கதாநாயகன் வேலனின் சொற்களோடு நாவல் முடிகிறது.

1847 ஆம் ஆண்டு மீரட் நகரில் நடந்த சிப்பாய்க் கலகத்தை முதல் இந்திய விடுதலைப் போர் என்று இன்றுவரை பாடம் படித்துக் கொண்டிருப்பது உண்மையில் தமிழ்நாட்டு மாணவர்களின் பரிதாப நிலைதான். உண்மையான வரலாறு சிலரால் நேர்மையாக பதிவு செய்யப்பட்டிருப்பதால் கலைச் செல்வன் இதுபோன்ற சிறப்பானதோர் வரலாற்று நாவலை எழுத முடிந்துள்ளது.

அவற்றுள் சில :

1. பூலித் தேவர் – மருது பாண்டியர் வரலாறு. தமிழில் பேராசிரியர்
ந. சஞ்சீவி எழுதியது.

2. நாற்பதாண்டு கால போர் அனுபவங்கள் – ஆங்கில அதிகாரி வெல்ஷ் (Welsh)எழுதியது.

3. திருநெல்வேலி சரித்திரம் – கால்டுவெல் எழுதியது.

4. வேலூர் கோட்டை தளபதியின் மனைவி எழுதிய குறிப்புகள்.

இந்தியாவை ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் கொண்டு வந்ததில் ஆட்சி அதிகாரப் போதை, பேராசை, சூழ்ச்சி, துரோகம் எனப் பல இழிகுணங்களைக் கொண்ட இந்தியர்களுக்கு பெரும் பங்கு உண்டென்ற கசப்பான உண்மையை நாவல் வெட்ட வெளிச்சமாக்குகிறது. கம்பெனியின் இரக்கமற்ற நாடுபிடிக்கும் குரூர உத்திகளைக் கண்டும் பாடம் கற்காமல், அண்டை நாட்டவருடன் ஒருவருக்கொருவர் எதிரிகளாக – துரோகிகளாக செயல்பட்டு, இறுதியில் ராஜ்ஜியத்தையும்
மக்களையும் கம்பெனியின் கொடூர ஆட்சியின் கீழ் அவர்கள் கொண்டு வந்த கதையை சினிமாபோல இவ்வளவு சுவாரசியமாக எடுத்துச் சொல்ல முடியுமா என்ற வியப்பு மேலிடுகிறது.

ஆயிரம் பக்கங்கள் – சோர்வு தட்டாத தொடர் வாசிப்புக்கு மர்ம நாவல் போல் எளிய மொழிநடை – ஹீரா பிஜ்லி உண்மையில் வரலாற்றுப் புனைவின் சிறப்பறிந்த வாசகருக்கு ஒரு சுவையான விருந்து ! சிந்தை கவரும் கலைப் படைப்பு !

அமரந்த்தா

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *