நூல் : மானசா
ஆசிரியர் : லக்ஷ்மி பாலகிருஷ்ணன்
விலை : ரூ.₹130
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]
நீங்கள் உங்கள் முஷ்டியை இறுக்கினால் யாரும் உங்கள் கையில் எதையும் திணிக்க முடியாது – அலெக்ஸ் ஹெய்லி.
“சுநீதி நல்லவளாக வாழ்வது மட்டுமே போதும் என்றெண்ணியிருந்தாள். அதனால் நல்லவளாக காட்டிக் கொள்ள வேண்டியதன் அவசியம் அவளுக்கு துளியும் புரிந்திருக்கவில்லை.” மிக நெடுங்காலமாக பெண் என்பவளின் மேல் ஏற்றப்பட்டுள்ள சுமை என்பது அன்பு,தாய்மை ,தியாகம், கற்பு இன்னும் பல்வகை புராணிகத்தின் வழி நைச்சியமாக திணிக்கப்பட்டு பொது வெளியிலிருந்து முற்றிலும் குடும்பம் என்னும் எந்திரத்திற்குள்ளாக சிக்க வைக்கப்பட்டு கண்காணிப்பின் கீழ் தள்ளப்பட்டிருக்கிறாள்.
லக்ஷ்மி பாலகிருஷ்ணனின் முந்தைய நாவலான ஆனந்தவல்லியிலும் சரி இந்த நாவலான மானசாவிலும் ஒர் எளிய அன்றாடத்தின் வழியாக அறிமுகமாகும் கதையின் மையப் பாத்திரம் பெரும் காட்டில் விழுந்த அக்னி கங்காக அவர்களின் அகமும் அகச்சூழலும் கனன்று கனன்று எரிந்து விஸ்வரூபமாக விரிகிறது. ஆனந்தவல்லியைப் போலவே ஜகத்காருவும் மானசாவாக தன் ஞானத்தின் பெருவெளியில் தன்னை விரிக்கிறாள்.
மீள்புனைவு என்பது மரபின் பிடியிலிருந்து
தன்னை விடுவித்துக் கொண்டு பெரும் பிரவாகமாக புரண்டு புதுபனலாக நுரைத்து சகலத்தையும் புரட்டி போட்டும் ஒரு எத்தனிப்பு. மூலப் பிரதியை கட்டுடைப்பதன்னூடாக வகைதொகை இல்லா காலமாக மூலப்பிரதிக்குள் கட்டுண்டு கிடந்த ஒரு பத்திரத்திற்கு கட்டற்ற விடுதலையை வழங்குகிறது.
மானசா யுகந்திராமா பகைமையுள்ளும் சாபத்தின் கேடினுள்ளும் புதைந்து கொண்டிருக்கும் நாகர்களை காக்கவும் கரை சேர்க்கவும் ஒரு கருவை சுமக்கும் ஒரு கருப்பை அவ்வளவு தான் அதற்கப்பால் அவள் ஒன்றுமில்லை.
“முனிவரான ஜரத்காருவிற்கும் சரி, தன் தமையனுக்கும் சரி, தன் உடல் சமையலுக்கான மண் கலம் போன்றது.அதனுள் வேகும் அப்பமான மைந்தன் மட்டுமே அவர்களின் தேவையே தவிர, தன் உடலோ மனமோ அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை.”என்று கூறும் போழுது கோடானகோடி மானசாக்கள் நம்முள் ஒரு கணம் எழுந்து மறைகிறார்கள்.
கங்கை சமவெளி முழுவதும் ஆரியவர்த்தம் என்றான பின் .தெற்கில் தண்டகாரண்னியம் ஆரிய தேசாந்திரிகள் தெற்கு நேக்கி நகர பெரும் தடையாக இருக்கிறது பூர்வகுடி நாகர்களை முற்றிலும் வனங்களுக்குள் தள்ளிய பின் அவர்கள் அங்கும் நிலைகொள்ள முடியாத வண்ணம் மேலும் நேருக்கடியை ஏற்படுத்துகிறார்கள் பாண்டவர்கள்.இந்திரபிரஸ்தத்தை கட்டி எழுப்ப நாகர்களின் காண்டவ வனத்தை கண்ணனும் அர்ச்சுனனும் பல நாட்கள் தொடர்ந்து எரித்து அழிக்கிறார்கள். தப்பி வெளியேறும் நாகர்களை மீண்டும் அக்கினியில் வீசி முற்றாக அழித்தொழிக்கிறார்கள்.குலத்தின் முது மூப்பனான வாசுகி தொடரும் பகையை முடிப்பதற்கும் சாபத்திலிருந்து தட்சகனை மீட்கவும் நாகர்களுக்கும் பிராமண முனிவனுக்கும் மானசாவின் மகனான ஆஸ்த்திகன் பிறக்கிறான்.அவனை பிறப்பிக்கவே பிறந்த ஒரு பெண் மானசா அவ்வளவு தான்.
ஒரு படைப்பாளி புராணிகத்தை மீள்புனைவு செய்யும் போது அதனை எவ்வாறு அனுகுகிறார் என்பதில் தான் படைப்பின் நுட்பம் அடங்கியுள்ளது.அவ்வகையில் லஷ்மி பாலகிருஷ்ணன் மானசாவின் பாத்திரத்தை தேர்ந்துள்ளதின் மூலம் அவரின் நுண்மையற நோக்கு புலப்படுகிறது. மகாபாரதம் என்ற பிரமாண்டத்தில் மானசா போன்ற ஒரு எளிய தாயை தேர்வு செய்வதன் வழியாக பெண்களின் பாடுகளை மிக நுட்பமாக அவர் வெளிப்படுத்துகிறார். மானசா தன் சேடியிடம் தன் மகனை பற்றி இப்படி வெளிப்படுத்துகிறாள்.”இல்லையடி நேதளா.தளிரிலிருக்கும் நிறம் நிரந்தரமல்ல பைதலாக உணவுக்கும் சீராட்டலுக்கும் நம்மை அண்டியிருக்கையில் இருக்கும் அதே குணம் வளர்ந்து ,கற்று, அவை வென்று ஆணவ நிறைவு கொள்கையில் நிலைத்திருக்குமா என்று அறியேன். அதற்கென்ன செய்வது என்றும் நாம் இன்றே யோசித்தாக வேண்டுமடி” இம்மாதிரியான பல நுட்பமான உரையாடல்களின் மூலம் மூலப்பிரதிக்குள் நாம் கவனத்திலேயே வரதா ஒரு பெண்ணை புனைவுக்கான மையசரடாக மாற்றும் போதே பெண்ணின் மீதான நீண்ட கால சமூக ஒதுக்குதளை நம் முகத்திற்கு எதிரே திடூமென நிறுத்தி அதிர்ச்சிக்குள்ளாக்குகிறார்.
மேலும் ஆண்களின் மனம் எவ்வளவு வன்மாது என்று தன் சசோகதரன் வாசுகியிடம் மானசா இப்படி குமுறும் போது”நான் சொன்னது தவறு தான்.தன் குலம் செழிக்க வேண்டும்,தன் முன்னோர்களுக்கு எள்ளும் நீரும் தடையில்லாது கிடைக்க வேண்டும்,அதற்கு யாரோ ஒருத்தியின் குருதியை உறிஞ்சிக் கொள்ள வேண்டும் என்று நினனப்பதை பொறுப்பின்மை என்றல்ல குரூரம் என்றே சொல்லியிருக்க வேண்டும்.” அவர் பதிலின்றி விக்கித்து போய் நிற்கும் போது உணரமுடியும்.
காலம் காலமாக ஒடுக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கென்று கட்புலனாகாத ஒரு உலகை கட்டமைத்துக் கொள்கிறார்கள்.அது ஆணகள் நுழைய அனுமதிக்கப்படாத புதிர் அடுக்குகளாலானது. ஆண் எழுப்பி ஒவ்வொரு சுவற்றுக்கு பின்னாலும் அது ஏழுமலைகளை ஏழுகடல்களை கடந்து விரிந்துள்ளது. சாஸ்திரம் சொல்கிறது “பெண்ணாவள் தன் குழந்தை பருவத்தில் தன் தந்தைக்கும் சகோதரர்களுக்கு பின் தன் கணவனுக்கும் முதுமையில் தன் புதல்வர்களுக்கு கட்டுப்பட்டவளாய் இருக்க வேண்டும் என்று.மானசா தன் மகனிடம் கேட்கிறாள்.”தலைமுறைக்கு ஒரு அபலையைத் தேர்ந்தெடுத்து,அவள் தலையில் பொருப்பை கட்டும்போது மட்டும் உங்கள் பிரம்மச்சாரியத்தை தழர்த்தி கொள்வீர்கள். அதன் பின் மீண்டும் பொறுப்பற்ற துறவிக் கோலம், அப்படித்தானே?” என்று. பெண் என்பவள் சுகிக்கவும் ஈனவுமான சுமக்கவுமான ஒரு ஜடமாம என்று கேட்கிறாள். ஆண்கள் பெண்ணின் இருப்பை இயல்பை சுவற்றுக்கு உள்ளே வெளியே என்று இருவேறு உலகாக கட்டமைத்துள்ளான்.மானசா அதற்கு எதிரான கேள்விகளை நாவல் முழுவதும் மிக நுட்பமாக முன்வைத்து கொண்டே வருகிறாள்.
பொதுவாக மீள்புனைவில் காலமாற்றமும் பாத்திரங்களின் குணம் மாற்றமும் இயல்பாக மாறி வரும் ஆனால் மானசாவில் கதைக்களம் காண்டவ வனத்திலிருந்து சோழநாட்டின் வேணு வனத்துக்கு பெயர்த்து கொண்டுவருகிறார் ஆசிரியர். மேலும் பல்வேறு காரணங்களால் இந்திய துணை கண்டத்தில் ஏற்பட்ட இன மற்றும் பண்பாட்டு கலப்பினை கவனப்படுத்துகிற அதே வேளையில் அதன் எல்லை இன்னொரு இனத்தின் மேல் நடைபெறும் அத்துமீறலினால் அன்றி கலாச்சார பரிமாற்றதின் வழியானதாக இருக்க வேண்டியதின் அவசியத்தை முன் வைக்கிறார்.
“ததா விததா எனும் இரு மங்கையர் கருப்பும் வெள்ளையுமான நூலாகளாகி இரவையும் பகலையும் கொண்டு இடையறாது நெய்யும் துகிலே காலம் என்பர் பெரியோர்.”
“தனியாக பொறுப்புகளைச் சுமக்கும்போது நீரில் நனைந்த பஞ்சென பன்மடங்கு எடை கொண்டுவிடுகிறது.”இப்படியாக பல்வேறு இடங்களில் அவரின் கதை மொழியில் ஒரு கவித்துவமான மென்மையான ஆழ்ந்த அவருக்குறிய தனித்துமான மொழியை கையாளுகிறார்.
இறுதியாக மானசா அவளுக்கான சமூக விடுதலையையும் கடந்து தனக்கான ஆன்ம விடுதலையை உறுதியாக முன் வைத்து பெண் மேல் திணிக்கபடும் அனைத்து கட்டுகளையும் உடைத்து பூர்ணத்துமடைகிறாள். -இரா. விஜயன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.