நூல் : கைரதி 377 (மாறிய பாலினரின் மாறாத வலிகள்)
ஆசிரியர் : மு.ஆனந்தன்
விலை : ரூ.₹110
பக்கங்கள் – 120
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com
அடிக்கடி காணாமல் போகும் நாப்கினை தேடியவள், அதைக் கண்டடையும் காட்சி நம்மை உறைய வைக்கிறது…..
மு.ஆனந்தன் அவர்களின் கைரதி377 சிறுகதைத் தொகுப்பு குறித்து கவிஞர் சிவக்குமார் Sivakumar Ganesan பதிவிட்டுள்ள மதிப்புரை..
மு.ஆனந்தன் கவிஞர், கட்டுரையாளர், சிறகதை எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட வழக்கறிஞர். கோவையில் வசிக்கிறார்.
சமுதாயத்தால் இன்னமும் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படாத மூன்றாம் பாலினத்தவர்களின் கொடுந் துயரினை, துளி மகிழ்வினைப் பதிவு செய்திருக்கும் சிறுகதைகள்.
பெரும்பான்மையான கதைகள் உண்மை நிகழ்வுகளில் முகத்தில் வரையப்பட்ட எனது புனைவுகள். நான் பார்த்த, கேட்ட, வாசித்த, நிகழ்வுகள் செய்திகள், தகவல்கள். அவை ஒரு வரி, ஒரு பத்தி, ஒரு பக்கமாகவோ இருக்கும் என தன்னுரையில் ஆனந்தனே குறிப்பிடுகிறார்.
கதைகளில் வரும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு , திருநங்கைகளுக்காக முதன் முதலாக சங்கம் அமைத்து பிரதமர் இந்திரா காந்தியிடம் கோரிக்கை மனு அளித்த கைரதி லால் போலோவின் பெயரான கைரதிதான் அனைத்து கதைகளின் கதாநாயகிகளின் பெயர்..
மூன்றாம் பாலினத்தவர்களைப் பார்த்து அருவருக்கிறோம். கேலி செய்கிறோம். பொதுமக்கள் தொடங்கி காவல்துறையினர் வரை பாலியல் வடிகால்களாக அவர்களை பயன்படுத்துகிறோம். அவர்களின் அந்தரங்க உறுப்புகளைப் பார்த்து விட வேண்டும் என்ற ஆழ்மன இச்சையைத் தீர்த்துக் கொள்ளவே தவிக்கிறோம்.
ஆனால் கல்லூரி விண்ணப்பத்தில் அவர்களுக்கான பாலினப் பகுதி இல்லை.. விண்ணப்பங்களை நிரப்ப முடியாமல் போராடுகிறார்கள்.. கணவனாக ஒரு பெண்ணுடனும், மனைவியாக ஒரு ஆணுடனும் இருவாழ்வு வாழ்கிறார்கள். நஸ்ரியாவாக இருந்து நஸ்ருதீனாக மறுகையில், கொம்பன் யானையை போன்ற கருத்த புல்லட்டில் மிதக்கிறார்கள். இயற்கையின் அழைப்பைத் தீர்த்துக் கொள்ள லாட்ஜ்களில் ஒரு அறை கிடைக்காமல் கனக்கும் அடி வயிறுடன் அவஸ்தைப்படுகிறார்கள். எல்லா மதங்களும் பெண்களுக்கு எதிரானவை என்பது இப்பொழுது நான் பெண்ணாக உணரும்போதுதான் புரிகிறது. நான் எல்லா மதங்களுக்கும் பாவமன்னிப்பு அளிக்கிறேன் இனிமேலாவது மதங்கள் பெண்களை சமமாக நடத்தட்டும் என பாவமன்னிப்புக்கு அமர்ந்த பாதிரியாரிடம் சொல்லிச் செல்கிறார்கள். இயற்கைக்கு மாறான உறவு கொள்வதாகச் சொல்லப்பட்டு இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 377ன் கீழ் தண்டிக்கப்படுகிறார்கள். வாரியத்தில் பதிவு பண்ணப் போய், கடுமையான மன உளைச்சல்களுக்கு ஆளாகி நடுரோட்டில் நின்று புடவையை உயர்த்தி,வாங்கடா வாங்க, எல்லோரும் வந்து அவுத்துப் பாருங்கடா என்று கத்துகிறார்கள்.
அடிக்கடி காணாமல் போகும் நாப்கினை தேடியவள், அதைக் கண்டடையும் காட்சி நம்மை உறைய வைக்கிறது. அதற்கு பிறகு அவள் நாப்கின் வாங்கும் பொழுது மறக்காமல் கூடுதலாக ஒரு நாப்கினையும் வாங்குகிறாள். (கைரதிக்கும் ஒரு நாப்கின்).
அழகன் குதிரையை வைத்துப் பிழைக்கும் கைரதிக்கு பேரதிர்ஷ்டமாக மாரிமுத்து போன்ற ஒரு நல்லவன் கிடக்கிறான். மதுரையில், மருத்துவப் படிப்பு முடித்து வீட்டிலும் சேர்த்துக் கொள்ளப்படாமல், மருத்துவமனையிலும் வேலை கிடைக்காமல் இருக்கும் கைரதிக்கு ஒரு காவல் நிலைய பெண் அதிகாரி தனியாக மாத்தா ராணி கிளினிக் வைத்துத் தருகிறார். தொகுப்பின் இந்த இரண்டு கதைகளில்தான் கைரதிகள் கொஞ்சம் மகிழ்ச்சியோடிருக்கிறார்கள்.
திருநர்களில், இடைப்பாலினம், இருனர், திரினர், பாலிலி என ஏகப்பட்ட பாலினங்கள் உள்ளன. குற்றப் பரம்பரைச் சட்டம் மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் பொருந்தும். புதனின் மனைவி இலா, ஒரு மாதம் ஆணாகவும் ஒரு மாதம் பெண்ணாகவும் வாழும்படி சிவன், பார்வதியால் சபிக்கப்பட்டவள். இவற்றையெல்லாம் இந்தத் தொகுப்பிலிருந்துதான் நான் அறிந்து கொண்டேன்.
தொகுப்பில் ஒன்றிரண்டு கதைகள் அல்ல, ஒரு முழுத் தொகுப்பையே மூன்றாம் பாலினத்தவர்களுக்காகத் தந்ததற்காகவும், அவர்களின் பெரு வலியை வாசிப்பவர்களுக்கு தனது காத்திரமான எழுத்தின் வழியே துல்லியமாகக் கடத்தியதற்காகவும், மூன்றாம் பாலினத்தவர்கள் குறித்த அசிங்கமான நம் பொதுப் புத்தியைக் கொஞ்சமாவது மாற்ற தனது எழுத்தின் வழி முயன்றதற்கும் மு.ஆனந்தனுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
– சிவக்குமார்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

