இலங்கையில் விடுதலைப்புலிகளின் தனி ஈழம் குறித்த வரலாற்றின் ஆணிவேர் எங்கே இருந்தது என்று தேட விரும்புவோர்க்கு இந்நூலில் கிடைக்கும்.

தமிழ் தமிழ் என்று வீராவேசம் முழங்கும் பல சூரப்புலிகள் இந்நூலை வாசித்தால் கொஞ்சம் அடங்குவார்கள் என்றே கருதுகிறேன்.

ஒருநாட்டிற்குள் வாழ்வோர் அந்நாட்டின் மக்களோடு இயைந்து வாழ்வதும், பிறருக்கு முன்மாதிரியாகவும் திகழவேண்டும் என்றே நமக்குக் கருதத் தோன்றும். ஆனால் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஒரு குறிப்பிட்ட மக்களின் கயமத்தனம் தான் ஒட்டுமொத்த இலங்கைத் தமிழருக்கும் கேடாய் முடிந்ததென்றால் என்ன சொல்வது. ஆம் யாழ்ப்பாணத்தில் ஐரோப்பியர் வருகையின்போது ஆங்கிலத்தை கற்று இலங்கை முழுவதும் அனைத்துத் துறையிலும் கோளோச்சி வாழ்ந்த மேட்டுக்குடி தமிழ்ச் சமூகத்தின் தில்லாலங்கடித்தனம் தான் இலங்கை இனப் பிரச்சினைக்கு ஆணி வேராக இருந்துள்ளது. ‘பல்கலைக்கழகமா யாழ் தமிழர்கள், வேலைவாய்ப்பில் அனைத்து இடங்களுமா யாழ் தமிழர்கள்’. ஆம் திரும்பிய பக்கமெல்லாம் யாழ் மேட்டுக்குடி தமிழ்ச் சமூகமே அனைத்திலும் நுழைந்து அனுபவித்து வந்துள்ளது. மற்ற வடக்கு, கிழக்கு, இஸ்லாமிய தமிழர், மலையகத் தமிழர் என யாருக்கும் அவ்வாய்ப்பு இல்லாமலே இருந்துள்ளது. சிங்கள மக்களுக்கும் அதுதான் கதி.

இந்நிலையை மாற்றவே இலங்கை அரசு கல்வியைத் தரப்படுத்துதல் என்று 1971ல் சட்டமியற்றி அனைத்து மாவட்ட மக்களுக்கும் வாய்ப்புகள் சமமாக கிடைக்க வழி செய்தது. இங்கே தான் யாழ் மேட்டுக்குடிக்கு கடிவாளம் வந்தது. எங்கே தான் அனுபவித்து வந்த அனைத்தும் பறிபோகுமோ என்கிற குறுகிய மனப்பான்மையில் தனக்கான பலத்தை திரட்டுவதற்கு எடுத்த ஆயுதம் தான் தனி ஈழம். அதுவரை சைவ வேளாளர் என்ற மமதையில் மற்ற தாழ்த்தப்பட்ட தமிழர்கள் உட்பட அனைவரையும் மட்டம் தட்டி வாழ்ந்த மேட்டுக்குடி தமிழர்கள் புற வாசல் வழியாக அனைத்து தமிழர்களையும் ஒருங்கிணைக்க முனைப்பு காட்டியது. இந்த மேட்டுக்குடி யாழ் தமிழர்களின் ஜம்பம் அவ்வளவு தூரம் பலிக்காததால் அடுத்தடுத்த நயவஞ்சகத்தை கிளப்பினர். ஒன்று தமிழர்களிடம் உணர்ச்சியைத் தூண்டி விடுவது, அது பலிக்காத போது ஒன்றுபட்டு வாழ்ந்த இஸ்லாமிய தமிழர்களை மதம் சார்ந்து பிரித்து ஓட்டுவதற்கு இஸ்லாமியர்கள் மீது வன்முறையைத் தூண்டுவது உள்ளிட்ட பல்வேறு அயோக்கியத்தனங்களை செய்து இறுதியில் இலங்கை அரசின் தவறான முடிவால் இனவாத அரசியல் மேலோங்கியது. ஈழம் என்று கிளம்பியவர்களை இலங்கை அரசு வேட்டையாடியது. அப்படி வேட்டையாடிய போது முழுவதும் பலிகடாக்களாகப்பட்டவர்கள் ஒன்றுமில்லாத அப்பாவித் தமிழர்களே. தூண்டிவிட்டு வெளிநாடுகளில் ஓடிப் பதுங்கிக்கொள்ள வாய்ப்பு யாழ் மேட்டுக்குடிகளுக்கு மட்டுமே கிடைத்தது. இலங்கை அரசின் இனவாதப் போக்கால் தப்பிக்க நினைத்த அப்பாவித் தமிழர்கள் இந்திய, தமிழகத் தெருக்களிலும், இலங்கை முள்வேலிகளிலும் அடைபட்டு சீரழிந்தனர்.

இந்நூலை வாசிக்க வாசிக்க அய்யோ இந்தியாவில் பார்ப்பனியம் பல்வேறு அயோக்கியத்தனங்களை புரிந்து தன்னுடைய இருப்பு குறையாமல் பார்த்துக்கொள்வது போல் இலங்கை யாழ்ப்பாண மேட்டுக்குடி சைவ வேளாள என்று முத்திரைக் குத்திக்கொண்ட தமிழர்கள் அதற்கும் மேலே சென்றுள்ளார்களே என்று பதைக்கத் தோன்றியது.

இவ்வளவு அநியாயங்களை ஈழப் புலிகள் இலங்கையில் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடியபோது அய்யைய்யோ நம்ம தமிழ்நாட்டிலிருந்து தனி ஈழத்துக்கு வக்காலத்து வாங்கிய குரூப்பை நினைத்தால் தான் இன்னும் பத்திகிட்டு வருது. இதில் வேற இன்னும் அவுரு உயிரோடு கீறாரு, கிழிக்கிறாருன்னு இங்கே கத்தை கட்டும் வேலையை விடாமல் செய்து வரும் குறுங்குழுவாத கூட்டத்தை என்னா சொல்வது.

இந்நூலின் பக்கங்கள் 151 தான். ஆனால் அப்பப்பா எவ்வளவு பொருள்கள்! பிரமிப்பு!

கட்டுரைகளாகவும், நேர்காணலாகவும் என மிகவும் சிறப்பான இலங்கையின் ஆணிவேர் வரலாற்றை இந்நூலின் ஆசிரியர் தோழர் #எம்.ஆர்.ஸ்ராலின் அவர்கள் நேர்த்தியாக வழங்கியிருப்பார்கள். எது ஒன்றிற்கும் ஒரு மூலம் இருக்கும். இலங்கையிலும் அப்படிப்பட்ட ஈழ வார்த்தையால் இன அழிப்பே நடந்து முடிந்து போனபோது நமக்கு மிகவும் ரத்தக் கண்ணீரே முன்வந்து நிற்கிறது.

இந்தியாவில் இருக்கும் உழைக்கும் வர்க்கத் தோழமை கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் தொடர்ந்து சொல்லி வந்தது இந்நூலை படித்தவுடன் மிகவும் பொருந்திப் போனது. ஆம் “ஒன்றுபட்ட இலங்கைக்குள் மாநிலமாக இலங்கைத் தமிழர்கள் இணைந்து வாழவேண்டும். தனி ஈழம் என்பது வரலாற்றுப் பிழையானது” என்றுக் கூறிக்கொண்டே இருந்தது.

என்ன செய்வது எல்லாம் முடிந்த பின் எங்கே தேடுவது. இனியாவது உலகம் முழுவதும் சிதறியுள்ள இலங்கைத் தமிழர்களை ஒருங்கிணைத்து இலங்கை என்னும் நாட்டினுள் ஒன்றுபட்டு வாழ்வதற்கு இலங்கை அரசும், உலக மக்களும் குறிப்பாக இந்தியாவும் முயற்சி எடுக்கவேண்டும்.

மனசு மிகவும் வலிக்கிறது. என்ன செய்ய அறிவியல் ரீதியாக மக்களை ஒருங்கிணைக்கத் தெரியாத இந்த கார்பரேட் உலகில் உழைப்பாளி வர்க்கம் ஒன்று திரண்டு வரும் வரை இப்படித்தான் சீரழிந்து கிடக்கவேண்டுமோ.

மிகவும் வலியோடு முடிக்கிறேன் தோழர்களே இலங்கைத் தமிழர்களின் நிலை வேறு யாருக்கும் வரக்கூடாது. அதற்கு குறுகிய சாதி, மத, இன, மொழி அரசியலை கையிலெடுப்போரை நம்மை அண்டவிடாமல் விரட்டுவோம்.
இந்நூலை தந்த ஆசிரியருக்கு கோடானுகோடி நன்றி!

வாசிப்போம்!
உலகை நேசிப்போம் தோழர்களே!!

இரா.சண்முகசாமி 
புதுச்சேரி.
நூல் :  தமிழீழப் புரட்டு
ஆசிரியர் : எம்,ஆர்.ஸ்ராலின்
விலை : ரூ.₹100/-
வெளியீடு : எக்ஸில்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *