நூல் அறிமுகம்: மாதவராஜின் “க்ளிக்” நாவல் – சூர்யா

நூல் அறிமுகம்: மாதவராஜின் “க்ளிக்” நாவல் – சூர்யா




நூல் : க்ளிக் [நாவல்]
ஆசிரியர் : மாதவராஜ்
விலை : ரூ.₹ 250/
பக்கங்கள் : 248
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com

தகழியின் செம்மீனுக்குப் பிறகு ஒரே மூச்சில் நான் படித்த நாவல் “க்ளிக்” . பரபரப்பான, விறுவிறுப்பான எழுத்து நடையில் 248 பக்கங்களை எழுதிய எழுத்தாளர் ஜா.மாதவராஜ்-க்கு நமது பேரன்பைச் சொல்லி விட வேண்டும்.

பூங்குழலி என்னும் கதைநாயகியைப் படைத்து, அவளை ஐ.டி. ஊழியராகச் சித்தரித்து, நவீன இளைஞர்களின் எண்ணப் போக்குகளையும், அவர்கள் சார்ந்த முந்தைய சமூகம் நவீனத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தவிப்பதையும் நவீன வாழ்வின் சிக்கல்கள் சிதைவுகளையும் இத்தனை வீரியயமாக முன் வைத்த வேறொரு படைப்பை நான் இதுவரை வாசிக்கவில்லை.

சென்னை, பெருங்குடியில் ஐ.டி. ஹப்பில் நான் அமர்ந்து கொண்டு தினசரி விழி விரியும் ஆச்சரியங்களை சில இடங்களில் விளக்கியும், வேறு பல இடங்களில் அடித்து நொறுக்கியும் இருக்கிறார், நாவல் ஆசிரியர்.
ஐ.டி. பணியின் நெருக்கடி, அத்துக் கூலி வாழ்நிலை, குறைவான சம்பளம், வேலைக்கு டீம் ஒர்க், பிரச்சினைக்கு தனித் தனி டீலிங், அவை ஏற்படுத்தும் உளவியல் நெருக்கடிகள், பாலியல் சுதந்திரம், சுய தேர்வு, சுயமரியாதையின் எத்தனிப்புகள், கிராமங்களோடு பிணைக்கப்பட்டுள்ள சென்னையின் வேர்கள் என, அத்தனை முரண்களையும் அழகாகக் கையாண்டுள்ளார்.

ஓரிடத்தில், கலியாணக் களேபரத்தை விவரிக்கையில் வீட்டின் எண்ணப் போக்கை, எதிர்பார்ப்பை நிறைவேற்றா விட்டால், உறவுகள் மொத்தத்தையும் இழக்கும் நிலை வரும் என்பதை, நான் வீடாகப் பார்க்க வில்லை. குடும்பத்தின் சிதைவு தவிர்க்க இயலாமல் சிதையும் போக்காக கொள்ளலாம் என்றே நினைக்கிறேன்.

அந்தக் கல்யாணி கதாபாத்திரம்; அதன் சித்தரிப்பு, பின்னர் அப்படியே அந்த கதாபாத்திரத்தை கைவிட்டது; மனப்பிறழ்வில் திரியும் கல்யாணியிடம் ஒருநாள் அமர்ந்து பேசவேண்டும் என்பதோடு நிறுத்தியது உறுத்திக் கொண்டே இருக்கிறது. உங்க மகளுக்கு கலியாணம் என எழுதி வைத்து காத்திருப்பவளை, கை விட்டு விடுவதா?!

அடுத்து, பீச், கோயில், சினிமா, ஹோட்டல், டேட்டிங், கலியாணம், நட்பு, பிரிவு என்ற இந்த மொத்த சித்திரத்துக்குள், அரசியல், சங்கம் போன்ற உரையாடல் வெளியே ஊடாடவில்லையே?. நாவல் என்பது ஒரு முழு வாழ்வை விரித்துச் சொல்வதல்லவா?. ஒரு சங்கத் தலைவர் நாவலாசிரியரா புனைவு எழுதும்போது கூட, அரசியல் வெளி வராவிட்டால், வேறு யார் எழுத்தில் வரும்.

பிப்ரவரி, 25ல் ஆரம்பித்து ஏப்ரல் 11ல் சம்பவங்கள் முடிந்தாலும் நாவலின் உரையாடல் களம் மொத்த வாழ்வுக்கும் முன்னும் பின்னும் ஊடறுத்துப் பாயத்தானே செய்கிறது?.

பீல் குட் மூவி என்பதைப் போல் நிச்சயம் இது பீல் குட் நாவல் தான். ஆசிரியரின் எழுத்து வலிமைக்கு ஆழங்கால்பட்ட பேரிலக்கியங்களை எதிர்பார்க்கிறேன்.

– சூர்யா, சென்னை.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *