தமிழர் தம் கலை மற்றும் பண்பாட்டு விழுமியங்களை காலம் தோறும் கைப்பற்றிக் கொண்டு, எல்லாமே எங்களால் என்று தம்பட்டம் அடித்துத் திரியும் கூட்டத்திற்கு தர்க்கரீதியில் பதிலடி கொடுக்கும் வேளையில் இறங்கி இருக்கும் தமிழ் அறிஞர்கள் மத்தியில், மதுரை பாலன் அவர்களும் தம் பங்களிப்பாக ‘ லயம்’ என்னும் நாவல் மூலம் ஆணித்தரமான கருத்துக்களை எடுத்து வைத்து தமிழிசை எப்படி கர்நாடக சங்கீதமானது என்பதை நிறுவ முயல்கிறார்.
அவரின் அறச்சீற்றத்தை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது அவரின் எண்ண ஓட்டத்திற்கு வடிகாலாக நாவலை எழுதியவர்.
கதை மாந்தர்களை அற்புதமாகப் படைத்திருக்கிறார். தமிழிசையின் மேன்மையை உணர வைக்க, சதாசிவ சாஸ்திரி என்ற பாத்திரத்தை உருவாக்கி அவர் மூலம் தமிழிசைப் பற்றிய தரவுகளை சொல்ல வருகிறார் அவர் ஒரு முற்போக்கு சிந்தனையுள்ள பிராமணராகவும் நாவலில் வருகிறார்.
தமிழ் நீச பாஷை அதில் பாடுவதே அபச்சாரம் என்ற கொள்கையை கடைப்பிடித்த பிராமணர்கள், தண்டபாணி தேசிகர்பாடிய மேடையை’ ஜலம்’ விட்டு அலம்பி விட்ட அரியக்குடி இராமானுஜ ஐயங்காரின் ‘ அரிய’ சேவை பற்றி எல்லாம் நாவல் சொல்கிறது. ஆபிரகாம் பண்டிதர் எழுதிய தமிழிசை பற்றிய ஆராய்ச்சி நூலில், எந்தெந்த தமிழிசை ராகங்களை கபளிகரம் செய்து அதற்கு மாற்று பெயர் சூட்டி கர்நாடக சங்கீதமாக பாடிக்கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லப் பட்டிருக்கிறது. அதை பாலன் சாஸ்திரி மூலமே வெளி கொண்டு வருவது பாராட்டப்பட வேண்டியது.
இந்த மும்மூர்த்திகளுக்கு முன்பே தமிழ் மூர்த்திகளான முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை, அருணாசல கவிராயர் போன்றோர் தமிழிசையினை வளர்த்து வந்திருக்கிறார்கள். பல்லவி, அனுபல்லவி, சரணம். முறையே எடுப்பு, தொடுப்பு, மடிப்பு என்றெல்லாம் வழங்கி வந்திருக்கிறது. சிலப்பதிகாரத்திலேயே தமிழிசையை பற்றி குறிப்பு இருக்கிறதென்று அறிகிறோம். இத்தனை பெருமையும் பழைமையும் கொண்ட இசைக்கு சொந்தக்காரர்கள் நாம். தமிழரிடத்தில் இசையே கிடையாது என்று வாய் கூசாமல் சில வான்கோழி கூட்டங்கள் இன்று கூவி திரிவதையும் பார்க்கிறோம்.
நாவலில் வரும் கதை மாந்தர்களான சதாசிவ சாஸ்திரி, சீராளன், சௌமியா, ரம்யா போன்றவர்களுடன் சீராளனின் உறவினர்களாக வருபவர்களும் நாவலை தூக்கிப் பிடிக்கிறார்கள். சிறையில் பெண்களின் நிலைப் பற்றி இதுவரையில் எவரும் எழுதினார்களா என்று தெரியாது.
ஆனால் மதுரை பாலன் தெளிவாக எழுதிச்செல்கிறார். ஆனால் அவர்களின் ‘பலவீனங்களையும்’ சொல்லும் இடம் சற்று நெருடலாக இருக்கிறது என்பதையும் சொல்லியாக வேண்டும்.
நாவலில் ஒரு அத்தியாயத்தில், தன் கணவன் வேறொரு பெண்ணோடு தொடர்பு வைத்த தகவலை சொல்லும் மனைவி அந்தப் பெண்ணின் ஜாதியை சொல்வதைப் போல் பாலன் எழுதியது ஏற்றுக் கொள்ள தக்கதல்ல. ஒரு சிவப்பு சிந்தனை காரரிடமிருந்து இதை எதிர்ப்பார்க்கவில்ல. அவரின் இந்த நாவலை வாங்கிப் படிக்கும் பெண்களில் ஒருவர் கூட அந்த ஜாதியை சேர்ந்தவர்கள் இருக்க மாட்டார்களா? இந்த ஒரு குறையை தவிர நாவல் பல சமூகப் பிரச்சனைகளைத் தொட்டு செல்கிறது.
தமிழிசையின் சிறப்பை வலியுறுத்தும் இந்த நாவலுக்காக மதுரை பாலன் அவர்கள் நிறைய உழைத்திருக்கிறார் என்பதை நாம் உணர்ந்து, அவரின் உழைப்புக்கு மரியாதை செய்வது நம் கடமை.
ஆசிரியர் : மதுரை பாலன்
நூல் : பாலன் வெளியீடு
விலை : ரூ.220/-
பக்கங்கள் : 232
அலை பேசி : 8667296634
ச.லிங்கராசு
98437 52635
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.