நூல் அறிமுகம் : வாழும் மூதாதையர்கள் தமிழகப் பழங்குடிகள் – கரு.கல். சொல்லோவியன்

நூல் அறிமுகம் : வாழும் மூதாதையர்கள் தமிழகப் பழங்குடிகள் – கரு.கல். சொல்லோவியன்

மானிடவியல் துறை இன்று தவிர்க்க முடியாத ஓர் இடத்தில் நிற்கிறது என்றால் அது மிகையன்று. இந்த துறை கடலென விரிந்து பரந்துபட்ட நோக்கில் இன்று பல்வேறு பரிணாமங்களில் பகுத்துப் படிக்கப்பெறுகிறது. இந்த மானிடவியல் புரிதலைக் குறித்து திரு. பக்தவச்சல பாரதி குறிப்பிடும் போது மானிடவியலை உடல்சார் மானிடவியல், பண்பாட்டு மானிடவியல் என்று இரு பெரும் பிரிவுகளில் நின்று ஆராய்வது மிகச் சிறந்த பொருத்தம் என்பார். உடல்சார் மானிடவியல் என்பது அறிவியலின் மாந்தர் தோற்றத்தையும், அதன் ஒப்புமையையும் ஆராய்வது. பண்பாட்டு மானிடவியல் என்பது அந்தந்த மக்களின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்து சடங்குகளையும் பதிவதாகும். இந்த பண்பாட்டு மானிடவியலில் பெரும்பாலும் மொழியின் ஆதிக்கமே அதிகம் இருக்கும்.

வாழும் மூதாதையர்கள் நூலை என் கரங்களில் தொட்டவுடன், எனது நூல் அலமாரியில் சேர்ந்துள்ள இன்னொரு மானிடவியல் நூலாக அதை பார்க்க முடியவில்லை. எட்கர் தர்ஸ்டன் நூல் முதல் பல்வேறு நூல்கள் இருந்தாலும், வரப்பெறும் ஒவ்வொரு மானிடவியல் நூல்களும் ஒவ்வொரு புதுமையையும், புதுத் தரவுகளையும் உடையனவாகவே உள. கோவையில் தொண்டாமுத்தூர் அருகே அட்டுக்கல் என்ற கிராமத்தில் இரண்டு ஆண்டுகள் தங்கிய அனுபவம் எனக்கு உண்டு. அதன் அருகே ஆதரவற்றோர் இல்லம் இருந்ததால் அங்கே பணிபுரிந்து கொண்டு, அட்டுக்கல் கிராமத்தில் தங்குவது என் வழக்கம். அப்போது அந்த மக்கள் எந்த இனக் குழு என்று கேட்ட போது, என்னுடன் இருந்தவர்களுக்கு அது குறித்து தெரியவில்லை. பிறகு நானே கேட்டறிந்து கொண்டேன், அவர்கள் தங்களை இருளர்கள் என கூறினர். வனச் சட்டம் அவர்களை மலையிலிருந்து கீழே உருட்டி விருட்டிருந்தது. அங்கிருக்கும் நண்பர்கள் தங்கள் அனுபவங்களையும், பெரியவர்கள் தங்களின் ஆதிகால வாழ்க்கையும் குறித்த செய்திகளையும் நான் கேட்டதுண்டு.

Image result for வாழும் மூதாதையர்கள்இந்த நூல் இருளர்கள் முதல் தோடர்கள் வரை பதிமூன்று வகையான பழங்குடிகளை அடையாளம் கண்டு அவர்களின் வாழ்வை எழுத்தில் மட்டுமின்றி, புகைப்படங்களாகவும் பதிவு செய்துள்ளது. இதற்காகவே தோழர் அ. பகத்சிங் அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துதலைக் கொடுக்கலாம். நூலுக்கு முன்னுரை வழங்கிய பெருந்தகைகள் பேரா. ஆ. செல்லப்பெருமாள், பேரா. ஆ. சிவசுப்பிரமணியன், அணிந்துரை வழங்கிய எழுத்தாளர் நக்கீரன் ஆகியோரின் எழுத்துகள் முன்னுரை அணிந்துரை போன்று இராமல் அவையே பெருந் தகவுகளாவே அமைந்துள்ளன. நூலில் இருளர்களை முதலாவதாக வைத்துள்ளது நல்ல பொருத்தமாகவே உள்ளது. காரணம் இன்னும் அவர்களின் வாழ்க்கை விடிந்தபாடில்லை. சமீபத்தில் படித்த ஒரு சிறுகதையில் ஒரு தாய் தன் மகனுக்கு சாதி சான்றிதழ் கேட்டு அலையோ அலையென்று அலைவார். தாசில்தார் கேட்பார் உனக்கு பாம்பு பிடிக்க தெரியுமா?. கடைசிவரை தன் மகனுக்கு சாதி சான்றிதழ் வாங்க கலெக்டர் அலுவலகத்துக்கும், தாசில்தார் ஆபிசுக்குமாக அலைந்து சாவார். இன்றைக்கும் பெரும்பாலானவர்களுக்கு பழங்குடிகள் என்றாலே இருளர்கள் தாம் நினைவுக்கு வருவர். ஆகவே அதை மனத்திற் கொண்டு நூலாசிரியர் இருளர்களை முன் வைத்திருக்கலாம்.

இருளர்கள் குறித்து வாசகர்கள் எதைத் தெரிந்துகொள்ள வேண்டுமோ, அதை மட்டும் கருத்துச் செரிவுடன் அ. பகத்சிங் எழுதியுள்ளார். பொதுவாக ஒரு செய்தியை நீண்டு எழுதுவது கடினம், அல்லது அதற்குரிய தரவுகள் அதிகமாகத் தேவைப்படும், ஆனால் அதிக தரவுகள் உடைய ஒரு செய்தியை அதன் சாராம்சம் குறையாமல் சுருக்கி எழுதுதல் என்பது மிக கடினம். எவ்வித சுவாரசியமும் குன்றாமல், அந்த செய்தியை விட்டுவிடுவோமோ என்றும் பதறாமல் மிகத் தெளிவாக இருளர்கள் குறித்த கட்டுரை பேசுகிறது. இருளர்களைத் தொடர்ந்து தமிழக மக்களுக்கு அதிக அறிமுகமான பழங்குடியினர்; தோடர் ஆவர். நீலகிரி மலையில் தோடர், கோத்தர், படுகர், பால்குறும்பர், காட்டு குறும்பர், முள்ளு குறும்பர், ஜேனு குறும்பர், பெட்ட குறும்பர், இருளர், கசவர், பணியர், ஊராளி, காட்டு நாயக்கர், சோலெ நாயக்கர், மவுண்டாடஞ்செட்டி, வயநாடஞ்செட்டி போன்ற 16 வகை மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மொழி உண்டு. நீலகிரி பகுதிகளிலுள்ள பழங்குடியினர் பெரும்பாலும் அரசியல்வாதிகளுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் காட்சிப் பொருளாகவே மாறிவிட்டனர். மாறிவரும் பண்பாட்டுச் சூழலின் சுழல்களில் அவர்களும் தப்பவில்லை. மற்றொரு பொருளில் கூறினால் நவீனத்துக்கும், பழமைக்கும் நடுவே ஊசலாடும் வாழ்க்கை.

Image result for வாழும் மூதாதையர்கள்நீலகிரி மலைப்பகுதிகளிலுள்ள தோடர் இனத்துக்கு அடுத்த இடத்தில் இருப்போர் படுகர்கள் ஆவர். அவர்களைக் குறித்த குறிப்பு இந்த நூலில் விடுபட்டுள்ளது என்பது சற்று வருத்தத்தை அளிக்கிறது. காடர்கள், காணிகள், காட்டு நாயக்கர்கள், குறும்பர் போன்றோர் பரவலாக அறியப்பட்டிருந்தாலும், அறியப்படாத சோளகர்களைக் குறித்து பொது வெளிச்சம் தோழர் வழக்கறிஞர் ச. பாலமுருகன் அவர்கள் எழுதிய சோளகர் தொட்டி நூல் வழியாகவே தமிழகம் முழுவதிலிருந்தும் பெருங் கவனத்தை பெற்றார்கள். அதை ஆசிரியர் மிகச் சிறப்பாகவே எடுத்துரைத்துள்ளார்.
பாண்டிய நாட்டு முதுவர்கள் குறித்து குறிப்பு எப்படி நகரத்தில் வாழ்ந்த மக்கள், மலையின மக்களாயினர் என்கிற ஐயப்பாடு மேலோங்கி நிற்கிறது. மலைவாழ் மக்களினமாக இல்லாதிருந்து, மலைவாழ் மக்களாக மாறிப் போன பாண்டிய நாட்டு முதுவர்களை நிச்சயம் நாம் அறிந்திருக்க வேண்டும். இவர்கள் தங்களின் பூர்வீகத்தை மதுரையை மையமாகக் கொண்டுள்ளார்கள். மீசையை முறுக்கிக் கொண்டு என்னப்பே, சொல்றோம்ல என்ற வார்த்தைகளை இனி கேட்க முடியுமா என்கிற சந்தேகத்தை தேசிய மக்கள் பதிவேடு கொண்டு வர இருக்கிறது.

மதுரையில் நடந்த சண்டையாலோ, அல்லது கண்ணகி மதுரையை எரித்துவிட்டு, கால்போன போக்கில் நடந்து சென்ற போது, பாண்டிய நாட்டு முதுவர்கள் பல்லக்கில் வைத்து கொண்டு போன வாய்மொழி கூற்றுகள் உள. இப்படியிருக்க தேசிய மக்கள் பதிவேடு, எல்லோரையும் நாடோடியாக மாற்றிவிடும் அபாயம் உள்ளது. ஆகவே பழங்குடிகள் என்று அவர்களுக்குரிய உரிமைகளையும், சமூக அந்தஸ்த்தையும் தள்ளி வைத்தது போல், அரசாங்கமே தம் சொந்த மக்களை சொந்த நாட்டில் அகதிகளாக மாற்றும் அபாயம் இருப்பதை உணராமலில்லை. அப்படியொரு நிலை வருமாயின் இப்பொழுது நடக்கும் இட நகர்வையும், வாழிடமில்லாமல் தவிக்கும் போது, யாரும் தோழர் பகத்சிங் போன்று நூல் எழுத வரமாட்டார்கள், வரவும் முடியாது. பழங்குடியினரின் பண்பாடுகளை நிலைநிறுத்துவதே அவர்களுக்குள் இருக்கும் மொழியாளுமை. ஒரு மொழியை அழித்தால் ஓர் இனத்தின் வரலாற்றையே அழித்துவிடலாம். அதைத்தான் இன்று நம் கண்கூடாகக் காண்கிறோம். வாழும் மூதாதையர்கள் – சிறந்த நூல். நேர்த்தியான அச்சு, அழகான வண்ணப்படங்கள். மொத்ததில் இந்த நூல் மானிடவியல் ஆய்வு களத்தின் புதுப்பொலிவுடன் இன்னொரு மைல்கல்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *