மனிதமனம் ரசிக்கும் எல்லாவற்றையும் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குக் கடத்தக் கவிதைகளால் மட்டுமே சாத்தியப்படுகிறது. கவிதை என்பது வெறுமனே வார்த்தைகளால் நிரப்பி வாசிக்கத் தரப்படுவதில்லை. அது உள்ளார்ந்த உணர்வுகளைக் குழைத்து உற்சாகத்தோடு தரப்படுபவை. அதற்கு எடுத்துக்காட்டு நிர்மலா நாகராஜனின் ஆங்கிலக் கவிதை நூலான “MY CLARION VISTA”(என் தெளிவான பார்வையில்)
கவிஞர் நிர்மலாவைப் போலவே இந்நூலைப் பற்றி என் பார்வையிலிருந்து சொல்லவேண்டுமானால், தலைப்பு சற்று விநோதமானது. அதே சமயம் மேலோட்டமாக வாசித்துவிட்டுக் கடந்துவிடமுடியாதபடி எண்ணச்செறிவுகளை உள்ளடக்கியது..
தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருவர், ஆங்கிலத்தில் கவிதை எழுதுவதற்கும் அதை ஆங்கிலம் வாசிக்கத்தெரிந்த அல்லது ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கவிதையைப் புரிந்து ரசிக்கத் தெரிந்த வாசகர்களுக்குக் கடத்துவதற்கும் ஒருவிதத் துணிச்சலும் ஆக்ரோசமான உந்துதலும் வேண்டும். அதை மிக எளிதாக சாத்தியப்படுத்தியிருக்கிறார் நிர்மலா நாகராஜன்.
இயற்கையிடமிருந்துதான் எல்லாக் கவிதைகளும் பிறக்கிறது. அதனால் தான் அது இயற்கையைச் சுற்றி சுற்றியே வட்டமிடுகிறது. வெறும் வாழ்வியலை மட்டுமே கருவாகக் கொண்டு வார்த்தை ஜாலத்தால் கவிதை எழுதாமல், மனித மனங்களின் ஏக்கங்களை, மன எழுச்சியை, துயரத்தை, மகிழ்ச்சியை, சகிப்புத்தன்மையை, உள்ளார்ந்த அனுபவங்களை சில இடங்களில் முரட்டுத்தனமாகவும் சில இடங்களில் மெல்லிய வருடல்களோடும் எளிய மொழியில் சொல்லியிருப்பது சிறப்பு.
இயற்கைதான் அழகு. அழகுதான் இயற்கை. இயற்கையும் அழகும் போட்டிப்போடும் இடம்தான் வாழ்க்கை என்பதை எல்லாக் கவிதைகளிலும் அழகியலோடு சொல்ல முயன்றிருக்கிறார் கவிஞர்.
பிருந்தா ஸ்ரீநிவாஸ் அவர்களால் தொடங்கப்பட்ட “CREATIVE WRITERS GROUP” (வாட்ஸ் அப் குரூப்) ஆல் உந்தப்பட்டு 250க்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியிருக்கும் நிர்மலா நாகராஜன் ஏராளமான விருதுகளையும், அங்கீகாரத்தையும் ஒருங்கே பெற்றிருக்கிறார் என்பது கூர்ந்து பாராட்டப்படவேண்டிய ஒன்று.
தனக்கென தனித்தன்மையும், மொழிநடையும் கொண்ட இவர் சுமார் 50 கவிதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து ஒரு நூலாகத் தொகுத்தளித்திருப்பது ஆங்கிலத்தில் வாசிக்கும் கவிதை ஆர்வலர்களுக்கான விருந்து என்றே சொல்லவேண்டும்..
இயற்கை அன்னையின் அழகை வியந்து தொடங்கப்பட்ட முதல் கவிதை “பனிபடர்ந்த காலை”. முதல் கவிதை என்றாலும் முத்தான கவிதை. இறுதிக்கவிதை நன்றி நவிழலலின் இங்கிதத்தோடு நிறைவு செய்கிறது.
”இயற்கையைக் காப்போம்” என்ற கவிதை ஏக்கத்தின் வெளிப்பாடு. இயற்கை என்று சொல்லிவிட்டு நிலாவைப்பற்றி எழுதாமல் விட்டுவிடமுடியுமா? ஆகவேதான் ”என்னை நினைவுபடுத்துகிறது நிலா” என்ற கவிதை. ’மூன்றாம் பிறை எப்பொழுதும் கள்ளங்கபடமற்ற குழந்தையின் புன்னகையை நினைவூட்டுகிறது’ என்று ஊர்ந்துசெல்லும் வரிகள் அழகியலின் உச்சம்.
இயற்கையில் எல்லாமே வசீகரிக்கக்கூடியவை. மயிலின் ஆட்டம், மலரும் பூ மொட்டுக்கள், ஆரஞ்சு நிற மாலை நேர அடிவானம், தாவிக்குதிக்கும் அருவி, தாயைத் தேடி ஓடும் கன்று, பனிப்படந்த மலை உச்சி, சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சி, வண்ண வண்ணப் பூங்கொத்து, அழகிய மணப்பெண், வெட்கப்படும் சிறுமி, பல்முளைக்காத குழந்தையின் சிரிப்பு, கட்டியணைத்து கொடுக்கப்படும் தாயின் முத்தம், கண்ணாமூச்சி காட்டி விளையாடும் இளம்வயதுக் குறும்புத்தனங்கள், என எல்லாமே ஒருவிதத்தில் போதை தரக்கூடியதல்லவா! என்று சொல்லும் கவிதை ஒருநிமிடம் குழந்தைப் பருவத்தை நினைவூட்டிச் செல்கிறது.
’ஒரு பெண்ணின் இதயம்’ என்ற கவிதை, அன்புக்காகவும் மற்றவர்களின் கருணைக்காக ஒரு பெண் ஏங்குவதையும், அற்பத்தனமான விசயங்களுக்காகக் கத்திக்கூச்சலிடுவதையும், யாரும் அத்தனை எளிதாக தீர்ப்பளித்துவிடமுடியாத உன்னதத்தையும், வலியையும் கவலையையும் என்றாவது ஒருநாள் விட்டுவிலகும் என்று காத்திருக்கும் எதிர்பார்ப்பையும் ஒரு பெண் கவிஞர் என்ற பார்வையிலிருந்து அணுகியிருப்பது கவனிக்கத்தக்கது.
”ரோஜாக்களுக்கு முட்கள் தேவை” என்ற கவிதை ’ஆபத்து எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் கண்ணுக்குத் தெரியாமல் காத்திருக்கிறது. அது எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் ஒருபெண்ணை எதிர்கொண்டு துவம்சம் செய்யலாம், ஆகவே கடினமான கவசம் ஒன்று எப்போதுமே உடனிருப்பது அவசியம்’ என்பதைப் போகிற போக்கில் சொல்லிச்சென்றாலும் அதன் உள்ளார்ந்த வலியை வாசிப்பவரின் மனதில் ஆழப்பதியச் செய்யத்தவறவில்லை.
எல்லா கவிதைகளையும் தெளிந்த உரைநடை விளக்கத்தின் துணைகொண்டு வாசித்தால் அத்தனை ருசிக்காது. கவிதையைக் கவிதைக் கண்ணோட்டத்துடனே வாசிக்க வேண்டும் என்பதற்கு இந்நூல் ஒரு முன்னுதாரணம். கவிதைக்குள் உரைநடையும், உரைநடையே கவிதையாகவும் இருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்நூலின் பல கவிதைகள் எப்படி ரசிக்கத்தக்கவையோ அதே போல ஒருசில கவிதைகள் ஒதுக்கிவைத்துவிட்டு ரசிக்கத்தக்கவை. முதல் நூல் என்பதால் ஆர்வக்கோளாரில் தொகுக்கப்பட்டு அத்தனையையும் அச்சில் பார்க்கவேண்டும் என்ற நூலாசிரியரின் ஆர்வத்தை இத்தருணத்தில் கணக்கில் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. குறையில்லாமல் எதுதான் இருக்கிறது?
விமர்சனம் என்ற பெயரில் எதையேனும் சுட்டிக்காட்ட விரும்பினால் அத்தனை கவிதைகளையும் முழுமூச்சில் வாசித்தபின்னரே சொல்லமுடியும். ரசிக்கத்தக்க அத்தனை அழகையும், நீள் அகல ஆழத்தையும் ஒருங்கே கொண்டிருக்கின்றன இந்நூல்.
சுரங்கத்திலிருந்து நேரடியாகத் தோண்டிப் பெறப்பட்ட தங்கமும் வைரமும் எப்படி உடனடியாக ஈர்ப்பைத் தரத்தவறிவிட்டு ஆபரணமானவுடன் எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கிறதோ அதுபோல இந்தக்கவிதை நூல் இன்னும் கொஞ்சம் செப்பனிடப்பட்டிருந்தால் பரவலாக எல்லோருடைய கைகளிலும் எளிதாகச் சென்றடைந்திருக்கும் என்று ஆதங்கப்படவைக்கிறது.
சில கவிதைகள் உயிர்ப்பையும், ஈர்ப்பையும் தவறவிட்டதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று சற்று ஆராய்ந்தால் தினசரி வாட்ஸ் அப் குழுவில் கொடுக்கப்பட்ட தலைப்புக்குக் கால அவகாசம் இல்லாமல் அவசர அவசரமாக முழுமை பெறுவதற்கு முன்பாக எழுதி அனுப்பப்பட்டதாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.
ஒரு உயிர்ப்புள்ள கவிதை எப்போதும் இலக்கணத்தின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என்ற எந்தவித அவசியமும் தேவையில்லை என்பது எனது கணிப்பு. எதுகை மோனைக்காகவும் தரப்பட்ட தலைப்பிற்கு ஏற்பவும் குறிப்பிட்ட வரிவடிவத்திற்காகவும் நிறையவே கவிஞர் மெனக்கெட்டிருப்பது கண்கூடாகத் தெரிகிறது.
அடுத்தடுத்து எழுதப்படும் இவரது புதுக்கவிதைகள், கட்டுப்பாடுகளைத் தகர்த்தெறிந்துவிட்டு எதார்த்தத்தை எழுத்தில் கொண்டுவருவதன் மூலம் எல்லோர் மனதிலும் ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்த நிர்மலா நாகராஜன் முயற்சி எடுப்பார் என்று எதிர்பார்க்கிறேன். நன்றி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

