நூல் அறிமுகம்: P.K.Yasser Arafath, G.Arunima ‘The Hijab’ – ஆர்.விஜயகுமார்

நூல் அறிமுகம்: P.K.Yasser Arafath, G.Arunima ‘The Hijab’ – ஆர்.விஜயகுமார்
“உங்கள் முகத்தை மறைத்திருக்கும் இந்த முக்காடு அழகாக இருக்கிறது ,
அதைக் கொண்டு தேசிய கொடியை உருவாக்கி இருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும்”
என்று இசுலாமிய சமுகத்தை சேர்ந்த கவிஞர். மாஜாஸ் லக்னாவியின் சுதந்திர போராட்ட அறைகூவல் மிகவும் பிரபலமானது.

சுதந்திர போராட்டத்தில் இசுலாமியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது, பாகிஸ்தான் என்ற நாடு மத அடிப்படைவாத அடிப்படையில் பிளவுபட்ட பிறகும், மதச்சார்பற்ற இந்தியாவுடன் தங்களை பிணைத்துக்கொண்ட இசுலாமியர்கள் ஜனநாயகத்துடன் நடத்தப்படுகிறார்களா என்பதை முன்வைக்கும் மிகவும் முக்கியமான நூல் “The Hijab – Islam, Women and the Politics of Clothing”.

அனைத்து மதங்களும் பெண்களை கீழ்மைப்படுத்தும் நடவடிக்கைகளையே வரலாறு நெடுகிலும் பின்பற்றி வருகிறது. இதில் எந்த மதத்திற்கும் விதிவிலக்கு கிடையாது இந்தியாவில் பெரும்பான்மை மதம் என்ற அடாவடித்தனத்துடன் சிறுபான்மையின மதங்களை நசுக்கும் வலதுசாரிகளின் ஒரு நடவடிக்கையாகவே கடந்த ஆண்டு கர்நாடகத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணியக்கூடாது என்ற பிரச்சனை உருவாக்கப்பட்டு தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் அது கண்டனத்திற்குரிய பேசு பொருளாக மாறியது. இந்திய உச்ச நீதிமன்றமும் தடை செல்லும் என்று அறிவித்துள்ளது. ஹிஜாப்பை பெண்களின் உரிமை, மதத்தின் அடையாளம் என்பதை தாண்டி உலக அரசியல், இனவரைவியல், வலதுசாரி மேலாதிக்கம், ஆணாதிக்கம், கலாச்சாரம், பண்பாடு என்று வெவ்வேறு ஆய்வு தளங்களில் பல்வேறு நபர்களால் செறிவு மிக்க விவாதங்கள் இந்நூலில் முன்வைக்கப்படுகிறது.

இந்திய அரசியலமைப்பு எந்த ஒரு தனிநபரும், எந்த மதத்தையும், கலாச்சாரத்தை, பண்பாட்டை, பழக்கவழக்கத்தை, மொழியை பின்பற்ற உரிமை உள்ளவர்கள் என்கின்ற அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. கொரோனாவிற்குப் பிறகு ” New Normal ” என்று அதிகம் பேசப்படுகிறது. தற்போதைய இந்திய ஆட்சி பாசிச கொள்கைகளுக்கு ஆதரவாக இந்திய மக்களை ஜனநாயக வெளியிலிருந்து, மதச்சார்பற்ற மனங்களை தாண்டி வலதுசாரி திருப்பத்திற்கு நியூ நார்மலாக மாற்ற பல்வேறு பிரச்சனைகளை உருவாக்குகிறது, அது CAA, காஷ்மீர் 370 நீக்கம், அயோத்தி தீர்ப்பு, சபரிமலை பெண்கள் அனுமதி, Triple Talaq, என மிகப் பெரிய அளவிலும், சின்னஞ்சிறு அளவிலும் மிகத் தீவரமாக அரசு துணையுடன் நடைமுறைப்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற உத்தரப்பிரதேச தேர்தலில் தற்போதைய அம்மாநில முதல்வர் முன்வைத்த 80% Vs 20% என்ற கோஷம் சாதாரணமாக கடந்து போகக்கூடியதா?

ஹிஜாப்பின் அரசியல் என்று ஹிலால் அகமதுவும்,ஹிஜாப், மாட்டிறைச்சி தடை மற்றும் சகிப்புத்தன்மையை மையமாக வைத்து தன்வீர் ஃபாசிலும், கள அனுபவத்துடன் சிரின் செய்த்தி எழுதிய இறையாண்மையுள்ள உடல் கட்கரை, மண்டல் கமிஷன் அறிக்கைக்கு பிறகான இந்திய அரசியல் வெளி எவ்வாறு சிறுபான்மையினருக்கு எதிரானதாக மாற்றப்பட்டுள்ளது என்று அலசும் யாசர் அராபத்தின் முன்வைப்புகள், இந்திய உடைகள் மற்றும் ஹிஜாப் தடை குறித்த அருணிமாவின் கட்டுரை, வேற்றுமைகளை அங்கீகரித்து ஒற்றுமையை கற்றுக் கொள்வது எவ்வாறு என கர்நாடக ஹிஜாப் தடை அரசியலை முன்வைத்து நவநீத ஷர்மா மற்றும் ஹரிகிருஷ்ண பாஸ்கரன் முன்வைக்கும் உண்மைகள், சமூகப் பங்கேற்பு மற்றும் பொதுவெளிக்கு பெண்களை அழைத்து வருவதில் ஹிஜாபின் பங்கு எவ்வாறு உள்ளது என்று சிஜிலாசின் ஆய்வு, பெண்களுக்கு ஹிஜாப் அவசியமா? இல்லையா? என்று நூர் சாகிர் முன் வைக்கும் உரையாடல், கதர் ஆடை அணிவது இந்திய சுதந்திர போராட்டத்தின் ஒரு முக்கிய நடவடிக்கை, ஆனால் இந்தியாவில் பெண்களின் உடைகளை தேர்வு செய்வதற்கு கலாச்சார காவலர்களுக்கு என்ன அவசியம் என்று பேசும் ஜமீலின் கேள்விகள் என ஹிஜாப் பற்றிய அறிமுகம் அது குறித்த அரசியல் பிரதிணை ஏற்படுத்தும் கட்டுரைகள் மூன்றாவதாக வரலாறு தனிமனித அனுபவம் ஆய்வுகள் நான்காவதாக பெண்களின் உரிமைகள் குறித்து முன்வைக்கப்படும் கருத்துக்கள் இறுதியாக ஒரு சிறுகதை என்று மொத்தம் ஐந்து பகுதிகளாக வரலாற்று ஆய்வாளர் யாசர் அராபத் மற்றும் டெல்லி JNU பேராசிரியர் அருணிமா ஆகியோரால் இணைந்து தொகுக்கப்பட்டுள்ளது.

இந்திய சுதந்திர போராட்டத்தில் சிறுபான்மையின இசுலாமியர்களின் பங்கு எவ்வளவு முக்கியமான ஒன்றாக இருந்துள்ளது. குறிப்பாக முதல் விடுதலை போர் என்று சொல்லக்கூடிய 1857 புரட்சியில் மட்டும் 225 இசுலாமிய பெண்கள் கொல்லப்பட்டதாக பிரிட்டிஷ் ஆவணங்கள் கூறுகிறது. மேலும் பல்வேறு போராட்டங்களை தலைமையேற்று நடத்திய இசுலாமிய வீராங்கனைகளான அபாதி பானோ பேகம், பீபி அம்துஸ் சலாம், பேகம் அனிஸ் கித்வாய், பேகம் நிஷாதுன்னிசா மோஹானி பாஜி ஜமாலுன்னிசா, ஹஜாரா பீபி இஸ்மாயில், குல்சும் சயானி, சையத் ஃபக்ருல் ஹாஜியா ஹாசன்……. என்று பட்டியல் நீண்டுக் கொண்டே செல்லும். சுந்திர இந்தியாவை உருவாக்குவதற்கு பாடுபட்ட ஒரு சமூக மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கும் “New Normal” இந்தியாவை இன்றைய ஆட்சியாளர்கள் உருவாக்கி வருகிறார்கள். சுதந்திர காற்றை சுவாசிக்கும் ஒவ்வொருவரது மனசாட்சியையும் இந்நூல் வாசித்தப்பின் உலுக்கும்.

நூல் : The Hijab
ஆசிரியர் : P.K.Yasser Arafath, G.Arunima
விலை : ரூ.₹599
பக்கம் – 240,
வெளியீடு : Simon & Schuster பதிப்பகம்

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *