நூல் அறிமுகம்: சு.ஹரிகிருஷ்ணன் பெ.சசிக்குமாரின் ’ரயிலே ரயிலே’ – இரா.சண்முகசாமி
நூல் : ரயிலே ரயிலே… (வரலாறு – அறிவியல் – தொழில்நுட்பம்)
விலை: ரூ.170/-

ஆசிரியர்கள் : சு.ஹரிகிருஷ்ணன், முனைவர் பெ.சசிகுமார்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
ஆண்டு : பிப்ரவரி-2022
Email : [email protected]
www.thamizhbooks.com

ரயிலை நேசிக்காத குழந்தைகள் உண்டா. சிறியவர்கள் மட்டுமல்ல பெரியவர்களும் ரயிலை பார்த்தால் அவர்களின் மனம் சிறிய குழந்தைகளின் உயரத்திற்கேச் சென்று உயர பறக்கும். அந்தளவிற்கு ரயிலை நேசிக்காதவர்களே இல்லை எனலாம்.

ரயிலின் வெளித்தோற்றத்தை மட்டுமே கண்டு மகிழ்ந்த என்னைப் போன்றவர்களுக்கு அதன் முழுத் தகவலும் கிடைத்தால் மனம் மகிழ்ச்சியில் துள்ளத்தானே செய்யும்.

ஆம் இந்நூலின் ஆசிரியர்கள் இருவரும், பள்ளி ஆசிரியரும், அவருடைய பள்ளி மாணவர் ஒருவரும் அம்மாணவனின் வீரதிர செயலுக்காக விருது பெறும் நிகழ்ச்சியில் பங்கெடுக்க கோவையிலிருந்து இரண்டு நாள் ரயில் பயணத்தில் டெல்லி செல்லும் வழியில் உரையாடல் நடத்துவது போன்று மிக இயல்பாக எழுதப்பட்ட நூல் இது என்றால் மிகையல்ல.

நானெல்லாம் ஆரம்பத்தில் ரயிலில் உட்கார்ந்து செல்லும் சீட் மட்டுமே இருக்கும் என்று நீண்ட காலம் எண்ணியிருந்தேன். என்னுடைய எண்ணத்தை நொறுக்கும் விதமாக இந்தியன் வங்கி ஊழியர் தோழர் ஜெ.மனோகர் அவர்கள் ஒருமுறை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் நடத்தி வரும் ‘தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு’ நிகழ்ச்சி ஒன்றில் குழந்தைகளோடு செல்வதற்கான வாய்ப்பாக நாகர்கோயில் மாநாட்டுக்காக என்னையும் பல நண்பர்களுடன் சேர்த்து அழைத்துச் சென்றிருந்தார். “ம் சரி எவ்வளவு நேரம் உட்கார்ந்து போகப் போறோமோ” என்று நினைத்து ரயிலில் ஏறினேன். எனக்கு ஒரு சீட்டை காண்பித்தார். நானும் உட்கார்ந்துவிட்டு என்னோடு இன்னும் மூன்று நான்கு பேர் உட்கார வருவார்கள் என்று சீட்டின் ஓரமாக உட்கார்ந்திருந்தேன். ‘என்ன ஓரமா உட்கார்ந்திருக்கீங்க இந்த சீட் முழுவதும் உங்களுக்குத்தான். இரவில் நன்றாக தூங்கலாம் இது ‘படுக்கை சீட்’ என்று கூறினார். அப்படியே ஆச்சரியத்தில் “என்னது தூங்கிகிட்டு போற சீட்டா, இப்படி ஒரு வசதி ரயிலில் இருக்கிறது என்றே இவ்வளவு நாளா தெரியாமல் இருந்திருக்கேனே” என்று ஆச்சரியப்பட்டேன். அன்றிலிருந்து கடந்த இருபது ஆண்டுகளாக பயணம் எவ்வளவு சாத்தியமோ அவ்வளவு தூரமும் ரயிலையே தேர்ந்தெடுத்தேன். இப்போது வரை ரயில் பயணம் என்றால் அது எவ்வளவு தொகையா இருந்தாலும் செல்போனில் டிக்கெட்டை எடுத்து விடுவேன். அப்படித்தான் ஒருமுறை ஏல முறையில் ரயிலில் நிமிடத்திற்கு நிமிடம் டிக்கெட் விலை எகிறிடும் வகையில் இருந்த முறையில் சாதாரண நாளில் ரூ.1300 இருக்கும் டிக்கெட் அன்று இணைய ஏலத்தில் மதுரையிலிருந்து விழுப்புரத்திற்கு ஏசி கோச்சில் ரூ.5,000 கொடுத்து டிக்கெட் எடுத்தேன். ரயில் பயணம் அவ்வளவு ஈர்ப்பு என்றால் பார்த்துக்குங்களேன்.

இப்போ டிக்கெட் எடுத்தாலும் GST, கேன்சல் செய்தாலும் GST என்று அடுத்த ஏலச்சீட்டு நடத்த ஆட்சியாளர்கள் தயாராகி விட்டார்கள்.

சரி சரி நம்ம புராணத்தை அப்புறம் வச்சிக்குவோம். விஷியத்துக்கு வர்றேன்.

ரயில் எப்படி இயங்குகிறது;
தண்டவாளங்களில் கோளாறு இருந்தால் எப்படி கண்டுபிடிக்கிறார்கள்; சிக்னல்கள் ஒரு மஞ்சள் விளக்கு, இரண்டு மஞ்சள் விளக்கு, சிவப்பு இதெல்லாம் எதைக் குறிக்கிறது; தண்டவாளம் வளைவா இருக்கிற பகுதிகளில் ரயில் கவிழாமல் செல்வது எப்படி; ஒற்றை தண்டவாளத்தில் ரயில்கள் எதிரேயும், பின்னாடியும் வரும் ரயில்கள் எப்படி ஒழுங்கு குலையாமல், எதிரே வரும் ரயிலுக்காக ரயில்வே பிளாட்பாரத்தில் ஓரம் ஒதுங்கி நின்று செல்கிறது; ரயில்வே ஓட்டுநர்களுக்கு எப்படி பயிற்சி கொடுக்கிறார்; சரியான பிளாட்பாரத்தில் எப்படி ரயிலை நிறுத்துகிறார்கள்; ரயில் எஞ்சினில் பிரேக் பிடித்தால் எல்லா பெட்டிகளும் எப்படி ஒரே நேரத்தில் நிற்கிறது;
(ரயிலில் பிரேக் சிஸ்டம் என்பது எஞ்சினுக்கு எதிர்புற மின்சாரத்தை கொடுத்தால் சக்கரம் முன்னோக்கி சுற்றுவதற்குப் பதில் ரீஜெனரேட் முறையில் பின்னோக்கி சுற்றுவது போன்று அமைத்து ரயிலில் பிரேக் பிடிக்கிறார்கள் என்று இப்போதுதான் புதியதாக கற்றுக்கொண்டேன்); ரயில்வே ஊழியர்கள் எப்படி ஒருங்கிணைந்து செயல்படுகிறார்கள்; ரயிலின் வேகம் எப்படி மாறுபடுகிறது; பிரேக் பிடித்தால் எவ்வளவு தூரம் சென்று ரயில் நிற்கும் போன்ற எண்ணற்ற கேள்விகளை பள்ளி மாணவன் கேட்பது போல் அமைந்த உரையாடல் வழியில் மிகவும் அருமையாக எழுதப்பட்ட இந்நூலை அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டும்.

ஒரே ஒரு தகவல் மட்டும்
ரயிலை இயக்கும் ஓட்டுநர்கள் ரயிலை இயக்கிவிட்ட பின்பு சற்று ஓய்வு கிடைக்கும் என இதுநாள் வரை நினைத்திருந்தேன். ஆனால் இந்நூலை படித்தவுடன் மிகவும் அதிர்ந்தே போனேன். ஆமாம் ரயில் செல்லும்போது ஒரு நிமிடத்திற்கு ஒருமுறை ரயில் எஞ்சினில் இருக்கும் ரயில் இயக்கும் கணினி தொழில்நுட்பத் திறையில் அது கேட்கும் தகவலை கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். இல்லையெனில் ரயிலில் ஓட்டுநர் இல்லையென்று ரயில் சந்தேகப்பட்டு ஒலி எழுப்பிக்கொண்டே இருக்கும். அதற்கும் பதில் இல்லையெனில் தானாகவே பிரேக் போட்டு ரயில் நின்றுவிடும். எவ்வளவு பெரிய தொழில்நுட்பம் இது என்று ஆச்சரியப்பட்டேன். ஓட்டுநர்கள் (லோகோ பைலட்டுகள்) அவ்வளவு தூரம் கண்ணுறங்காமல் ரயிலை இயக்கும் ரயில் எஞ்சினில் ஓட்டுநர்களுக்கு என்று ஒரு கழிவறை இல்லையேயென்பது எவ்வளவு வேதனை. அவசரமாக வந்துவிட்டால் அடக்கிக்கொண்டு அடுத்த ரயில் நிலையம் வரை பொறுத்திருக்கனும். அதுவும் ஒருநிமிடம், ரெண்டு நிமிடத்திற்குள் ஓடிவந்துவிட வேண்டும். இவ்வளவு கொடுமையான சூழலிலும் ரயில் ஓட்டுநர்கள் பயணிகளை மிகவும் பத்திரமாக பயணிக்க உதவுகின்றனர்.
இன்னும் இன்னும் நிறைய பொக்கிஷங்களை தென்னக ரயில்வே முதன்மை லோகோ ஆய்வாளர் தோழர் சு.ஹரிகிருஷ்ணன் அவர்களும், இஸ்ரோ விஞ்ஞானி தோழர் பெ.சசிகுமார் அவர்களும் மிக எளிய மொழியில் நமக்கு வழங்கியிருக்கின்றனர்.

அத் தோழர்களுக்கும், நூலை மிகச்சிறப்பாக வெளியிட்ட பாரதி புத்தகாலயத் தோழர்களுக்கும், இந்நூலை எழுத வழிகாட்டிய தோழர் ஆயிஷா இரா.நடராசன் அவர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகளையும், நெஞ்சார்ந்த நன்றியினையும் உரித்தாக்குகிறேன்.
அனைவரும் இன்றே மேற்கண்ட முகவரியில் நூலை புக் செய்து வாசித்து உள்ளம் மகிழுங்கள் தோழர்களே!

தோழமையுடன்
இரா.சண்முகசாமி
புதுச்சேரி.
செல் : 9443534321.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.