பதினெட்டு சிறுகதைகளைக் கொண்ட இத்தொகுப்பின் சிறுகதைத் தலைப்புகளை படித்தவுடன் இதுநாள் வரை நான் அவருடன் உரையாடியபொழுது அவர் என்னிடம் பகிர்ந்து கொண்ட உண்மைச் சங்கதிகள் அப்படியே சிறுகதைகளாகி இருக்கின்றன என்பதைப் புரிந்து கொண்டேன்.
படைப்பிலக்கியத்தில் அழகியல் என்பது இன்னதுதான் என்று ஒருபோதும் வரையறுக்க முடியாது. ஒரு சிறந்த படைப்பிற்கு பொய்யழகு அதாவது கற்பனை அவசியம் என்பதும் அவசியமான விதியில்லை. நாம் தினமும் பார்க்கும் இயற்கைக் காட்சிகளை ஒரு கைதேர்ந்த புகைப்படக் கலைஞர் தனது புகைப்பட சட்டகத்திற்குள் கொண்டு வரும் போது அடடா! நாம் அன்றாடம் பார்க்கும் காட்சிகள் இவ்வளவு அழகானதா? நமது கண்ணுக்குத் தோன்றாத இந்த அழகு இப்புகைப்படக் கலைஞருக்கு மட்டும் எப்படித் தோன்றியது என்று ஆச்சரியப்பட்டுப் போகிறோமே அதே உணர்வுதான் அவரது சிறுகதைகளைப் படித்தபோது எனக்கு ஏற்பட்டது.

Image result for ரசவாதம் சிறுகதைகள்புகைப்படக் கலையில் எங்கே பொய் வருகிறது? எங்கே கற்பனை வருகிறது? நாம் காணும் அதே காட்சியை அதற்குள் பொதிந்திருக்கும் அழகியலை நமக்கு குவிமையப்படுத்திக் காட்டுவதே புகைப்படக் கலைஞரின் வேலை. அன்றாடம் நாம் சமூக நடப்புகளில் ஊடுறுவிச் செல்லும் சம்பவங்களை ஒரு புகைப்படக் கலைஞன் போல் தொகுத்ததன் மூலம் சிறுகதை இலக்கியத்திலும் இது சாத்தியம் என்பதை பிரேம்குமார் மீண்டும் நிரூபித்திருக்கிறார். சராசரி நடுத்தரவர்க்க மனிதனின் அன்றாட வாழ்க்கை எப்படியிருக்கிறது? கைக்கும் வாய்க்குமான வாழ்க்கை. இதன் விளைவாக எந்த ‘வம்புதும்புக்கும்’ போகக் கூடாது என்ற நிர்ப்பந்தம். எவ்வளவு அடி கொடுத்தாலும் முதுகை வளைத்தாவது வாங்கிக் கொள்ளும் மனநிலை. நல்லது கெட்டது என்ற விபரம் புரிந்திருந்தாலும் அது தன்னை எப்படிப் பாதிக்கும் என்ற மனஉளைச்சலில் பல நேரங்களில் கெட்டது பக்கமே நிற்க வேண்டிய நிலை அல்லது கண்ணை மூடிக்கொண்டிருப்பது.

எல்லாவற்றையும் மேம்போக்காகப் பார்த்து முடிவெடுப்பது. இதன் விளைவாக சற்று ஆழமாகப் பார்த்தால் ஒரு சிறிய சண்டையிலேயே கூட வெற்றிக்கான சாத்தியக்கூறு இருக்கக்கூடிய சிறிய விஷயங்களை முன்னெடுக்காத நிலை. மனதுக்குப் பட்டதை மனதிற்குள்ளேயே வைத்துக் கொண்டு வாக்குவாதத்தைத் தவிர்ப்பது. கடைசிவரை மனநிறைவில்லாத வாழ்க்கை வாழ்ந்து மறைவது. மொத்தத்தில் இவர்கள் பாரதியார் கூறும் தேடிச்சோறு நிதந்தின்று .. கொடுங்கூற்றுக்கு இரையென மாயும் வேடிக்கை மனிதர்கள். இவர்கள்தான் இந்த சிறுகதைத் தொகுப்பின் கதாபாத்திரங்கள். இவர்களைப் பார்த்துப் பார்த்து அலுத்துப் போன எழுத்தாளர் இவர்களில் ஒருவராகவே ஆகிப்போய்விடுகிறார். இவர்களின் மனக்குரலாகவே இக்கதைகள் திகழ்கின்றன. ஆசிரியரைப் பாதித்த ஒவ்வொரு சம்பவமும் ஒவ்வொரு கதையாகிறது.

Image result for ரசவாதம் சிறுகதைகள்

கும்பமேளாவின் போது புனித நீராடப் போகிறோம் என்று அழைத்துவந்த பெண்குழந்தைகள், மூதாட்டிகள், படிப்பறிவில்லாத பெண்கள் போன்றவர்களை கங்கைக் கரையில் விட்டுச்செல்லும் சுயநல கல்நெஞ்ச ஆண்கள். இவர்களைப் பற்றிப் பேசுகிறது திரிவேணி சங்கமம். அரசு அதிகாரத்தில் நிலவும் சிகப்புநாடாயிஸத்தால், சமரசம் செய்ய முடியாத ஒரு பள்ளித் தலைமையாசிரியர் வாழ்வாதாரத்தை இழந்து தத்தளிப்பதைக் கூறுகிறது தேசியக் கொடி குறித்த உரையாடல். ரயில்வே பிளாட்பாம் திருடர்களுக்கும் ரயில்வே காவல்துறையினருக்கும் இடையிலான உறவை கட்டவிழ்ப்பது விக்டோரியா டெர்மினஸ். ஆளும் கட்சிக்கும், செல்வாக்கு படைத்தவர்களுக்கும் குல்லாப்போடும் அதிகாரவர்க்கத்தின் அசிங்கமான குணாம்சத்தை அம்பலப்படுத்துவது நல்லெண்ணமும் விளையாட்டும் முகலாயப் பரம்பரை மகாராணி நூர்ஜஹான் வரலாற்றைப் படித்த தமிழாசிரியர் தன்னுடைய பெண்ணுக்கு நூர்ஜஹான் என்று பெயர் சூட்டியதால் குடும்பத்திலும் சமூகத்திலும் அவர் பட்ட அவஸ்தையை கூறுவது நூர்ஜஹான்.

தாறுமாறான வேகத்தில் ஓடிய வேனால் சாகடிக்கப்பட்ட காய்கறிக்கூடையுடன் சைக்கிளில் சென்ற சிறுவியாபாரியை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற மனிதாபிமானி படும் அவஸ்தையை விளக்குவது நாற்சந்தியில் ஒரு சம்பவம். வரலாற்று நாயகன் ஒருவரின் காதல்கதை எழுத ஆசைப்பட்ட பெரும் எழுத்தாளர் ஒருவர் அதற்கான குறிப்புகளைத் தேடி ரோஜா முத்தையா நூலகம் வந்தபோது, காதல் என்பது என்ன என்பதற்கான உடற்கூறியல் பூர்வ விளக்கத்தை அங்கு சந்தித்த ஒரு படிப்பாளியிடம் கேட்டு தன் முடிவை மாற்றிக் கொண்ட கதை ஒரு எழுத்தாளரின் காதல் கதை. பூட்டி வைத்த வீடுகளை ஆக்கிரமித்து பணம் பறிக்கும் அரசியல் கட்சிகள் பற்றிய கதை கொல்கத்தா. சில குறிப்புகள் வீடுகட்டி விற்பதாகக் கூறி பித்தலாட்டம், மோசடி செய்து சம்பாதிக்கும் போலி நிறுவனம் ஒன்றின் Modus Operandiஐ அம்பலப்படுத்துவது பிமானி பில்டர்ஸ். எந்தப் பொருளையும் தங்கமாக மாற்றும் ரசவாத வித்தையைக் கற்றுக் கொள்ள சாமியாரிடம் தஞ்சம் புகுந்த ஒரு கல்லூரிப் பேராசிரியரின் குடும்பம் நாசமாய்ப் போன கதை ரசவாதம்.

தூங்குமூஞ்சி நகர் ஒன்றில் ஏழைகளின் மலிவான பொழுதுபோக்கிற்காக அரசால் கட்டப்பட்ட மலிவு விலைத் தியேட்டரை இடிக்க அரசு நினைத்தபோது, இடித்தால் ஏழைகள் இரவு நேரங்களில் வசதிபடைத்தவர்கள் வீடுவாசல்களுக்கருகில் தங்கும் இடைஞ்சலான நிலையை கருத்தில் கொண்டு வசதி படைத்தவர்கள் போராடித் தடுத்த கதை மலிவு விலை தியேட்டர். கட்டப்போகும் வீட்டின் அடிநிலத்தின் உரிமையாளர் இவர்தான் என்று அரசு பதிவேட்டில் குறிக்கப்பட்டிருக்கும் பட்டா இருந்தால்தான் வீட்டுக்கடன் கொடுக்கப்படும் என்ற வங்கிவிதியை மீறி உதவிசெய்வதாக கூறி கடனைக் கொடுத்துவிட்டு பட்டா வாங்காவிட்டால் இஎம்ஐ கூடும் என்று மிரட்டி அதற்கான தரகரிடம் கடனாளியை அனுப்பும் வங்கி அதிகாரி, அந்த தரகரின் வாழ்க்கைத்தரம் அவருடைய இலக்கிய ஆர்வம் ஆகியவற்றைப் பற்றிப் பேசும் கதை பட்டாவும் சிரிப்பும். எல்லா அலுவலகங்களிலும் வியாபித்திருக்கும் சவடால் பேர்வழிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர் அவிழ்த்துவிடும் கதைகள், அதைக் கேட்கும் பட்டாளம் என்று வண்டி-வாகனம்-சாகசம் சொல்கிறது.

சைக்கிள் போய் இருசக்கர வாகனம் பரவலாக நடுத்தர மக்களிடம் புழக்கத்திற்கு வந்த காலத்தில் எழுதப்பட்ட கதை இது. இருசக்கரவாகனம் வைத்திருப்போர் லிஃப்ட் கொடுத்தாலும் பிரச்சனை லிஃப்ட் கொடுக்காவிட்டாலும் பிரச்சனை, யார் வண்டியிலாவது லிஃப்ட் கேட்டு ஏறினாலும் பிரச்சனை, ஏறாவிட்டாலும் பிரச்சனை என்று நான்கு சாத்தியக் கூறுகளிலும் வாய் பிளந்து கதைகேட்பவர்களை அசத்துகிறார் அந்த சவடால் பேர்வழி. இறுதியில் அவரின் கதையும் அவர் விட்ட கதைபோல் ஆகிவிடுகிறது. பகட்டான மால்களின் வருகையில் நடக்கும் சம்பவங்கள் நமது எழுத்தாளரின் கண்ணில்படாமல் போய்விடுமா என்ன? ஷாப்பிங்மாலை வைத்து எழுதப்பட்ட கதை விண்ட்சர் மால். இக்கதையில் வரும் இளைஞன் மாலின் ஏடிஎம்முக்குச் சென்று அங்கு ஒருதீவிரவாதிக்கு ஃபோனை கடனாகக் கொடுத்து போலீஸிடம் மாட்டிக் கொண்டு தனது சமார்த்தியத்தால் தப்புவதை இக்கதை கூறுகிறது.

Image result for ரசவாதம் சிறுகதைகள்

கஞ்சாம் பெட்டி சித்தி-சித்தப்பா இவர்களின் குடும்பக்கதையை கூறுகிற கதை கான்சா மேட்டுத்தெரு. சித்தி சித்தப்பா ஒரு உருவகம்தான். இவர்களைப் போன்றவர்கள் சமூகத்தில் இருக்கிறார்கள். எல்லாவற்றிலும் ஒரு மனிதம் தவிர்த்த ஒரு பிரபுத்துவ மனோபாவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள். அத்தோடு சேர்ந்து எல்லாவற்றையும் கணக்கு வழக்குக்குள் அடக்க நினைப்பவர்கள். கல்யாண வைபவங்களில் நிகழ்த்தப்படும் பாட்டுக் கச்சேரி போல் ஒரு வித்தியாசமான பொழுதுபோக்கு நிகழ்வைக் கூறும் கதை சோடஅவதானி. ஒரே நேரத்தில் பதினாறுவகை நிகழ்வுகளுக்கு மேடையில் அமர்ந்திருக்கும் கவனகர் ஈடுகொடுப்பார். ஒரு காலத்தில் தஞ்சை மாவட்டத்தில் இக்கலை செழித்திருந்தது. இன்று கிடையாது. கதையில்வரும் கவனகர் அதன் கடைசித் தலைமுறையைச் சார்ந்தவர் போல் தெரிகிறது.

அவருடைய கலையின் மகத்துவத்தைப் பற்றிய அங்கீகாரமும் கிடைக்காமல் வாழ்வதற்கான வருமானமும் இன்று அவர் தள்ளுவண்டியில் ஐஸ்கிரீம் விற்பவராகிவிட்டார். சமூகத்தில் நிகழும் இயக்கவியல் மாற்றத்தை போகிற போக்கில் கூறுகிற கதையிது. மத்திய அரசின் ஜனநாயக விரோதக் கொள்கைகளுக்கு எதிராக அரசின் விருதுபெற்றவர்களில் ஒரு சிலர் பெற்ற விருதுகளை திருப்பியனுப்புவதை கிண்டலடிக்கும் கதை மறுதலிக்க ஒரு விருதில்லையே. இதில் வரும் எழுத்தாளர் எந்தவொரு விருதையும் பெறவில்லை எனினும் மறுதலிப்பவர்கள் பட்டியலில் தானும் சேரவேண்டும் என்று பழைய குப்பைகளைத் தேடி அவர் பள்ளி மாணவனாக இருந்தபொழுது கலந்துகொண்ட ஒரு இலக்கிய நிகழ்வில் கலந்துகொண்டமைக்கான சான்றிதழ் கிடைத்தது அதைத் திருப்பித் தருகிறார் அந்த எழுத்தாளர்.

Image result for Writers

புதுமைப்பித்தனில் துவங்கி சமகால எழுத்தாளராகிய இந்திரா பார்த்தசாரதி, சமுத்திரம் ஆகியவர்களின் பாரம்பர்யத்தில் பயணிக்கும் எள்ளல் எழுத்து நடை. சமூகம் ஏற்படுத்தும் தாக்கத்தை நகைச்சுவை உணர்வோடு எழுதுவது என்பது, விஷயங்ளை நகைச்சுவை உணர்வோடு பார்ப்பவர்களால்தான் முடியும். யதார்த்தவாதம் தூக்கலாக இருக்கும் கதைகள். ஒவ்வொரு கதையையும் படித்தவுடன் இது போன்று நாமும் சந்தித்திருக்கிறோம் என்று வாசகன் முடிவெடுத்துவிடுவான். உரைநடை இலக்கியமாக காட்சி தரும் சம்பவங்களின் தொகுப்பு என்ற படிக்கட்டுகளைத் தாண்டி படைப்பிலக்கியம் என்ற படிக்கட்டில் ஏறிவிட்ட கதைகள் இவை என்று உற்று நோக்கினால் புரியும்.

தீர்வுகளை பட்டவர்த்தனமாக கூறவேண்டிய அவசியமில்லை என்று நவீன படைப்பிலக்கியத்தின் போக்காக அங்கீகரிக்கப்பட்ட காலமிது. உதாரணமாக திரிவேணி சங்கமம் கதையைப் படித்தபிறகு வாசகனுக்கு ஒரு கோபம் எழும் என்று நம்புகிறேன். பணத்திற்காக வாழும் உலகம் என்று இக்கதை பட்டவர்த்தனமாக படம் பிடித்துக் காட்டிவிட்டது. அதன் பின்னால் ஒளிந்திருக்கும் புனித நீராடல், இறை நம்பிக்கை இன்னபிற என்பதெல்லாம் போலி என்று உணர வைக்கும்.

சமூக மேல்மட்டத்தில் நிகழும் சம்பவங்கள் படைப்பாளி மீது ஏற்பட்ட தாக்கத்தின் விளைவே இக்கதைகள். வளரும் படைப்பாளிகள் அத்தாக்கத்தை உள்வாங்கி, மேல்மட்ட சம்பவங்களை இயக்கும் அடியாழ விஷயங்களுக்குள் துளையிட்டுச் செல்லும் நிலைக்கு முன்னேறுவான். இக்கதைகளை வைத்து எழுத்தாளர் முதல்கட்டத்திலிருந்து இரண்டாம் கட்டத்திற்குள் அடியெடுத்து வைத்துவிட்டவர் என்று என்னால் கூறமுடியும். திரிவேணி சங்கமம் இரண்டாம் கட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கதை மறுதலிக்க விருதில்லையே முதல்கட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கதை. பூட்டப்படும் வீடுகளுக்கு வம்படியாக தாங்கள் காவல் காக்கும் உரிமையை பெற்றதாக கூறிக்கொண்டு வசூலிக்கும் ஒரு Extra-Judicial system கொல்கத்தாவில் நிலை பெற்று நீண்ட நாட்களாகிவிட்டன.

இதைப்பற்றிய கதை கொல்கத்தா சில குறிப்புகள். நவீன அரசியலமைப்பு முறைக்கு இது முற்றிலும் ஒத்து வராதது. இது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டியதே. இதுபோல் தமிழகத்தில் மதுரையில் நானூறாண்டுகள் நிலவியதை காவல் கோட்டம் நாவலை படித்தவர்கள் புரிந்து கொள்வார்கள். நவீன அரசமைப்பு முறைக்குள் கொண்டுவர அரைநூற்றாண்டு முயற்சிக்குப் பின் பிரிட்டிஷ்காரனால் இது ஒழிக்கப்பட்டது. இதேபோல் கேரளாவில் நோக்குக் கூலி. அரை நூற்றாண்டுக்குப் பிறகு இது சட்டபூர்வமாக மே 1, 2018 ல்தான் ஒழிக்கப்பட்டது. நவீனத்துவத்தை நோக்கி சமூகம் நகர்ந்தே தீரும். அதற்கான கருத்தியல் மக்கள் மனதிலிருந்து உதித்தெழும். அவற்றைத் தூண்டும் கதையாக இதைப் பார்க்கிறேன்.

Image result for Writersஅரசின் கொள்கைகளையும் அடக்குமுறைகளையும் விமர்சித்து எழுதுபவர்களை அரசு இயந்திரம் நசுக்கும் சம்பவம் நடைபெற்ற பொழுது அரசால் கொடுக்கப்பட்ட விருதுகளை பல எழுத்தாளர்கள் தன்னெழுச்சியாக திருப்பிக் கொடுத்தார்கள். விருதுகள் என்றைக்குமே சர்ச்சைக்குரியவைதான். பல விருதுகள் சிபாரிசு மூலம் பெறப்பட்டவை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதேபோல் கொண்டாடப்பட வேண்டிய படைப்பை படைத்தவர்களுக்கு விருது கொடுக்காமல், விருது வழங்கும் நிறுவனங்கள் தங்கள் தகுதியை நியாயப்படுத்திக் கொள்ள முடியாது.

விருது திருப்பிக் கொடுக்கும் இயக்கத்தில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானவர்கள் கொண்டாடப்பட வேண்டிய எழுத்தாளர்கள். எல்லாரையும் ஒரு அறைக்குள் அடைப்பது என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. இதற்கு எதிர்வினையாக அரசுதரப்பிலிருந்து விருதை திருப்பிக் கொடுத்தவர்களை கொச்சைப்படுத்தி வசை பாடியதும் அத்துடன் அவர்கள் மீது பொய்வழக்குகள் போடப்பட்டதும் அவர்களை கேலி செய்ததும் நடைபெற்று வந்தது. நிறுவன எதிர்ப்பு என்று எழுதப் போய் மறுதலிக்க விருதில்லையே கதையானது நிறுவன ஆதரவு என்ற நிலைக்குள் வந்துவிட்டது.

எழுத்தாளர் சற்று அடியாழத்திற்குள் சென்றிருந்தால் இப்பிழை தவிர்க்கப்பட்டிருக்கும். நடப்புகால விஷயங்கள் பலவற்றை உதறித் தள்ளிவிட்டு நவீனத்துவத்தை நோக்கி நகரும் சமூகத்தில் நடப்புகால விஷயங்களால் இருப்பை நிலைநாட்டிக்கொள்பவர்கள் அனுபவிக்கும் வலியை சோடஅவதானியில் பார்க்க முடியும். எனினும் இக்கதையானது நடப்புகால விஷயங்களுக்குள் திரும்பிச் செல்ல வேண்டும் என்று கூறவில்லை. இக்கதைத் தொகுப்பிற்கு தலைப்பு ரசவாதம் என்றிருப்பதைவிட திரிவேணி சங்கமம் என்றிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். கதைகள் சிறப்பாக உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *