சினிமாவில் பிறந்த சிவப்புக் கொடி எஸ்.பி. ஜனநாதன்
சினிமாவில் பறந்த சிவப்புக் கொடி என்ற பெயரில் மறைந்த இயக்குனர் எஸ்.பி. ஜனநாதனுக்கான நினைவு மலர் ஒன்றை GKV மகாராஜா முரளீதரனின் தொகுப்பில்
பாரதி புத்தகாலயத்தினர் வெளியிட்டிருக்கின்றனர். ஜனநாதனின் முதற்திரைப்படமான இயற்கையின் பாடல்களும் காதல் கொண்டேன் படத்தின் பாடல்களும் ஒரே இசைத்தட்டாக வெளிவந்திருந்தன. எனக்கு மிகவும் பிடித்த இசைத்தட்டுகளில் ஒன்றாக அதைச் சொல்வேன். இயற்கையில் எல்லாரும் பெரிதும் சொல்லுகின்ற, மிகப்பிரபலமான பாடல் “காதல் வந்தால் சொல்லி அனுப்பு…”; எனக்கும் மிகப் பிடித்த பாடல்களில் ஒன்றாக இன்றும் இருக்கின்றது. அதேநேரம் அதேயளவு பிடித்த பாடலாக “பழைய குரல் கேட்கிறதே யாரோ யாரோ” பாடலையும் சொல்வேன். அந்தத் திரைப்படத்தின் கதை மாந்தர்களும் கதை நடக்கும் பின்னணியும் மிகவும் பிடித்திருந்தன. அதுபோலவே பிரதான பாத்திரங்களின் உருவாக்கத்திலும் ஒரு இயல்புத்தன்மை இருந்தது.இவற்றுக்கு மேலாக, காதலிக்காகக் காத்திருக்கின்ற ஆண் என்கிற தமிழ் சினிமாவின் வழமையாகிக் கொண்டிருந்த ஒருபோக்கில் இருந்து மாறுபட்டு, காதலனுக்காக க் காத்திருக்கின்ற பெண்ணையும், இரண்டு ஆண்களால் காதலிக்கப்படும், அவர்கள் இருவருமே நல்லவர்களாகவும் அவளுக்குப் பிடித்தவர்களாகவும் இருக்கின்றபோது தேர்வு செய்பவளாகவும் இருக்கின்ற பெண்ணையும் சித்திகரித்திருந்தது இயற்கை. இது குறித்து நுட்பமாகவும், பெண்ணிய வாசிப்புடனும் புரிந்துகொள்பவனாக நான்
இத்திரைப்படத்தைப் பார்க்கும்போது இருக்கவில்லை. ஆயினும், அன்றைய சமகால தமிழ்த்திரைப்படங்களில் இருந்து தெரிந்த இந்தவேறுபட்ட தன்மை என்னை ஈர்த்தது.
இயற்கை போன்றதோரு பட த்தை எதிர்பார்த்துக்கொண்டுதான் ஜனநாதனின் இரண்டாவது திரைப்படமான ஈ திரைப்படத்தையும் பார்க்கச்சென்றேன். ஈ, இயற்கை போன்ற படமில்லை. ஆனால் ஈ எனக்கு இன்றளவும் மிக மிகப் பிடித்தமான படமாக இருக்கின்றது. அன்றைய சூழலில் கனடாவில் இளைஞர்களின் குழு வன்முறைகள் மிக அதிகமாக இருந்தன. இப்படியான குழு வன்முறைகளின் நேரடியான அனுபவங்கள் பல எனக்கும் இருந்தன.கூட்டத்தில் ஒருவனாக பங்கேற்றும் இருக்கின்றேன். அதேநேரம் இந்த இளைஞர்களின் துணிச்சல் தன்மையும், நேர்மையும் அவர்கள் தருகின்ற சகோதரத்துவமான பாதுகாப்புணர்வும் எனக்கு அவர்கள் மீது பெருமதிப்பை ஏற்படுத்தியிருந்தன. கோபம் என்பது கவனமாகக் கையாளப்பட்டால் மிகவும் வினைத்திறன் வாய்ந்ததாக அமையும் என்பது என் நம்பிக்கை. அவர்களது கோபத்தையும் துணிச்சலையும் சரியான முறையில் தடமாற்றினால் அது சமூகக் கோபம் என்கிற ஆக்கபூர்வமான செயலாக அமையும் என்று நான் நம்பினேன். ஈ பட த்தின் இறுதியில் பசுபதிக்கும் ஜீவாவிற்கும் இடையிலான உரையாடல் அப்படியான ஒன்றாகவே அமைந்தது அல்லது அப்படி நிகழ்ந்ததாக கருதிக்கொள்ளக்கூடியதாக அமைந்தது. ஈ திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்த தாக அமைய அதுவும் ஒரு காரணமானது. இயற்கை பட த்தின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றும் கூட அந்தவிதமான பாடல்களில் இருந்துவேறுபட்ட தும் அன்றைய காலத்திற்குப் புதியதுமான பாணியில் ஆனால் ஈ திரைப்பட த்துக்கு பொருத்தமான பாடல்களைச் சேர்த்திருந்தார். அதிலும் காதல் என்பது போதிமரம், வாராது போல் ஆகிய பாடல்கள் அருமையாக வந்திருந்தன. அதற்குப் பின்னர் எனக்கு மிகப் பிடித்த திரைப்பட இயக்குனர்களில் ஒருவராக ஜனநாதன் மாறிப்போனார். அவரது திரைப்படங்களையும் பேட்டிகளையும் பின்னர் காணொலிகளையும் தொடர்ந்தும் ஆர்வத்துடனும் பார்ப்பவனாக இன்றளவும் இருக்கின்றேன். கலைகள் சமூக மாற்றத்துக்கான கருவிகளென்பதை திரும்பத் திரும்ப வலியுறுத்திய ஜனநாதனின் பேராண்மை, புறம்போக்கு, லாபம் ஆகிய திரைப்படங்களில் நேரடியாக அரசியல் பேசுகின்ற காட்சிகள் அமைந்திருந்தன. அவற்றை அவர் விரும்பியே செய்திருந்தார். அவரது தெரிவு அதுவே என்பதை அவர் திரும்பத் திரும்ப நேர்காணல்களில் சொல்லிவந்தார்.
சினிமாவில் பறந்த சிவப்புக் கொடி தொகுப்பினை வாசிக்கின்றபோது ஜனநாதன் மீதான் ஈர்ப்பும் மரியாதையும் இன்னமும் அதிகரித்தே செல்கின்றது. அரசியல் தலைவர்கள், திரைப்படத்துறையினர், மாணவர் அமைப்பினைச் சேர்ந்தவர்கள், களச் செயற்பாட்டாளர்கள் எழுத்தாளர்கள் என்று பலதரப்பட்டவர்கள் ஜனநாதனுடனான தம் நினைவுகளைப் பகிர்ந்துள்ளனர். 300க்கு மேற்பட்ட பக்கங்களில் நிறைவானதோர் தொகுப்பாக இது அமைந்துள்ளது. உள்ளடக்கம் அத்தனை நேர்த்தியாக இருந்தபோதும் வடிவமைப்பிலும் தொகுப்பிலும் சில கவலையீனங்கள் இடம்பெற்றுவிட்டன என்பதைக் குறிப்பிடவேண்டி இருக்கின்றது. நடிகர் ஷாமிடம் ஜனநாதன் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விகள் மட்டுமே தொகுப்பில் இடம்பெற்றுள்ளன, அவற்றுக்கான பதில்களைக் காணோம், அதுபோல ஒளிப்பதிவாளர் ஏகாம்பரத்தின் குறிப்பில் பல சொற்கள் தங்கிலிஷான (ஆங்கில எழுத்துகளைக் கொண்டு எழுதிய தமிழ்ச் சொற்களாக) அமைந்துள்ளன. இந்த விடயங்களில் பதிப்பாளர்கள் கவனமாக இருந்திருக்கவேண்டும். பாலாஜி சக்திவேலின் பெயரில் வெளிவந்த குறிப்பில் அவர்
அந்தக் குறிப்பினை எழுதியவர் தன் நண்பரான கே. செல்வராஜ் என்றும் செல்வராஜின் பெயரிலேயே குறிப்பினை வெளியிடுமாறும் கேட்டுள்ளார். மக்களை அரசியல் மயப்படுத்துவதற்கான கருவியாக திரைப்படங்களையும், தன் காணொலிகளையும் தொடர்ச்சியாகப் பயன்படுத்திவந்தவர் ஜனநாதன். ஈழ விடுதலை, தூக்குத் தண்டணை ஒழிப்பு, அணு உலைக்கு எதிரான போராட்டங்கள், ஏகாதிபத்திய எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, பூர்வகுடிகளின் வளங்கள் கையாடலுக்கு எதிரான போராட்டங்கள் உள்ளிட்ட சமகாலப்பிரச்சனைகள் குறித்து பிரக்ஞைபூர்வமாக தன் திரைப்படங்களிலும் காணொலிகளிலும் குறிப்பிட்டதோடு நிறுத்திக்கொள்ளாமல் அவை குறித்த மக்கள் போராட்டங்களில் பங்கெடுப்பதையும் ஜனநாதன் வழக்கமாக வைத்திருந்தார் என்பதையும் அறியமுடிகின்றது. இந்தத் தொகுப்பு அவருக்குச் செலுத்தும் அஞ்சலியாக அமைவதுடன் கலைஞர்களுக்கு இருக்கவேண்டிய பொறுப்புணர்வினை வலியுறுத்துவதாகவும் அமைகின்றது.
அருண்மொழி வர்மன்
கனடா
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.