நூல்: முகத்திரை விலக்கப்பட்ட சாவர்க்கர்
ஆசிரியர்: சம்சுல் இஸ்லாம்
தமிழில்: ச.வீரமணி, தஞ்சை ரமேஷ்

வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: ரூ. 200
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

“வீர் (வீரம்) சாவர்க்கர்” என்னும் விநாயக் தாமோதர் சாவர்க்கர், தற்போது தேசத் தந்தை, மோகன்தாஸ் கரம் சந்த் காந்திக்கு இணையாக தூக்கிநிறுத்தப்பட்டு, இந்திய நாடாளுமன்றத்தின் மத்தியக் கூடத்தில் அவருடைய படத்திற்கு எதிரே வைக்கப்பட்டிருக்கிறார். காந்தியைக் கொலை செய்ததில் சாவர்க்கருக்கு இருந்த பங்கு குறித்து, அன்றைய தினம் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் கூறியவற்றை அறிந்துகொள்வது இப்போது பொருத்தமாக இருக்கும். அவர், 1948 பிப்ரவரி 27 அன்று நேருவுக்கு எழுதிய ஒரு கடிதத்தில், “இந்து மகா சபாவின் சாவர்க்கரின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கிய வெறித்தனமான பிரிவு, சதித்திட்டம் தீட்டி, இக்கொடுஞ்செயல் நடைபெறுவதைப் பார்த்தது.”

சாவர்க்கரின் உருவப்படம் காந்தியின் படத்திற்கு அருகே வைக்கப்பட்டிருப்பது இந்துத்துவாவை இன்றையதினம் பின்பற்றுவோரால் சாவர்க்கரைத் துதிபாடும் வெறித்தனமான கூட்டத்தாரின் பிரச்சாரத்தின் விளைவேயாகும். சாவர்க்கரைப் போற்றிப் புகழ்தல் சமீபத்திய நடவடிக்கைகளேயாகும். 1990களின் பிற்பகுதியில் அடல் பிகாரி வாஜ்பாய், எல்.கே. அத்வானி ஆகிய ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள்/தொண்டர்கள் தலைமையின்கீழ் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம், ஆட்சிக்கு வந்தபின்னரே இவ்வாறு சாவர்க்கரைப் போற்றிப் புகழ்வது தொடங்கப்பட்டது. இந்திய விடுதலைப் போராட்டத்தின் சின்னமாக இந்துத்துவா சித்தாந்தத்தை முன்மொழிந்தவரை மாற்றியிருப்பது இந்து தேசத்தின் கொள்கையாக ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை சட்டபூர்வமாகக்குவதற்கான நடைமுறையின் ஒரு பகுதியேயாகும்.

சாவர்க்கர் 1966இல் இறந்தபோது பெரிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படவில்லை என்பது பலருக்குத் தெரியாது. 83 வயதாகி முதுமையில் அவர் இறந்த சமயத்தில் மிகக் குறைந்த அளவிற்குத்தான் அவர் அறியப்பட்டிருந்தார். அவருடைய வாழ்நாள் காலத்தில் மகாத்மாவின் உயிரைப் பறித்த சதித் திட்டத்தில் அவரும் ஓர் அங்கமாக இருந்தார் என்கிற வடுவை அவரால் அழிக்கவே முடியவில்லை. வீர் சங்வி என்னும் குறிப்பிடத்தக்க கட்டுரையாளர், 1990வரையிலும் அநேகமாக எவரும் அவரை அறிந்திருக்கவில்லை என்று சரியாகவே குறிப்பிட்டார். 1990களில்தான் “சாவர்க்கருக்கு மறுவாழ்வு அளிப்போம்” என்னும் இயக்கம் (‘Rehabilitate Savarkar’ movement), பாரதீய ஜனதா கட்சியால் அதிகாரபூர்வமாக எடுத்துக்கொள்ளப்பட்டபின்புதான், இந்துத்துவா என்னும் சொற்றொடரை உருவாக்கிய நபர் என நமக்கு சொல்லப்பட்ட நபர், இந்தியாவின் விடுதலைக்காக போராடிய நபர்களில் வீரமுதல்வனாக இருந்தார் என்றும் கூறப்பட்டார். அதன்பின்புதான் சாவர்க்கர் மாபெரும் விடுதலைப் போராட்ட வீரர்களுடனான பட்டியலில் சேர்க்கப்பட்டார்.

பின்னர் காங்கிரஸ் தலைமையில் ஒரு பிரிவும்கூட, “சாவர்க்கருக்கு மறுவாழ்வு அளிப்போம் இயக்கத்தில்” தன்னையும் சேர்த்துக்கொண்டது. 2004 ஆகஸ் 4 அன்று புதுதில்லியில் மன்மோகன் சிங் பிரதமரானவுடன் நடத்திய முதல் பத்திரிகையாளர் கூட்டத்தின்போது, விநாயக் தாமோதர் சாவர்க்கரை, “தேச பக்தர்” என்றும் “விடுதலைப் போராட்ட வீரர்” என்றும் வர்ணித்தார். சாவர்க்கரின் “தேச பக்தர்” என்பதற்கான ஆதாரச் சான்றுகள் குறித்து பல்வேறு கேள்விகளை காங்கிர1 கட்சியின் மற்றொரு தலைவரும், பெட்ரோலியத் துறை அமைச்சராகவுமிருந்த மணி சங்கர் ஐயர் எழுப்பியபோது, பிரதமர் கூறியதாவது: “சாவர்க்கர் குறித்த சர்ச்சையைப் பொறுத்தவரை, இது ஐயரின் தனிப்பட்ட கருத்து. அது அரசாங்கத்தின் கருத்து அல்ல. அது ஒரு தேவையற்ற சர்ச்சை.”

சாவர்க்கருக்கு ஆதரவாகத் தன்னால் முடிந்த அளவிற்கு மன்மோகன் சிங் முயற்சித்திருக்கிறார். “வரலாறு பல வழிகளில் நடந்துள்ள நிகழ்வுகளை நமக்கு வியாக்கியானம் செய்திருந்தபோதிலும், இறந்தவரின் மோசமான விஷயங்கள் குறித்துப் பேசுவதால் எவ்விதமான நன்மையையும் பெற்றிட முடியும் என்று நான் நினைக்கவில்லை,” என்று அவர் கூறியுள்ளார். காங்கிரஸ் தரப்பிலிருந்து சாவர்க்கருக்கு ஆதரவாக ஒரு பிரதமர் இவ்வாறு முதன்முறையாக முன்வந்திருக்கிறார். இதேபோன்றே முன்னதாக மன்மோகன் சிங் அமைச்சரவையில், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக இருந்த குலாம் நபி ஆசாத், ஐயரின் விமர்சனங்களை வெளிப்படையாக மறுதலித்து, சாவர்க்கர் குறித்து அவர் கூறிய கருத்துக்கள் அவருடைய தனிப்பட்ட கருத்துக்கள் என்றும், அரசாங்கம் “அவருடன் ஒத்துப்போகவில்லை” என்றும் அறிவித்தார்.

சாவர்க்கர்வாதிகள் கூட்டத்துடன் இவ்வாறு காங்கிரசும் இணைந்தகொண்டிருப்பத துரதிர்ஷ்டவசமாகும். இன்றையதினம் உள்ள காங்கிரஸ் தலைமை, காந்தி, நேரு, வல்லபாய் பட்டேல் ஆகியோரின் தலைமையின்கீழ் செயல்பட்ட காங்கிரஸ் காரியக் கமிட்டியானது, 1934 ஜூனில் தன்னுடைய கட்சி உறுப்பினர்கள் முஸ்லீம் லீக்குடனோ, இந்து மகா சபாவுடனோ மற்றும் ஆர்எஸ்எஸ்-உடனோ எவ்விதமான தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனத் தீர்மானம் நிறைவேற்றியிருந்ததை மறந்துவிட்டார்கள். காங்கிரஸ் கட்சி அன்று பிறப்பித்த அந்தக்கட்டளை இன்றைக்கும் செல்லத்தக்கதாகும். ஏனெனில் அந்தத்தீர்மானம் இதுவரையிலும் ரத்து செய்யப்படவில்லை.

ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அரசியல் அங்கமாகத் திகழும் பாரதீய ஜனதா கட்சி 2014இல் தேசிய அளவில் ஆட்சிக்கு வந்தபின், சாவர்க்கரைப் போற்றிப் புகழ்வது மேலும் உத்வேகம் பெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, “வீர சாவர்க்கர் இறப்பதற்கு அஞ்சாத ஒரு வீர புருஷர்” என்று வீர சாவர்க்கரைப் போற்றிப் புகழ்ந்து பேசும் அதே சமயத்தில், தான் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஓர் உறுப்பினன் என்று வெளிப்படையாகவோ சொல்லிக்கொள்வதிலும் பெருமை கொண்டார்.1 மோடி, சாவர்க்கர்தான் தன்னைப் பக்குவப்படுத்தி, செயல்பட வைத்த வழிகாட்டி என்று கூறும் அளவிற்குச் சென்றார்.2 இந்துத்துவாவின் சின்னமாக விளங்கும் சாவர்க்கரின் 131ஆவது பிறந்த தின விழா நடைபெற்ற சமயத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் அவருடைய அமைச்சரவை சகாக்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தின் மத்தியக் கூடத்தில் நிறுவப்பட்டிருக்கும் சாவர்க்கரின் உருவப்படத்தின் முன் நின்று வணக்கம் செலுத்திக் கொண்டனர். சாவர்க்கரின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்களில் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு அடுத்ததாக மோடி இரண்டாவது பிரதமராக மாறினார். விஷயம் இத்துடன் முடிந்துவிடவில்லை. பாஜக-வின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான சாக்சி மகராஜ் என்பவர், மகாத்மா காந்தியைக் கொன்றதற்காக, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நாதுராம் கோட்சேயைப் புகழ்ந்து, அவரை காந்திக்கு இணையாக முன்னிறுத்தி அவர், “நான் நாதுராம் கோட்சேயையும் ஒரு தேசியவாதி என நம்புகிறேன், மகாத்மா காந்தியும் நாட்டிற்காக ஏராளமாகச் செய்துள்ளார். கோட்சே ஒரு பாதிக்கப்பட்ட நபராக இருந்தார். அவர் தவறாக ஏதேனும் செய்திருக்கலாம். ஆனால் அவர் ஒரு தேச விரோதி அல்ல. அவர் ஒரு தேசபக்தர்,” என்று கூறியிருக்கிறார்.

சுதந்திரம் பெற்று ஒரு ஜனநாயக மதச்சார்பற்ற இந்தியா உருவாகி சுமார் நூறாண்டுகளான பின்னரும்கூட, சாவர்க்கர்வாதிகள் வரலாற்றுக்குப் பேரழிவினை ஏற்படுத்தும் விதத்தில் விளையாடிக் கொண்டிருப்பது வருத்தத்தை அளிக்கிறது. சாவர்க்கரை ஒரு மாபெரும் புரட்சியாளர் என்றும், அசைக்கமுடியாத சுதந்திரப்போராட்ட வீரர் என்றும், மகத்தான பகுத்தறிவாளர் என்றும், ஏன், என்னதான் கூறாமல் விட்டிருக்கிறார்கள், அனைத்து வழிகளிலும் அவரைப் பாராட்டி, தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சாவர்க்கர் அவர் காலத்தில் அவர் கைப்பட எழுதிய எழுத்துக்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தாலே, அவர் குறித்துக் கூறும் அனைத்தும் தவறானவை என்பதை மெய்ப்பித்திட முடியும். அதை இந்தப் புத்தகம் செய்திருக்கிறது.

இந்திய விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை வரலாற்று உண்மைகளுடன் வெளிச்சத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்கிற நேர்மையான தூண்டுதலின் விளைவே இந்தப் புத்தகமாகும். சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் இருந்த உண்மையான சாவர்க்கரை அறிந்து கொள்வதற்காக, இந்த நூலின் ஆசிரியர், இந்து மகா சபா, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்திய அரசாங்கத்தின் ஆவணக் காப்பகங்களில் கிடைத்த ஒரிஜினல் ஆவணங்களையே பிரதானமாக சார்ந்திருக்கிறார்.

சாவர்க்கர், விடுதலைப் போராட்டத்திலிருந்து ஒதுங்கியிருந்தது மட்டுமல்லாமல், பிரிட்டிஷாரின் நலன்களுக்கு எங்கெல்லாம் சவால்கள் ஏற்படுகின்றனவோ அங்கெல்லாம் அவற்றை ஒடுக்குவதற்கு உதவியும் செய்தார். 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது, காலனிய எஜமானர்களின் கொடூரமான அடக்குமுறையை மக்கள் எதிர்கொண்டிருந்த சமயத்தில், சாவர்க்கர் பிரிட்டிஷாரின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு முழுமையாக ஆதரவினை அளித்தார்.

இரண்டாம் உலக யுத்தம் நடந்துகொண்டிருந்த சமயத்தில், சுபாஷ் சந்திர போஸ், இந்தியாவை ராணுவரீதியாக விடுவித்திட முயற்சித்துக் கொண்டிருந்தபோது, சாவர்க்கர் பிரிட்டிஷாரின் யுத்த முயற்சிகளுக்கு வெளிப்படையாகவே உதவும் அளவிற்குச் சென்றார். சாவர்க்கர் எந்த அளவுக்கு பிரிட்டிஷாரின் கூட்டத்துடன் சேர்ந்து அவர்களின் யுத்த நடவடிக்கைகளுக்கு உதவிடத் தீர்மானித்தார் என்பதைக் கீழ்க்கண்ட அவருடைய வார்த்தைகளிலிருந்து நன்கு அறியலாம்.

“இந்து தேசம் இந்தியாவின் பாதுகாப்பைப் பொறுத்தவரை, இந்து தேசத்தைச் சேர்ந்த நம் நலன்களைப் பாதுகாத்திட, இந்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் வரையிலும், அதற்கு எவ்விதமான தங்குதடையுமின்றி, ராணுவ ரீதியாகவும், கப்பல்படை மற்றும் விமானப்படை மூலமாகவும், இணைந்து, இராணுவத் தளவாடங்கள் உற்பத்தி, வெடிமருந்துகள் உற்பத்தி மற்றும் போர்த்தந்திர கருவிகள் உற்பத்தி என அனைத்திலும் பொறுப்புமிக்க ஒத்துழைப்பினை நல்கிட வேண்டும். .. ஜப்பான் யுத்தத்தில் நுழைந்திருப்பது என்பது, பிரிட்டனின் எதிரிகளால் நாம் நேரடியாகவும், உடனடியாகவும் தாக்குதலுக்கு உள்ளாகும் நிலைமையை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை நாம் குறித்துக்கொள்ள வேண்டும். இதன் விளைவாக, நாம் விரும்பினாலும் சரி, அல்லது விரும்பாவிட்டாலும் சரி, யுத்தத்தின் அழிவுகளிலிருந்து நாம் நம் உயிரையும் உடைமைகளையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமானால், அது இந்தியாவைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளைத் தீவிரப்படுத்துவதன் மூலம் மட்டுமே சாத்தியம். எனவே, இந்து மகாசபைவைச் சேர்ந்தவர்கள், இந்துக்களை, குறிப்பாக வங்கம் மற்றும் அஸ்ஸாம் மாகாணங்களில் உள்ள இந்துக்களை எழுச்சியுறச்செய்து அவர்கள் அனைவரும் ராணுவத்தின் அனைத்துப் படைகளிலும் இனியும் ஒரு நிமிடத்தைக்கூட வீணாக்கிடாது, தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும்.”

இவ்வாறு கூறியதுடன் மட்டும் நில்லாது பிரிட்டிஷ் ராணுவத்திற்கு ஆளெடுக்கும் பணியில் ஈடுபட்டு ஆயிரக்கணக்கான இந்துக்களை பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ப்பதற்கும், அதன்மூலம் இந்திய தேசிய ராணுவத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்களைக் கொல்வதற்கும் துணை போனார்.

சாவர்க்கர், சாதியம் மற்றும் இனவெறி ஆகியவற்றின் தீவிரமான நம்பிக்கையாளராக இருந்தார். அவர் தன் வாழ்நாள் முழுவதும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஆதரவாளராகவே விளங்கினார். அதனை அவர் இந்துத்துவா என்று அழைத்திட்டார். இவை அனைத்தும் இன்றைய சாவர்க்கர்வாதிகளுக்கு நன்கு தெரியும். எனினும் அவர்கள் இந்த ஆவணங்களை மக்கள் பார்வைக்குக் கொண்டுவராமல் ஒளித்து வைத்திடவே விரும்புகிறார்கள். ஏனெனில் சாவர்க்கரின் உண்மையான சொரூபத்தை மக்களிடம் காட்டினால், இந்துத்துவா படையணியினருக்குப் பேரழிவு நிச்சயம் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். எனவேதான் அதனை வரலாற்றின் குப்பைக்கூடையில் போட்டு வைத்திருக்கிறார்கள். சுயமரியாதை உள்ள எந்தவொரு இந்தியனும், ஏன், காலனியாதிக்க எதிர்ப்புப் பாரம்பர்யத்தில் கொஞ்சமாவது நம்பிக்கையுள்ள எவரும், ‘வீர்’ சாவர்க்கரைப் போற்றிப் புகழ்வை சகித்துக்கொள்ள முடியாது., எனவேதான் இந்துத்துவாவாதிகள் இதனை மூடிமறைத்திட முயற்சிக்கிறார்கள். அது நம்மால் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றுதான். ஆனால், இந்தியா விடுதலை பெற்று சுமார் நூறாண்டுகளானபின்னரும், ஜனநாயக-மதச்சார்பற்ற இந்திய அரசியலுக்காக நிற்பவர்கள் சாவர்க்கர் தொடர்பான ஆவணங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவரத் தயங்குவதுதான் உண்மையில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

இந்தப் புத்தகத்தில் வெளிக்கொணரப்பட்டுள்ள ஆவணங்கள் நிச்சயமாக ஏமாற்றுதல், மோசடி மற்றும் தவறான தகவல்களையே முழுமையாக நம்பியிருக்கும் இந்துத்துவா படையணியினருக்குக் கலக்கத்தை ஏற்படுத்தும். ‘வீர்’ சாவர்க்கர் குறித்து எதுவும் தெரியாது அவரைப் போற்றிப் புகழும் தலைவர்களுக்கும், நபர்களுக்கும் இந்தப் புத்தகமானது அவர் குறித்துக் கூறப்படும் சரடுகளிலிருந்து உண்மைகளைத் தெரிந்துகொள்வதற்கு உதவிடும் என்று நம்புகிறோம். இந்தப் புத்தகத்தின் ஏழாவது அத்தியாயமும் சாவர்க்கரால் எழுதப்பட்ட இந்துத்துவாவின் 1923ஆம் ஆண்டு பதிப்பினை மதிப்பீடு செய்கிறது. ஏனெனில் அப்போதுதான் இந்தியாவை இல்லாது ஒழித்திட கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட சிந்தனைகள் மற்றும் அதன்வழி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதையும் அவற்றின் ஆபத்துக்களையும், ஜனநாயக மதச்சார்பற்ற இந்தியாவை நெஞ்சார நேசிக்கும் அனைவரும் புரிந்துகொள்ள முடியும்.

சாவர்க்கர் குறித்து கூறப்படும் ஏழு சரடுகளைக் கூறி அவற்றுக்கு எதிரான உண்மைகளையும் தக்க ஆவணச்சான்றுகளுடன் இந்தப் புத்தகத்தில் கட்டுரையாளர் வெளிக்கொண்டுவந்திருக்கிறார்.

சாவர்க்கரை வீரரா அல்லது ஐந்து கருணை மனுக்கள் எழுதிக்கொடுத்து பிரிட்டிஷாரின் அடிமையாகச் சேவகம் செய்தவரா என்பதையும், இந்திய சுதந்திரப் போராட்ட வீரரா அல்லது இந்தியச் சுதந்திரப் போராட்டத்திற்குத் துரோகம் இழைத்தவரா என்பதையும் இந்தப்புத்தகத்தைப் படித்திடும் ஒருவர் நன்கு தெரிந்துகொள்ளமுடியும்.

பாரதி புத்தகலாயத்தின் சார்பில் தில்லிப் பல்கலைக் கழகப் பேராசிரியராக இருந்த சம்சுல் இஸ்லாம் அவர்கள் எழுதி வெளியிட்டுள்ள முகத்திரை அகற்றப்பட்ட சாவர்க்கர் (Savarkar Unmasked) என்னும் இந்நூல் ச.வீரமணி மற்றும் தஞ்சை ரமேஷ் ஆகியோரால் தமிழாக்கம் செய்யப்பட்டு வெளிவந்திருக்கிறது.
இந்துத்துவாவை உருவாக்கிய சாவர்க்கரின் உண்மை முகத்தைத் தெரிந்துகொள்ள ஒவ்வொருவரும் அவசியம் படித்திட வேண்டும்…

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *