நூல் : சில இடங்கள்… சில புத்தகங்கள்…
ஆசிரியர் : ச. சுப்பாராவ்
விலை : ரூ. 140/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]
சிறந்த சிறுகதை எழுத்தாளரும் சிறந்த மொழிபெயர்ப்புக்கான பல விருதுகளை பெற்றவருமான நமது அருமைத்தோழர் சா.சுப்பாராவ் அவர்கள் தன்னுடைய மகளும், மருமகனும் வேலை காரணமாக ஓராண்டு ஐரோப்பாவில் தங்கியிருக்கும் பொழுது, நமது எழுத்தாளருக்கு வெளிநாடு செல்ல அழைப்பு வந்து புறப்பட்டுச் சென்றார். அப்படி அவர் சென்ற பொழுது ரோட்டர்டாமில் தங்கியிருந்து பல முக்கிய இடங்களை கண்டுணர்ந்தார். அவர் பார்த்தது மட்டுமல்லாமல் நம்மிடமும் பகிர்ந்தும் கொள்கிறார். ஆஹா என்ன அற்புதமான பயண அனுபவம்!
35 ஆண்டு காலமாக ஆங்கில புத்தகங்கள் மூலம் பார்த்த ஐரோப்பாவை, அது எந்த முக்கியமான நகரமாக இருந்தாலும் அதை களமாக வைத்து எழுதப்பட்ட ஒரு புத்தகம் அவர் மனதில் வந்து போனதாக நம்மிடையே பகிர்கிறார். அவர் பார்த்த சில இடங்களைப் பற்றி உங்களோடு…
ஐரோப்பாவில் தன் மகள் வாழும் நெதர்லாந்து ரோட்டர்டாமில் ஆசிரியர் தன் பயணத்தை தொடங்குகிறார். மக்கள் பெரும்பாலும் மிதிவண்டிகளிலேயே பயணம் செய்கின்றனர். இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் நாஜிப் படை இரண்டு மணி நேரத்தில் 86 ஆயிரம் மக்களை கொன்றொழித்த கொடுமையான வரலாற்றை ஆசிரியர் குறிப்பிடுகிறார். அந்நகரம் மீண்டும் புத்துணர்ச்சியோடு நிர்மாணிக்கப்படுகிறது. அங்குள்ள வீடுகள் மிகவும் வித்தியாசமாக உள்ளது. ‘கியூப் வீடு’ என்று யூட்யூபில் பதிந்தால் அருமையான வீடுகளை நாம் காணலாம். ஆச்சரியம் என்னவென்றால் அங்க மருந்து கடைகளே இல்லையாம்! மருத்துவமனை கூட அரசு மருத்துவமனை மட்டுமே. நம்ம ஊர்ல தலைவலிக்கு, காய்ச்சலுக்கு என ஓடிப்போய் மெடிக்கலில் மாத்திரை வாங்கி சாப்பிடுவோம். ஆனால் அந்த மாதிரி எதுவும் அங்கே கிடையாதுங்க. எதுக்கெடுத்தாலும் அங்கு ஆஸ்பத்திரிக்கு ஓடற நிலைமையும் இல்லை. சளி, ஜலதோஷம் அப்படின்னு மருத்துவமனைக்கு போனா ‘அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க சரியாயிடும் போயிட்டு வாங்க’ என்று மருத்துவர்கள் திருப்பி அனுப்பி விடுவார்களாம். இன்னும் நிறைய இருக்குங்க. இரண்டு நதிகளுக்கு இடையில் இருக்கிற கிண்டர்டையக். அப்பப்பா நிறைய இருக்கு. இதையெல்லாம் எழுதி முடிக்க நான் ஒரு புத்தகம் தனியாக போடணும் போல.
அடுத்ததாக வான்கோ வாழ்ந்து துன்புற்ற இடமான ஹேக் அதாங்க சர்வதேச நீதிமன்றத்திற்கு தான் ஆசிரியர் செல்கிறார். உள்ளே செல்ல அனுமதி இல்லை. அருமையான அருங்காட்சியகம் இருக்கிறது. அங்கேயும் ஒரு மரம். நம்ம கந்தசாமி படத்தில் வருவது போல துண்டு சீட்டுகள் அட்டைகள் தொங்குகின்றன. நம்ம ஆசிரியரும் ‘உலகினை அழித்துவிடும் யுத்தமே வேண்டாம் வேண்டும் சமாதானம் என்றும் வேண்டும் சமாதானம்’ எழுதி மரத்தில் கட்டி வைத்தார். அந்த மரத்தில் தமிழில் எழுதிய ஒரே ஒருத்தர் அவர் நம்ம தோழராத்தான் இருக்கும். அடுத்ததாக உலகை வலம் வந்த கம்யூனிஸ்ட் அறிக்கை பிறந்த இடத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறார். ஆம் காரல் மார்க்ஸ் பாரிஸிலிருந்து நாடு கடத்தப்பட்டு அவர் வந்து சேர்ந்த இடம் தான் பெல்ஜியத்தின் தலைநகர் பிரஸ்ஸலஸ். ‘உலகத் தொழிலாளர்களே! ஒன்று கூடுங்கள்! என்று எழுதிய மாமேதையின் இடத்தை பார்க்க வருகிறார். ஆனால் அந்த சசுவான் ரெஸ்டாரண்ட் இடம் இப்போது ஒரு தனியார் உணவு விடுதியாக மாற்றப்பட்டதால் அங்கே மார்க்ஸ் இருந்த அடையாளமாய் அன்னப்பறவை சிலையைக் கண்டு ஆனந்தமாகி அந்த விடுதியின் முன்பு புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார். மக்களின் வரலாற்றை யாரேனும் ஒருவர் புதுப்பிப்பார் என்கிற உணர்வு ஏற்பட்டது தோழர்களே. இப்படியாக வான்கோ மற்றும் பல்வேறு வரலாற்றுத் தரவுகளை சலிப்பில்லாமல் மிகவும் அருமையாக தரவுகளை வாரி வழங்கியபடியே பயணம் செய்கிறார். வான்கோவின் ஓவியங்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. அவருடைய வாழ்வும் மிகவும் துயரம் நிறைந்தது. தன்னுடைய சகோதரன் அனுப்பும் தொகை மட்டுமே வான்கோவுக்கு உயிர்நாடி. அப்படி துன்பப்பட்டவர்தான் உலக அதிசயங்களை அள்ளி வழங்கினார்.
அடுத்ததாக பாரிசுக்கு பயணம் செய்கிறார். எந்த நகரத்துக்குச் சென்றாலும் அந்த நகரத்தை பற்றிய ஒரு நூலை நமக்கு அறிமுகப்படுத்திக் கொண்டே செல்கிறார். அப்படித்தான் ஈபிள் டவருக்குச் சென்றார். இரண்டாம் உலகப்போரில் ‘பாரிஸ் என்னும் நகரமே இருக்கக்கூடாது அதை அழித்து விடு’ என்று ஹிட்லர் கூறியபோது, கோல்டிஸ்ட் அப்படி செய்யாமல் விட்டு விடுகிறார் என்கிற செய்தி வியப்பைத் தருகிறது.
கோபுரத்தின் உச்சிக்கு கூட உணவு பொருள் எடுத்து செல்லலாம் என்பது வியப்பை தருகிறது. நம்மூர்ல இதெல்லாம் எப்போது சாத்தியமோ. நாஜிக்களிடமிருந்து பாரிஸை காப்பாற்றுவதற்காக 18 முதல் 50 வயது வரையிலான அத்தனை பேரும் நாட்டர்டாம் தேவாலயம் முன்பு கூடி போலீஸ் தலைமையகத்தைக் கைப்பற்றிய காட்சியை லாரி காலின்ஸூம், டொமினிக் லாப்பியரும் அவ்வளவு நுணுக்கமாக விவரித்த விஷயத்தை நம் ஆசிரியர் மிக அழகாக குறிப்பிடுகிறார்.
அடுத்து லூவர் அருங்காட்சியகத்தில் நம்மை அழைத்துச் செல்கிறார். இந்த ஒரு நாவல் டான் பிரவுன் எழுதிய ‘டாவின்சி கோட்’ மோனலிசா பற்றிய நூல். என்ன ஒரு எழுத்தாளர் எப்படித்தான் இதெல்லாம் படிச்சிருக்காரோ தெரியல. அப்பப்பா அருங்காட்சியகத்தை பாக்கணும்னா பயங்கர பிரம்மாண்டம்! மூன்று ஈபில் டவர் கோபுரங்கள் ஒன்றாக படுக்க வைத்திருக்கும் அளவு தூரம் 46,000 கலைப் பொக்கிஷம். மோனலிசா பற்றிய செய்திகள் நிறைய தெரிஞ்சிக்கலாம். மோனலிசா ஓவியம் ஆயிரத்து பதினொன்றில் திருடு போய் இருக்கு. அதிலிருந்து அதை காப்பாற்றுவதற்கு, அவ்வளவு பாதுகாப்பு போட்டு இருக்காங்க. இரண்டாம் உலகப் போரின் போது அந்த மோனலிசா ஓவியத்தை காப்பாற்றுவதற்கு பல திட்டம் போட்டிருக்கிறார்கள். 10 லட்சம் மணல் மூட்டை கட்டி காப்பாற்றியிருக்கிறார்கள் என்றால் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள் என்று தெரிய வருகிறது. டான் பிரவுன் ஓவியங்கள் அனைத்தும் 95 லாரிகளில் வெளியூருக்கு அனுப்பி இருக்கிறார்கள். மோனலிசா மட்டும் அங்கேயே தனியே ஒரு ரகசியமான இடத்தில் வைத்திருக்கிறார்கள். 1939 லிருந்து 1945 வரைக்கும் லூவர் அருங்காட்சியகத்தில் காப்பாற்றுவதற்கு அவ்வளவு சிரமப்பட்டு இருக்கிறார்கள்.
அவர் போன இடத்தை எல்லாத்தையும் குறிப்பிடலாம் என்றால் அவர் மாதிரியான ஒரு புத்தகத்தை எழுதினால் தான் சரியாக இருக்கும். ஆனால் கண்டிப்பா யாரும் படிக்க மாட்டீங்க. அதனால அவர் எழுதிய இந்நூலில் முழுவதும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
இரண்டாம் உலகப்போர் நெதர்லாந்து ‘ஆஸ்ட்விட்ச் சர்வைவல் இன் ஆப் சுவிட்ச்’ என்கிற கொடுமையை பற்றிய எழுதிய நூல் மிகவும் புகழ்பெற்றது கண்கலங்காமல் யாராலும் படிக்க முடியாது. முகாமில் காலையில் ஆட்களைக் எண்ணுவார்கள். ஒருவர் குறைந்தால் கூட பத்து பேரை சுட்டுக் கொள்வார்கள். முகாமில் கைதிகளே யாராவது தப்பித்து போனாலும் மற்றவர்கள் தப்பிக்காமல் பார்த்துக்கொள்வார்கள். கொடுமைகள் ஏராளம். சாகப்போகிற ஒருவர் தனக்கான குழியை தானே வெட்டிக் கொள்ள வேண்டும். குழி வெட்டிய பின்பு குழியின் மூளையில் நிற்க வேண்டும். நாஜி துப்பாக்கியால் சுடுவான் அப்படியே குழிக்குள் விழ வேண்டும் தள்ளுவதற்கு வேலை மிச்சமாம்.
பசிக்கு சூப்பு கொடுப்பானுங்க. அத குடிச்ச பின்னாடி தெரியும் அது இறந்தவர்களுடைய உறுப்புதான் அதில் கிடக்கிறது என்று. குடித்தவர்கள் அப்படியே வாந்தி எடுப்பார்கள். எவ்வளவு கொடுமையான நாஜிக்கள். சோவியத் வீரர்கள் வந்து காப்பாற்றும் வரை இதுதான் நிலைமை. இன்னும் நிறைய கொடுமைகளையும் நூல்களை வாசிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம் தோழர்களே.
இறுதியாக ஆம்ஸ்டர்டாம் செல்கிறார் ஆசிரியர். ‘ஆசிரியர் குடும்பத்தோட வா செல்கிறார்?’ என்று கேலியாக பேச்சு வரும். ஏனெனில் அங்கு இரவு விடுதி புகழ் பெற்றது. ஆனால் நமது ஆசிரியரோ பார்க்கச் சென்றது வேறு ஒன்றை. ஆம் வான்கோ, ஆன் பிராங்க் நடந்த, உலாவிய ஆம்ஸ்டர்டாம் வீதியில் தான் பேராசிரியரும் நடந்தார். மிகப்பெரிய அருங்காட்சியகம்! அப்பப்பா மிகவும் பிரமிப்பான அருங்காட்சியகம்! வான்கோவினுடைய கையெழுத்து கடிதத்தைக் கண்ட ஆசிரியர் மொழி தெரியாவிட்டாலும் கண்கலங்கினார். ஆன் ஃபிராங்க் குடும்பம் நாஜி படையினரிடம் இருந்து தப்பிக்க தன் அப்பா பணிபுரியும் நிறுவனத்தில் ஒரு புத்தக அலமாரிக்கு பின்புறம் ரகசியமாக சிறு வீடு கட்டி மறைவாக வாழ்ந்து வந்தனர். சிலரின் நம்பிக்கைத் துரோகத்தால் காட்டிக் கொடுக்கப்பட்ட அவர்கள் கைது செய்யப்பட்டு கொடுமைக்கு ஆளாகினர். ஆன் பிராங்க் சிறையில் கொடும் நோயில் இறந்துவிட, அவர் தந்தையார் மட்டும் பிழைக்க பிறகு ஆன் அவர்கள் இளம் வயதில் நாஜி கொடுமைகளை தனது டைரியில் எழுதி வைத்த குறிப்புகளை கொண்டு அவற்றை நூலாக வெளியிட்டார். சிறிய வயதில் மிகவும் அபாரமான திறமை கொண்டவராக திகழ்ந்துள்ளார் ஆன். அப்படி அவர்கள் வாழ்ந்த இந்த மறைவான இடம் தான் தற்போது அருங்காட்சியமாக உள்ளது. பார்வையிட வருபவர்கள் அந்த அலமாரியை விலக்கி உள்ளே சென்று பார்ப்பது போன்று பழைய நடைமுறையில் இன்னும் இருப்பது சிறப்பு.
அப்பப்பா ஆசிரியரின் வாசிப்பு எவ்வளவு தூரம் அவரை இழுத்துச் சென்றிருக்கிறது என்பதை பார்க்கும் பொழுது நமக்கெல்லாம் அந்த வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமே! ஆனால் மனிதராகப் பிறந்தவர்கள் ராகுல சாங்கிருத்தியாயன் சொல்வதுபோல் ஊர்சுற்றிப் புராணமாக நாம் உலகை வலம் வர வேண்டும். நிறைய பொக்கிஷங்களை கொண்டுள்ள பூமியின் ஓவியத்தைக் கண்டு உணர்வதற்காக அவசியம் உலகை வலம் வர வேண்டும். அதற்கு வாசிப்பு மிக மிக அவசியம். அப்படி உலகை வாசித்து நமக்கு அளித்த எழுத்தாளர் தோழர் சா. சுப்பாராவ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினையும், நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!
நான் உங்களிடம் சொன்னது தம்மாத்தூண்டு. ஆனால் அறிய தகவல் களஞ்சியங்கள், புகைப்படக் காட்சிகள் இந்நூலில் நிறைய கொட்டிக்கிறது!
வாசியுங்கள் தோழர்களே!
வாசிப்போம்!
உலகை நேசிப்போம்!!
தோழமையுடன்
இரா.சண்முகசாமி
புதுச்சேரி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.