“எவ்வளவுதான் அதிகாரம் படைத்தவனாக இருந்த போதிலும் பெண்களின் சில தீர்மானங்களின் முன்னால் ஆண்கள் கையலாகாது போகும் தருணங்களும் பல இருக்கின்றன. அவ்வாறான தீர்மானங்களை எவராலும் மாற்ற முடியாது”

சாமிமலை வாசிக்கத் தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே மனசுக்குள்.. அடியில் கிடந்த பெரும் வலியான
நினைவுகள் இந்த இரவுப் பொழுது பெரும் துயரத்தோடு விடியற்காலையை சந்தித்து அழுது கொண்டிருந்தது.

122
திருவண்ணாமலை to சென்னை
(வல்லம் வழியாக).

இயற்கை தனக்குள் எல்லாவித சாகசங்களையும்.. சூட்சுமங்களையும் அடை காத்துக் வைத்துக் கொண்டு கண்ணாமூச்சி விளையாட்டுகளையெல்லாம் வேண்டிய பொழுதினில் தான் விரும்பியபடி நிகழ்த்திக் கொண்டேயிருக்கும்.. அது, பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே மெல்ல மெல்ல இதழ் விரிக்கும் ஏகாந்தம் மிகுந்த செம்பருத்தியின் அழகோடும்.. சூட்டின் கணப்பொழுதில் வெடித்துக் காற்றிலலையும் பருத்திக் காயின் பஞ்சாகவும்.. நிறைந்து தளும்பிக் கிடக்கும் ஏரியின் கரை உடைத்து ஊருக்குள் புகுந்து உயிர்களையும் உடைமைகளையும் அள்ளிப் போகும் காட்டாற்று வெள்ளமெனும் ஆவேசம் கொண்டும், பனிக்குடம் உடைந்து வெளியேறும் ரத்த பிசுபிசுக்கின் நீரின் வலியோடு முதல் அழுகையின் குரலுக்காக மயங்கியும் மயங்காமலும் கண்மூடி கனவுகளைச் சுமந்திருக்கும் தாயாகவும் தன்னை வடிவமைத்துக் கொண்டே மனிதர்களை மாண்பு கொண்டவர்களாகவும் தனிமனித ஒழுக்க பண்பற்றவர்களாகவும் மாறவும் விலகவும் சோதனைக்களங்களாக எல்லாவற்றையும் மாற்றத்திற்கு உட்படுத்தும் மென்மையானதும் வலிமையானதும் வலிகள் உடையதுமாகும் இயற்கையின் பேரழகும் சீற்றமும்.

சாமிமலை வாசிக்கத் தொடங்கிய சில பக்கங்களிலேயே வலிகளையும் அதிர்ச்சியையும் என்னை உணரச் செய்து, 1980களின் மத்திய காலப் பொழுது நவம்பர் மாத மழைநாட்களுக்குள்.. சொந்த ஊரான சோமாசிபாடிக்கு இழுத்துப் போனது.

தீபாவளிப் பண்டிகை நெருங்க நெருங்க வருடமெல்லாம் தனக்குள் இறுத்தி நிறுத்தி இறுக்கமாகச் சேர்த்து வைத்த ஈரத்தை கருமேகங்கள், வானத்திலிருந்து மழையாறுகளாக அனுப்பிக் கொண்டிருந்தது திருவண்ணாமலை, விழுப்புரம் தென்னார்க்காடு, வட ஆற்காடு சென்னை மாவட்டங்களின் மண் பரப்பங்கும். வானம் உடைத்தழுத மழையாறு ஏரிகளனைத்தையும் கடல்களாக மாற்றிக் கொண்டிருந்தது. பல கிராமங்களில் கடலான ஏரி கரை நொறுக்கி ஊருக்குள்ளும் புகுந்தது. வாங்கி வைத்த லட்சுமி வெடியும், யானை வெடியும், அணுகுண்டும்ம், பாம்பு மாத்திரையும் பிஜிலி வெடியும் வெள்ளத்தில் காகிதக் கப்பல்களாக
கவிழ்ந்தும் மிதந்தும்.

பல வீடுகளில் தீபாவளிக்கு மறுநாள் நோம்பு எடுப்பார்கள். நோம்பு எடுத்த வீடுகளில் சுட்டெடுத்த தின்பண்டங்கள், பலகாரங்கள் அக்கம்பக்கத்து வீட்டுப் பிள்ளைகளின் கைகளுக்கும் வாய்களுக்கும் போய்க் கொண்டிருக்கும்.
வெளியூருக்கு சில்வர் தூக்கில் பயணப்படும்.

வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு வந்து தீபாவளியை கொண்டாடுபவர்கள் மறுநாள் வேலைக்கு செல்ல வேண்டும் என்கிற கட்டாயத்தில் அன்று இரவே பேருந்து பிடித்து மறுநாள் ஊர் போய் சேர வேண்டும் வீட்டில் செய்த பலகாரங்களோடு கலந்து இருக்கும் சொந்தங்களின் அன்பையும் பாசத்தையும் நண்பர்களுக்கு பகிர்ந்து கொடுப்பதற்காக.

அப்படித்தான் அந்தப் பெற்றோர்களும் நோம்பு எடுத்த நாளின் இரவு தங்களது இரு மகன்களை திருவண்ணாமலையிலிருந்து சென்னை செல்லும் பேருந்துக்கு அனுப்பி வைத்தனர் எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஆராஞ்சி என்கிற கிராமத்திலிருந்து மழையாறு பெய்த அந்த நாளின் ராப் பொழுதில்.

மழையும் காற்றுமாய் சேர்ந்தடிக்கும் அந்த கும்மிருட்டின் நடு இரவில் சென்னை நோக்கி சென்ற அந்த பேருந்து கடும் மழையினை ஊடுறுத்து மெல்ல மெல்ல சென்று கொண்டிருக்கிறது.. நேரம் செல்லச் செல்ல மழையும் வலுத்துக் கொண்டே. பேருந்து செஞ்சியை அடுத்து வல்லம் கிராமம் வழியாக ஊர்ந்து போய்க் கொண்டிருக்கிறது.

அழகிய கிராமத்தின் எல்லையில் இருக்கக்கூடிய தொண்டி ஆற்றின் பாலத்தை கடந்துதான் அனைத்துப் பேருந்துகளும் வாகனங்களும் சென்னை செல்ல வேண்டும். பேய் மழை அடிக்கும் அந்த நாளின் ராப்பொழுதில் பாலத்தின் கீழ்ப்புறத்தில் ஓட வேண்டிய ஆற்று நீர் பாலத்தின் மேல் ஓடிக்கொண்டு. பாலத்தை எப்படியும் நம்மால் கடந்து விட முடியும் என்கிற முனைப்போடு வாகனத்தின் ஓட்டுனர் பாலத்தின் மீது வண்டியை செலுத்துகிறார் எச்சரிக்கையாகவும் கவனமாகவும்; காலதாமதம் ஆனாலும் பேருந்துக்குள் இருப்பவர்களை சென்னை கொண்டு போய் சேர்த்து விட வேண்டும் என்கிற பேராவலால். பேருந்து பாலத்தின் மேல் சென்று கொண்டிருக்கும் பொழுதே கொஞ்சம் கொஞ்சமாக ஆற்று நீர் பேருந்தை விழுங்கத் தொடங்கியது.. விபரீதம் அறிந்த ஓட்டுநர் பேருந்தை வேகப்படுத்த.. ஆனாலும் எங்கேயோ உடைந்த கன்மாயின் நீர்கும்பல் வெள்ளமாகி, மலையின் உச்சியில் இருந்து பெரும் பாறைகளின் கூட்டமொன்று ஓங்கி வளர்ந்த மரங்களை வேரோடு அருத்தெறிந்த வேகத்தின் சீற்றத்தோடு.. வெள்ளம் ஓங்கியடித்த அந்தக் கணத்தில் ஓட்டுநரும் பேருந்தும் நிலை தடுமாற, வேகம் எடுத்த வெள்ளம் வயிற்றுப் பசியோடு எல்லாவற்றையும் தின்றுமுடிக்கும் நாவின் கொலை வெறியோடு மனிதர்களை ரொப்பிக் கிடந்த வாகனத்தை குப்புறத் தள்ளி உருட்டிக் கொண்டே கொண்டு போய் தொண்டி ஆற்றின் கரை ஓரத்தில் வானுயர்ந்த சவுக்குத் தோப்பிற்கு இடையில் தலைகீழாய் படுக்க வைத்தது .

பெய்து கொண்டிருந்த பெருமழையின் சத்தத்தை ஊடறுத்து அலறியது மனித குரல்கள்.. இருட்டும் மழையும் வெள்ளமும் ஒன்றோடு ஒன்று குதித்து தாண்டவமாட அபயக் குரல்கள் அத்தனையும் எவர் ஒருவருக்கும் கேட்காமலேயே போனது. இருட்டும் பேய்க் காற்றும் குரல்கள் அனைத்தையும் மொத்தமாய் விழுங்கிக் கொண்டது.
பின்னிரவின் தொடக்கத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தை இருட்டும் காற்றும் மழையும் வெள்ளமும் அது மறைத்து வைத்திருந்த பாலமும் மட்டுமே அறியும்..

பரையாட்டத்தின் உச்சத்தில் ஆடிய கால்கள் அந்தக் கடைசி கொட்டு முடிந்ததும் அமைதியில் ஆசுவாசப்படுத்தி அமைதி காண்பது போல் ஊழியாட்டத்தை நடத்தி முடித்த தொண்டி ஆறு அமைதியாக போய்க்கொண்டிருக்கிறது விடியற்காலையின் பொழுதில் ஏதும் அறியாதது போல்.

இருட்டையும் குளிரையும் இளம் சூரியன் வழி அனுப்ப கிழிந்த புடவைக்குள்ளும் வேட்டிக்குள்ளும் போர்வைக்குள்ளும் சுருண்டு கிடந்த வல்லம் கிராமத்து மனிதர்கள் ஒவ்வொருவராய் வெளியே வந்து பாலத்தின் ஓரம் நின்று
காற்றும் மழையும் வெள்ளமும் சேர்ந்து நடத்திய ஊழியாட்டத்தின் முடிவை சலசலத்து ஓடும் ஆற்றின் அழகினை அமைதியாய்ப் பார்த்து நிற்க.. ஒருவரின் விழிகள் மட்டும் சவுக்குத் தோப்பில் ஏற்ற இறக்கத்தோடு கவிழ்ந்திருக்கக் கருப்பாக தெரியும் பேருந்து சக்கரங்களை நோக்கி அலறத் தொடங்கியது.. வாய் பேசிய வார்த்தைகளை சப்தமில்லாமல் அவரின் கண்கள் ஊமைக்கி வைத்தது அதிர்ச்சியின் உச்சத்தில். வந்திருந்த மனித கண்களும் கைகளும் தற்போது பேருந்தை நோக்கி பெரும் சப்தத்தோடு.. இரைச்சலோடு.

தைரியம் மிகுந்தவர்கள் நீரின் போக்கிலேயே போய் கவிழ்ந்து நொறுங்கி ஒடுங்கிக் கிடக்கும் பேருந்தையடைய.. அங்கொன்றும், இங்கொன்றும், தொலைவில் ஒன்றுமாக மனித உயிர்கள்.. சதை கிழிந்து, மண்டை பிளந்து, எலும்புகள் உடைந்து சவுக்கு மரங்களுக்கிடையே வளைந்து ஒடிந்தும் பிணங்களாக..

வாகனத்திற்குள்ளும் வெளியேயும் சவுக்கு மரங்களின் இடைவெளிகளிலும். ஆற்றின் கரை ஓரத்திலும்.. எத்தனை பேரின் பிணங்கள் அங்கு சிதைந்து கிழிந்து ஒதுங்கி கிடந்தது என்பதை சவுக்கு மரத்தில் சதையாக தொங்கிக் கொண்டோ அல்லது ஆற்று மணலின் அடி ஆழத்தில் புதைந்து கிடந்தோ.. இன்றளவும் தேடப்பட்டு வரும் நடத்துனர் மட்டுமே அறிவார் மனிதர்களின் எண்ணிக்கையை.

தமிழகத்தின் அத்தனைத் தொலைக்காட்சி செய்திகளும் தினப் பத்திரிகைகளும் இந்த விபத்தை செய்தியாக மாற்றின.. அன்று இரவு சென்னை நோக்கி சென்றவர்கள் அவரவரின் சரியான இடம் சேர்ந்தார்களா என்பதை பலரும் பலரை விசாரித்து தெரிந்து வைத்துக் கொண்டார்கள்.. ஆனாலும் கூட பலர் அந்த விபத்தை நேரிடையாக பார்க்க வந்துவிட்டார்கள் திருவண்ணாமலை நகரின் சுற்றுவட்டாரத்தில் இருக்கக்கூடிய மக்கள்..

பெரும் சோகம் என்னவென்றால் துயரச் செய்தி அறிந்து, நடைபெற்ற அந்த விபத்தை பார்க்க வந்ததோடு மட்டுமல்லாமல் கணவனை மனைவியை சொந்தங்களை இழந்து செய்வதறியாது கண்களில் நீரும் குரலில் ஈரமும் இல்லாமல் கிடந்த பலருக்கு பல இடங்களில் சென்று உதவி செய்தவர்கள் அந்த இரு மகன்களின் தந்தை சேகர். தன்னுடைய மகன்கள் இருவரும் அம்மா செய்து கொடுத்த பலகாரங்களோடு பத்திரமாக சென்னை போய் சேர்ந்து விட்டார்கள் என்று நினைத்துக் கொண்டு.

நிகழ்வு நடந்த இரண்டாம் நாள் சென்னையில் இருந்தவர்கள் சேகரை தொடர்பு கொண்டு கிராமத்தில் மழை வெள்ளம் எப்படி இருக்கிறது.? மகன்கள் எப்படி இருக்கிறார்கள்.? எப்பொழுது சென்னைக்கு கிளம்பி வருகிறார்கள் என்று விசாரிக்கும் பொழுது தான் இடியும் மின்னலும் சேர்ந்து தலையில் இறங்கியது சேகருக்கு. கிளம்பிய மகன்கள் என்னவானார்கள் எங்கு இருக்கிறார்கள் ?.. மனதில் அச்சம் சூழ சென்னையில் இருக்கக்கூடிய உறவினர்கள் அனைவரின் வீட்டிலும் விசாரிக்கிறார்கள். மாணவர்களின் நண்பர்களிடம் விசாரிக்கிறார்கள் ஒருவரிடம் இருந்து கூட உங்கள் பிள்ளைகள் சென்னைக்கு வந்து விட்டார்கள் என்ற பதில் வராதது அவர்களுக்குள் பெரும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்த, எந்தெந்த இடங்களில் எல்லாம் சென்று மற்றவர்களுக்கு உதவினார்களோ.. அதே செஞ்சி திண்டிவனம் காவல் நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று பார்க்கிறார்கள்.. விசாரிக்கிறார்கள்.. எங்கும் அவர்களின் மகன்கள் காணப்படவில்லை பிணங்களாகக் கூட.

இந்த நாள் வரையிலும் கூட அவர்களுக்கு தங்களின் இரு மகன்களும் எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியாது.
நோன்பு முடித்து வீட்டை விட்டு சென்றவர்கள் சென்றவர்கள்தான். புத்திர சோகம் என்பது எத்தனை பெரியது என்பதை அந்த ஆராஞ்சி கிராமமே அன்று உணர்ந்தது.

அடையாளம் தெரியாத.. எவரும் வந்து உரிமை கோறாத மனித பிணங்கள் அரசு செலவிலேயே இறுதி ஊட்டப்பட்டதாக தகவல் கிடைத்தது பத்து நாட்கள் கழித்து.

கடைசியாக தெரிந்தவர்கள் வழியாக ஒரு செய்தி மட்டுமே அந்தப் பெற்றோர்களுக்கு வந்து சேர்ந்தது. மழை இரவில் நீண்ட நேரம் நின்று இருந்தும் பல பேருந்துகளில் இடம் கிடைக்காததால் அவர்களின் மகன்கள் சென்னை செல்லும் கடைசி பேருந்தையும் விட்டுவிடக்கூடாது என நினைத்து விபத்தில் சிக்கிய அதே பேருந்தில் ஏறி நின்று கொண்டே சென்றதாக..

“ஆராஞ்சி சேகரும்” அவரது மனைவியும் உயிரோடு பிணங்களாக
வீட்டுக்குள்ளேயும்.
கி
“சிலோன் டீ” என்று உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற இலங்கை தேயிலை தூளின் ஒவ்வொரு துகளிலுமிருந்தும் வெளியேறும் நறுமணம் தென்னிந்தியாவிலிருந்து இழுத்துச் செல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் பிணங்களில் இருந்தும் இரத்த பிசுபிசுகிலிருந்தும் வியர்வையின் உவர்ப்பில் இருந்தும் வெளியேறும் வலியும் வேதனையும் மிகுந்த மலையகத் தமிழர்களின் வாசமே. மலையகத் தமிழர்களின் வாழ்நிலை என்பது இதுவரை தமிழர்கள் மத்தியில் கூட பெருமளவு கவனிக்கப்படாத பொழுது சிங்கள மொழியில் பேசப்பட்டு எழுதப்பட்டு வந்து இருக்க கூடிய துயரத்தின் அடையாளம் முழுவதுமாய் தாங்கியே புதினமே
சாமிமலை.

பரம்பரை பரம்பரையாக மலையகத்தின் பல எழில் கொஞ்சும் தேயிலை தோட்டத்து கொழுந்துகளோடவும் ரத்தம் உறிஞ்சும் அட்டைப் பூச்சிகளோடவும் மடியும்.. தொடரும் மலையகத் தமிழர்களின் வாழ்முறையை, வாழ் நிலையை இலங்கையின் காட்போர் மலை பிரதேசத்தின் டன்மோர் தேயிலை தோட்ட லயன்களில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகளில் இருந்து புதினத்தை தொடங்கி இருக்கிறார் ஆசிரியர்.

மரணம் ஒவ்வொருவருக்கும் நிச்சயமான ஒன்றுதான்.. எவர் ஒருவரையும் மரணம் எப்பொழுது வாரி அனைத்துக் கொள்ளும் என்பதை எவருமே அறிய மாட்டார்கள்.. எதிர்கால சந்ததியர்களின் முடிச்சு அறுபடாமல் இருக்க தொடரும் ரகசியம் அறிந்தவர்கள் மனிதர்கள்.. அந்த ரகசியமே காத்திருந்த பிறப்பை கொண்டாடும் மனநிலையையும் எதிர்பாராத இழப்பை ஏற்றுக்கொண்டே கடந்து செல்ல வேண்டிய துயரம் மிகுந்த மனத் துயரத்தையும் அல்லது “இது எப்படா போய் சேரும்” என்கிற எண்ணத்தினையும் பிறந்த அவர் சக மனிதர்களோடு வாழ்ந்த வாழ்வையும் இணைத்தே யோசிக்க வைக்கிறது, யோசித்ததை பேச வைக்கிறது. நவீனத்தின் வளர்ச்சிக்காக பூர்வ குடிகளின் அடையாளங்களை சிதைத்தும் அவர்களின் வாழ்விடங்களை சூறையாடியும்.. அம்மக்களின் வாழ்வினை சின்னாபின்னப்படுத்தியும் நிர்மூலமாக்கியும் அவர்களின் வயிற்றுப் பசி கொடுமையின் மீதமர்ந்து தங்களின் சதைத் தேவையை நிவர்த்தி செய்து கொண்ட அதிகாரத்தின் ஈனச் செயலை இன்றளவும் தொடர்கின்ற இழி மனிதர்களை தனது புதினத்தில் அடையாளப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர். அதிகாரத்தின் குறியீடு எளியவர்களை எதிர்கொள்ள முடியாமல் தூக்குக் கயிற்றுக்குள் சரணாகதி அடைகிறது. தன் நெற்றிப்பொட்டின் ரத்தத்தை கைகளில் இருக்கும் துப்பாக்கித் தோட்டாவின் நாவிற்கு நக்கக் கொடுக்கிறது.. தற்கொலைக்குள் தஞ்சம் புகுகிறது. எளிய மக்களின் ஒடுங்கிய கண்களில் இருந்து வெளியேறும் நீர்த்துளிகள் அதிகார திமிரின் அடையாளங்களையெல்லாம் கரைந்து போகச் போகிறது.. அழித்தொழிக்கிறது.

பேரழிவு ஒன்றினை கணத்தில் எதிர்கொண்டு செய்வதறியாது இருக்கும் இலங்கையின் காட்மோர் மலை பூர்வகுடி தமிழ் மக்களை இலங்கையின் அதிகாரம் எப்படி அணுகி சமவெளி மக்கள் திரளோடு வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கிறது;

சமவெளி மக்களோடு தங்களை பிணைத்துக் கொள்ள முடியாமல் வாழ வேண்டிய நிர்பந்த வாழ்நிலைக்குள்
தள்ளிவிடுகிறது என்பதை நாவலுக்குள் பேசி இருட்டுக்குள் இருந்த பல நிஜங்களின் மீது வெளிச்சம் பாய்ச்சி இருக்கிறார் ஆசிரியர்.

உலகம் முழுவதும் பெண்களும் அவர்களின் உடலும் ஆண்களின், குடும்பங்களின் அன்றாடத் தேவைகளை வேலைகளை பூர்த்தி செய்வதற்காகவே என்று கட்டமைத்து வைத்திருக்கக்கூடிய குடும்ப அமைப்பு முறை, அதற்கு எதிராக கேள்வி கேட்பவர்களாக, “எங்களின் நிலைக்கு காரணமே நீங்கள்தான்” என்று ஆள்காட்டி விரல் நீட்டி சுட்டுபவர்களாக, ராணுவ அதிகாரியாக வரக்கூடிய சரோத்தின் மனைவி வஜ்ரா, மற்றும் ஒடுக்கப்பட்ட பெண்களின் அடையாளமாக இருக்கக்கூடிய லலிதா என்கிற கதாபாத்திரங்கள்.

மலையக தமிழ் மக்கள் இன்றளவும் அங்கே இருக்கக்கூடிய தேயிலை தோட்ட எஜமானர்களுக்கு ஏற்றதொரு வாழ்வினை தங்களின் மகிழ்ச்சியை இழந்து கொண்டாட்டத்தை தாங்களே அழித்து பெரும் துயரங்களை துன்பங்களை சுமந்து வாழ்ந்து தங்களை இழந்து கொண்டு வருகிறார்கள் என்கிற மெய்யான உண்மைகளை புதினமாக்கி இருக்கிறார் சாமிமலையாக. எளிய மக்களின் பெண்களின் வாழ்வினை, உலக பணக்கார நாடுகள் அனைத்தும் நல்லதொரு உடைக்கும்.. சில இனிப்பு பொட்டலங்களுக்கும் ஈடாக்கி சூறையாடிடும் தொடரும் நிஜங்களை நாவலுக்குள் பெரும் வலியோடும் காத்திரமாகவும் பேசியிருக்கிறார்.

ஆண்களின் அதிகாரத்தின் அரசாங்கத்தின் மொத்தக் குறியீடாக இங்கு ராணுவ வீரன் சரோத் எழுதப்பட்டிருக்கிறார். வார்த்தைகளில் நடிப்பு கலந்து பேசுவது ஏற்றுக் கொள்ளாத பொழுது வன்முறையை பிரயோகிப்பது வாழ்வினை சூறையாடுவது இதுதான் சரோத் என்கிற பாத்திரத்தின் அடையாளம். இந்த அடையாளம்தான் உலகம் முழுவதிலும் இருக்கக்கூடிய எளிய மக்களுக்கு எதிராக தொடர்ந்து எதிர் நிறுத்தப்படுகிறது இன்றைக்கும் அதிகாரத்தின்.. அரசின் அடையாளமாக.

சாமிமலை முழுக்க முழுக்க தென்னிந்தியாவிலிருந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்ட தமிழ் மக்களின் துயரம் பொருந்திய வாழ் நிலையை வாழ்வு முறையை பேசுகிறது.

நிறத்தின் காரணமாகவும் இனத்தின் காரணமாகவும் பேசும் மொழியின் காரணமாகவும் வாழும் முறையின் காரணமாகவும் பின்பற்றும் பழக்கவழக்கங்களின் காரணமாகவும் செயல்படும் அரசியலின் காரணமாகவும் உலகம் முழுவதிலும் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு சிதைக்கப்பட்டு வரும் உலகத்தின் எளிய மனிதர்களின்.. சிறுபான்மை மக்கள் அனைவரின் வாழ்வோடு சாமிமலை பொருந்தி போகிறது.

உலகம் முழுவதும் நிறைய வஜ்ராக்களும் லலிதாக்களும் தீபாக்களும் ராஜேஸ்வரிகளும் இன்னும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு எதிரான வன்மத்தை நிறைய சரோத்துகள் செய்து கொண்டே தான் இருக்கிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக இருப்பதைப் போன்று அவர்களின் ஏழ்மை நிறைந்த வாழ்முறையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் அபுசாலிகளும்.. ப்ராஸ்களும் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் உலகப் பணக்கார நாடுகளெங்கும் . இவர்களுக்கு இடையே எளிய மக்களின் நிஜம் நிறைந்த நேசமும் அன்பும் காதலும் அக்கறையும் பணப் பரிவர்த்தனைக்குள் உயிர் வாழும் நிர்பந்தத்திற்குள் முடிந்து போய் விடுகிறது. அதனையும் மீறி எளிய மக்களின் உணர்வுக்குள் காதலின் ஈரம் சுரந்து கொண்டே தான் இருக்கும்.

இலங்கை தேயிலை தோட்டத்தில் பணி புரியும் பூர்வகுடி மக்களோடு வாழ்ந்து இந்த நாவலை புனைவுகள் கலந்து கொடுத்திருக்கிறார் நாவலாசிரியர் சுஜித் ப்ரசங்க.. மொழிபெயர்ப்பு நாவல்தான் வாசிக்கிறோம் என்கிற எண்ணம் சிறிதேனும் வாசகனுக்கு வந்து விடக்கூடாது என்று நாவலின் வலியை முழுவதுமாக உள்வாங்கி அழகியலோடு இலக்கியத் தரம் வாய்ந்ததாக தமிழ் சமூகத்திற்கு அளித்திருக்கிறார் மொழிபெயர்ப்பாளர் பேரன்பு எம். ரிஷான் ஷெரிப் அவர்கள். வலியை சுமந்திருக்கும் அட்டைப் படத்தை வடிவமைத்து எதிர் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

அனைவருக்கும்
பேரன்பும் வாழ்த்துக்களும்.

சாமி மலை ஒடுக்கப்பட்ட மக்களின், பூர்வகுடிகளின், இலங்கை மலையக தமிழ் மக்களின் வாழ்முறையை வாழ்நிலையை சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ளும் இடர்பாடுகளை பேசுகிறது. எளிய மனிதர்களின் அன்பினை காதலை பிரியத்தை உயிர்கள் மேல் கொண்ட நேசத்தை பேசுகிறது.

அவசியம் வாசியுங்கள்.
சாமிமலை.

நூல் : சாமிமலை 
ஆசிரியர் : சுஜித் ப்ரசங்க (சிங்கள மொழி நாவல்)
தமிழில்: எம்.ரிஷான் ஷெரிப்

விலை : ரூ.₹250/-
பக்கங்கள்: 176
வெளியீடு : எதிர்_வெளியீடு

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924

கருப்பு அன்பரசன்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *