நூல் : தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்
ஆசிரியர் : ச. தமிழ்ச்செல்வன்
விலை : ரூ.₹ 895/
பக்கம் 895.
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

மண்ணும் மனித வாழ்வும் கதைகளை உருவாக்குகின்றன.

கதைகளால் ஆனது உலகம் என்கிறார்கள். கதைகளும் கலைகளும்தான் மொழியையும் வாழ்வியல் பரிணாமத்தையும் உருவாக்கின “எத்தனைகோடிப்பேர் பூலோகத்தில் பிறந்து மடிந்திருக்கிறார்கள். நிஜத்தில் இன்று அவர்கள் இல்லை. ஆனால் அவர்கள் விட்டுச் சென்ற சிந்தனைகள் கண்ணுக்குத் தெரியாமல் பிரபஞ்சத்தை நிறைத்திருக்கின்றன” என்கிறார் புதுமைப்பித்தன். (அன்னையிட்ட தீ)

ஆம்! மனிதர்கள் விட்டுச் சென்ற சிந்தனைகளின் ஒரு பகுதிதான் கதைகள். கதை என்பது மனிதர்களால் அல்லது இயற்க்கையால் ஆனது. வேறு வார்த்தையில் சொல்வதென்றால் மனிதப் பாத்திரங்களின், இயற்கையின் இயக்கமே கதை. ஒரு மனிதனை மையப் படுத்தி இன்னொரு மனிதன் வர்ணிப்பது கதை. ஒருவரை அல்லது ஒரு சம்பவத்தை அல்லது ஒரு விலங்கை வர்ணிக்கிறோம் என்றால் வாழ்வின் நிழல் படிந்து விடுகிறது. சொல்லொணாத் துயரங்களின் ஆழத்தில் இருந்தும் மகிழ்ச்சியின் அடிச்சுவட்டில் இருந்தும் கதைகள் உருவாகின்றன. அந்தக் கதைகள் சொல்லும் செய்தியிலிருந்து அடுத்தகட்ட நகர்வுக்கான தரவுகள் கிடைக்கின்றன.

ஆதி நாளில் இருந்து கதைகள் சொல்லியும் கேட்டும் மனித சமுதாயம் வளர்ந்து வந்திருக்கிறது. ஆனால், தமிழில் நவீனச் சிறுகதையின் தோற்றம் மற்றும் வளர்ச்சி பற்றி விவாதிக்கும் ஒரு ஆய்வுநூல் இப்போது வந்திருப்பது நல்ல முன்னெடுப்பு. இந்நூல் நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துத் தமிழ் உலத்துக்கு அற்பணித்த ச. தமிழ்ச்செல்வன் அவர்களால் பிரம்மாண்டமான வடிவில் எழுதப் பட்டுள்ளது. இதை ஒரு வாழ்நாள் சாதனை என்று சொல்வதில் எந்தப் பிசிறும் இல்லை. அவருடைய நீண்ட நெடிய வாசிப்பின் தாக்கம் நூல் நெடுகப் பரவியும் விரவியும் கிடக்கிறது.

நவீனத் தமிழ்ச் சிறுகதை எழுதத் தொடங்கிய காலம் எது என்ற கேள்விக்கு அவருக்குக் கிடைத்த விடை வா வே சு அய்யர் எழுத ஆரம்பித்த 1910களின் காலம் என்பதுதான். “குளத்தங்கரை அரசமரம்” கதை தமிழின் முதல் சிறுகதை. அந்தப் படைப்பில் இருந்துதான் தமிழ்ச் சிறுகதை வரலாறு துவங்குகிறது என்ற முடிவுக்கு வந்து இந்நூலை எழுத ஆரம்பிக்கிறார் தமிழ்ச் செல்வன்.

சி. சு செல்லப்பா “தமிழ்ச் சிறுகதை” பிறக்கிறது என்ற கட்டுரையில் பாரதி எழுதிய “ஆறில் ஒரு பங்கு” கதைதான் முதல் சிறுகதை என்கிறார். 1888ல் சிங்கப்பூரைச் சேர்ந்த மக்தூன் சாகிப் எழுதிய “வினோத சம்பாஷணை” முதல் தமிழ்ச் சிறுதை என்ற கருத்தும் உண்டு. சில நாவல்கள் எழுதிய ஆசிரியர் ஆர். எஸ். ஜேகப் சொல்வது; ”சரிகைத் தலைப்பாகை” என்ற தலைப்பில் அருள்மிகு சாமுவேல் பவுல் அய்யர் என்பவரால் 1887 ஆம் ஆண்டு ‘நற்போதகம்’ என்ற மாத இதழில் எழுதியதே முதல் சிறுகதை என்கிறார். இப்படி முதல் சிறுகதை எழுதப்பட்ட காலம் எது என்பதில் பல கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும் ச. தமிழ்ச்செல்வன் அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, 1913 ஆம் ஆண்டுதான் தமிழ்ச்சிறுகதையின் துவக்க காலம் என்கிறார். “குளத்தங்கரை அரச மரம்” தமிழின் முதல் சிறுகதை.

இந்த ஆய்வுநூலில் 1913ல் இருந்து 70கள் வரை 51 படைப்பாளிகளின் சிறுகதைகளை விவாதிக்கிறார் நூலாசிரியர். முன்னுரையில் ”இது ஆய்வு நூல் அல்ல” என்று சொன்னாலும் வாசிப்பு அனுபவத்தில் ஆய்வுப் புலமே பதியமிடப்பட்டிருக்கிறது. ஆய்வு என்றால் என்ன? அது பல விவாதங்களுக்கு உட்பட்டது என்றாலும் சுருக்கமாக இப்படிக் கணிக்கலாம். “ஏற்கனவே உள்ள கருத்தியலை விவாதித்து, அதற்குள் ஊடாடி நிற்கும் புதிய பருப்பொருளை வெளிக் கொண்டு வருவதே ஆய்வு.” தண்ணீருக்குள் மின்சாரம் இருக்கிறது என்பது நிஜம்; ஆனால் தண்ணீரின் வேகத்துக்குள் ஒரு சக்கரத்தின் விசையை ஊடாட விடும்போதுதான் அந்த நிஜம் ஒரு பருப்பொருளாய் மனிதப் பயன்பாட்டுக்குக் கிடைக்கிறது. நீரின் விசையைச் சக்கரச் சுழற்சிக்குள் செலுத்துவதே ஆய்வு; விடையாக வருவது மின் சக்தி.

எதை, எப்படி, எந்தவிதமாய் எழுதுவது என்ற கேள்விக்கான விடையைத் தேடுவது மட்டுமல்லாமல், ஒவ்வொரு படைப்பின் வர்க்க சேர்மானம், அரசியல் கணக்கு என்பவற்றையும் தேடிக் கண்டடைகிறது நூல்.

அய்ரோப்பாவில் நிகழந்த தொழிற்புரட்சிக்குப் பின், நிற்க நேரமின்றி அலையும் வாழ்க்கைமுறையில் இருந்துதான், சிறுகதை இலக்கியத்தின் தேவை தோன்றியது என்கிறார் தமிழ்ச்செல்வன். அவசர அவசரமாய் வாசித்து முடிக்க வேண்டிய வாழ்க்கை நிர்ப்பந்தம். ஒரு சின்ன சம்பவத்தை இலக்கியமாக்கிவிட வேண்டும் என்ற எழுத்தாளரின் மன வியாகூலம்.! இவ்விரண்டும் சேர்ந்தே சிறுகதை இலக்கியத்தை சாத்தியப் படுத்தின. தொழிற்புரட்சி நிகழ்ந்த பின் மனித இயக்கம் வேகமடைகிறது எனக் கண்டறிந்து அந்த வேகத்துக்குத் தகுந்து இலக்கிய ஆக்கம் வேறு பரிமாணம் கொள்கிறது என்பதே ஓர் ஆய்வுமுறைதானே!

“மங்கையர்க்கரசியின் காதல்” என்ற தொகுப்பே (வ வே சு அய்யர் எழுதியது) தமிழின் முதல் சிறுகதைப் படைப்பு. வ வே சு அய்யர் மறைவுக்குப் பிறகு அவர் மனைவி பாக்கியலட்சுமி தொகுத்து வெளியிட்டார். (ஆக முதல் தொகுப்பாசிரியர் பாக்கியட்சுமி என்பது தெரிகிறது.) ராஜாஜி இந்த நூலைப் பற்றிக் குறிப்பிடுவது முக்கியமானது. “இக்கதைகளை ஒருவன் படித்துப் புத்தகத்தைக் கீழே வைக்கும் காலத்தில் அவன் மனதில் பரிசுத்தமான உணர்ச்சிகளும் உன்னதமான எண்ணங்களும் ததும்பும்.”

வ வே சு அய்யர், மாதவய்யா, பாரதி ஆகியோர் தமிழ்ச் சிறுகதை இயக்கத்தின் முதல் மூவர் என அழைக்கலாம். இவர்கள் 1926க்கு முன்பே மரணமடைந்து விட்டனர். அதனால் இவர்கள் எழுதிய காலம் தமிழ்ச் சிறுகதையின் முதல் காலகட்டம் ஆகும். அடுத்தடுத்த காலகட்டத்தில் புதுமைப்பித்தன் உள்ளிட்ட மணிக்கொடி எழுத்தாளர்கள் வருகிறார்கள்.

தமிழிலும் ஆங்கிலத்திலும் பெரும் புலமை பெற்றிருந்த மாதவையா அந்தக் காலத்தின் புரட்சிப் படைப்பாளி என நிறுவுகிறார் ஆசிரியர். ஜாதி ஆதிக்கமும் தீண்டாமைக் கொடுமைகளும் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த காலத்தில், தான்பிறந்த பிராமண ஜாதிக்கு எதிரான கருத்தை உள்ளடக்கமாக வைத்துக் கதை எழுதினார்.. சாதி எதிர்ப்பு, இந்து மத சீர்கேடுகளைச் சாடுதல், பெண் கல்வி, ஆண்பெண் சமத்துவம், விதவை மறுமணம் போன்ற கருப்பொருள்களில் முற்போக்குப் படைப்புகளைத் தந்தார். அதனாலேயே சனாதனவாதிகளால் அவர் வெறுத்து ஒதுக்கப்பட்டார். “சுய சாதி நிராகரிப்பு” என்ற இன்றைய பேசுபொருளை அன்றே தன் வாழ்க்கையில் கடைப்பிடித்தார்; அல்லது தன் படைப்புகளில் பதிவுசெய்தார்.

1883ஆம் ஆண்டு “சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்ற சட்டம் ஆங்கில அரசால் இயற்றப்படுகிறது. மனமுவந்து வரவேற்ற மாதவையா “தந்தையும் மகனும்” “குதிரைக்காரக் குப்பன்” “தில்லை கோவிந்தன்” ஆகிய சிறுகதைகளில் அதைப் பதிவு செய்கிறார். “பார்ப்பானை ஐயனென்ற காலமும் போச்சே” எனப் பாடிய பாரதியைப் போலவே சிறுகதைகளில் செய்து காட்டினார் மாதவய்யா.

முதல் சிறுகதை ஆசிரியர் வ வே சு அய்யர், தான் நடத்திய குருகுலத்தில் பிராமணர்களுக்கும் சூத்திரர்களுக்கும் தனித்தனிப் பந்தி வைக்கப்பட்டது. அதற்கான எதிர்வினைபோல் எழுதப்பட்ட கதை “ஏணியேற்ற நிலயம்.” இன்றைக்கும் ஆய்வாளர்களால் வியந்து போற்றப்படும் கதை அது. (மாதவய்யர் என்ற தன் பெயரை மாதவய்யா என மாற்றிக் கொண்ட்தே புரட்சிதானே?) ஆக, மாதவய்யா ஒரு புரட்சிப் படைப்பாளி என நிறுவுகிறார் தமிழ்ச்செல்வன்.

தமிழ்ச் சிறுகதை இயக்கத்தின் மிக முக்கிய முன்னோடி புதுமைப்பித்தன். அவர் படைப்புகளின் அடிநாதம் சமூக நையாண்டியே. சமூக ஏற்றத் தாழ்வுக்கு எதிரான கருத்தியல் அவர் படைப்புகளில் மிளிர்கிறது. ஆனாலும் இலக்கியம் படைப்பது சமூகத்தை உய்விப்பதற்காக அல்ல என்ற கருத்தைக் கொண்டிருந்தார். “தனது ஆத்ம திருப்திக்காக எழுதிக் கொள்வதைவிட விவேகமான காரியம் வேறு கிடையாது” என்றும் ”கலை தர்மஸ்தாத்திரம் கற்பிக்க வரவில்லை” என்றும் பிரகடனப் படுத்தினார்.

கிறித்துவ மதத்துக்கு மாறுவதற்கான வாய்ப்பை இந்து மதம்தான் தருகிறது எனக் கண்டறிந்து எழுதினார் மாதவ்வய்யா என்றால் இஸ்லாமிய கிறித்துவ மதங்களின் மீதும் மதமாற்ற நடவடிக்கை மீதும் புதுமைப் பித்தனுக்குக் கடுமையான ஒவ்வாமை இருந்தது. ”புதியகூண்டு,” ”கொடுக்காப்புளி மரம்” ”நியாயம்” போன்ற கதைகளிலும் சில கட்டுரைகளிலும் அது வெளிப்பட்டிருக்கிறது. புதுமைப் பித்தனின் இந்த உள் முரணை விரிவாக விவாதிக்கிறது நூல். திகசிக்குப் பிறகு, புதுமைப் பித்தனை விமர்சனப் பார்வையோடு அணுகியவர் தமிழ்ச் செல்வனாகத்தான் இருக்கும். இது ஒரு முக்கியமான ஆய்வுநிலை என்று நான் கருதுகிறேன்.

புதுமைப்பித்தன் படைப்புகளில் இதுபோன்ற பலவீனங்கள் இருந்தாலும் “அவர் அளவுக்குத் தன் சமகாலத்தை, அதன் அரசியல், பொருளாதாரத்தை, பண்பாட்டுக் கூறுகளைத் படைப்புகளின் வழி ஈவு இரக்கமின்றிக் கேள்விக்கு உள்ளாக்கிய இன்னொரு கலைஞனைத் தமிழ் இலக்கிய உலகம் இன்றுவரை கண்டடையவில்லை.” என்கிறார் நூலாசிரியர்.

அன்றுமுதல் இன்றுவரை தமிழில் இலக்கியம் படைத்து வாழ்ந்துவிடலாம் என்று நினைத்து எழுதிய யாரும் படைப்புகளில் வெற்றியடைந்த அளவுக்குப் பொருளாதாரத்தில் உயர்வடைய முடியாமல் தோற்றுத்தான் போயிருக்கின்றனர். அவர்களில் முக்கியமானவர் கு ப ராஜகோபாலன். ஆண்பெண் உறவுதான் அவர் எழுத்தின் சாராம்சம். ”பெண்ணின் சித்தத்தை இருளாக்கும் உணர்ச்சிகளையும் கருவாக நின்றுவிட்ட வேட்கைகளையும் நுட்பமாகவும் அநாயசமாகவும் படம் பிடிப்பதில் நிகரற்றாவர்; பெண் மனதைச் சித்தரிப்பதில் வல்லவர்.” கரிச்சான் குஞ்சுவின் இந்தக் கூற்று உண்மை என்பதை, குபராவின் முதல் கதையாகிய “நூருன்னிசா”வில் தொடங்கி பலவற்றிலும் பதியமாகி இருக்கிறது..

வறுமையோடு மல்லுக்கட்டி மாய்ந்தவர் புதுமைப் பித்தன் என்றால் வறுமையோடும் நோயோடும் இடையறாது போரிட்டு மாண்டு போனார் குபரா. முதலில் கண்பார்வை இழந்து, பின் கொஞ்சம் வெளிச்சம் பெற்று மீண்டார். பிறகு “காங்கரின்” என்ற வியாதியால் அவர் கால்கள் பாதிக்கப்பட்டன. அந்த நோயே அவர் உயிரை வாங்கியது. தி, ஜானகிராமன் எழுதுகிறார். ”என் மனதில் இருள் சூழ்ந்து கிடந்தது. கரிச்சான் குஞ்சுவும் என்னோடு சேர்ந்து அழுதுகொண்டிருந்தான். குபரா கிடந்த கிடையும் பட்ட சித்திரவதையும் எங்கள் இருவர் மனதிலும் அநிச்சயத்தையும் கலவரத்தையும் மூட்டியிருந்தன. நாங்களும் கையாலாகாமல் தவித்தோம். கால்களின் வெளியே இரண்டு பக்கங்களிலும் எரிச்சல்! அது பையபைய உயிரை அரித்துக் கொண்டிருக்கிறது. ……கால்களை எடுத்துவிடலாம் என்று ஆஸ்பத்திரியில் தீர்மானித்தார்கள். குபரா அதை மறுத்துவிட்டார். நனைந்த கண்களுடன் let me die, A peaceful death. என்று சொல்லிவிட்டு, “காவேரித் தீர்த்தம் ஒரு டம்ளர் வேண்டும்” என்றார். ஓடிப்போய்க் கொண்டுவந்து கொடுத்தார்கள். கை நடுங்க அதை வாங்கி ஒருவாய் அருந்தினார். உடனே உடல் துவண்டது. வீட்டுக்குக் கொண்டு போவதற்குள் உயிர் பிரிந்தது.”

தமிழ்ச் சிறுகதை இயக்கத்தின் மகத்தான படைப்பாளி இறந்து போனதை ஒரு காவியப் பனுவல் போல சொல்லிச் செல்கிறார் தமிழ்ச் செலவன்.

இந்த ஆய்வு நூலில் 44 ஆண் படைப்பாளிகளும் ஏழு பெண் எழுத்தாளர்களும் வருகின்றனர். அவரவர் காலத்தின் சமூக வாழ்வியல் வரலாறு அவர்களின் கருப் பொருளாகி கதையாடலாகவும் கலையாடலாகவும் மிளிர்ந்திருக்கின்றன. சுதந்திர போராட்ட காலத்தின் வெளிப்பாடுகள், திராவிடப் பரப்புரையின் விழுதுகள், மானுட யதார்த்தத்தை விலக்கி வைத்த வன்முறைப் போக்கைக் கேள்விக்கு உட்படுத்திய யதார்த்தவாதப் படைப்புகள் என மூன்றுவகை பாடுபொருள்கள் உள்ளடக்கங்களாய் விதைக்கப்பட்டன.

ஒரே ஒரு சிறுகதை எழுதிப் புகழ் பெற்ற மூவலூர் ராமாமிர்த அம்மையார் முதல் 300க்கும் மேற்பட்ட கதைகள் எழுதிய பி. எஸ் ராமையா வரை அனைவருடைய படைப்புகளையும் பிசிறின்றி ஆய்வு செய்து ஓவியச் சித்திரமாய்த் தீட்டி இருக்கிறார் தமிழ்ச்செல்வன்.

தமிழின் மிக நுட்பமான படைப்பாளி கிருஷ்ணன் நம்பி என்றால் மிகையாகாது. வித்தியாசமான உள்ளடக்கம், விதவிதமான வடிவங்கள் என்று பரிசோதித்துப் பார்த்தவர். ஒருசோற்றுப் பதமாக “தங்க ஒரு…” கதையைச் சொல்லலாம். வசிக்க வீடு கிடைக்காமல் மனிதர்கள் தங்கள் உடலைக் குறுக்கிக் கொண்டு ஒரு ஷூவுக்குள் வாழ்கிறார்கள். மாய யதார்த்தவாதத்தின் சுவடு படிந்த கதை இது. “மருமகள்,” ”சுதந்திரக்கொடி,” நீலக்குயில்” ஆகியவையும், ஏற்கனவே நடைமுறையில் இருந்த வடிவக் கட்டளையைப் புறந்தள்ளிவிட்டுப் புது வடிவம் எடுத்துப் புலர்ந்தவை. 44 வயது வரை வாழ்ந்து 25 கதைகள் மட்டுமே எழுதியிருந்தாலும், தமிழ்ச்சிறுகதை வரலாற்றின் தவிர்க்க முடியாத படைப்பாளியாய்த் திகழ்கிறார்.

தமிழ்ப் புனைவிலக்கியத்தைச் சிறப்பு, சிறப்பின்மை பற்றி மதிப்பீடு செய்யும் க, நா, சு கிருஷ்ணன் நம்பி பற்றி எழுதுவது எந்த வகையில் சேர்த்தி என்று தெரியவில்லை. “அவர் (கிருஷ்ணன் நம்பி) கதைகளை நான் தமிழில் நல்ல கதைகள் என்று வெளியிடுகிற பட்டியலில் சேர்ப்பதில்லை என்று அவருக்கு வருத்தம்தான் என்பது எனக்குத் தெரியும். அந்தத் தரத்துக்கும் அப்பாற்பட்ட ஒரு தரத்தை எட்ட முடியாமல் போனது, அவருடைய முற்போக்குச் சிந்தனை இருட்டினால்தான் என்றும் எனக்கு நினைப்பு.”

இந்தக் கருத்துபற்றி தமிழ்ச்செல்வன் எழுதுகிறார். ”முற்போக்குச் சிந்தனைகளை இருட்டெனக் கண்ட க, நா, சுவின் பட்டியலில் கிருஷ்ணன் நம்பியின் கதைகள் இடம் பெறாமல் போனதில் வியப்பொன்றும் இல்லை.” ஆம்! க நா சு சதா சர்வகாலமும் பிராமணியத்தையும் கலை கலைக்காவே என்ற இலக்கிய சித்தாந்தத்தையும் தூக்கிப் பிடித்துக் கொண்டே அலைந்தார்.

கிருஷ்ணன் நம்பியாவது 25 கதைகளின் ஆசிரியர். வெறும் 14 கதைகள் எழுதி மகத்தான படைப்பியக்கவாதிகளின் வரிசையில் தன்னை இணைத்துக் கொண்டவர் எழுத்தாளர் லிங்கன். “கருணை மனு” என்ற அவரின் ஒரே ஒரு தொகுப்பை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட்டுள்ளது. எழுத்தாளனுக்கு மதிப்பில்லாத ஒரு சமூகத்தில் ஏழையாய் இருந்துகொண்டு எழுதுவது சவாலானது. ஆனால் இப்படியான ஏழை எழுத்தாளர்களுக்குக் களம் அமைத்து ஊக்கப்படுத்தியவர்கள் இடதுசாரிகள் என்பது இன்னொரு முக்கியக் குறிப்பு. லிங்கன் கலை இலக்கியப் பெருமன்றத்தில் இயங்கியபடி தாமரையில் எழுதினார். ”முற்போக்குப் படைப்பாளிகள் சமூகப் பிரச்சாரகர்கள்” என்று “சுத்த” இலக்கியவாதிகளால் முத்திரை குத்தப்பட்டிருந்த காலத்தில், “கலை அமைதி கெடாத படைப்புகள் செய்தார் லிங்கன்” என்கிறார் தமிழ்ச் செல்வன். “எல்லாக் கதைகளிலும் வர்க்க அரசியல் பேசும் லிங்கன் ஒன்றில் கூட முஷ்டி உயர்த்தவில்லை.”

சோகமான சங்கதி என்னவென்றால் லிங்கன் மரணித்து பல மாதங்கள் கழித்துத்தான் வெளி உலகுக்குத் தெரிய வந்தது. பொருளாதாரத் தேடல் ரம்யமாய் இருந்தால்தான் எழுத்துத் தேடல் தடையின்றி நிகழும் என்பதற்கு லிங்கன் ஓர் உதாரணம். அவர் வாழ்க்கையை வாசிக்கும்போது கண்கள் துளிர்ப்பதைத் தவிர்க்க முடியவில்லை.

யாராலும் பின் தொடர முடியாத எழுத்தாளர்கள் என்றால் அது மௌனியும் சுயம்புலிங்கமும்தான் என்கிறார் தமிழ்ச்செல்வன்.. (கோணங்கியையும் சேர்த்துக் கொள்ளலாம் என்பது என் கருத்து..) புரியாத் தன்மையோடு எழுதியவர் மௌனி. “என் எழுத்தைப் புரிந்துகொள்ளும் ஆற்றால் எந்தத் தமிழனுக்கும் இல்லை” என டமாரம் அடித்துக் கொண்டார் ஆனால் சுயம்புலிங்கம் மக்கள் மொழியில் எளிமையாக எழுதினார். சுயம்புலிங்கத்தின் கவிதைகளையும் கதைகளையும் அறிந்து புரிந்து, ‘கல்குதிரை’ இதழில் அவற்றைப் பிரசுரித்து அவரின் மேதமையை வெளி உலகுக்கு அறிமுகப் படுத்தினார் கோணங்கி. கோணங்கிக்கு மகிழ்ச்சிகரமான பாராட்டுகள்.

“சின்னஞ்சிறு கதை” என்ற பெயருடன் ஆனந்த விகடன் 80களில் பிரசுரித்தவற்றைவிட சிறிய வடிவம் கொண்டவை சுயம்புலிங்கத்தின் கதைகள். அதிகபட்சம் இரண்டு பக்கங்கள்!

லிங்கனைவிட ஏழ்மையில் உழன்றவர் சுயம்பு. தூத்துக்குடி மாவட்டம் வேப்பலோடை என்கிற பனங்காட்டுக் கிராமத்தில் பிறந்து, பிழைப்புத் தேடி 1964ல் சென்னை சென்று படாத கஷ்டம் இல்லை. மாட்டுத் தீவனக் கடையில் தொழிலாளி, தள்ளுவண்டியில் வைத்துப் பொருட்களை விற்பது, சிறிய மிட்டாய்க் கடை போட்டு நடத்துவது எனப் பொருளாதாரச் செல்வாக்கியம் இல்லாத தொழில்கள் செய்து நொம்பலப்பட்ட வாழ்க்கை அவருடையது. ஆனாலும் நூலகம் சென்று வாசிப்பது, அங்கு ”மக்கள் எழுத்தாளர் சங்கம்” நடத்திய கூட்டங்களைக் கூர்ந்து கவனிப்பது என்று தனது இலக்கிய அறிவை வளர்த்துக் கொண்டார்.

கஞ்சிப்பாடு நிறைவடையாத வாழ்க்கையின் பிரதிபலிப்பு அவரின் பல படைப்புகளில் வழிகின்றன. “ஒரு மண்சட்டியில் கம்மங்கஞ்சியை நல்லாக் கரைப்பார். வெஞ்சனத்துக்கு ரெண்டு வத்தல், ரெண்டு உப்புக்கல்! அம்மியில் வச்சித் தட்டுவார். மொளகாத்தூள ரெண்டு வெரலிட்டு அள்ளுவார்; நாக்குல வச்சுத் தேய்ப்பார்; கஞ்சி சரசரன்னு போகும். அம்மியில் மீதி இருக்கிற மொளவாத் தூள அள்ளி அடிநாக்குல வைப்பார்; கண்ண மூடிக்கிட்டுக் கஞ்சியக் குடிப்பார்.”

”நடை” என்ற சிறுகதையில் வரும் கஞ்சிப்பாட்டுச் சித்திரம் இது. இடைத்தட்டு எழுத்தாளர் எவராலும் தீட்ட முடியாத வாழ்வியல் சித்திரம். இதுபோன்ற சித்தரிப்புகள் இவர் கதைகளில் அநேகம் இருக்கின்றன.

“நாட்டுக்குப் பொருத்தம்; நாமே நடத்தும் கூட்டுப் பண்ணை விவசாயம்” என்றொரு திரையிசைப் பாடல் ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் ஊரெங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது. கூட்டுறவு சங்கம் ஏற்படுத்தி மானாவாரி விவசாயிகளுக்கு அரசு கடன் தந்து விவசாயம் செய்யச் சொன்னது. மழையில்லாக் காலங்களில் விதைப்பு வரண்டு பயிர்கள் கருகிப்போகும். இதைப் புரிந்துகொள்ளாத அரசு அதிகாரிகள் கடனைத் திருப்பிச் செலுத்தாத விவசாயிகளின் நிலத்தையோ வீட்டுப் பொருட்களையோ ஜப்தி செய்து கொண்டு சென்றுவிடுவார்கள்.

”மானாவாரி மனிதர்கள்” என்ற கதையில் சுயம்புலிங்கம் எழுதுகிறார். “நான் ஒரு மானாவாரி சமுசாரி; மழையை மட்டும் நம்பி விவசாயம் செய்து பிழைக்கிறவன். பருவ மழை தவறும்போதெல்லாம் எனக்குக் கோவம் வரும்; அப்போதெல்லாம் நான் இந்த வானத்தையே பகைத்துக் கொள்வேன். ஆரோக்கியம் கெட்ட இந்த வானத்தை இடித்துத் தகர்த்தால் என்ன என்று எனக்குத் தோணும்.

இன்றைக்கு என் கோவம் இவர்கள் (அதிகாரிகள்) மேல் தாவியது. என்ன மனிதர்கள் இவர்கள்? உண்மையாகவே விவசாயிகளுக்கு உதவக் கூடியவர்கள்தானா இவர்கள்? நல்ல பெய சங்கம்; நல்ல பெய சர்க்கார்; நான் வானத்தை இடித்துத் தகர்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இடித்துத் தகர்த்து நிர்மூலமாக்க வேண்டியது வானத்தை இல்லை; அரசு நிர்வாகத்தையாக்கும் என்று இப்போது புரிந்துகொண்டேன்.”

அதற்கடுத்து ஒரு வரி எழுதுகிறார். “கிணற்றில் குளித்துக்கொண்டிருக்கிறேன்; சுகமாக இருக்கிறது.”

இந்த வரி முக்கியமானதாகத் தோன்றுகிறது தமிழ்ச்செல்வனுக்கு. சூடு பொசுக்கும் மனநிலையில் சர்க்காரை இடித்துத் தகர்க்க நினைக்கும் சுயம்பு அடுத்த வரியிலேயே சுகம் தரும் கிணற்றுக் குளியலைச் சொல்வது சரியா என்ற கேள்வியை எழுப்பி அதற்கான விடையைத் தேடிச் செல்கிறார்.

“அடித்துத் தகர்த்து நிர்மூலமாக்க வேண்டியது அரசு நிர்வாகத்தை” என்ற வரியோடு கதையை முடித்திருந்தால் அது கோபத்தோடு முடிந்திருக்கும். அப்புறம் ஏன் “கிணற்றில் குளித்துக் கொண்டிருக்கிறேன்; சுகமாக இருக்கிறது” என்று ஒரு வரியை எழுதி, அவரே கிளப்பி விட்ட கோபத்தைத் தணிக்கிறார்?”

தமிழ்ச்செல்வன் மேலும் எழுதுகிறார். “இதுதான் சுயம்புவின் கதைப்பாணி; குளிர்ச்சியான கிணற்றுத் தண்ணீருக்குள் உட்கார்ந்து சுகமாக உணரும்போது அந்த நாளின் வெக்கை நினைவில் அலையடிக்கிறது என்று சொல்லலாம். அல்லது அப்படியே வெந்த நினைவோடு கதையை முடிக்கப்படாது என்று சுயம்பு நினைத்திருக்கலாம். நடந்த சூடு தணிஞ்ச அப்புறம்தானே கதையை மத்தவுகளுக்குச் சொல்லுகிறோம்; அந்தப் பிரக்ஞையும் காரணமாக இருக்கலாம். (கோபத்தோடு முடித்திருந்தால் அது விரக்திநிலை என்றும் நினைத்திருக்கலாம் என்பது என் எண்ணம்..)

‘கல்லறைத் தோட்டம்,’ ‘நீர்மாலை’ ‘சீம்பால்’ ‘குருவி’ எனப் பல கதைகளில் இப்படி ஆற்றுப்படுத்தி, அமத்தி முடிக்கிறதைத் தன் பாணியாகக் கொண்டுள்ளார் சுயம்பு.” (சுயம்புவின் நடையோடு தனது நடையை ஒத்திசைவு செய்திருப்பதைக் காண்க.) இது ஓர் ஆய்வுநூல்தான் என அடையாளப் படுத்தும் பகுதிகளில் இதுவும் ஒன்று.

இந்த நூலின் மிக நீண்ட அத்தியாயம் கி, ராஜநாரயணன் உடையது. 61 பக்கங்கள். அள்ளிப் பெருக்க அவரின் முற்றத்தில் அந்த அளவு தான்யம் குவிந்து கிடக்கிறது. எல்லாமே கரிசக்காட்டு விளைச்சல்கள். வரண்ட நிலத்திலும் வளம் காணும் நிறைந்த மனசு.

நூற்றாண்டு காலம் வாழ்ந்த மகா படைப்பாளி அவர். சிறுகதைகள் என்று எடுத்துக் கொண்டால் 82 தான் எழுதியிருக்கிறார். நாவல்கள், கட்டுரைகள், கடிதங்கள், பாலிய்ல் கதைகள், நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம் எனப் பல பரிமாணங்கள் அவர் படைப்புச் சக்கரத்தின் ஆரங்களாய்ச் சுழல்கின்றன. ஏழாப்புவரை மட்டுமே வாசித்துள்ள கிரா, பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தின் பேராசிரியராகப் பணியாற்றியிருக்கிறார்.

அவர் ஆரம்பகாலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயப் பிரிவுச் செயலாளராகப் பணியாற்றியபோது எழுதிய ”தோழன் ரெங்கசாமி” கதை சமுதாயத்துக்காக உழைத்து, சித்திரவதைக்கு உள்ளான தியாகத்தை விவரிக்கிறது. இதுபோல் இன்னும் பல அரசியல் கதைகள். அரசியல் என்றால் கட்சி அல்லது வர்க்க அரசியல் மட்டுமில்லை. வாழ்வியல் அரசியலும்தான். தீர்வை வசூலிக்க வரும் ஓர் அதிகாரியைப் பற்றி விவரிக்கிறார் கிரா. பல் ஊத்தையைக் குத்துபவராக அதிகாரியைச் சித்தரிப்பது வாசக மனதில் அதிகார வர்க்கத்தின்மீது அருவருப்பு உணர்வை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது. தீர்மானகரமாக அவர்கள் எல்லாம் இப்படித்தான் என்று ஓங்கி முத்திரை குத்தும் சித்தரிப்பு! கிரா என்கிற சம்சாரியின் கலை அரசியல் இது.

கிரா என்றால் கரிசல் காட்டுக் கலைக்களஞ்சியம் என நிறுவுகிறார் தமிழ்ச்செல்வன். அவர் பாடாத பொருள் இல்லை; சொல்லாத சொலவடை இல்லை. தமிழ் இலக்கியத் தளத்தின் மகத்துவமான சக்கரவர்த்தி அவர்.

சனிப்பிணம் சிறுகதையின் மூலம் எழுத்துலகத்துக்குள் நுழைந்தவர் கந்தர்வன். அவர் ஓர் அரசு ஊழியர். அலுவலக ஊழியர்களை அணிதிரட்டும் பணியில் ஈடுபட்டு, துறை ரீதியான தண்டனைகள் அனுபவித்தவர். நாகலிங்கம் என்ற தன் சொந்தப் பெயரை ‘கந்தர்வன்’ என மாற்றிக் கொண்ட நிகழ்வு சுவாரஸ்யமானது. தமிழக முதல்வர் அண்ணாவையும் ஒன்றிய அமைச்சர் விவி கிரியையும் விமர்சனம் செய்து ஒரு கட்டுரை எழுதி ‘கண்ணதாசன்’ இதழுக்கு அனுப்பினார். ஆசிரியர் ராம. கண்ணப்பன் கூறினார். “நீங்கள் அரசு ஊழியராக இருப்பதால் புனைபெயர் வைத்துக் கொள்ளுங்கள்.” என்ன பெயர் வைத்துக் கொள்வது என யோசித்த போது, “அப்போது நான் ஜாவர் சீத்தாராமனின் கந்தர்வகானம் வாசித்துக் கொண்டிருந்தேன்; அதையே எனது புனைபெயராக்கிக் கொண்டேன்” என்கிறார்.

அடிப்படையில் அவர் ஓர் இடதுசாரி எழுத்தாளர். குறிப்பாக மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் இயங்கிக் கொண்டிருந்தார். இடதுசாரிகளின் படைப்புகளை அதிகம் பிரசுரித்தது “செம்மலர்” என்ற மாதாந்திர இலக்கிய ஏடு. ஏட்டில் எழுதப்படாத விதி ஒன்றை அதில் எழுதியவர்கள் கைக்கொண்டார்கள். எந்தப் பாத்திரத்துக்கும் ஜாதி ஒட்டைச் சேர்ப்பதில்லை என்பதே அந்த விதி. ஜாதியில்லாத சமுதாயம் உருவாகவேண்டும் என்ற ஆசையின் விளைவாக இருக்கலாம்.

கந்தர்வன் அதை உடைத்தெறிந்தார். ஜாதி வேண்டாம் என்பது சரி; இருக்கும் ஜாதியப் பெயர்களை இலக்கியத்தில் பிரதிபலிக்காமல் இருப்பது முழு யதார்த்தமாகுமா?

சனிப்பிணம் கதையின் தொடக்கம் இப்படி இருக்கிறது. “ராமு நாடாரின் மளிகைக் கடையை விட்டுக் கிளம்பிய ஆராயி…….” அப்போது முற்போக்கு எழுத்தாளர்கள் பலருக்கும் எழுந்த கேள்வி “நாடார் என்று குறிப்பிடலாமா?” என்பதுதான். கந்தர்வனின் புகழ்பெற்ற படைப்பாகிய “சீவன்” கதையில் “கந்துப்பிள்ளை” ”கூழுப்பிள்ளை” எல்லாம் வருகிறார்கள். சாதிப்பெயரை வலிந்து ஒட்டவும் வேண்டாம்; வெட்டவும் வேண்டாம் என்பது கந்தர்வனின் முடிவு.

61 கதைகளை எழுதியுள்ள அவரது படைப்புகளில் முக்கியமானது என்று தமிழ்ச்செல்வன் குறிப்பிடுவது “சீவன்” என்ற கதையைத்தான். இந்தக் கதையில் ஒரு வித்தியாசமான கிறுக்கனை அறிமுகப் படுத்துகிறார் கந்தர்வன். அவனின் பிச்சை எடுக்கும் பாணி அலாதியானது. அவன் ஏந்தும் தட்டில்தான் எதையும் போடவேண்டும்; கையால் வாங்க மாட்டான். சிலர் வெறுந்தண்ணியைக் கூட தட்டில் ஊற்றி ஏமாற்றுவதுண்டு.

முனியசாமி கோயில் எதிரில் இருக்கும் அரசமரமே அவன் வசிப்பிடம். முனியப்பன் துடியான சாமி. எப்போதாவது சுருள்காற்று சுழற்றிச் சுழற்றி அடிக்கிறது என்றால் முனியசாமி வேட்டைக்குப் போய்விட்டு வருகிறார் என்று அர்த்தம். மழை சோவென்று கொட்டும். ஊரார் “முனியய்யா எச்சில் துப்புகிறார்” என்பார்கள். இரவு நேரங்களில் அவ்வழியில் பயணிக்கும் யாரும் அவன் பார்வைபட்டு மயங்கி விடுவார்கள்; அல்லது மாண்டு விடுவார்கள். அந்தக் கிறுக்கன் எந்த பயமும் இல்லாமல் அங்கேயே கிடக்கிறான்.

ஒருநாள் ஊரே சிதைந்து போகும் அளவுக்கு சூறாவளியுடன் கூடிய மழை கொட்டுகிறது. பலரும் அந்தக் கிறுக்கன் என்ன ஆனானோ என நினைத்தபடி தர்மகர்த்தா கூழுப் பிள்ளையிடம் சொல்கின்றனர். அவர் கோயிலை நோக்கி நடக்கிறார்; அரசமரம் கங்கு கணக்கு இல்லாமல் ஆட்டம் போடுகிறது. வில்லாய் வளைந்து ஆடுகிறது; வேர்ப்பக்கங்கள் விசித்து வெளியே வந்துகொண்டிருந்தன. கிறுக்கன் தூரடியில் படுத்துக் கிடக்கிறான். கூழுப்பிள்ளை தன் கண்ணாலேயே பார்த்தார். அந்தக் கிறுக்கன் அப்போதுதான் தூக்கத்தில் இருந்து எழுந்து அழுக்கு மூட்டையையும் தகர டப்பாவையும் அலுமினியத் தட்டையும் தூக்கிக் கொண்டு மரத்டிடையை விட்டு இருபதடி நடந்திருப்பான்; சடசடவென்று அரசமரம் வேரோடு தூரோடு முனியசாமி சிலைமேல் விழுந்தது. கூழுப்பிள்ளை கிட்ட வந்து பதறப் பதறப் பார்க்கிறார். சின்னச் சின்ன கற்களாய்ச் சிலை சிதறிக் கிடந்தது. ஊர் ஜனம் கூடிவிட்டது. கூழுப் பிள்ளைக்குக் கண்கள் பொங்கி வந்தன. “கிறுக்கன் தப்பிச்சுட்டான்; சாமி போயிருச்சே.”

நாத்திக சித்தாந்தத்தின் உச்சமான கதை இது. .ஏற்கனவே எழுதப்பட்ட இந்தியக் காப்பியங்கள் தெய்வம் ஜெயித்து மனிதன் தோற்பதை விவரிக்கின்றன. இந்தக் கதை கிறுக்கன் ஜெயித்து தெய்வம் சிதறுவதைப் படம்பிடிக்கிறது. ”காவிய மரபின் எதிர் இயக்க நிலையே சீவன் கதை” என நிறுவுகிறார் தமிழ்ச்செல்வன்.

தமிழ்ச் சிறுகதை இயக்கத்தின் ஆரம்பகட்ட படைப்பாளிகளில் பெரும்பாலானோர் தஞ்சைத் தரணியைச் சேர்ந்தவர்கள். குறிப்பாகக் கும்பகோணம். காவேரி நதி பாய்ந்து நெல்லும் புல்லும் விளைந்த செழுமையான பூமி. அந்த நிலத்தில்தான் ஆண்டான் அடிமை முறை ஆழமாய் வெரூன்றி இருந்தது. முதலாளித்துவமோ, டெமாக்ரசியோ நுழையாத இருண்ட பூமி அது. கூலித் தொழிலாளிகள் சாணியால் குளிப்பாட்டப் பட்டு சவுக்கால் அடிக்கப் பட்டார்கள். அரசு நிர்வாகத்தால் அதைத் தடுக்க முடியவில்லை. நிலப்பிரபுக்கள் தனி ராஜ்யம் நடத்திக்கொண்டிருந்தார்கள்.

தஞ்சைத் தரணியைச் சேர்ந்த எழுத்தாளர்களின் படைப்புகளில் இந்த வர்க்க முரண்பாடு பதியமாகவில்லை. அதற்கு மிக முக்கியக் காரணம் அவர்கள் அனைவரும் நடுத்தர அல்லது மேல்தட்டு எழுத்தாளர்கள் என்பதுதான்.

இந்த நூல் தமிழ்ச்சிறுகதை இயக்கத்தின் 50% பகுதியை நிறைவு செய்திருக்கிறது. இன்னும் எழுதவேண்டிய ஏராளமான படைப்புகள் இருக்கின்றன என்றாலும் இதுவே தமிழ்ச்செல்வனின் வாழ்நாள் சாதனைதான். இந்துமதி, வாசந்தி, கோணங்கி, உதயசங்கர், தனுஷ்கோடிராமசாமி, ஜெயமோகன், மேலாண்மை பொன்னுசாமி, எஸ். ராமக்கிருஷ்ணன், சி. ஞானபாரதி, விழி. பா, இதயவேந்தன், சுப, புன்னை வனராசன், திலிப்குமார், ச, சுப்பாராவ், ஜனநேசன், அழகிய பெரியவன், இராகுலதாசன், மணிநாத், ஜெயந்தன், தோப்பில் முகமது மீரான், மீரான் மைதீன் மாரிசெல்வராஜ், ஜோதிர்லதா கிரிஜா உள்ளிட்ட பல படைப்பாளிகளின் பட்டியல் இருக்கிறது. அந்தப் பட்டியலில் தமிழ்ச்செல்வனும் வருகிறார். அந்த வரலாற்றை யார் எழுதப் போகிறார்கள் என்பதுதான் கேள்வி.

– தேனி சீருடையான்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *