தலைகீழாய்த் தொங்கிக் கொண்டிருக்கும் சாத்தானின் பிம்பம், எப்போதுமே ஒரு பிறழ்வுக் காட்சிதான். பிறழ்விலிருந்துதான் உலகின் உன்னதப் படைப்புகளும், குழந்தைகள் முதல் பெரிய இசைக் கோவைகள் வரையும் உண்டாக்கப்படுகின்றன. மனப்பிறழ்வின் ஆத்மார்த்மான வெளிப்பாட்டுக் கணங்கள், கானல் நீராய் அலைம்பிக் கொண்டே இருக்கும்.
ச.வின்சென்ட் அவர்களின் மொழிபெயர்ப்பில் வந்துள்ள ஆலிவர் சேக்ஸின் தனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர் என்ற புத்தகம் தத்துவார்த்தமாக அணுகப்பட வேண்டிய ஒன்று. நோய்க்கூற்றின் தன்மை, உடல் என்ற பௌதிக எதார்த்தத்தை எவ்வாறு பாதிக்கின்றது என்பதை, அதையும் தாண்டி மனம் என்னும் அரூப வெளியில் காற்றின் பிம்பங்களாய் அலையலுறும் மனப் பிறழ்வு எழுப்பும் வேடிக்கைக் காட்சிகள், வினோத சப்தங்கள், அரூப வெளிக்கோடுகள், அசமன்படுத்தப்படாத உறவு நிலைச் சிக்கல்கள் இப்படி பல்வேறு வகையான மனப்பிறழ்வின் கவிதைக் காட்சிகளாக மிக நெருக்கமான மொழியில் – சொல்லப்போனால் – ஒரு பித்தனின் மனநிலையோடு மொழிபெயர்க்கப்பட்ட புத்தகமாகவே தோன்றுகிறது.
இந்தப் புத்தகத்தின் ஆச்சரியமான விசயமே மொழிபெயர்ப்பில் எந்த ஒரு நெருடலையும் ஏற்படுத்தாமல், மூலமொழியின் சாரத்தை அப்படியே கொண்டு வந்து, மனம் மற்றும் அதன் இயக்கத் தன்மை பற்றிய ஒரு தத்துவார்த்தச் சொல்லாடலாக இப்புத்தகம் மாறியிருக்கிறது. ஆங்காங்கே தீடீரென வெளிப்படும் கவிதைக் காட்சிகள், இது மனப்பிறழ்வு அல்லது மனச் சிதைவுக்குள்ளானவர்கள் பற்றிய ஒரு மணல்கூண்டு கடிகாரத்தின் மீதிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் கீழே விழுந்து கொண்டிருக்கும் மணல் துகள்கள் பற்றிய படிமத்தின் மொத்த உருவமாகவே தோன்றுகிறது.
இந்தப் புத்தகம் நான்கு பகுதிகள் கொண்டது. ஒவ்வொரு பகுதிக்கும் வைக்கப்பட்டிருக்கும் தலைப்புகளே உள்ளடக்கத்தின் சாராம்சத்தை விளக்கி விடுகின்றன. பகுதி ஒன்று ‘இழப்புகள்’ இழப்புகள் என்ற தலைப்பின் கீழ் ஒன்பது கட்டுரைகள் உள்ளன. ஒன்பது கட்டுரைகளின் சாராம்சத்தை நாம் இப்படி ஒரு ஒற்றை வரியில் கூறிவிடலாம். இழப்பு என்பது இருப்பதை இழப்பதா? அல்லது இல்லாததை இழந்ததுபோல் நினைத்துக் கொள்வதா? இங்கு தான் மனித மனத்தின் இருத்தலியல் சிக்கல் இழப்பின் சிக்கலாய் மாறுகிறது அல்லது இழப்பின் சிக்கல் இருத்தலியல் சிக்கலாக மாறுகிறது. நானல்லாத நான், ‘அதுவாக மாறும் நிலையில், இழப்பின் ஈடுகொடுக்க முடியாத தன்மை ஒரு தேர்ந்த கவிஞனின் மொழியில் ஒன்பது கட்டுரைகளிலும் வெளிப்பட்டிருக்கின்றது. அடையாளப்படுத்துதல் என்னும் மனச்செயல்பாடு சிக்கலாக மாறும் கணங்களைக் கொண்டவைகள் இந்த ஒன்பது கட்டுரைகளும் அடையாளத்தை இழப்பதும், இழக்காததை அடைவதும் என மொழிபெயர்ப்பு மொழியில் ஒரு கண்ணாமூச்சி விளையாட்டை நிகழ்த்திவிடுகின்றன.
இரண்டாம் பாகம் முதல் பாகத்திற்கு நேர்மாறாக ‘மிகுதிகள்’ என்ற தலைப்பில் மனத்தின் எச்சங்களை – மனச் செயல்பாட்டின் எச்சங்களை நரம்பியலின் நோய்க்கூறுத் தன்மையற்ற ஒரு உள் நடக்கும் உரையாடலாகத் தொடர்கிறது. ஆசிரியர் கூற்றாக நேரடியாக வெளிப்படும் ஆசிரியரின் மொழி, நோயாளிகளின் மொழியாக மாறி, மருத்துவரும், நோயாளியும் மனப்பிறழ்வின் இரண்டு தவிர்க்க முடியாத பகுதிகள் என்பதைக் காட்டுகிறது. நவீன மனவியல் நரம்பியல்துறை மருத்துவர், தன்னை நோயாளியுடன் ஐக்கியப்படுத்திக் கொள்ளும் அல்லது ஒப்புக்கொடுக்கும் செயலாக (வேதாகமத்தில் சொல்லப்பட்டபடி) மாறி விட்டதை இரண்டாம் பாகம் வெளிப்படுத்துகிறது.
இப்பொழுதுதான் முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் இடையிலான கண்ணுக்குப் புலப்படாத, நம் நுண்ணறிவால் மட்டும் உணரக்கூடிய ஒரு தத்துவார்த்தச் செயல்பாடு அகவெளியில் நிகழ்வதை உணர முடிகின்றது. இழத்தல் என்பது மிகுதியின் எச்சமென்றால், மிகுதி என்பது இழத்தலின் ஆதிக்கம். இப்படித்தான் நாம் முதல் பாகத்தையும் இரண்டாம் பாகத்தையும் இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. ஒரு மரணத்திற்குள் மறைந்திருக்கும் பிறப்பு, இன்னொரு பிறப்பிற்குள் மறைந்திருக்கும் மரணத்தை வெளிப்படுத்துவது போன்றது இந்தச் செயல். ஆட்கொள்ளப்பட்டவர்களின் ஆளுமை சிதைவுள்ளதா? அல்லது முழுமையை நோக்கிய நகர்தலுக்கான ஒரு எத்தனிப்பா? என்ற கேள்வியை இங்கே நாம் எழுப்ப வேண்டியிருக்கிறது. ஆட்கொள்ளப்பட்டவர்களுக்கும், ஆட்கொள்ளப்படாதவர்களுக்கும் என்னவேறுபாடு? தோற்றம் தாண்டி உள்வெளிப் பயணம் என்ன சொல்கிறது? என்பதை ஆலிவர் சேக்ஸ் தன் குறிப்புகளில் வெளிப்படுத்திச் செல்கிறார்.
மூன்றாம் பாகம் மிகப் பொருத்தமாக ‘கடத்தல்கள்’ என்ற தலைப்பில் ஆறு கட்டுரைகளைக் கொண்டிருக்கிறது. இந்த ஒற்றை வார்த்தையில் தலைப்புகளுக்குள் ஒரு சமன்படுத்தப்பட்ட அசமமின்மை வெளிப்படுவதை நுண்ணிய வாசக மனம் கண்டு கொள்ளும். ‘இழப்புகளும் மிகுதிகளும்’ ‘கடத்தலுக்கு’ இட்டுச் செல்லுதல் மனவெளியில் நடக்கும் ஒரு அசாதாரணமான நாடகவெளிக் காட்சி. கட்டமைக்கப்பட்ட நாடக வெளிக்கு வெளியே திடீரெனத் தோன்றி, நாடகத்திற்குள் நுழையும் மூன்றாம் வெளி நாடகக் கதாபாத்திரத்தின் தன்மை இந்தக் கடத்தல்களுக்கு உண்டு. புலன்கள் போன்ற நம்பிக்கைத் துரோக கருவிகள் உலகில் வேறு எதுவும் இருக்க முடியாது. நம்மை ஏமாற்றிக் கொண்டே இந்தப் பௌதீக உலகின் பொய்த் தோற்றத்தை நமக்குள் ஒரு வேறு மாதிரியான தலைகீழ்ப் பிம்பத்தை உருவாக்கி விடும். புலன்களை நம்பாதீர்கள். புலன்சார் அறிவும் சந்தேகத்திற்குரியதே.
ஆலிவர் சேக்ஸ் காட்டும் உலகம் அப்படித்தான் இருக்கிறது. இருப்பின் இன்மையையும், இன்மையின் இருப்பையும் ஒரு சேரக் காட்டும் ஒரு கழைக் கூத்தாடியாக ஒரு நரம்பியல் மருத்துவருக்கே உரிய பாணியுடன் நுண்ணிய பார்வை கொண்ட கலைஞனின் வார்த்தை ஜாலங்களோடு சொல்லியிருப்பதை ச. வின்சென்ட் அவா்களின் மொழிபெயர்ப்பு ஒரு மாயவலைக்குள் நம்மை சிக்க வைக்கிறது. இந்தமாய வலை செயல்படாத மூளையின் செயல்திறன் காட்டும் மாயாஜாலம். இந்த மாயாஜாலத்தின் முன் நாம் திராணியற்ற வாசகர்களாக தோற்றுப் போகிறோம். நான்காம் பாகம் ‘எளியோரின் உலகம்’ என்று தலைப்பிடப்பட்டிருக்கின்றது. ‘Simple’ என்ற ஆங்கில வார்த்தைக்கு மொழிபெயர்ப்பாளர் வேறு ஒரு அர்த்தத்தைக் கொடுக்கிறார். நான்காம் பாகத்தின் ஆரம்பத்தில் அவர் கொடுத்திருக்கும் குறிப்பு: எளியோர்’ என்ற சொல் மனவளர்ச்சி குன்றியவர்களைக் குறிக்கப் பயன்படுகிறது. ஆங்கிலச் சொல்லான‘Simple’-க்கு பல பொருள்கள் உள்ளன. அவற்றில் ஒன்று ‘மன வளர்ச்சி குன்றிய’ என்பது. மனவளர்ச்சியற்றவர்களை ‘விருப்ப உணர்வு’ சார்ந்து அணுகுதல் என்பது ஒரு மனநல மருத்துவரின் நேர்மறைப் பார்வை என்பதை இந்தப் பாகம் அழுத்தம் திருத்தமாய்ச் சொல்கிறது.
இது அறிவியலின் நேர்மறை அணுகுமுறையைப் பயன்படுத்துகிறது.மற்ற துறைகளில் காணக்கிடைக்காத ஒரு அபூர்வ அவதானிப்பு இது. உலகெங்கும் மற்ற மருத்துவ துறைகள் பயமுறுத்தும் காரணியாக ‘Fear Psychosis’என்ற முறையை பயன்படுத்தும் போது,ஆலிவர் சேக்ஸ் நோயாளிகளிடம் தன் அணுகுமுறையை ஒரு எளிய நிலைச் சொல்லாடலாக மாற்றியமைக்கிறார். அவரும், அவருடைய நோயாளிகளும் எளிதில் கட்டமைக்கப்படக் கூடிய பிரதிகளாக வலம் வருவதை ச.வின்சென்ட் அவர்களின் மொழிபெயர்ப்பு உணர்த்துகிறது. தமிழில் இதுவரை வெளிவந்திருக்கக்கூடிய மனநோய்க் குறிப்புகள் புத்தகத்திலிருந்து, இப்புத்தகம் முற்றிலும் மாறுபட்டு அமைந்திருப்பதற்கு முக்கிய காரணம் இந்த புத்தகத்தின் மொழியில் உள்ள நெகிழ்வுத்தன்மை, மற்றும் எளிதில் விளங்கிக் கொள்ளக் கூடிய கலைச் சொல்லாக்கங்கள். புத்தகத்தின் கடைசியில் தரப்பட்டுள்ள கலைச்சொல்லாக்கம் மிகவும் பயனள்ளதாக அமைந்திருக்கின்றது. ச.வின்சென்ட் அவர்களின் மொழிபெயர்ப்பு தமிழுக்குக் கிடைத்த அரிய விசயம். புனைவுத் தன்மையுடன் கூடிய எதார்த்தச் சொல்லாடல்கள் நிரம்பிக்கிடக்கும் புத்தகம் ஒன்றை வாசித்து முடித்த திருப்தி ஏற்படுகிறது.