புதுக்கவிதை எழுதுபவர்கள் அவர்களின் பாடுபொருளாக தன்னைப்பாடுதல், தன்வாழ்க்கையைப் பாடுதல், சமூகத்தைப் பாடுதல், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகைகளில் பாடுதல் என அவர்களின் பாடுபொருள் வகை கணக்கிலடங்கா. தமிழ்ச் செவ்வியல் இலக்கியத்தில் தன் வாழ்க்கை சார்ந்து பாடிய பாடல்களே அதிகம். முதன்முதலில் கவிதை எழுதுபவர்கள் தனக்குப் பரிச்சயமான, தன்னோடு தொடர்புடையவற்றையே பெரும்பாலும் எழுதுவர். அந்தவகையில் குமரேசன் இதுவரை இரண்டு கவிதைத் தொகுப்பு நூல்களை எழுதியுள்ளார். அவை அப்பாவின் வேட்டி, மழை பொழிந்த விடியல் என்பனவாகும்.

இவருடைய கவிதைகள் உண்மையைப் பேசும் கவிதைகளாகவும் தன் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுவதாகவும் உள்ளன. அப்பாவின் வேட்டி என்ற இக்கவிதை நூலில் மொத்தம் 62 கவிதைகள் உள்ளன. இவை பல்வேறு உணர்வுகளைப் பேசுகின்றன. இவற்றுள் சிலவற்றைச் சில தலைப்புகளில் பிரிக்க முடிகின்றது. அது சார்ந்த தகவல்களைக் கவிதைகளோடு இணைத்துப் பார்க்கலாம். இந்நூலிற்கு இலக்குமி குமாரன் ஞானதிரவியம் சிறப்பான அணிந்துரை வழங்கியுள்ளார். நூலில் சொல்லப்பட்டுள்ள முக்கிய கவிதைகளோடு நிஜத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து சில கேள்விகளைக் கேட்டுள்ளார். பிறகு பின்வருமாறு குறிப்பிடுகிறார். அப்பாவின் மீது கொண்ட அன்பையும் மரியாதையையும் ஒரு குறியீடாக்கி ஆக்கப்பட்டுள்ள இத்தொகுப்பின் பல கவிதைகள் அப்பாவினூடாக ஒரு பெரு வாழ்வையும் அவ்வாழ்வின் மீது இன்றளவும் நிகழ்த்தப்படும் வன்முறைகளையும் அதனை அப்பா சாத்வீகமாக எதிர்கொள்வதையுமே பன்னிப் பன்னிப் பேசுகின்றன. கவிஞரே தன் நூல் குறித்து இவ்வாறு கூறுகிறார்: இருத்தலை உறுதிப்படுத்தும் ஒரு நிகழ்வாகத்தான் எழுதுதல் அமைகின்றது. கவிதைகள் காலத்தின் கண்ணாடிகள். இருப்பதை அப்படியே காட்டும். சற்று இடம் வலமாக வலம் இடமாக. அது நியாயங்களைச் சுமந்து கொண்டு வரும் நதியாகவும் சூரியனின் ஒளிபோல் சுத்தமானதாகவும் இருக்கிறதென்று நினைக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்நூலில் உள்ள கவிதைகள் அவரது அப்பாவையே மையமிட்டதாக உள்ளன. அவரது வாழ்வியலை அப்படியே இயல்பாகக் கவிதையின் மூலமாக பதிவு செய்துள்ளார் கவிஞர். நூலின் தலைப்பினை உரத்துப் பேசும் கவிதைகள் ஏராளம். உழவுத் தொழிலையே செய்த அப்பா, அதற்காக பல இன்னல்களைச் சந்தித்ததாகச் சொல்கிறார். தன் வீட்டிலுள்ள பொருட்களை மட்டுமின்றி அவரது மனைவியின் நகைகளையும் விற்றே உழவுத்தொழிலைச் செய்துள்ளார். இதனை:

Image result for விவசாய குடும்பம்

அப்பா / நெல்லு நட்டார் / அம்மா / நெக்லஸ் போனது / அப்பா / கரும்பு வைத்தார் / அம்மா / கம்மல் போனது / என இக்கவிதை நீள்கின்றது. அப்பாவின் வறுமையை ஆங்காங்கே கவிதைகள் பேசுகின்றன. கூத்துக்கலைஞராக அவரது அப்பா விளங்கியுள்ளார். பெண் வேடமிட்டு நாடகத்தில் சிறப்பாக நடிப்பார் என்றும் சொல்லியுள்ளார். சாட்டை பிய்ய பிய்ய / அடி வாங்கியபடியே /உங்கப்பா / திரௌபதியாக அழ/ சோ’னு மழை / மூணு முறை பெய்தது / என அவரது அம்மா குறிப்பிட்டதாக பதிவு செய்துள்ளார். தன்னுடைய அப்பாவின் ஒரு முகத்தை மட்டும் காட்டாமல் அவர் செய்த பல செயல்களையும் கவிஞர் தெரிவித்துள்ளார். அப்பா குடித்த பிராந்தி பாட்டில் / மண்ணெண்ணெய் விளக்காக எரிகிறது – என்கிறார். பிய்ந்த செருப்பைப் பயன்படுத்தியதையும், ஓரிடத்தில் கவிஞரிடம் புதுச் செருப்பு வாங்கிக் கொடு என்று அவரது அப்பா கேட்டபோது கவிஞர் பெற்ற அவஸ்தையையும் நூலில் காணமுடிகின்றது. மேகம் வெளுக்க / வாழ்க்கை உலுக்க / பாளம் பாளமாக / வெடித்த அப்பா / கை கால்கள் / காய்ந்து நிற்கிறார் / மரமென / என்கிறார். நிலத்தோடு தன் அப்பாவை ஒப்பிட்டு பார்க்கிறார். (பக்-73) அப்பாவின் வேதனையை அழகாக கவிதையின் பாடுபொருளாக சேர்ந்திருப்பது நூலின் பலமாக உள்ளது. உழைப்பின் வடிவமான அப்பாவைச் சொல்லாத இடமே இல்லை எனலாம்.

Image result for அப்பாவின் வறுமை

இயற்கை மனித வாழ்க்கை இயற்கையோடு இயைந்தது. இதனைப் பாடாத கவிஞர்களே இல்லை எனலாம். குமரேசனும் இயற்கை குறித்து பாடியுள்ளார். சங்கராபரணி ஆற்றில் வந்த நீரை தாய்ப்பாலுக்கு நிகராகவும் தெய்வமாவும் குறிப்பிட்டுள்ளார். மரம் என்ற தலைப்பில் அவற்றின் பண்புகளையும் வித்தியாசத்தையும் குறிப்பிட்டு சில கேள்விகளையும் கேட்டுள்ளார். வேலிகாத்தானை வெட்டியே அப்பாவின் வாழ்க்கை முடிந்ததாகவும் தற்போதும் வளர்கிறது என் மகளின் இரத்தத்தையும் குடிக்க என்கிறார். நிலம் பற்றி குறிப்பிடும்போது / அப்பாவைப் போலவே / நிலம் / நிலத்தைப் போலவே / அப்பா / என்கிறார். மனிதர்களுக்கு ஆசைகள் அதிகம். அதில் ஒன்றான மண்ணாசை குறித்து குறிப்பிட்டு இது எதற்காக? எனச் சொற்களில் ஜாலம் காட்டுகிறார். (பக்-45) பயன்படும் பொருட்கள். அவரது அப்பாவிற்குப் பயன்பட்ட பொருட்களான சைக்கிள் (பக்-62) லாந்தர் (பக்-57) மண்வெட்டி (பக்-78) என இவற்றையும் பாடியிருக்கின்றார் கவிஞர், வீட்டில் வளர்த்த உயிரினங்கள் பொதுவாக மனிதர்கள் தனது வீட்டில் ஆடு, மாடு, நாய் போன்றனவற்றை வளர்ப்பர். இது நம் ஆதிக்காலம் தொட்டே தொடர்ந்து வரும் பழக்கமாகும். கவிஞர் இதனையும் பாடியிருக்கிறார். கிராமத்து அன்பை இது வெளிப்படுத்துகிறது. கவிஞரது வீட்டில் ஒரு மாடு இறந்து விட்டது.

அதனைக் குறிப்பிடும்போது செவத்த மாடு செத்திச்சிடா / என் அண்ணன் / தனசேகர் இறந்த போதும் / இப்படித்தான் அழுதார்கள் / அப்பா… அம்மா… என்கிறார். அப்பாவின் இன்னொரு நிழல் என்று பக்கம் 89 இல் குறிப்பிட்டுள்ளார். காதல் காதலைப் பாடாத கவிஞர்களே இல்லை என்று சொல்லலாம். காதல் ஜோடியின் வாழ்க்கையை, அவர்களது சூழலை ஒரு கவிதை பேசுகின்றது. தனது அம்மாவை அப்பா மகாலட்சுமி என்று அழைத்தது ஏன்? என்ற காரணத்தையும் அழகாகக் குறிப்பிட்டுள்ளார். (பக்-55) தாயின் அன்பைப் பரிதவிக்கும் மனது என்ற கவிதை வெளிப்படுத்துகிறது. குழந்தை உறங்கிய தலையணையின் கீழ் கட்டுவிரியன் பாம்பு இருந்தது கண்டு தாய் தவித்த உணர்வை அழகாக எழுதியிருக்கிறார் கவிஞர். தனது குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் இன்பத்தைக் காண்கிறார் கவிஞர். இதுவும் கவிதையில் இடம் பெற்றுள்ளது. தனது மகள் வெளியூருக்குச் சென்றுள்ளார். அவர் விளையாடிய பொருட்கள், எழுதிய எழுத்துக்கள் எல்லாம் அவர்களைப் போலவே காத்திருப்பதாக தனது மகளின் பிரிவு பற்றிக் குறிப்பிட்டுள்ளார். வாழ்க்கை மற்றும் நகர வாழ்க்கையின் அவலத்தையும் இவரது கவிதையில் காணமுடிகின்றது. சாதி குறித்த கவிதைகளும் இந்நூலில் உள்ளன. பயணம் செய்யும் பயணிகளுக்குச் சாதி தெரிவதில்லை. பேருந்தை விட்டு இறங்கியவுடன் செத்துப்போய் சாம்பலான சாதி ஊர் வந்ததும் முளைத்துவிடுவதாக் குறிப்பிட்டுள்ளார். காகம் நரி குறித்த கதையைக் கூறி பாடநூலில் இருந்த வித்தியாசங்களைத் தெளிவாக கேள்வி கேட்கிறது இவரது கவிதை. சினிமா என்ற கவிதையில் சாதியைச் சில மனிதர்கள் தன்னுடைய நன்மைக்காகவே பயன்படுத்துகின்றனர் என்கிறார். இதுபோன்ற இடத்தில் கேள்வி கேட்கிறார். வாழ்வில் உள்ள முரண்பாட்டினைக் கவிதையினூடாக பதிவு செய்துள்ள போக்கினை இக்கவிதைகளில் அறியமுடிகின்றன. புதைத்தல் என்ற கவிதையில் இதனைக் காணலாம்.

Image result for மரண ஊர்வகலாம்

மாண்டுபோன மனிதனை / ஆற்றங்கரையில் / புதைக்கிறார்கள் / மணல் அள்ளி / வீட்டில் / புதைக்கிறார்கள் / ஏனிந்த முரண்பாடு என்கிறார்.மண் சார்ந்த பதிவாக சிமெண்ட் ரோடு என்ற கவிதை அமைகிறது. எங்களின் / மகிழ்வுகளையும் / விளையாட்டுகளையும் / ஒன்றாகப் புதைத்தது / சிமெண்ட் ரோடு… என்று வருந்துகிறார் பணவீக்கம் பணத்தின் மதிப்பிழப்பு, பணவீக்கம் குறித்து பத்துப்பைசா என்ற கவிதை பேசுகிறது. அடையாறு நடு ரோட்டில் / அடிபட்டுக் கிடக்கிறது / கால் நசுங்கிக் கிடப்பவன் போல் /யாவரும் இருந்தும் / யாருமற்ற தனிமையில் / ரத்தப்போக்கோடு – என்று மிக அழகாக கவிதையாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. குமரேசனின் கவிதைகள் உண்மையை மிக அழகாக பேசி இருக்கின்றன. இவை நம் மனதிற்கு நெருக்கமாக இருக்கின்றன. இன்னும் சிலக் கவிதைகளில் சொற்செறிவு இருந்திருக்கலாமே என்று தோன்றுகிறது. இருப்பினும் முதல் கவிதை நூல் என்ற வகையில் சிறப்பாகவே உள்ளது. இந்நூல் குறித்து கவிஞர் தா. பழமலய் இவ்வாறு கூறியுள்ளார். எந்த வரியைச் சொல்ல, எந்த வரியைவிட. என இத்தொகுப்பின் வரிகள் காக்கைக் கூட்டின் சுள்ளிகளாக உள்ளன என்கிறார்.இது உண்மையாகவே உள்ளது. கவிஞருக்குப் பாராட்டுக்கள். நூலை அழகுற, கலைநயத்தோடு பதிப்பித்த நறுமுகை பதிப்பகத்திற்கும் வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *