இந்தக் கட்டுரைகளும், ஆய்வுகளும் காட்டுவதுதான் என்ன? நம்முடைய தொல்பழங்காலம் குழப்பமானது. ஆய்வுகள் தொடர்கின்றன. ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட பல்துறை ஆய்வு மட்டுமே இந்த வினாவிற்கு நியாயம் செய்யும்.

மானுட மரபணு வரலாறு இரண்டு பாதைகளில் பயணிக்கின்றது. ஒன்று மிட்டாகோன்ட்ரியா டி.என்.ஏ (mitochondria DNA mtDNA) அடிப்படையிலானது. மற்றது Y குரோமோசோம் அடிப்படையிலானது. இது நியூக்கிளியர் டி.என்.ஏ (Nuclear DNA – nDNA) எனவும் குறிப்பிடப்படுகின்றது. ஒரு கட்டிடத்திற்கு செங்கல் எப்படி அடிப்படைக் கட்டுப்பொருளோ அப்படி மானுட உடலுக்கும் ஏனைய உயிர்களின் உடலுக்கும் செல் அடிப்படைக் கட்டுப்பொருள். உயிர்களது உடலின் செல்கருக்களில் குரோமோசோம்கள் உள்ளன. மானுட உயிர்ச்செல்லில் 23 இணை (ஜோடி) குரோமோசோம்கள் உள்ளன. குரோமோசோம்கள் டி.என்.ஏக்களால் ஆனவை. டி.என். ஏ.வின் பகுதிகள் தாம் மரபணுக்கள். (மேற்கொண்டு விவரம் வேண்டுவோர் பார்க்க: அத்தியாயம் 18, புரட்சியில் பகுத்தறிவு ப.கு.ராஜன் : பாரதி புத்தகாலய வெளியீடு) மிட்டாகோன்ட்ரியா என்பது, மானுட செல்களில் செல்கருவிற்கு வெளியே இருக்கும் ஒரு தனிச்செல். இன்னும் சொல்லப்போனால் அது ஒரு தனி உயிர். அநாதிகாலத்திற்கு முன்பு உயிர்ச்செல் உருவாகி வளர்ந்த காலத்தில் செல்லில் வந்து ஒட்டுண்ணிபோல குடியேறிய செல். அதற்கென்று தனித்த டி.என்.ஏ உள்ளது.

செல்கருவில் உள்ள குரோமோசோம்களின் ஒரு இணைதான் ஆண்பாலா பெண்பாலா என்பதைத் தீர்மானிக்கின்றது. இந்த இரு குரோமோசோம்களும் XX என இருந்தால் பெண்பால்; XY என இருந்தால் ஆண்பால். உடலின் எல்லா செல்களிலும் குரோமோசோம்கள் இப்படி 23 இணைகளாகத்தான் இருக்கின்றன. ஆனால் காமித்துகள் எனப்படும் ஆணின் விந்தணு மற்றும் பெண்ணின் கருமுட்டை இரண்டிலும் மாத்திரம் 23 இணைகள் இருப்பதில்லை. காமித்து செல் ஒவ்வொன்றிலும் 23 குரோமோசோம்கள் மட்டும் இருக்கும். 23 குரோமோசோம்கள் கொண்ட ஒரு விந்தணுவும் 23 குரோமோசோம்கள் கொண்ட ஒரு கருமுட்டையும் இணைந்து உருவாகும் கரு மறுபடி மற்ற எல்லா செல்களும்போல 23 இணை குரோமோசோம்கள் உள்ளதாக உருவாகின்றது. இந்தக் கருவிலும் ஒரு குறிப்பிட்ட இணை குரோமோசோம்கள் தாம் உருவாகும் கரு ஆணா பெண்ணா என்பதை தீர்மானிக்கிறது. பெண் உடலின் செல்லில் Y குரோமோசோம் கிடையாது. பெண்ணின் பங்களிப்பு எப்போதும் X குரோமோசோம்தான். ஆணின் பங்களிப்பு X அல்லது Y குரோமோசோமாக இருக்கலாம். பிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா எனத் தீர்மானிப்பதில் பெண்ணுக்குப் பங்கேதுமில்லை. இவன்தான் காரணம்; ஆனால் இந்த முறையும் பெண்ணா என அவளைப்போய் அடிப்பான். (நூலிலிருந்து பக்.7-8)

திராவிடர்களும் தமிழர்களும் இந்த மண்ணின் மைந்தர்கள் ; ஆரியர்கள் மட்டும் தான் வந்தேறிகள் எனும் கருத்து நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சுமார் 35 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நவீன ஹோமோசேப்பியன்கள் இருந்ததற்கான புதைபடிவச்சான்றுகள் ஏதுமில்லை. ஆனால் மரபணுச்சான்றுகள் சுமார் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறிய நவீன மானுடக்கூட்டம் (M130) தெற்குப்பாதை எனக் குறிக்கப்படும் கடலோரமாகவே பயணித்து இந்தியாவிற்குள் வந்தது என்பதையும், இந்த மக்கட்கூட்டத்தின் வழித்தோன்றல்கள் இப்போதும் தென் தமிழகத்தில் இருக்கிறார்கள் என்பதையும் நிறுவியுள்ளது. இந்த முதல் அலைக்குப் பிறகு சுமார் 30 ஆயிரம் ஆண்டுகள் முன்பு இரண்டாம் அலையும்(M20) மிக நீண்டகாலத்திற்குப் பிறகு சுமார் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மூன்றாம் அலையும் இந்தியாவிற்குள் வந்துள்ளது. இன்றைக்கு ஜோர்டான், இஸ்ரேல், பாலஸ்தீனம், சிரியா, ஈராக், ஈரான் நாடுகளில் விரிந்து அடங்கியிருக்கும் வளமிகு சந்திரப்பிறை (Fertile Crescent) பகுதியிலிருந்து வந்தது இந்த மூன்றாம் அலை.

குறிப்பாக, இன்றைய ஈரானின் தென்மேற்கு கோடியிலுள்ள ஈளம் (Elam) இந்த மக்கள் நீண்டகாலம் தங்கி வாழ்ந்த பகுதி எனக் கருதப்படுகிறது. சுமேரிய நாகரிகத்தின் வெளிவிளிம்பு என ஈளத்தைக் கூறலாம். சுமேரிய நாகரிகத்தின் சில அம்சங்கள் திராவிட நாகரிகத்தில் கலங்கலாகவேணும் தெரிவதைக் குறிப்பிட வேண்டும். சுமேரியர்களின் பெருநகரின் பெயரான ‘ஊர்’, அங்கிருந்த கோவிலின் அமைப்பு ஆகியவற்றின் சாயல் திராவிடப்பகுதியில் இருப்பது போன்றவற்றை தற்செயலான ஒற்றுமை எனத் தள்ளிவிடமுடியும் எனத் தோன்றவில்லை. ஈளமைட் மொழி திராவிடமொழிகளின் மூதாதை எனும் ஒருகருத்து இருந்தது. ஆனால் அது இப்போது இல்லையென ஆகிப்போனது.

ஆய்வும், ஆய்வுப்பரப்பும் அதிகம் ஆக ஆக சிந்து சமவெளி நாகரிகத்தின் மேற்கெல்லையும் அவற்றின் காலக்கணக்குகளும் சுமேரிய, மெசபடோமிய நாகரிகத்தினை நோக்கிச் செல்வதை அனுமானிக்க முடிகிறது. பாகிஸ்தானின் மெஹர்கர் (Mehrgarh) பகுதியில் நடந்த ஆய்வுகள் சிந்துச் சமவெளி நாகரிகத்தை ஹரப்பாவிலிருந்து மேற்கே சுமார் 1000 கி.மீ தொலைவுவரை நீட்டிக்கிறது. ஹரப்பா, மொகஞ்சதாரோ காலம் கி.மு.4500-1500 என்றால் மெஹர்கர் காலம் சுமார் கி.மு.7000. சுமேரிய மெசபடோமிய நாகரிக நீட்சியின் தளமும் காலமும் இதனை ஒட்டியதாகவே உள்ளது. மெஹர்கர் பகுதியை ஒட்டிய சமவெளிப்பகுதியில்தான் இன்றைக்கும் முற்றிலும் அழிந்துவிடாத வட திராவிடமொழியான பிருகு வழங்கி வருகிறது. இந்தச் சான்றுகளும் மரபணுரீதியான சான்றுகளும் பெரிதும் ஒத்துப்போகின்றன.

சுமார் 60 ஆயிரம் ஆண்டுகள் முன்பு தெற்குப்பாதை வழியே வந்தவர்களும் சுமார் 30 ஆயிரம் ஆண்டுகள் முன்பும், 6 ஆயிரம் ஆண்டுகள் முன்பும் வடகிழக்கிலிருந்து வந்தவர்களும் இணைந்துதான் திராவிடமொழிகள் பேசும் மக்கட்பகுதிகளை உருவாக்கியுள்ளனர். இதன்மூலம், திராவிடமொழிகள் பேசுவோரும் இந்தியாவிற்கு வெளியில் இருந்து வந்தவர்கள் தாம் என்பது தெளிவு. ஆனால் ஆரியர்கள் வரவிற்கு பல ஆயிரம் ஆண்டுகள் முன்பே இந்தியாவில் குடியேறியவர்கள் என்பதும் தெளிவு. (நூலிலிருந்து பக்.10-12)

ஆரியப்படையெடுப்பு எனும் கோட்பாட்டை நிர்மூலமாக்கிவிட்டதாகக் கூறப்படும் முதலிரு மரபணுக் கட்டுரைகளுக்கு முன்பும் பின்பும் பல கட்டுரைகள் இந்திய சமூகக் கட்டமைப்பையும், சாதியின் தோற்றம் குறித்தும் மரபணு அடிப்படையில் ஆய்வு செய்துள்ளன. இவை இந்தியாவில் வர்க்கரீதியாகவும் சாதியரீதியாகவும் மேல்தட்டு ஆதிக்கத்திலுள்ள ஊடகங்களில் பெருமளவு இருட்டடிப்பு செய்யப்பட்டவைதான். ஆரிய திராவிடப் பிரிவினைக்கெல்லாம் அப்பாற்பட்ட உலகக் குடிமக்களாகவும் 120 கோடி இந்தியர்களையும் தம் சகோதரர்களாகவும் தமக்கு இணையானவர்களாகவும் கருதுவதுபோல பாவனை செய்யும் மேட்டுக் குடிகளாலும் கண்டும் காணாமல் விடப்பட்டவைதான். (நூலிலிருந்து பக்.18)

இந்தக் கட்டுரைகளும், ஆய்வுகளும் காட்டுவதுதான் என்ன? நம்முடைய தொல்பழங்காலம் குழப்பமானது. ஆய்வுகள் தொடர்கின்றன. ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட பல்துறை ஆய்வு மட்டுமே இந்த வினாவிற்கு நியாயம் செய்யும். இதுவரை தனித்தனியாய் நடந்துள்ள வெவ்வேறு துறை ஆய்வுகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு நோக்கினால், இடதுசாரி வரலாற்று அறிஞர்களான ரோமிலா தப்பார், டி.டி.கோசாம்பி, ஆர்.எஸ்.சர்மா போன்றோர் கூறிவரும் கருத்துகளை நிராகரிக்க ஏதும் முகாந்திரம் இல்லை. உயர்சாதி உயர்தட்டு ஆதிக்கத்திலுள்ள ஊடகங்கள் ஆய்வுமுடிவுகளைத் திரித்தும், வடிகட்டியும் தங்கள் ஆதிக்க இருப்பினை மறைக்கவும் அதற்கெதிரான போராட்டங்களைக் கொச்சைப்படுத்தவும் முயற்சிக்கின்றன. அவர்களது சுயநலமான செயலை எதிர்ப்பது, வேறுபாடுகளை விரும்புவதுபோல தோற்றம் கொண்டுவிடும் அபாயமுள்ளது. மேலும் மரபணு அடிப்படை இருந்தால் அது மாற்றமுடியாத இயற்கை என்பதுபோன்ற ஒரு தவறான புரிதலுக்கு வந்துவிடும் அபாயமும் உள்ளது. ஆனாலும், இவற்றைக் கையாளாது விடுவது அநியாயத்திற்கு துணைபோவதாகவே அமையும். (நூலிலிருந்து பக்.36-37)

நூல் : சாதி வர்க்கம் மரபணு
ஆசிரியர் : ப.கு.ராஜன்

வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி எண் : 044 – 2433 2424 | 2433 2924
மின்னஞ்சல் : [email protected]

பக்கங்கள்: 64
விலை: ரூ 50.00

நன்றி – வினவு இணையதளம்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : thamizhbooks 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *