ரலாற்று காலம் தொட்டு அடர்ந்த வனங்களிலும், உயர்ந்த மலைமுகடுகளிலும் வாழ்ந்துவரும் பழங்குடி மக்களுக்கு வன நிலங்களின் மீது உரிமை அளிக்கும் சட்டம் 2006-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் முதல்முறையாக நிறைவேற்றப் பட்டது. அப்படியானால் இதுகாறும் வனம் தொடர்பான சட்டங்களே இல்லை என்ற அர்த்தமல்ல.

1846-ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் முதலாவது வனச் சட்டத்தை கொண்டு வந்தார்கள். அந்நிய ஆட்சியின் போதும் அதனை தொடர்ந்து நாட்டின் விடுதலைக்கு பின் மீண்டும் பல வனச்சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இச்சட்டத்தில் சிற்சில வித்தியாசங்கள் இருந்தபோதிலும் பாரம்பரியமான பழங்குடி மக்களை வனநிலங்களிலிருந்து அந்நியப்படுத்துவதில் மட்டும் வேறுபாடுகளே இல்லை.

நிலம் கிராமப்புற மக்களுக்கு அடிப்படை வாழ்வாதாரம். ஆனால், பழங்குடி மக்களுக்கு அது உயிர் மூச்சு. இம்மக்களிடமிருந்து நிலங்களை பறிப்பது அவர்களது உயிரை பறிப்பதற்கு ஒப்பாகும். இக்காரியத்தை தான் இதுவரை நிறைவேற்றப்பட்ட அனைத்து வனச்சட்டங்களும் அட்சரம் பிசகாமல் செய்து வந்தன.

தலைமுறை தலைமுறையாக வனங்களோடு வாழ்ந்த ஆதிவாசி மக்கள் மீது அதிரடியான தாக்குதல்களைத் தொடுத்தன. சொந்த மண்ணில் இவர்கள் அகதிகளாக்கப்பட்டார்கள். ஆடு, மாடுகள், கோழிகள் வளர்ப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கடந்த 60 ஆண்டுகளில் பச்சைமலையில் ஒரு ஆதிவாசி குடும்பத்துக்குக் கூட பட்டா வழங்கப்படவில்லை.

குதிரை கீழே தள்ளியதுடன் குழியையும் பறித்த கதையாக இம்மக்களது நிலங்களையும் வாழ்வாதாரங்களையும் பறித்த வனத்துறை காடுகள் அழிப்பு, மரங்களை வெட்டுவது, சந்தன மரக்கடத்தல் என பொய்யான காரணங்களை இட்டுக்கட்டி, இம்மக்கள் மீது தொடுத்த தாக்குதல்கள் – புனையப்பட்ட பொய்வழக்குகள் ஏராளம்! ஏராளம்! இதன் உச்சகட்டமே சித்தேரி மலையில் வாச்சாத்தி கிராம மக்கள் மீது இவர்கள் நடத்திய பேய் நர்த்தனம். அதுபோலவே, வீரப்பனைத் தேடுகிறோம் என்ற பெயரில் அதிரடிப்படை நடத்திய அட்டூழியங்களை நீதிபதி சதாசிவா விசாரணை கமிஷன் உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

பழங்குடி மக்களின் பொருளாதாரம் காட்டை அடிப்படையாகக் கொண்டிருந்தது. உப்பையும், உடையையும் தவிரத் தங்களுக்குத் தேவையான அனைத்தையும் அவர்கள் காடுகளிலிருந்தே பெற்றனர். இது 16-ம் நூற்றாண்டுக்கு முந்தைய நிலை. காடுகள் முழுவதும் பழங்குடிச் சமூகத்திற்குச் சொந்தமாக இருந்தது. தனி நபர்களுக்கு உடமை என்றில்லாவிட்டாலும் சுதந்திரமாகப் பயன்படுத்தி வந்தனர். மன்னர்கள் ஆண்ட காலத்திலும் வரிவசூல் செய்தார்களே தவிர, அம்மக்களிடமிருந்து நிலங்களை அபகரிக்கவில்லை

1757 ஜனவரி 2 கிழக்கிந்திய கம்பெனியின் கேப்டன் ராபர்ட் கிளைவ் வங்கத்தை கைப்பற்றிய நாள். படிப்படியாக இங்கிலாந்தின் காலனியாக இந்தியா மாற்றப்பட்டது. இந்த நிலையில், “இங்கிலாந்து மன்னரின் கப்பற்படைக்கு தேவையான வலுமிக்க தேக்கு மரங்களை இந்தியாவிருந்து அனுப்ப வாய்ப்புள்ளதா” என ஆராயுமாறு 1805-ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி கட்டளையிட்டது. 1806-ல் காலனிய அரசில் முதன்முறையாக கேப்டன் வாட்சன் எனும் போலீஸ் அதிகாரி வனத்துறை அதிகாரியாக பெரும் அதிகாரங்களுடன் நியமிக்கப்பட்டான். 1854-ம் ஆண்டு அரசின் முதல் வனக்கொள்கை அறிவிக்கப்பட்டது. 1855-ம் ஆண்டு ஆகஸ்ட் 3-ந் தேதி இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த டல்ஹௌசி பிரபுவால் விஞ்ஞான பூர்வமாக வனத்தை நிர்வகிப்பதற்கான சட்டம் (Charter) வெளியிடப்பட்டது.

பழங்குடி மக்கள் காட்டைத் தங்கள் பிழைப்பிற்காக மட்டுமே பயன்படுத்தி வந்தனர். ஆனால் பிரிட்டிஷ் அரசு, காட்டை வியாபார ரீதியாகப் பயன்படுத்த ஆரம்பித்தது. 1854-ம் ஆண்டு வனக்கொள்கை அதை வெளிப்படுத்தியது. சென்னை ராஜதானியில் 1856-ல் வன இலாகா என்ற துறை அமைக்கப்பட்டது. இத்துறை மூலம் 1865 மே 1-ல் முதல் வன ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதில் மரங்கள் அடர்ந்த பகுதியையும் அல்லது புதர் மண்டிய பகுதியையும் வனப்பகுதியாக அறிவித்து அரசுக்கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வர வழிவகை செய்தது.

காலனிய அரசு, பிரிட்டிஷ் தோட்ட முதலாளிகள் ஏராளமான காப்பி மற்றும் தேயிலைத் தோட்டங்களை உருவாக்கினர். எந்த அளவுக்கு இதில் அரசு ஆர்வம் காட்டியது என்பதற்கு, 1885-ல் ஏற்காடு மலைப்பகுதியில் மட்டும் 10,789 ஏக்கர் நிலப்பரப்பில் 331 காப்பித்தோட்டங்கள் இருந்தன என்றால் நாடு முழுவதும் எவ்வளவு இருந்திருக்கும் என்பதைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். இத்தகைய தோட்டங்களில் அடிமைகளாகவும், பின்னர் கூலிக்காரர்களாகவும் ஆதிவாசிகள் ஆக்கப்பட்டனர்.

காட்டையே தங்களது தாய்வீடாகவும், கடவுளாகவும் பாவித்த மக்கள், காடுகள் தங்கள் கண் முன்னே வெட்டி அழிக்கப்பட்டதைக் கண்டு கண்ணீர் விட்டனர். சட்டமும், நிர்வாக ஏற்பாடுகளும், வனத்துறை அதிகாரிகளும் அம்மக்களுக்குப் புரியாத புதிராக இருந்தது.

வனத்துறையினரின் கொடுமைகள் – வனத்துறை அதிகாரிகளின் தயவிலேதான் வனத்தினுள் வாழ முடியும் என்ற நிலை ஏற்பட்ட பிறகு கிட்டதட்ட அடிமை நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர்.

காயப்பட்ட மனிதன் கிளர்ந்தெழுவது இயற்கை என்பதற்கேற்ப – ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்பட்ட ஆதிவாசி மக்கள் வெடித்தெழுவதும் – இழந்த நிலங்களையும் – வாழ்க்கையையும் மீட்பதும் நிச்சயம்.

ஆதிவாசிகள் தங்களின் நில உரிமையைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும், பிரிட்டிஷாரின் ஏஜெண்டுகளாக இருந்து வரிவசூலில் ஈடுபட்ட ஜமீன்தார், ஜாகீர்தார்களின் கொடுமைகளுக்கு எதிராகவும் மக்கள் பெரும் போராட்டங்களை நடத்தினர்.

செங்கொடி இயக்கத்தலைவர்களின் தலைமையில் மகாராஷ்ட்ராவில் ‘வார்லிகள்’ எழுச்சி, மேற்கு வங்கத்தில் சந்தால் எழுச்சி, திரிபுராவில் மன்னர்களை எதிர்த்து எழுச்சி, பீகாரில் பிர்சா முண்டா தலைமையில் பெரும் போராட்டம், தமிழகத்தில் ஜமீன்தார் பிடியிலிருந்து விடுவிக்கும் போராட்டம், வனத்துறை அதிகாரிகளின் அத்து மீறல்களை எதிர்த்தும், வரிக்கொடுமைக் கெதிராகவும், கந்துவட்டிக் கொடுமைக்கெதிராகவும் பெரும் போராட்டங்கள் நடைபெற்றன. (நூலிலிருந்து…)

நூல் : வன உரிமைச் சட்டம் ஒரு வரலாற்று திருப்புமுனை

ஆசிரியர் : பெ. சண்முகம்

வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி எண் : 044 – 2433 2424.
மின்னஞ்சல் : [email protected]

பக்கங்கள்: 64
விலை: ரூ 15.00 (முதற் பதிப்பு)

நன்றி – வினவு இணையதளம்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : thamizhbooks 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *