எழுத்தாளர் ஜனநேசன் பதினேழு நூல்களின் ஆசிரியர். கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை எனத் தடம் பதித்து இன்று குறுநாவல் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.

அரசு ஊழியராய் இருந்து ஓய்வு பெற்ற அவர் தனது இரு மகன்களையும் நன்கு படிக்க வைத்து அந்தஸ்தான பணியில் அமர்த்தியிருக்கிறார். மூத்த மகன் ஐ ஏ எஸ் முடித்து தெலுங்கானாவில் மாவட்ட ஆட்சித் தலைவராய் இருக்கிறார். இளையமகன் இங்கிலாந்து நாட்டில் மருத்துவராய்ப் பணியாற்றுகிறார்.

ஆட்சித் தலைவருக்கான சலுகைகளைப் பயன்படுத்தி இந்தியாவின் முக்கிய மாநிலங்களில் சுற்றுலா சென்று வந்திருக்கிறார் ஜனநேசன். கிடைத்த அனுபவங்களை இலக்கியமாக்கிப் படைப்பியக்கத்தை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறார். வடகிழக்கு மாநிலங்கள் அவரின் பல படைப்புகளுக்குக் களம் அமைத்துத் தந்திருக்கின்றன. மேகாலயா மாநிலத்திற்குச் சென்றபோது கிடைத்த அனுபவம்தான் “பயணம்” என்ற குறுநாவலாகப் பரிணமித்திருக்கிறது.

இந்தத் தொகுப்பில் மூன்று படைப்புகள் இருக்கிறன. முதல் கதை “பயணம்” எளிமையானதும் வலிமையானதுமான படைப்பு.

1 பயணம்.

அஸ்ஸாம் மாநிலத்தின் பகுதியாய் இருந்து பிரிந்து இன்று மேகாலயா மாநிலமாக உருவாகியிருக்கும் பகுதியின் முக்கிய் நகரம் ஷில்லாங். மலைச் சிகரங்களும் அடர்ந்த காடுகளும் நிறைந்த நிலப்பரப்பு.

அங்கு அமைந்த ராணுவ முகாமின் துணைக் கேப்டனாகப் பணி புரிந்தான் தென் தமிழகத்தைச் சேர்ந்த பாண்டியன். (வயது 22) ஞாயிறு ஒருநாள் மட்டும் ராணுவ வீரர்களுக்கு ஃப்ரீடே. நான்கு மணிநேரம் வெளியில் சென்று வரலாம். அப்படி ஒரு ஞாயிற்றுக் கிழமை நகரத்தின் மிகப் பெரிய பொழுதுபோக்கு இடமான பூங்காவுக்குச் செல்கிறான். மாநிலத்துக்கு அன்று ஒருநாள் விடுப்பு என்பதால் அனைத்துப் பணியாளர்களும் அங்கு வந்து மகிழ்ச்சியாய் இருந்து செல்வர். குடும்பத்தோடு கட்டுச் சோறு கட்டி வந்து அனுபவிப்பார்கள். அரசுப் பேருந்தோ ஆம்னி வண்டிகளோ அதிகம் புழக்கத்தில் இல்லாத மாநிலம் அது. ஆட்டோ அல்லது கார் குறைந்த வாடகைக்கு இயங்கின.

ஐந்துபேர் அடங்கிய குடும்பம் ஒன்று ஒரு மரத்தடியில் அமர்ந்து பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் மகிழ்ந்திருந்த போது அவர்களின் கட்டுச் சோற்றை ஒரு குரங்கு தூக்கிக் கொண்டு மரத்தில் ஏறிவிட்டது. இதைப் பார்த்த பாண்டியன் குரங்கை விரட்டியபோது அது பக்கத்தில் இருந்த குளத்துக்குள் பொட்டலத்தை எறிந்துவிட்டது. பனியாய்க் குளிரும் நீருக்குள் குதித்து உணவை மீட்டுத் தருகிறான் பாண்டியன். அவனை அந்தக் குடும்பத்தார் அனைவருக்கும் பிடித்துப் போகிறது. நாட்டுக்கு உழைக்கும் ராணுவ வீரன் என்பதால் கூடுதல் பிரியம். குடும்பத்தின் மூத்த மகள் ஹாஷிமா பாண்டியன்மீது காதல் கொள்ள வாராவாரம் மையல் தொடர்கிறது.

அவர்கள் ஹாஸி என்ற இனக்குழுவைச் சேர்ந்தவர்கள். அனைவரும் குள்ளமான மனிதர்கள். சீன மக்களைப்போல் தோற்றம் கொண்டவர்கள். ஹாஷிமாவின் தந்தையிடம் தங்கள் காதலைச் சொல்லி அவர் மகளைக் கல்யாணம் செய்துகொள்ள சம்மதம் கேட்கிறான் பாண்டியன். நாடு காக்கும் வீரன் என்ற வகையில் பெண் தரக் குடும்பத்தாருக்குச் சம்மதந்தான். அதற்கு இனக்குழுத் தலைவர் ஒப்புதல் தரவேண்டும். ஆனால் அவர் மறுத்துவிடுகிறார். ஹாஷிமா பாண்டியன்மீது கொண்ட அப்பழுக்கற்ற அன்பால், காதலன் அழைப்பை ஏற்று அவனோடு மதுரைக்கு வந்து விடுகிறான்.

பாண்டியன் ஹாஷிமா தம்பதிக்கு முதலில் மகன் பிறக்கிறான். பிறந்த வீட்டுக் குல தெய்வத்தின் அடையாளம் சேவல் என்பதால் சேவற்கொடியோன் என பெயர் சூட்டப்படுகிறார்கள். ஆனாலும் பாண்டியன் ஒரு வெற்றி வீரன் ஆதலால் மகன் ஜெயக்கொடி, எனவும் அழைக்கப் படுகிறான். கணவன்மீது கொண்ட அளவற்ற அன்பு காரணமாக குடும்ப அட்டையிலும் பள்ளிச் சான்றிதழிலும் “ஜெயக்கொடி” பதிவாகிறது. அடுத்து மல்லிகா என்ற பெண்குழந்தையும் பிறக்க பாண்டியன் இறந்துபோகிறான். 35 வருடங்கள் ஓடிவிட்டன. இரு தரப்புக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை. ஹாஷிமா ஷில்லாங் போகவேண்டும் என்ற ஆசை இல்லாமல் தன் கணவன் ஊரிலேயே உயிர்விட ஆசைப் படுகிறாள்.

ஹாஷிமாவின் அம்மா இறந்து போனதாக ஒரு தந்தி ஷில்லாங்கில் இருந்து வருகிறது. ”அம்மாவின் சொத்தில் மகளுக்குச் சேர வேண்டியதை வந்து வாங்கிச் செல்லவும் என்றும் எழுதப் பட்டிருக்கிறது. கருமாதிக்கு சம்மந்தவழி சீர் செய்ய வேண்டும். கணவன் பெயருக்குக் களங்கம் நேர்ந்துவிடக் கூடாது என்பதால் மகனை மட்டும் சீர் செய்துவிட்டு தன் குடும்பத்தார் தருவதை வாங்கிவரும்படி சொல்லி அனுப்புகிறாள்.. அம்மாவுக்குக் கிடைக்கப் போகும் அந்தச் சொத்தைத் தான் அபகரித்துவிட வேண்டும் எனற நோக்கத்தோடு ரயில் ஏறுகிறான் ஜெயக்கொடி.

ரயில் பீகார் மாநிலத்தைக் கடந்த போது கிடைத்த ஓர் அனுபவம்! பிச்சை எடுக்கும் கூட்டம் அங்கு அதிகம். வட மாநிலங்கள் பலவும் மிக நீண்ட வறுமைக் கோடு கொண்டவை. ஒரு சிறுவன் கையேந்திய போது அடித்து விரட்டும் மக்கள் காவி உடை தறித்த சாமியார் பிச்சை கேட்டபோது வணங்கி பவ்வியமாய்க் காசு தருகின்றனர். திருநங்கைகளுக்கும் இதே அந்தஸ்துதான். இன்னொரு மாற்றுத் திறனாளி மனிதன் ரயிலில் ஏறி பிரஷ் கொண்டு துடைத்து சுத்தம் செய்துவிட்டுக் கையேந்துகிறான். செய்த வேலைக்குக் கூலியாகக் கூடப் பலரும் தர மறுக்கின்றனர். ஆக பிச்சையிடுவது அனுதாபம் கருதி, அல்லது சக மனிதனின் பசி போக்கவேண்டும் என்ற இரக்கம் கருதி அல்ல; ஆண்டிகளுக்கும் அணங்குகளுக்கும் தர்மம் தந்தால் தங்களுக்கு நல்லது நடக்கும் என்பதால்தான். காவியைக் கடவுளாய் நம்பும் மூடத்தனம் இன்றளவும் வட மாநிலங்களில் கோலோச்சிக் கொண்டிருக்கிறது. அதனால்தான், தமிழகம் போலவோ கேரளம்போலவோ மனிதநேயப் பண்பாட்டை வலுவிழக்கச் செய்யும் காவி சித்தாந்தத்தை அவர்கள் எதிர்ப்பதில்லை.

கௌஹாட்டி ரயில் நிலயத்தில் இறங்கிய போது மைத்துனன் பாண்டுங் வந்து வரவேற்று அழைத்துச் செல்கிறான். ஷில்லாங் நகரின் விடியலும் அந்தியும் வித்தியாசமாய் இருக்கின்றன. காலை ஐந்து மணிக்கு எட்டு மணிபோல் வெயில். மாலை ஐந்து மணிக்கு இரவு பத்துமணிபோல் இருண்டிருக்கிறது. (இந்தியாவின் காலத்தரவு (srandard time) வடகிழக்கு மாநிலங்களின் காலத்தரவோடு ஒத்துப் போகவில்லை என்பது முக்கியக் குறிப்பு.) மனித விலங்குகளின் உடலமைப்பும் அப்படித்தான். சமவெளி மனிதர்கள் ஐந்தடிக்குமேல் சராசரி உயரம் என்றால் அவர்கள் ஐந்தடிக்கும் கீழேதான். விலங்குகளும் குட்டைப் பிறவிகளாய் இருக்கின்றன. முகவெட்டு சீன, மங்கோலிய, நேப்பாள கலவையாய் இருக்கிறது.

மதச் சடங்கு முறைகளும் வித்தியாசமானது; அவர்களின் சொந்த மதம் ‘ஹாஸி’; ஆங்கிலேயர் வருகைக்குப் பின் கிறித்துவத்தைச் சிலர் தழுவினாலும் சொந்த மதச் சடங்குகளையே பின்பற்றுகின்றனர். சேவல்கொடி ஏந்தி சாஸ்திரங்கள் செய்கின்றனர். குடித்துக் கும்மாளமிடும் மனிதர்கள் அங்கு அரிது; ஆனால் பான்பராக் உறிஞ்சும் உதடுகள் அதிகம்.

ஷில்லாங் நிலப்பரப்பு வித்தியாசமானது. மலையும் பள்ளத்தாகுமாய் அதீத உழைப்பைக் கோரிய நிலப்பகுதி. மலையைக் குடைந்துதான் சாலை அமைத்திருந்தார்கள்.

அந்த மக்களின் காலை விருந்து என்பது ரசகுல்லாவும் ‘போகா’ என்ற அவல் உப்புமாவும்.

ஹாஷிமாவின் தம்பி நாற்பது வயதைக் கடந்திருந்தார். அக்கா மகனைப் பார்த்தது. அவர் கூறிய வார்த்தைகள் ஜெயக்கொடியை நெகிழ வைத்தன. ”முப்பது வருடத்தில் என்னவெல்லாம் மாறியிருக்கிறது! அம்மா இல்லை; அப்பா இல்லை; அத்தானும் இல்லை. எங்கள் வீட்டுக்கு நான், உங்கள் வீட்டுக்கு நீ; வாழ்க்கை ஓடுகிறது, இந்த மேகம் மாதிரி; நினைவுகள் சூரிய சந்திர நட்சத்திரங்களாய் ஜொலிக்கின்றன. மனிதனை உயிர்ப்போடு வைத்திருக்கின்றன; நினைவுகள் இல்லாட்டி மனிதனும் மிருகம்தானே?”

ஜெயக்கொடிக்குத் தன் தாயின் உறவினர்கள் காட்டிய அன்பினால் மனமுருகிப் போகிறான். தனது சுயநல சிந்தனையைக் கைவிடுவது என முடிவெடுத்து செய்முறை செய்துவிட்டு, அம்மாவின் சொத்தில் இருந்து மகள் ஹாஷிமாமாவுக்குச் சேர வேண்டிய ஐந்து லட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு ஊர் திரும்புகிறான்.

சொத்து அபகரிப்புச் சிந்தனையைக் கைவிட்டு, அந்தத் தொகையை அப்படியே அம்மாவிடம் தந்து விடுகிறான்.

2 வேடிக்கை மனிதரோ?

நெருஞ்சிக்குடி கிராமத்தில் ஜாகையிட்ட திருநங்கைகள் 13 பேர் அவ்வழியே செல்லும் ரயில்களில் ஏறி யாசகம் பெற்று வாழ்ந்தனர். ஒருநாள் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் அந்த ரயிலில் பயணம் செய்தபோது திருநங்கைளைக் கவனித்து, அவர்கள் நிலையறிந்து, அரசு நிவாரணம் வாங்கித் தர ஏற்பாடு செய்வதாக வாக்குறுதி அளித்தனர். அவர்களில் கீர்த்தனா என்பவள் எம்காம் படித்தவள் என்பதால் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவலக ஊதவியாளர் பணி கிடைக்கிறது. போட்டித் தேர்வு எழுதி வெற்றிபெற்றால் உயர் பதவி கிடைக்கும். அரசு ஊழியர்களின் முயற்சியால் அனைவருக்கும் வீட்டடி வழங்கப் படுகிறது.

சமுதாயத்தின் கேலிக்கும் கிண்டலுக்கும் உரியவர்களாய்த் திகழ்பவர்கள் திருநங்கைகளும் திருநம்பிகளும். அவர்களை “பிரம்மாவின் தும்மல் துளிகள்” என்று பரிகாசம் செய்கின்றன நமது புராணங்கள். (பிரம்மாவின் தும்மல் துளிகள்; சிறுகதை; இதயநிலவன்.)

“நம்மல ஏன் ஒம்பதுங்குறாங்க?” என்று ஒருத்தி கேட்கும் கேள்விக்கு இன்னொருத்தி பதில் சொல்கிறாள். “பூஜ்யம் பக்கத்துல ஒண்ணு மாதிரி இருக்குல்ல; அதனாலதான்.”

வேறொருத்தி வேறுமதிரி சொல்கிறாள். “ஒன்பது என்ற நம்பரை எந்த நம்பரால் பெருக்கினாலும் அதன் கூட்டுத் தொகை ஒன்பதுதான் வரும். ஒன்பதின் பெருக்கம் புது எண்ணை உற்பத்தி செய்யாது; இனப் பெருக்கத்துக்கு உதவாத எண் ஒன்பது.”

சமுதாயத்தின் ஏச்சுக்குப் புது அர்த்தம் கண்டுபிடித்து சமாதானம் அடைகின்றனர்.

வாழ்க்கை சுமூகமாக நடந்தபோது கொரோனாத் தொற்று பரவி வாழ்க்கையைத் தலைகீழய் மாற்றிவிடுகிறது. மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் இரவு பகல் பாராமல் கொரோனாப் பராமரிப்புக் கூடத்தில் வேலை செய்து மனித உயிர்களைக் காப்பாற்றப் போராடுகின்றனர். கீர்த்தனா போன்ற அலுவலகப் பணியாளர்களும் அந்த வேலையில் இறக்கி விடப்படுகின்றனர். கீர்த்தனாவின் சக தோழிகளும் முழு முடக்கத்தால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு யாசகம் வாங்க வழியில்லாமல் திண்டாடிய போது, அவர்களுக்கும் உதவியாளர் பணி கிடைக்கிறது.

தீநுண்மி பராமரிப்புக் கூடத்துக்கு ஏராளமானவர்கள் வந்து குணமாகியும் குணமாகாமல் மரணமடைந்தும் போகின்றனர். இறந்தவர்களைப் புதைக்க மயானக் கிடைக்கவில்லை; குணமடைந்து செல்லும் ஏழைகள் ஊருக்குள் நுழைய அனுமதிக்க மறுக்கின்றனர். மருந்து கண்டுபிடிக்கப் படாத கொடூர நோயினால் மன பயம் அதிகரித்து அனைத்து மனிதர்களும் நடைபிணமாய் அலைகின்றனர்.

கீர்த்தனாவுக்கும் சோதனையில் பாசிடிவ் என வர 15 நாள் மருத்துவம் பார்த்துக் குணமடைகிறாள். இன்னும் இரண்டு வாரம் தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நிலையில் நெரிஞ்சிக் குடியில் இருக்கும் தனது சக தோழிகளுக்குக் கைபேசியில் அழைக்கிறாள். அந்தக் குடிலுக்கு வர அவர்கள் அனுமதிக்கவில்லை. தனிமைக்காலம் முடிந்தபின் வந்தால் போதும் என்கின்றனர்.

நோய்த்தொற்றுத் தடுப்பகத்தில் பணியாற்றியவர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், களப் பணியாளர்கள் உட்பட, பணிச்சுமை காரணமாகவும், ஓய்வின்மை மற்றும் மக்கள் அறியாமையால் ஒதுக்குதல் காரணமாகவும் விரக்தி நிலையில் துவண்டு போவதை நிறைவாகச் சித்தரிக்கிறது கதை.

போக்கிடம் இல்லாமல் அலைந்த கீர்த்தனா ரயில் ரோட்டு வழியாய் விரக்தியோடு நடந்து செல்கிறாள். அப்போது, இருள் வெளியில் ஓர் ஆட்டோ டிரைவர் தற்கொலைக்குத் தயார் ஆவதைக் கவனித்து விடுகிறாள்.. அவனைக் காப்பாற்றி மீட்டெடுத்துத் தைரியம் சொல்லி “நாம் சாகவேண்டாம்” என்கிறாள். ”ரயிலை மறித்துப் போராட்டம் நடத்துவோம்; அதிகாரிகள் வந்து நிவாரணம் வழங்கட்டும்” என்கிறாள். இருவரும் சேர்ந்து ரயிலை மறிக்கின்றனர் என்பதோடு கதை முடிகிறது.

இந்தக் கதையில் முக்கியச் செய்தி ஒன்று உண்டு; தமிழகத்தில் இருந்து வட இந்தியத் தொழிலாளிகள் சாரி சாரியாய் நடந்து சென்று துயரப் பட்டதை அறிந்திருக்கிறோம். அதே நிலை தமிழர்களுக்கும் நேர்ந்துள்ளது; மகாராஷ்ட்ரா உட்பட வட மாநிலங்களில் இருந்து தமிழகம் நோக்கி நடந்து வந்திருக்கிறார்கள். இது பலருக்கும் புதிய செய்தி. நோய்த்தொற்றுக் காலம் என்பது அங்கிங்கெனாதபடி துயர முட்களைத் தெளித்திருந்தது; ஆசிரியர் மிக அழுத்தமாக இதைப் பதிவு செய்திருக்கிறார்.

தீநுண்மி துயரத்தின் ஏறத்தாழ முழுப் பரிமாணத்தையும் பிரதிபலிக்கிறது இந்தக் கதை.

3 தெளிவு;-

பிரியா ஒரு கட்டுமானப் பொறியாளர். அவள் கணவனும் அவளும் ஐ ட்டித் துறையில் வீட்டில் இருந்தே இருவேறு காலமுறைமையில் பணியாற்றுகின்றனர். சென்னை நகரின் நெருக்கடியான வாழ்க்கை! இளமையை இன்பமாய் அனுபவிக்க வேண்டும் என்ற ஆவலில் குழந்தை பெறுவதைத் தள்ளிப் போடுகின்றனர். ஒரே வீட்டில் உள்ள தம்பதிகளுக்கு அமையும் முரண்பட்ட வேலை முறைமையிலும் கிடைக்கும் நேரத்தில் அதீதக்கூடுதலும், பணி நெருக்கடியும் அவனிடத்தில் உடல் சோர்வையும், அவளிடத்தில் போதாமையையும் உணர்த்துகின்றன. அதனால் தாம்பத்திய இடைவெளிகள் அதிகரிக்கின்றன. ஒரு கட்டத்தில் அடங்கா வேட்கையுடன் தாம்பத்தியம் கொள்ள பிரியா ஆசைப்பட்ட போது கணவன் பணிநெருக்கடியைச் சொல்லி ஒத்திப்போடுகிறான். அலைக்கழிக்கும் காமவிகார எண்ணங்களிலிருந்து தப்ப நினைக்கிறாள். கொஞ்சநாள் பிரிந்திருந்தால் அவன் சரியாகலாம் என்று பிரியா பிடிவாதமாய் வீட்டை விட்டுத் தேனி மாவட்டத்தில் இருக்கும் தன் சொந்த கிராமத்துக்குச் செல்கிறாள் .

தன்னை எடுத்து வளர்த்த பெரியம்மா வீட்டுக்குப் போகிறாள். அன்பு பொழியும் கிராம வாழ்க்கை அவளுக்குச் சில படிப்பினைகளைத் தருகிறது. தாம்பத்தியம் ஒரு பொருட்டல்ல; வாழ்வதுதான் முக்கியம் எனப் புரிந்துகொள்கிறாள்..

கணவன் நிறையக் குறுஞ்செய்தி அனுப்பி அவளை அழைத்துக் கொண்டிருந்தான். அவள் கிளம்பத் தயாராய் இல்லை. மூன்றாம் நாள் மதுக் கோப்பையைப் பதிவிட்டு “கோப்பையில் உதடுவைத்து மதுவைச் சுவைக்கையில் உன் உதட்டில் என் உதடு வைத்து உறிஞ்சுவதுபோல் பித்தேறிக் கண் சொக்குதடி” என வசனம் எழுதுகிறான். ஏற்கனவே குடிகாரனாய் இருந்தவனை மீட்டெடுத்து வைத்திருக்கிறாள். இப்போது மீண்டும் அடிமையாகி விட்டானே எனப் பதறுகிறாள். உடனடியாக டாக்ஸி எடுத்துக் கொண்டு சென்னைக்குச் செல்கிறாள். அங்கு அவன் மதுபோதையில் தன்னுணர்வு இல்லாமல் கிடக்கிறான். டாக்சி டிரைவர் உதவியால் மருத்துவ மனைக்குத் தூக்கிச் செல்கிறாள்.

தாம்பத்திய வாழ்க்கையின் வெக்கையும் வேட்கையும் சரியாகபுரிந்து கொள்ளபடாதை தெளிவு சொல்கிறது. இருவருமே பிறன்மனை நோக்காப் பேராண்மையாளர்கள் என்பதை இருவர் நடத்தைகளும் கரை தாண்டாமல் வாழவைக்கிறது. இந்தக் காலகட்டத்தின் முக்கிய படைப்பு நூல் இது.

– தேனிசீருடையான்

வெளியீடு:
Pustaka digiral media pvt ltd
#7,002 mantri recidency
Bennergharra main road.
Bengaluru 560 076
Karnataka. India.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *