ஒரு சனநாயக நாட்டில் மொழிச் சமத்துவமும், பிறப்புச் சமத்துவமும் ஏற்படாதவரை முழுமையான சமத்துவம் மலர இயலாது. பார்ப்பனிய எதிர்ப்பு என்பது மனித சமத்துவத்துக்கும், சனநாயகத்துக்குமான தேடலாகும்.
உலகின் எல்லா நாடுகளிலும் அரசதிகாரம் உருவான போது அதனை நியாயப்படுத்தும் சித்தாந்தங்களும் உருவாகும். இதுவே உலக வரலாறு காட்டும் உண்மையாகும். அரசதிகாரம் மக்களை ஒடுக்கிய காலங்களில் அதனை நியாயப்படுத்தும் சாத்திரங்களும் எழுதப்படும். பெரும்பாலான மக்கள் எழுத்தறிவற்றவர்களாக வாழும் காலங்களில் எழுதப்பட்ட சாத்திரங்கள் அவர்களது சிந்தனைத் திறனை அடிமைப்படுத்தி தாங்கள் அடிமையென்று தங்களையே ஏற்கச் செய்யும் இந்தியத் துணைக் கண்டத்தில் அவ்வாறு உருவான சித்தாந்தத்தைத் தான் நாம் பார்ப்பனியம் என்று அழைக்கின்றோம். பார்ப்பனியம் என்பது ஒரு கருத்தியல் வன்முறையாகும். பிறப்பின் வழியாகவே ஏனைய மக்கள் திரள்களை இழிந்தவர்கள் என்று அது அடையாளம் காட்டுவதையே நாம் வன்முறை என்கிறோம்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவரின் அறத்தினைப் பார்ப்பனியம் ஒரு போதும் ஏற்க இயலாது. பிறப்பினால் பார்ப்பனர் ஆனவர்கள் இன்னமும் தங்களை ஆகமேல்சாதி என்றே உணருகின்றனர். நம்புகின்றனர். இந்த நம்பிக்கையின் மறுபக்கமானது மற்றவர்கள் இழிந்தவர்கள் என்பதாகும். நாடு விடுதலை பெற்று ஐம்பது ஆண்டுக் காலமான பின்னரும் வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் இந்த உணர்வினை வெளிப்படுத்த அவர்கள் தயங்குவதில்லை.
தங்களுக்கு மட்டுமே உரிய வடமொழி, வேதம் ஆகியன அறிவார்ந்த விவாதங்களுக்கு அப்பாற்பட்டன என்பதும் வட்டார மொழிகளை நிராகரித்து சமஸ்கிருதத்தை மட்டுமே உயர்த்திப் பிடிப்பதும் கோயில்களின் தலைமையும், மற்ற சாதியாரின் சடங்கியல் தலைமையும் தங்களுக்கேயுரியன எனச் சாதிப்பதும் பார்ப்பனியத்தின் வேசங்களாகும்.
ஒரு சனநாயக நாட்டில் மொழிச் சமத்துவமும், பிறப்புச் சமத்துவமும் ஏற்படாதவரை முழுமையான சமத்துவம் மலர இயலாது. பார்ப்பனிய எதிர்ப்பு என்பது மனித சமத்துவத்துக்கும், சனநாயகத்துக்குமான தேடலாகும்.
அண்மைக் காலமாக காஞ்சி சங்கராச்சாரியாரும் அவரைக் கொண்டு கலாச்சார அரசியல் நடத்துபவர்களும் இந்து என்ற கூட்டுக்குள் ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள். கிறித்தவரல்லாத, இசுலாமியரல்லாத எல்லா மக்களுக்கும் இவரே ஆன்மீகத்தலைவர் என்பது போல அவருக்கு ‘முடிசூட்டி’ பெருந்திரளான தமிழர்களை ஏமாற்ற முற்படுகின்றனர். அவர்களது மாயாவாத சித்தாந்தம் எல்லா அரசியல், சமூக அதிகாரங்களையும் மீண்டும் பார்ப்பனிய வன்முறை வலைக்குள் கொண்டு வரப்பார்க்கின்றது. சைவம், வைணவம், நாட்டார் தெய்வங்கள் ஆகிய அனைத்தையும் பார்ப்பனியம் தின்று தீர்க்கப் பார்க்கிறது. இந்தச் சூழ்நிலையில் சமூக வரலாற்றுக் கல்வி ஒன்றே நம்மைக் காப்பாற்றும்.
பிறப்பு வழிப்பட்ட பார்ப்பனியத்தினை மட்டும் எதிர்ப்பதில்லை இந்த வெளியீட்டின் நோக்கம். பார்ப்பனியக் கருத்தியலை ஏற்றுக் கொண்ட பார்ப்பனர் அல்லாதவர்களும் மறுப்புக்குரியவர்கள். ஆராய்ச்சியாளர்கள் இவர்களைப் புதிய பார்ப்பனர்கள் (Neo-Brahmins) என அழைக்கின்றனர். நிகழ்காலத்தில் எல்லாவகையான ஊடகங்களையும் பார்ப்பனியக்கருத்தியல் தனதாக்கிக் கொண்டது. பார்ப்பனியம் என்பது ஒரு பண்பாட்டு வல்லாண்மை என்ற கருத்தை முன் வைத்தே இந்த வெளியீடு உண்மையான சனநாயகத்திற்காகக் குரல் கொடுக்கின்றது. (நூலின் முன்னுரையிலிருந்து…)
பார்ப்பன எதிர்ப்புணர்வும் சீர்திருத்த உணர்வும் கொண்ட அறிஞர்களும் செயல் வீரர்களும் இந்தியாவில் பல முறை தோன்றியுள்ளனர். புத்தர் தொடங்கி பூலே வரை இவர்களது எண்ணிக்கை ஏராளம். அவர்களில் யாரும் பெறாத வெற்றியைப் பெரியார் மாத்திரமே பெற்றார். அதுவும் தம் வாழ்க்கையிலேயே பெற்றார். … தூங்காமை, கல்வி (பட்டறிவு), துணிவுடைமை அனைத்துக்கும் மேலாகத் தன்னலமின்மை ஆகிய பண்புகள் பெரியாரை மாமனிதராக ஆக்கின. (நூலிலிருந்து பக்.30-31)
பார்ப்பனியம் எங்கே இருக்கிறது, அது செத்துப் போய்விட்டது’, பார்ப்பனர்கள் மாறிப் போய்விட்டார்கள்’, இப்படியொரு வாதத்தைப் பார்ப்பனரல்லாத படித்த நண்பர்கள் மத்தியில் அடிக்கடி கேட்கலாம். இவர்கள் இந்த முடிவுக்கு எப்படி வந்தனர்? வேறு எப்படி? வழக்கம் போல பார்ப்பனர்களால் ஏமாற்றப்பட்டுத்தான்.
பூணூல், குடுமி, பஞ்சகச்சம் வைத்துக்கட்டுதல், தீண்டாமை, புலால் உண்ணாமை முதலிய பழக்கங்களை பார்ப்பனர்கள் விட்டுவிட்டார்கள் என்பது உண்மைதான். இவையெல்லாம் பார்ப்பனியத்தின் முகம் மட்டுமே. எவையெல்லாம் பார்ப்பனியத்தின் உயிர் என்பதனைக் கீழ்க்காணுமாறு அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். ஏனென்றால் பார்ப்பனியம் என்பது வெளி ஆச்சாரம் மட்டுமல்ல. அது கருத்தியல் (ideology) ஆகும். அது மட்டுமன்று, அது பார்ப்பனரல்லாதார் மீதான ஒடுக்குமுறைக் கருத்தியலும் ஆகும்.
1. பிறவியினால் ஒருவனை மேல், கீழ் என அடையாளம் காணுவது, நினைப்பது, காட்டுவது.
2. கடுமையான உடல் உழைப்புள்ள தொழில்களைத் தாழ்வாக எண்ணுவது, உடல் உழைப்புத் தொழில்களைத் தவிர்ப்பது.
3. ஒவ்வொருவரையும் குலத் தொழிலைச் செய்ய கட்டாயப்படுத்தி அதிலிருந்து வெளியே வராமல் இருக்கச் செய்வது. வெகுஜனப் பத்திரிக்கைகளில் வரும் பார்ப்பனக் கருத்தாக்கங்களை நம்பி அவற்றினைப் பிரச்சாரம் செய்வது (குறிப்பாக சங்கராச்சாரியார், அஹிம்சை, கணபதி ஹோமம், இந்து மதம் முதலிய சொற்களில் நம்பிக்கை வைப்பது).
பார்ப்பனியம் நேற்று வரை வேதத்தின் புனிதம், புராணக் கதைகள், சடங்குகள் ஆசாரங்கள் ஆகியவற்றின் மூலம் தனக்கு வேண்டிய கருத்துக்களை மற்றவர்கள் மூளைக்குள் திணித்தது. இன்றும் அதே கருத்தாக்கங்களை மறைமுகமாகப் பத்திரிகைகள் மூலம் மற்றவர்கள் மூளையில் திணித்து வருகிறது.
மேற்குறித்த வகையான கருத்துக்களை அறிந்தே கடைப்பிடித்தும். ஏமாறும் தமிழர்களை நாம் பார்ப்பன அடிவருடிகள் என்று அழைப்பதே பொருத்தமானது. இவர்கள் பார்ப்பனியம் என்ற ஒடுக்குமுறைக் கருத்தியலுக்குப் பலியாகிப் போனவர்கள். (நூலிலிருந்து பக்.35)
நூல் : இதுதான் பார்ப்பனியம்
ஆசிரியர் : தொ. பரமசிவன்
வெளியீடு : மணி பதிப்பகம்,
29-அ, யாதவர் கீழத்தெரு,
பாளையங்கோட்டை, திருநெல்வேலி – 627 002.
தொலைபேசி எண் : 0462 – 2560083
பக்கங்கள்: 40
விலை: ரூ 20.00
நன்றி – வினவு இணையதளம்.
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
இணையத்தில் வாங்க : thamizhbooks