‘உடைபடும் மௌனங்கள்’ நூலில் 30 சிறுகதைகள் அடங்கியுள்ளன. இதில் 28 பெண் எழுத்தாளர்களின் கதைகள் நூலாக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கதைகளைப் பொதுவாக இரண்டு பிரிவுகளாகப் பிரித்துவிடலாம். 1.குடும்பச் சிக்கல் சார்ந்தவை 2.தனிமனிதச் சிக்கல் சார்ந்தவை என்ற பிரிவுகளின் கீழ் காணமுடியும்.

1.குடும்ப அமைப்பும் சிக்கலும்
பெண்கள் எழுதிய இந்தக் கதைகள் பெரும்பாலும் குடும்ப அமைப்பில் நிலவுகின்ற சிக்கல்களைப் பற்றியே பேசுகின்றன. அதிலும் குறிப்பாக கணவன்-மனைவிக்கு இடையிலான சிக்கல்களை ஆழமாக அலசியிருக்கின்றன என்றும் கருத முடியும். பெண்கள் ஏன் இன்னும் குடும்ப அமைப்புச் சிக்கல்களைக் குறித்தே எழுதுகிறார்கள் என்பதைச் சிந்திக்க வேண்டியிருக்கிறது. குடும்ப அமைப்பு என்பது நேரடியாக இருபால் உறவு எனும் நிறுவனமயத்தின் கண்ணி என்பதால் இந்தச் சிக்கல் இன்னும் பெண்களையே அதிகம் தாக்குகிறது என்று விளக்கம் கொண்டுவிடலாம். ஆனால் பெண் படைப்பாக்கத்தில் குறிப்பாக இந்த நூலிலுள்ள கதைகள் பேசும் குடும்ப அமைப்புச் சிக்கல் பற்றி விரிவாகப் பார்க்க வேண்டியிருக்கிறது. அடிப்படை, மேற்கட்டுமானம் எனும் மார்க்ஸின் பார்வையிலிருந்து சொன்னால் பொருளாதார நிர்ணயமாக்கல் இன்னும் மேற்கட்டுமானத்தைப் பாதித்துக் கொண்டுதான் இருக்கிறது. பெண்கள் குடும்பம் என்ற மேற்கட்டுமான அமைப்பிற்குள் ஆட்டுவிக்கப்படுபவர்களாவே இருக்கிறார்கள். அதனால் இந்தச் சிக்கல் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்று காரணத்தை விளக்கலாம். பெண்களின் குடும்பப் பணி இன்னும் மதிப்புப் பெறவில்லை. உபரி மதிப்பாகவே கருதப்படுகிறது. இதன் விளைவாக, உணர்வுகளின் உற்பத்தியும் அமைகிறது. ஆண்-பெண் இடையிலான பரஸ்பர நட்பு என்பது மறைந்து மார்க்ஸ் கூறிய ரொக்கப்பட்டுவாடா உறவாக இது மாறிவிட்டிருக்கிறது. இதற்கான தீர்வாகக் குடும்பத்தைச் சிதைத்தல் என்பதைப் பெண்ணியம் முன்வைக்கிறது. ஆனால் எல்லாப் பெண்களுக்கும் இந்தத் தீர்வு ஏற்புடையதாக இருப்பதில்லை. காரணம், குடும்ப அமைப்பின் விதிகளுக்குள் மட்டுமே வளர்க்கப்படுபவர்களாக இருப்பதால் அதனை மீறிய அமைப்பு குறித்த சிந்தனை இன்னும் பெண்களுக்குள் விழிப்படையவில்லை.

இருபால் உறவு எனும் நிறுவனம் தட்டையான, ஜனநாயகமற்ற, தான் எனும் அகங்காரம் சார்ந்த பாலினங்களைச் சமூகவயமாக்கிவிடுகிறது. இதில் பொருளாதார பலம் அதிகாரத்தைத் தருகிறது. இதையும் மீறி ஒரு முற்போக்கான சிந்தனையை வளர்த்தெடுப்பது பெரும் போராட்டமாகிவிடுகிறது. இந்த நிலையில்தான் பெண்கள்
இருப்பதால் அது படைப்பிலும் எதிரொலித்துவிடுகிறது. குடும்ப அமைப்பிற்குள் ஜனநாயகத்தை எதிர்பார்ப்பவர்களாகவே பெண்களை இந்தச் சமூகம் கட்டமைத்துவிடுகிறது. வன்முறையின் வடிவங்களைக் கூர்ந்து நோக்குபவர்களாகப் பெண் படைப்பாளிகள் மாறிவிடுகிறார்கள். குடும்ப அமைப்பின் சிக்கல்களில் வெளிப்படும் வன்முறை கொண்டு இந்தக் கதைகளை ஆராய்ந்தால் வாஸந்தி எழுதிய ‘தேடல்’ எனும் கதை பெரும் பாதிப்பைத் தருகிறது. கணவன்-மனைவி இடையேயான அதிகாரப் பரிமாற்றத்தில் குழந்தை கொல்லப்படுவதும் மனைவி மனப்பிறழ்வடைவதும் குடும்ப அமைப்பின் வன்முறையை எடுத்துக் காட்டிய கதையாக உள்ளது. குடும்பத்தை மீறி உருவாகும் உறவுகள் மீண்டும் குடும்ப அமைப்புக்கான தேடலாக இருப்பதைத்தான் காணமுடிகிறது. இந்தக் கதைத் தொகுப்பில் இடம்பெற்ற கதைகளும் அத்தகைய நிலையைச் சுட்டிக்காட்டுகின்றன. கவின் மலர் எழுதிய ‘விட்டு விடுதலையாகி’ என்ற கதை குடும்ப அமைப்பின் வன்முறையில் விடுபட்டு மீண்டும் ஒரு குடும்ப அமைப்பை உருவாக்குவது தவிர வேறு வழியில்லாத தாய் தனது குழந்தையை விட்டுப் பிரிவதாகக் காட்டப்பட்ட கதை இருபால் உறவின் சீர்கேட்டைச் சொன்ன கதையாக இருக்கிறது. அனுராதா ரமணன் எழுதிய ‘சிறை’ எனும் கதை சாதியின் தீவிரம், பாலியல் வன்முறையைவிடக் கொடூரமானது என்பதைக் காட்டிய கதையாக இருக்கிறது.

Image result for உடைபடும் மௌனங்கள்

குடும்பத்தை விட்டு வெளியேறினால் கிடைக்கும் விடுதலை உணர்வை அனுபவித்தாலும் அதுவும் ஒரு சுமையான, துயரமான வாழ்வையே நல்குவதாக இந்தக் கதைகள் சில வெளிபடுத்துகின்றன. இதற்கு லதா உதயன் எழுதிய ‘ஒரு நதியின் தேடல்,’ ஜெயந்தி சங்கர் எழுதிய ‘சுயம்,’ அகிலா எழுதிய ‘மிளகாய் மெட்டி,’ போன்ற கதைகளை எடுத்துக்காட்டுகளாகக் குறிப்பிடலாம். பெண்ணின் அடைக்கல உணர்வு சமூகத்தால் கட்டி வளர்க்கப்பட்டது. காரணம், அகம் சார்ந்த உணர்வின் உடலாகவே பெண் மாற்றப்பட்டிருக்கிறாள். இந்த உருமாற்றத்தின் பின்னணியில் ஆணாதிக்கம், ஆண் முதன்மைச் சமூகம், லிங்கமைய வாதம் போன்றவை இருக்கின்றன. ஆனால் இதனை மீறிய இதற்கு எதிரான வாழ்வு குறித்த தேடல் அல்லது இருப்பு, பாதுகாப்பு உணர்வை, நிம்மதியை, நிறைவைப் பெறுவதற்கான வழியாக இல்லை. அதனால் படைப்புகளும் அதனை வலியுறுத்த இயலாத நிலையில் உள்ளன.குடும்ப அமைப்பிற்குள் சில நெகிழ்வுகளைக் கொண்டு உறவுகளைக் கட்டமைப்பதன் மூலம் இருபால் உறவினால் விளையும் சிக்கல்களைத் தவிர்க்கலாம் என்றும் சில கதைகள் கூறுகின்றன. நாச்சியாள் சுகந்தி எழுதிய, ‘அப்பாவின் காதலி’ என்ற கதை அப்பாவின் காதலியாக இருப்பவருடன் அப்பாவின் குடும்பத்தில் இருப்பவர்கள் சகஜமாகப் பழகுவது குறித்த கதை.

எந்த நெருடலும் இல்லாமல் மகள் இதைக் குறித்து கதையாக எழுதுவதாகப் பதிவு செய்கிறது இக்கதை. உமா மகேஸ்வரியின் ’மூடாத ஜன்னல்,’ அப்பாவின் காதலியை அவமானப்படுத்தும் குடும்ப விதியைக் காட்டிச் செல்கிறது. குடும்பத்தின் நெகிழ்வுகளுக்குப் பெண்தான் இடம் அளிக்கவேண்டும் என்பதும் இரு கதைகளும் உணர்த்துகின்ற செய்தியாக உள்ளது.குடும்ப அமைப்பின் சிக்கல்களால் சிதையும் வாழ்வு பெண்களை உறவுகள் இருந்தும் தனித்தீவுகளாக மாற்றிவிடுவதை இந்தத் தொகுப்பின் பல கதைகள் காட்டுகின்றன. குடும்ப அமைப்பு ஏற்படுத்திய காயங்களுக்குப் பின் அதற்கு வெளியே உள்ள வாழ்வை நோக்கி நகர்த்தப்படுகிறார்கள் பெண்கள். குடும்ப அமைப்பு எந்திரம் அதன் முக்கிய உறுப்புகளான மனைவி, தாய் என்ற உறவுகளை எந்திரங்களாக்கிவிடுகிறது.

2.தனிமனிதச் சிக்கல்களும் அமைப்பும்
பெண் தனிமனிதச் சிக்கல்களில் ஆட்படும் போது அது அவமானத்தை, துயரத்தை, சோகத்தை ஏற்படுத்திவிடுகிறது. ஏனெனில் பெண்ணுக்குத் தனி வாழ்வு சாத்தியமில்லை என்பதைத்தான் இருபால் உறவு நிறுவனம் இது வரையில் கட்டமைத்திருக்கிறது. பெண்களுக்கு ஏற்படும் சில சிறிய தீய அனுபவங்களும் அந்த நிறுவனம் கொடுக்கும் நெருக்கடி போலவே ஆகிவிடுகிறது.
இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் சில கதைகள் பெண் பாத்திரங்களுக்கு நேர்ந்த சில கொடுமையான அனுபவங்களைக் குறித்து விவரிக்கின்றன. எடுத்துக்காட்டாக, கவிதா எழுதிய ‘மானிடவர்க்கென்று பேச்சுப்படின்’ கதையில் ஒரு பெண் இதுவரையிலான பெண் வாழ்வுக்குரிய எந்த ஓர் இயல்பையும் பேண முடியாமல் இறந்தே போகிறாள். இது விடுதலை சார்ந்தது மட்டுமல்ல அல்லது பாலியல் கல்வி சார்ந்தது மட்டுமல்ல. ஒரு வகையில் தனித்த வாழ்வு குறித்த சிக்கல் இது. தனிமனிதத் தேர்வுகள் பற்றிய அபிப்பிராயம் சமூகத்தில் இல்லாமல் போனதால் இந்தக் கதையின் கதாபாத்திரத்தைக் குறித்து இந்தக் கதை நுட்பமாகப் பதிவு செய்திருக்கும் அம்சம் காணாமல் போய்விடுகிறது. அதே போல் கலைச்செல்வி எழுதிய ‘பிரசவ வெளி’ என்ற கதையும் தாய்மை அடைந்து குழந்தை பிறப்பு குறித்து அச்சப்படும் பெண்ணின் அனுபவத்தைக் குறித்து விரிவாகச் சொல்கிறது. இந்தக் கதையும் ஒரு பெண் தாய்மை அடைந்துவிட்டாலே குழந்தைப் பிறப்பை விரும்பவேண்டும் என்பது விதியாகாது என்பதை நுட்பமாகச் சுட்டிக்காட்டியிருக்கிறது. தனிமனித விருப்பு வெறுப்பாக அது இருக்கவேண்டும் என்பதையும் இந்தக் கதை வெளிப்படுத்தி இருக்கிறது.

Image result for உடைபடும் மௌனங்கள்

பெண்களுக்கான சில இயல்புகளை, குணாம்சங்களைக் குறித்து அதீத பிம்பங்கள் இருக்கின்றன. அதைக் குறித்த கேள்விகளைச் சில கதைகள் எழுப்புகின்றன. உதாரணமாக சீதா ரவி எழுதிய, ‘கூந்தல்’ கதை பெண்ணின் நீளமான கூந்தல் குறித்த கவனம் சமூகத்தில் இருப்பதும் கணவன் மறைவுக்குப் பின் சில சாதிகளில் தலையை மழித்து விடுவதும் தனிமனித விருப்பத்தை மீறிய செயல்களாக இந்தக் கதை பார்க்கிறது. கூந்தல் மூலம் ஒரு சமூகத்தின் விழைவு வெளிப்படுவதை இந்தக் கதை எதிர்க்கிறது. இதே போல் ‘வளையல்காரம்மா’ என்ற ஜி.மீனாட்சி எழுதிய கதையிலும் வளையல் விற்பவர்கள் பெண்ணின் அலங்காரங்களாக இருப்பவற்றை கணவன் மறைந்தவுடன் தவிர்ப்பதும் அதன் காரணமாக அப்பெண்ணின் வணிகம் பாதிக்கப்படுவதும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

தனிமனிதச் சிக்கல்களை எடுத்துக்காட்டிய கதைகளாக இவற்றை வாசிக்க முடிகிறது. மற்றொரு நுட்பமான அனுபவத்தை ஜெயந்தி சங்கர் எழுதிய ‘ஈரம்’ என்னும் கதை பதிவு செய்கிறது. வெளிநாட்டில் வீட்டு வேலை செய்யும் பெண் மின்தூக்கியில் போக அஞ்சி கலவரப்படுவதால் அதில் அவர் அறியாமல் சிறுநீர் கழித்துவிட்டு அதற்காகச் சிறைத் தண்டனை அனுபவிப்பது பற்றி எழுதப்பட்ட கதை. பெண்ணின் உடல் உபாதைகளைக் குறித்து கவனமற்ற சமூகத்தில் பெண் பாத்திரத்தின் அறியாமையால் ஏற்படும் கொடுமையான அனுபவத்தைச் சித்தரித்திருக்கும் கதை இது. இதே போன்ற மற்றொரு கதை அ.வெண்ணிலா எழுதிய ‘வெளிய’ என்ற கதை. சிறுமிகள் இயற்கை உபாதையைக் கழிக்க அல்லற்படுவதைப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் எழுதியிருக்கிறார். இந்தக் கதையில் பெண்ணுக்கான வெளி என்பது வெட்கம் என்ற காரணத்தினால் மறுக்கப்பட்டிருப்பதை அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. புறவெளியில் பெண் இயங்க முடியாது என்பதை ஒரு தனிமனித கொடூர அனுபவமாக மாற்றிக் காட்டியிருக்கிறது இந்தக் கதை. கவின் மலர் எழுதிய ‘இரவில் கரையும் நிழல்கள்’ என்ற கதையும் பெண்ணுக்கான வெளி எப்படிச் சுருங்கிவிடுகிறது என்பதைக் காட்டிச் செல்கிறது.

தனிமனித அடையாளத்திற்கான தேடல் பெண்ணுக்கும் அவ்வப்போது எழுவதை கவிதா சொர்ணவல்லி எழுதிய ‘அம்மாவின் பெயர்’ என்ற கதை வெளிப்படுத்துகிறது. இந்தக் கதையில் மகள், அம்மாவின் பெயர் என்னவென்று அறியாமல் பெரும் சிக்கலுக்கு உள்ளாகிறாள். அம்மாவின் பெயர் திராவிடச் செல்வி என்பதை அறிந்த பின் அவளுக்குள் ஏற்படும் நிறைவு குறித்து இந்தக் கதை விவரிக்கிறது. இதில் ஒரு வகையான அரசியலையும் இந்தக் கதை பதிவு செய்கிறது. திராவிடத்தின் எழுச்சிக்குப் பின்னும் பெண்ணை நடத்தும் முறை சமூகத்தில் மாறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டவும் இந்தப் பெயர் இந்தக் கதையில் பயன்படுத்தப்பட்டிருப்பது போன்ற ஒரு கருத்தும் எழுகிறது.

இந்தத் தொகுப்பின் ஆசிரியர் முனைவர்.பிரேமா அவர்கள், பெண் வலி குறித்து எடுத்துரைக்கப்பட்ட கதைகள் இவை என்கிறார். பெண்ணின் வலியை ஆண்களால் கற்பனை செய்ய முடியாததை இந்தக் கதைகள் பதிவு செய்திருக்கின்றன என்றும் விளக்குகிறார். மேலும் இந்தத் தொகுப்பின் நோக்கமாக சகோதரித்துவத்தை உருவாக்குதல் என்றும் திருமதி.பிரேமா கூறியிருக்கிறார். இந்தத் தொகுப்பில் இடம்பெற்ற கதைகள் பெண்ணின் எல்லை குறுக்கப்பட்டிருப்பதையும் அதனால் ஏற்படும் இடர்ப்பாடுகளையும் ஆழமாக எடுத்துரைப்பதை தொகுப்பாசிரியர் பிரேமா சுட்டிக்காட்டுகிறார். இருபால் உறவு நிறுவனம் ஏற்படுத்தும் உறவுகள் பெண்களுக்குள் வேற்றுமையை ஏற்படுத்துவதற்கும் அதிகாரப் படிநிலை வரிசையை உருவாக்குவதற்கும் அதன் காரணமாக சிக்கல்களும் நெருக்கடிகளும் பெருகுவதற்கும் அடிப்படையாக அமைவதை இந்த நூலில் தொகுக்கப்பட்ட கதைகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்தத் தொகுப்பில் இடம்பெற்ற கதைகளை எழுதிய பெண் எழுத்தாளர்கள் தங்களின் அடையாளத்தை முன்வைக்க எடுத்த முயற்சிக்குத் தொகுப்பாசிரியர் பாராட்டைக் கூறியிருக்கிறார்.

இந்தத் தொகுப்பு பெண் எழுத்தின் தற்காலத்திய சிந்தனையை அறிய பெரிதும் உதவும் நூலாக இருக்கிறது. ஏனெனில் படைப்பாக்கத்தின் மூலம் பெண்ணின் நிலையை அறிவது மாணவர்களுக்கும் பொதுவான வாசகர்களுக்கும் அவசியமான ஒன்றாக இருக்கும். இந்தக் கதைகள் அது போன்ற தேவையை நிறைவு செய்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *