நூல் அறிமுகம்: வனிதாமணி அருள்வேல் ’கதைசொல்லியின் பயணம்’ – இ.பா.சிந்தன்

நூல் அறிமுகம்: வனிதாமணி அருள்வேல் ’கதைசொல்லியின் பயணம்’ – இ.பா.சிந்தன்




வனி அத்தை எழுதிய ‘கதைசொல்லியின் பயணம்’ நூலை வாசித்தேன். தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருக்கும் ஏராளமான பள்ளிகளுக்குப் பயணித்து ஆயிரக்கணக்கான குழந்தைகளை சந்தித்து அவர்களுடன் ஆடி, பாடி, ஓடி, விளையாடி, உற்றுநோக்கி, உரையாடி, கதைகள் சொல்லி, கற்றுக்கொண்டு, கற்றுக்கொடுத்து கிடைத்த அனுபவங்களை இந்நூலில் எழுதியிருக்கிறார்.

ஒரு பள்ளிக்குப் போனாலும், பத்துப் பள்ளிக்குப் போனாலும் ஒரே மாதிரியான கதைகளை சொல்லி, ஒரே மாதிரியான அனுபவத்தைத்தானே பெற்றிருப்பார்? என்று நினைக்கிறீர்களா… அதுதான் இல்லை. உலகில் இருக்கும் ஒவ்வொரு குழந்தையும் தனித்தனியான தன்மைகளைக் கொண்டவர்கள் என்பதாலும், வனி அத்தை பயணித்த பள்ளிகளின் நிலமும் பள்ளிச்சூழலும் வெவ்வேறு விதமான பின்புலத்தைக் கொண்டவை என்பதாலும், அவருக்குக் கிடைத்த அனுபவங்களுமேகூட வெவ்வேறு விதமாகத்தான் இருந்திருக்கிறது.

ஒவ்வொரு கட்டுரையையும் நான்கு அடுக்குகளாகப் பிரித்துப் பார்த்து புரிந்துகொள்வது அவசியம் என்று நினைக்கிறேன்.

ஒன்று, வனி அத்தை பயணித்த பள்ளிகளின் அக மற்றும் புறச்சூழலும் அதனால் அந்தக் குழந்தைகளின் மனநிலையும் உலகைப் பார்க்கிற விதமும் எப்படியாக இருக்கிறது என்பதையும் ஒவ்வொரு கட்டுரை துவங்கும்போதும் அழகாக சொல்லியிருக்கிறார். அந்த சூழலை சரியாகக் கணித்து அக்குழந்தைகளை தன்வசப்படுத்துவதாக இருக்கட்டும், அல்லது அக்குழந்தைகளின் வசம் தன்னை ஒப்படைப்பதாக இருக்கட்டும், இரண்டையும் சரியாக அவரால் செய்யவும் முடிந்திருக்கிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

இரண்டு, அவர் பயணித்த பள்ளியின் குழந்தைகளை சரியாக கணித்துவிட்ட பின்னர், அவர் சொல்லத் துவங்குகிறார். அந்தக் கதையை அவர் அவர் எப்படியாகச் சொன்னாரோ, அப்படியே எழுத்து வடிவில் இந்நூலில் கொண்டுவந்திருக்கிறார். ஏற்கனவே ஒரு எழுத்தாளர் எழுதிய கதையை எடுத்து திரைப்படமாக எடுக்கவேண்டுமென்றால் அப்படியே எடுக்கமுடியாதுதானே. எழுத்து வடிவில் இருக்கும் கதையை திரை வடிவில் கொண்டுவருவதற்கேற்ப திரைக்கதை எழுதவேண்டும். அதனை சிறப்பாக செய்த திரை இயக்குநர்களின் எண்ணிக்கை மிகக்குறைவுதான். அசுரன் திரைப்படத்தை அப்படியாக வெற்றிபெற்ற திரைக்கதையாக்கம் எனலாம். அதேபோலத்தான் எழுத்தவடிவிலான ஒரு கதையை எடுத்து அப்படியே வாசித்துக்காட்டுவதுபோல குழந்தைகளிடம் சொன்னால் நிச்சயமாக எடுபடாது. முப்பது குழந்தைகள் அமர்ந்திருக்கும் ஒரு வகுப்பில் கதை சொல்லும்போது, முப்பது குழந்தைகளும் முப்பதுவிதமான மனநிலையில் இருக்கக்கூடும். அவர்களை ஒருமுகப்படுத்தி ஒரு கதையை கவனிக்கவைப்பதற்கேற்ற கதைசொல்லல் உத்தியினை கதையில் நுழைத்தபிறகுதான் நம்மால் சொல்லவே முடியும். அதனை எப்படிச் செய்யவேண்டும் என்கிற அடிப்படைகளை இந்நூலில் சொல்லிக்கொடுக்கவில்லையென்றாலும், இந்நூலில் இருக்கிற 19 பகுதிகளிலும் 19 கதைகளை நமக்காக கதைசொல்லல் வடிவத்திலேயே எழுதியிருக்கிறார் வனி அத்தை. இன்றைக்கு இருக்கும் மற்ற கதைசொல்லிகளுக்கும், இனிவருங்காலத்தில் கதைசொல்லிகளாக வரவிரும்புபவர்களுக்கும் இக்கதைகள் மிகவும் பயன்படும். அந்த 19 கதைகளின் உண்மையான எழுத்துவடிவத்தை எடுத்துவைத்து வனி அத்தையின் கதைசொல்லல் எழுத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால், அதிலிருந்து வனி அத்தை கதைசொல்லலுக்காக செய்திருக்கும் மாற்றங்களை அவர்கள் புரிந்துகொள்வார்கள். அத்துடன், புதிதாக கதைசொல்ல வருபவர்கள் அப்படியே வனி அத்தையின் இந்த கதைசொல்லல் முறையைப் படித்துவிட்டு, குழந்தைகளிடம் கதைசொல்லப்போகலாம். அதற்கும் இது பயன்படும்.

மூன்று, கதையை சொல்லிமுடித்தபின்னர் குழந்தைகளிடம் என்னமாதிரியான மாற்றங்களை அக்கதைகள் உருவாக்குகின்றன என்பதையும் ஒவ்வொரு கட்டுரையின் முடிவிலும் நமக்குத் தெளிவாக எடுத்துக்காட்டியிருக்கிறார். அதில் பல நிகழ்வுகள் மனதை அப்படியே நெகிழச்செய்கின்றன. நூலைப் படித்துப்பாருங்கள் உங்களுக்கே புரியும். கதைசொல்வதென்பது தனக்குத் தெரிந்ததை குழந்தைகளுக்குக் கடத்துவது மட்டுமல்ல, குழந்தைகளிடம் இருந்து கற்றுக்கொள்வதும்தான் என்பதை நூல்முழுக்க நமக்கு வனி அத்தை புரியவைத்துவிடுகிறார்.

நான்கு, இந்த நூலைப் படிக்கும்போதே அதிலிருக்கும் புகைப்படங்கள் என்னை வெகுவாகக் கவர்ந்தன. அதனால் நூலைப் படித்துமுடித்ததும், மீண்டும் முதல் பக்கத்திலிருந்து கடைசிவரையிலும் இருக்கிற புகைப்படங்களை மட்டுமே ஒருமுறை உற்று கவனித்துப்பார்த்தேன். ஒவ்வொரு படத்திலும் இருக்கும் குழந்தைகள், அந்தப்படம் எடுக்கப்பட்ட சூழல், வனி அத்தையின் முகபாவனை, குழந்தைகளின் எண்ணவோட்டம் என ஏராளமானவற்றை அந்தப் படங்கள் நமக்குக் கடத்துகின்றன.

இப்படியாக நான்கு அடுக்குகளைக் கொண்ட ஒரு நூலாக ‘கதைசொல்லியின் பயணம்’ வந்திருக்கிறது. கதைசொல்வோர், கதை சொல்லவிரும்புவோர், கதைசொல்லாமல் குழந்தைகளை ஏமாற்றும் பெற்றோர், குழந்தைகளோடு இருக்கும் ஆசிரியர்கள் என குழந்தைகளைச் சுற்றிவாழும் பெரியவர்கள் அனைவரும் வாசிக்கவேண்டிய அவசியமான நூல் இது.

நூல் : கதைசொல்லியின் பயணம்
ஆசிரியர் : வனிதாமணி அருள்வேல் 
விலை : ரூ.₹90
வெளியீடு : பாரதி புத்தகாலயம்

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *