விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தோழர் தொல்.திருமாவளவன் எம்பி., கடந்த 2010 சூன் சனவரி 2016 வரை ‘தமிழ்மண்’ என்னும் அக்கட்சியின் மாத இதழில் ‘அமைப்பாய் திரள்வோம்’ என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். அவரே அதன் முன்னுரையில் கூறுகிறார்– ‘இத்தொடர் இன்னும் முற்றுப்பெறவில்லை. தவிர்க்க இயலாத காரணங்களால் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. மீண்டும் தொடங்கி இன்னும் ஏராளம் தொடர்ந்து எழுத வேண்டியுள்ளது’ என்று. 517 பக்கம், 58 அத்தியாயம் கொண்டதாக 2018ஆம் ஆண்டு நக்கீரன் பப்ளிகேசன்ஸ் சால் வெளியிடப்பட்டுள்ளது மிகவும் சிறப்பாக.

2020 மார்ச் 14 அன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக்குழுக்கூட்டம் சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் மார்ச் 16, 17 கூடிட இருப்பதை முன்னிட்டு, விசிக ஒழுங்குக்கட்டுப்பாட்டுக்குழு நிர்வாகி சேலம் ஓமலூர் தோழர்ய சௌ.பாவேந்தன் (எ) பார்த்தீபனை நேரில் அவரின் வீட்டில் சந்தித்தோம். அப்போது அவர் இந்நூலை நினைவு பரிசாக தந்தார்.

ஏறக்குறைய ஒருவாரத்தில் இந்நூலை வாசித்துவிட்டேன். இவ்வளவு விரைவாக வாசித்த நூலில் இதுவும் ஒன்று. அவ்வளவு விரைவாக விறுவிறுவென சுவைமேல்சுவையை ஊட்டிக்கொண்டே, எழுச்சித்தரும் வண்ணம், பக்கங்களை மூடிட முடியாமல் போனது. அவரது பேச்சுக்களை நேரிலும், வலைதளத்தில் கேட்டிருக்கிறேன். நூல்வடிவில் இதுதான் முதல்முறை. பேச்சில் இருக்கும் எழுச்சி, எள்ளல்-துள்ளல், இலக்கியம், எளியநடை துள்ளி விளையாடி உள்ளார் எனலாம்.

‘கருத்தியலும் நடைமுறையும்’ என்பதுதான் இந்நூலின் அடிநாதம். அவரைக் கவ்விய கருத்தியலை எங்ஙனம் நடைமுறைப்படுத்துவது என்பதே முற்றுப்பெறாத இந்நூலில் முழுமையாக விரவிக்கிடக்கிறது.

பொதுவாக இப்படியான நூல்களை வாசிக்கிறபோது, குறிப்பு எடுக்கிறப்பழக்கம் உண்டு. முதலில் ஒரு துண்டு சீட்டில் பக்கம், பாரா மட்டும் குறித்துக் கொள்வேன். ஆனால் இந்நூலை வாசிக்கிறப்போது துண்டுச்சீட்டு போதவில்லை. ஒவ்வொரு பக்கமும், ஒவ்வொரு பாராவும் படிக்கப்படிக்க எல்லாவற்றையும் குறிப்பு எடுத்திட வேண்டுபோல் இருந்தது. அப்படி இருந்தும் 142 பாரா குறிப்புக்கு குறித்தேன். அதை ஒரு குறிப்பேட்டில் நுணிக்கி நுணிக்கி எழுதியபோது, அதுவே பத்துபக்கமாக, ஒரு சிறுநூல்போல் வந்துவிட்டது. அந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நூலாக அமைந்துவிட்டது; ஆம், அதொரு சுகமான வரமே.

Image result for மார்க்சீயம், அம்பேத்கரியம் (தலித்தியம்) பெரியாரியம்
குறைந்த முரண்பாடு:
சரி, அவரின் அல்லது அவரை கவ்விய கருத்தியல்தான் என்ன? அதில் எது தூக்கல்? என்றெல்லாம் பார்க்கிறபோது, மார்க்சீயம், அம்பேத்கரியம் (தலித்தியம்) பெரியாரியம் என்பதா? அல்லது தமிழீழியம் என்பதா? தெரியவில்லை. ஒருவேளை இந்நூல் முற்றுப்பெற்றிருந்தால் தெரிந்திருக்குமோ… தெரியவில்லை. என்றாலும் ஒன்று தெளிவாக தெரிகிறது. ஒரு கட்சி அல்லது குடும்பம் அல்லது நிறுவனம் சமத்துவமான முறையில் இயங்கிட ஒரு அமைப்பு (ஸ்தாபனம்) தேவை ஆகும்; அப்படியானால் அது எப்படிப்பட்டதாக இருந்தால் நலம் என்பதை இந்நூல் அடித்து, துவைத்து, அலசி எடுத்து, காய்யப்போட்டுவிட்டார் என்றே தோன்றுகிறது.

விசிகவின் அமைப்பு (ஸ்தாபனம்) இவ்விதம் வேண்டும் என்கிற எமது புரிதலில் இருந்தே இந்நூலை பார்க்கிறேன். அப்படி பார்க்கிறபோது, விசிகவிற்கே இப்படியான அமைப்பு இருக்க வேண்டுமெனில், இன்னும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எப்படி இருக்க வேண்டுமென நினைத்து பார்க்கிறேன்; பிரமித்து நிற்கிறேன். அனேகமாக கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஸ்தாபன கட்டமைப்புகளை உள்வாங்கி, அதிலிருந்து இவ்விதம் பொருத்துகிறார் என்றே சொல்லத் தோன்றுகிறது. ஆனால், அவற்றின் பெயர்களை இந்த 58 கட்டுரைகளிலும், ஓரிடத்தில்கூட தவறியும் பதியவில்லை என்பதுதான் அதிசயம்.

Image result for cpi and cpm

அவரின் கருத்தியலாக எம்மால் இதைத்தான் பார்க்க முடிகிறது– “குடும்பம் மற்றும் சாதி என்னும் அமைப்பு முதல், அரசு என்னும் அமைப்பு வரையிலான அனைத்து கட்டமைப்புகளிலும் ஆளும் அல்லது சுரண்டும் வர்க்கமும், உழைக்கும் வர்க்கமும் அடங்கியுள்ளன. அவற்றில் சுரண்டப்படும் உழைக்கும் வர்க்கத்திற்கான சனநாயகமும், அதன் வழியிலான சமத்துவமும்தான் இன்றைய சவாலான ஒரு தேவையாகயுள்ளது. அத்தகைய சாதியாகவோ, மதமாகவோ அணிதிரண்டும் தங்களுக்கான சனநாயகத்தை வென்றெடுக்க இயலாத நிலையே நிலவுகிறது. எனவே சாதி, மதம் கடந்து தேசிய இனமாக அணிதிரளும் முயற்சிகளும் விடுதலைப் போராட்டங்களும் ஆங்காங்கே வெடித்துள்ளன. தமிழீழத்தில் அத்தகைய தேசிய இனவிடுதலைப் போராட்டமே நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது”. 48-2.

“… பெரும்பான்மை இந்துக்களால் ஒடுக்கப்படும் சிறுபான்மை இசுலாமியர்களின், கிறித்தவர்களின், சீக்கியர்களின், பௌத்தர்களின் இன்னும்பிற சிறுபான்மை மக்களின் உரிமைக்கான– விடுதலைக்கான அரசியல் தலித் அரசியலே ஆகும். பெரும்பான்மையான சிங்கள இனவெறியர்களால் ஒடுக்கப்படும் சிறுபான்மை தமிழர்களின் விடுதலைக்கான அரசியலும் தலித் அரசியலே ஆகும். இவ்வாறு ஒடுக்கப்படும், சுரண்டப்படும், புறக்கணிக்கப்படும், ஓரங்கட்டப்படும் அனைத்து தரப்பு சிறுபான்மையினரின் உழைக்கும் பாட்டாளிகளின் நலன்களுக்கான அரசியல் அல்லது கோட்பாடுதான் தலித்தியம் என்பதாக அறியப்படுகிறது. ‘தலித்’ என்பதை ‘சாதி’ என்கிற அடைப்புக்குள் சுருக்காமல் சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் அனைவரையும் குறிப்பதாக அடையாளப்படுத்துவதே தலித்தியம் ஆகும்”. 109-3.

இங்குதான் நாம் குறிப்பிடும் ‘குறைய முரண்பாடு’ சூல் கொள்கிறது. ஆம், இவரின் ‘ரோல்மாடலாக’ தமிழீழம் போரைக் குறிப்பிடுகிறார் அல்லது அடையாளப்படுத்துகிறார். மாறாக உலகில் நடந்த அல்லது உலகையே குலுக்கிய ‘ருஷ்யப்புரட்சி’யைக் குறிப்பிட மறுகிறார் அல்லது குறிப்பிடவில்லை. அதன் தத்துவமான மார்க்சீய லெனினியத்தைக் குறிப்பிடவில்லை அல்லது குறிப்பிட மறுக்கிறார். மாறாக தலித்தியத்தைக் குறிப்பிடுகிறார் அல்லது பேசுகிறார். அதோடு தலித்தியம் உழைக்கும் மக்கள் விடுதலைக்கான தத்துவம் என்பதுபோல் நிறுவுகிறார். அதைத்தான் தமிழீழம் எனவும் நிறுவ முனைகிறார்.

அதேவேளையில்– “… உழைக்கும் மக்கள் மீதான சுரண்டலையும், ஒடுக்குமுறைகளையும் தடுத்திட வேண்டுமென்பது நோக்கம் என்றால், உழைக்கும் மக்களின் விடுதலைக்கான கோட்பாட்டின் அடிப்படையிலான, பாட்டாளி வர்க்கத் தத்துவத்தையும், அவற்றுடன் தொடர்புடைய தத்துவங்களையும் ஒருங்கிணைந்த கருத்தியலாக உள்வாங்கிய ஓர் இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டும்”. 132-1 எனவும் நிறுவுகிறார். அப்படியென்றால் அதற்கான தொடர்புடையத் தத்துவங்களை பளிச்சென அடையாளம் காட்டாமல் கடந்து போகிறார். குறிப்பாக அத்தகைய தொடர்புடைய தத்துவம் மார்க்சீயம்-லெனினீயம்-மாவோயியம் போன்ற அனையாளங்களைக் காட்ட தயங்குகிறாரே அது ஏன்? ஒருவேளை அடுத்துவரும் அத்தியாயங்களில் வருமோ என்னமோ தெரியவில்லை.

ஆனால், அதில் முழுமையாக மார்க்சீய ஸ்தாபன அமைப்பு முறையைத்தான் வெகுவாக சிலாகிக்கிறார். ஆனால் ‘மார்க்சீயம்’ என குறிப்பிடாமல், அதன் கட்டுமானம் தலித்தியம் என்கிறபோது, அதன் அமைப்பு (ஸ்தாபனம்) மார்க்சீயத்தை அடித்தளமாக கொண்டு இயங்கமுடியும்? அல்லது எப்படி சாத்தியம்? என்பதையும் தெளிவாக்கவில்லை. இந்த ஒரு முடிச்சுமட்டும் அவர் அவிழ்த்திருந்தால், எம்மைப் போன்றவர்களுக்கு இந்நூல் அனேகமாக முழுமைப் பெற்றிருக்கும். மீண்டும் பதிகிறோம் அடுத்துவரும் அத்தியாயங்களில் இம்முடிச்சு அவிழ்க்கப்படுமென நம்புவோமாக.

Image result for மார்க்சீயம், அம்பேத்கரியம் (தலித்தியம்) பெரியாரியம்

நிறைய உடன்பாடு:
‘நிறைய உடன்பாடு’ என பதிகிறோம் அல்லவா? அவற்றில் சில… குறிப்பாக இந்திய உழைக்கும் வர்க்கத்தை மிகச்சரியாக அடையாளம் காண்கிறார்– ” … நடைமுறையிலுள்ள சமூக,பொருளாதார, அரசியல் கட்டமைப்புகளையும், அவற்றின் போக்குகளையும் அறிந்துக் கொள்ளவோ, ஆய்ந்து பார்க்கவோ வாய்ப்பில்லாத, வலுயில்லாத ஒரு வர்க்கம்தான் உழைக்கும் வர்க்கம். உற்பத்திக்கான ஆற்றலின் வடிவமாய், உடலுழைப்பின் வடிவமாய் விளங்குகிற பெரும்பான்மையான வெகுமக்களின் தொகுப்பே அத்தகைய உழைக்கும் வர்க்கமாகும். (இதைத்தான் இழப்பதற்கு அடிமைச்சங்கிலியைத்தவிர வேறெதுவுமில்லை; ஆனால் அடைவதற்கோர் பொன்னுலகம் இருக்கிறது என்கிறார் மாமேதை மார்க்ஸ்). அவ்வர்க்கத்தின் நலன்களைப் பாதுக்காத்திட அல்லது மீட்டெடுத்திடப் போராட வேண்டியது அவ்வர்க்கத்திற்கு இன்றியமையாததொரு தேவையாகிறது”. 66-2.

ஆம், இத்தகைய உழைக்கும் வர்க்கத்தின் நலன்களை மீட்டெடுக்க எத்தகைய அமைப்பு (ஸ்தாபனம்) தேவை என்பதையே இந்நூலில் மிக விரிவாக ஆய்கிறார்; அலசுகிறார்; அக்கரைச் செலுத்துகிறார்; ஆழ்ந்த கவலைக் கொள்கிறார் எனலாம்.

ஆம், வர்க்கப்போரில் அல்லது வர்க்கப்போரின்போது முக்கியமாக எடுத்துக் கொள்ள வேண்டியது, அப்போது நிலவும் முரண்பாடுகள்தாம். அதில் எது எது எக்காலத்தில் முன்னுக்குவரும் முரண்கள், அதை எங்ஙனம் கண்டறிவது, களைவது போன்றவற்றை மதிப்பிடுகிறார் இந்நூலில் அழகாக– “… அகநிலையிலும், புறநிலையிலும் நிலவுகின்ற முரண்பாடுகளைக் கண்டறிவதும், அவற்றில் மனிதன் விரும்பும் மாற்றத்திற்குரிய அடிப்படகயான முரண்பாடுகளைக் கண்டறிவதும், அதிலும் குறிப்பாக இலக்கை நோக்கிய முரண்பாடுகளில், கூர்மைப்படுத்தி, தீர்வுகாண வேண்டிய முதன்மையான முரண்பாடுகளை அடையாளம் காண்பதும், மாற்றத்தை விரும்புவோருக்கான கடமையாகும்” 89-2.

அதோடு மட்டும் அவர் நிற்கவில்லை. வர்க்கப்போரில் நேச சக்திகள் எவை? எவை? என்பதையும் இவ்விதமாக அடையாளம் காட்டுகிறார்– “… வர்க்க முரண்பாட்டில், பாட்டாளிகள் மக்களாக அணி திரட்டப்பட்டாலும், பாட்டாளி அல்லாத வர்க்கத்தைச் சார்ந்தவர்கள், பாட்டாளிகளின் அரசியலை ஏற்றுக் கொண்டு, பாட்டாளியாகவே உணர்ந்து, களப்படியாற்ற முன்வந்தால், அவர்கள் பாட்டாளி வர்க்கத்தின் சனநாயக சக்திகளாவர்”. இதோடு அவர் நிற்கவில்லை. பாட்டாளிகளின் சமூக விடுதலையைப் பற்றியும் கவலைக் கொள்கிறார்; அதனால் இவ்விதம் நிறுவுகிறார்– “… சாதிய முரண்பாட்டு தளத்தில் ஒடுக்கப்படும் சாதியைச் சார்ந்தவர்கள், சாதி ஒழிப்பில், சாதி ஆதிக்க ஒடுக்குமுறை எதிர்ப்பில் உடன்பாடு கொண்டு, ஒடுக்கப்படும் சாதியை சார்ந்தவர்களாகவே உணர்ந்து முழு ஈடுபாட்டோடு களப்பணியாற்றினால், அவர்கள் சாதி ஒழிப்புக்கான சனநாயக சக்திகளாவர்”. 92-2.

இங்குதான் இவர் மற்றமற்ற நிகழ்கால சமூகசீர்த்திருத்த முன்னோடிகளிடமிருந்து வேறுபட்டு தனித்துவத்துடன் நிற்கிறார். தலித் மக்கள் விடுதலையை தலித் மக்கள் மட்டுமே செய்து கொள்ளும் ஏற்பாடு அல்லது வேலை என்று தனிமைப்படுத்திடவிடாமல், இன்னும் பிற சாதி சார்ந்த தலித் அல்லாத மக்களும் இணைந்து களப்பணி ஆற்றுவதன்மூலம்தான் அது சாத்தியம் என்பதை இந்நூலில் வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் எல்லாம் பொருத்துகிறார். ஆம், “பொருளாதார விடுதலையும், சமூக விடுதலையும் வேறுவேறு அல்ல; இரண்டும் இரண்டு கரங்கள்; இரண்டு கரங்களும் இணைத்து தட்டினால்தான் ஓசைவரும்” என்கிற மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டை நிறுவியுள்ளார் என்றே தோன்றுகிறது. ஆம், கட்சியின் பெயரைக்குறிப்பாடாமல்!

“மாறாதது எதுவுமில்லை; எல்லாம் மாறிக் கொண்டேயிருக்கிறது என்பதைத்தவிர எல்லாம் மாறிக்கொண்டேயிருக்கிறது” என்கிறது மார்க்சீயம். அதைத்தான் இவ்வாறு குறிப்பிடுகிறார் போலும்– “… உலகில் அனைத்தும் இயங்கி கொண்டேதான் இருக்கின்றன. சில அசைந்து இயங்கும். சில அசையாமல் இயங்கும். சில உருவமும், வடிவமும் கொண்டு இயங்கும். சில உருவமில்லாமலும், வடிவமில்லாமலும் இயங்கும். இயங்காமலிருப்பது என்று ஒன்றுமில்லை”. 19-4. இதுபோல் மார்க்சீயத்தை ‘மார்க்சீயம்’ என சொல்லாமல், நெடுகிலும் போதுமான அளவுக்கு விதைத்துக் கொண்டே போகிறார். இங்கும் அவரின் தனித்துவம் தெறித்து நிற்கிறது எனலாம்.

பொருளாதாரம், அரசியல், சமூகம், பண்பாடு போன்ற வாழ்வியல் தளங்களில் களப்பணியாற்ற வேண்டியவர்களை, அரசுகளின் செயல்பாடுகளில் பாட்டாளி வர்க்க நலன் பாதிக்கப்படுகிறபோது, அல்லது நசுக்கப்படுகிறபோது ஆற்றவேண்டிய அரும்பணிகளை இந்நூலில் அள்ளி அள்ளி திகட்டாத அளவுக்கு ஊட்டியுள்ளார். என்றாலும், மாதாமாதம் வரும் அல்லது வந்த தொடர் கட்டுரை என்றாலும், சிலவை மீண்டும் மீண்டும் தேவைக்கருதி வந்திருந்தாலும், அது வாசிப்பைச் சற்றே சலுப்பைத் தருகிறது. ஆம், அவற்றை நூலாக்கும்போது தவிர்த்திருக்கலாம் என்றாலும், அதிலுள்ள சிரமமும், சிக்கலும் புரியமலில்லை.

Image result for அமைப்பாய் திரள்வோம்

 

142 பாராக்களைக் குறிப்பெடுத்தபோதிலும் அவற்றில் 53ஐ மட்டுமே தெரிவு செய்தபோதும், அவற்றைக்கூட முழுமையாக இங்கே பகிர்ந்திட இயலவில்லை. சிலவற்றைகளை மட்டுமே கையாளப்பட்டுள்ளது. இதரவைகளை முகநூலில் வாய்ப்பைப் பொறுத்து பகிரலாமென கடந்து போகிறேன்.

என்றாலும், முழுநேர களப்பணியாளர்களுக்கு மட்டுமல்ல, புரட்சிகர மாற்றத்தை இந்திய சமூகத்தில் விளைவித்திட விழையும் யாவருக்குமான அருமையான ஓர்கையேடுயிது என்றால் மிகையல்ல. ஆம், உளவியல் ரீதியில், கேள்விகளை தாமே, தனது வாழ்வியல் கள அனுபவத்திலிருந்தெழுப்பி, அவற்றிக்கு நயமான விடைகளை தேடித்தேடித் தந்திருக்கிறார் தோழர் திருமா. அவருக்கு எமது ஆயிரமாயிரம் பாராட்டுக்கள்.

ஆம், அவரது பதிவு ஒன்றோடவே இந்நூல் அறிமுகத்தை நிறைவு செய்யவே விழைகிறேன் நேரம் இடம் கருதி– “… சமத்துவம் என்பது அனைவருக்கும் சமமான சொத்து. சமமான பதவி. சமமான ஆற்றல். சமமான ஆயுள் என்று பொருளாகாது. வலியோர், எளியோர் என்றில்லாமல் ஒவ்வொருவரின் உணர்வுகளையும், கருத்துக்களையும் மதிப்பதில் சமமான அணுகுமுறையை கையாளுவதேயாகும். இத்தகைய அணுமுறை சகோதரத்துவ உறவுமுறைகளிலிருந்தே தொடங்க இயலும். வேறுபாடுகளுக்கு இடம் கொடுக்காத உறவுமுறை விளிம்பு ஒன்று இன்றைய பொதுவாழ்வுக்களத்தில் கையாளப்படுகிறது. அதுதான் ‘தோழர்’ என்னும் உறவுமுறையாகும்”. 495-2.

ஆம், கவிஞர் தணிகைச்செல்வன் தனது அணிந்துரையிலும் மிகச்சரியாக குறிப்பிடுகிறார் இதோ– “… கற்பனைகளின் மீதமர்ந்து கனவுகளை எழுத்தாக்கிய காகிதம் அல்ல. தாம் பட்டறித்தப்பாடுகளை மட்டுமே அடித்தளமாக்கி, படித்தறிந்த ஏடுகளை துணையாகக் கொண்டு நிர்மாணித்திருக்கிற கருத்தியல் கட்டுமானமே திருமாவின் இந்த அசுர முயற்சி”.

ஆம், இம்முயற்சி இன்னும் நிறைவுபெற நமது விழைவைவும் உரித்தாக்குகிறோம்.

– தாரைப்பிதா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *