நூல் அறிமுகம்: நேமிசந்த்ராவின் ’யாத்வஷேம்’ தமிழில்: கே. நல்லதம்பி – செ. தமிழ்ராஜ்

நூல் அறிமுகம்: நேமிசந்த்ராவின் ’யாத்வஷேம்’ தமிழில்: கே. நல்லதம்பி – செ. தமிழ்ராஜ்




உண்மைக்கு மிக நெருக்கமாக நின்று, நேமிசந்த்ரா அவர்கள் எழுதிய யாத்வஷேம் மிகச் சிறந்த மொழிபெயர்ப்பு நூலாகும் இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் நாஜி படைக்கு பலியான யூதர்களின் நினைவிடம் இஸ்ரேலில் அமைந்திருக்கின்றது. அந்தக் கொடும் நினைவலைக்கு காலம் சூட்டிய பெயர்தான் யாத்வஷேம். நாவலெனும் பெயரில் மனிதம் தொடர்பான கேள்விகளை, உரையாடல்களை நமக்குள் எழுப்பிச் சென்றிருக்கின்றது. பொதுவாக ஒரு நாவலென்றால் ஏராளமான கதாபாத்திரங்கள் கதையில் உலவும். இங்கே மிகச்சில நபர்களே கதைக்குள் நின்று காத்திரமான உரையாடல்களை நிகழ்த்துகிறார்கள்.

சமீபத்தில் இம்மாதிரியான உணர்வுப்பூர்வமான நாவலை வாசித்ததேயில்லை என்று வாசித்த எவரும் ஒரே குரலில் சொல்வார்கள்.அவ்வளவு செய்திகள் கொட்டிக்கிடக்கின்றது. ஒரு புனைவில் வரலாற்றையும் சேர்த்து பிசைந்து வாசகர்களுக்கு தந்திருக்கின்றார் நாவலாசிரியர்.வாசிக்க வாசிக்க அவர் ஏற்படுத்தும் பிரமிப்பு வியப்பில் ஆழ்த்துகிறது. அவர் முன்வைக்கும் தரவுகளும் அதில் நமக்கிருக்கும் போதாமைகளும் புலனாகின்றன. நாவலெனும் பெயரில் மிகப்பெரிய ஆய்வேட்டையை நடத்தி முடித்திருக்கின்றார்.

எட்டு ஆண்டுகால உழைப்பென்றால் சாதாரணமானதா நிகழ்விடங்களை தேடித்தேடி வரலாற்றுச்சுவடுகளை படியெடுத்திருக்கின்றார். கதைக்கு நெருக்கமான கதைமாந்தர்களை சந்தித்து உரையாடியிருக்கின்றார். ஜெர்மனி அமெரிக்கா இஸ்ரேல் பாலஸ்தீன் என நாடுகள் தோறும் மெனக்கெட்டு பயணித்திருக்கின்றார். சேகரித்த அத்தனையையும் எழுத்தாக்கிவிடாமல் சாறு பிழிந்து சுவாரசியம் குறையாமல் விறுவிறுப்பானதொரு நாவலை கவித்துவமான மொழிநடையில் தந்திருக்கின்றார். இந்த நாவலை வாசிப்பவர்கள் இத்துடன் நின்றுவிட முடியாது யூதர்கள் என்றால் யார் கிறிஸ்தவர்களுக்கும் அவர்களுக்கும் என்ன பகை இஸ்லாமியர்களின் பாலஸ்தீனம் ஹிட்லர்கள் பாசிச வெளி குறித்தும் தேடி வாசிக்கத் துவங்குவார்கள். இந்த நாவலை முடிக்கும்போது வாசிப்புலகின் அடுத்தகட்டம் நோக்கி தானே நகர்வீர்கள.

33 அத்தியாயங்களில் அப்படி என்ன தான் பேசுகிறது நாவல் வாருங்கள் நாவலிற்குள் நுழைவோம். இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் நரவேட்டையிலிருந்து தப்பிய யூத குடும்பமொன்று சிதறி தெறித்து ஓடுகின்றது. தகப்பனும் மகளும் இந்தியாவில் தஞ்சமடைய தாய் தம்பி தங்கை அக்கா பற்றிய தகவல்கள் ஏதுமில்லை. பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமியின் பார்வையிலிருந்து கதை விரிகிறது. பறவையின் பார்வையாய் உலகெங்கும் தன் உறவுகளை தேடுகிறது தேடிக் கண்டடைந்த தன் உறவிற்கும் தனக்கும் நிகழும் உரையாடல்கள் யாவும் மனிதகுலம் தனக்குத்தானே கேட்டுக்கொள்ள வேண்டிய மானுடகுலத்திற்கான மனிதநேய விசாரணைகள்.

யூதர்கள் மேல் ஒரு தேசமே வெறுப்புற்று கொன்றுகுவிக்க காரணமென்ன எல்லாப் பழிகளையும் ஹிட்லர் ஒருவனே சுமந்தாலும் ஒட்டுமொத்த தேசமும் யூத வெறுப்புணர்வில் ஹிட்லராய் இருந்திருக்கின்றார்கள். வெறுப்பரசியலில் தீப்பற்றி எரிந்த தேசமிது. ஒரு மொழிக்கெதிராகவோ இனத்திற்கெதிராகவோ மதத்திற்கெதிராகவோ மனிதர்கள் அணிதிரள்வதென்பது மானுடத்திற்கு வைக்கப்படும் கொள்ளியாகிவிடும். இந்திய அரசியலிலும் இந்துத்துவ மதவெறியர்கள் சிறுபான்மையினருக்கெதிராக தொடர்ந்து பரப்பப்படும் அவதூறுகள் கோயபல்ஸ் பிரச்சாரங்களாய் வலுப்பெறும் அபாயமிருக்கின்றன .

ஜெர்மனியின் நாஜிக்களும் இந்திய மதவெறியர்களும் வெறுப்பரசியலின் ஒரே பாதையில் பயணிக்கின்றனர்.
யூதர்களின் பொருளாதார வளர்ச்சி கல்வி கேள்வி என அறிவுலகத்தின் அவர்கள் எடுத்த விஸ்வரூப அவதாரங்கள் இயேசுவை காட்டி கொடுத்து கொன்ற பழி இவையாவும் ஏதோ ஒருவகையில் ஹிட்லரை உளவியலாக சுரண்டியிருக்கின்றது. அதிகாரம் கையில் குவிந்த பின் யூதர்களுக்கெதிரான நரவேட்டையை தேசமெங்கும் விதைத்து யூதர்களின் உயிரை அறுவடை செய்திருக்கின்றான்.

யூதர்கள் எப்போதும் ஒருவகையில் தனித்துவமாகவே இயங்கி வந்திருக்கின்றார்கள். இயேசுநாதர், காரல்மார்க்ஸ், ஐன்ஸ்டீன் என பிரபலமானவர்களை பட்டியலிட்டால் ஏராளமானவர்கள் வருகின்றார்கள் இது ஆய்வுக்குரிய ஒன்றாக இருக்கின்றது அறிவுப்புலத்தில் ஓரினம் மட்டும் எப்படி உயர்நிலையை எய்த முடியும். இதுவொரு விடைதேடும் கேள்வி நாஜிகளின் வதை கூடத்தில் சிக்கி சீரழிந்த நூலிழையில் உயிர் பிழைத்த அனிதாவின் அக்கா ரெபக்காவின் பாலஸ்தீனர்களின் மீதான வெறுப்புணர்வை எவ்விதம் எடுத்துக்கொள்வது, ஒரு பாசிசத்திற்கு பலியானவர் இன்னொரு பாசிசத்தை வழிமொழிவது எப்படி சரியாகும். நாடற்ற நாடோடிகளாய் புலம்பெயர்ந்தவண்ணம் ஒடித்திரிந்த யூதர்கள் பாலஸ்தீனத்தை சூழ்ச்சிகளால் வளைத்து இஸ்ரேல் எனும் நாட்டை கட்டி எழுப்புகிறார்கள். சொந்த நாட்டை இழந்து இன்று தனது தேசத்திற்குள்ளே பாலஸ்தீனர்கள் அகதிகளாய் அலைகின்றனர். கையகல நாட்டை வைத்துக்கொண்டு இஸ்ரேலுக்கு அமெரிக்கா இன்று பின்புலமாய் நிற்பதால் வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்றாகிப்போனது.

உலகில் முதலில் தோன்றியது யூத மதம் அதை எதிர்த்து கலகக்குரல் எழுப்பி உருவானது கிறிஸ்தவ மதம் இரண்டையும் உள்வாங்கி பிறந்தது இஸ்லாம் இன்று உலகின் மிகப்பெரிய மதங்கள் உருவானது அரேபியா கண்டத்தில் ஒரே நிலப்பரப்புகளில் ஆகவே ஜெருசலேம் இம்மூன்று மதங்களின் புனிதத்தலமும் ஒரே இடத்தில் அமைந்துபோனது, பாசிச சிந்தனை என்பது தனது சுயநலத்திற்காக எதுமாதிரியும் உருமாறும் என்பதற்கு சாட்சி ஜெர்மன் கிறித்தவர்கள் கொன்றொழித்த யூதர்களை இன்று அமெரிக்க கிறித்தவர்கள் பாதுகாக்கின்றனர். நாஜிகளால் கொடும் சித்ரவதைக்குட்படுத்தப்பட்ட யூதர்கள் இன்று பாலஸ்தீனம் என்ற நாட்டையே கபளீகரம் செய்யப் பார்க்கின்றார்கள். இங்கேதான் அனிதாவின் மனசாட்சி கேள்வி எழுப்பத் துவங்குகிறது சக மனிதனை வெறுக்க கற்றுக்கொடுக்கும் எந்த மதத்தையும் நாட்டையும் தத்துவங்களையும் கேள்விக்குட்படுத்துகிறாள்.

மனிதநேயம் ஒன்று தான் மானுடகுலத்திற்கான தீர்வு என்று கண்டுகொண்டு சகிப்புத்தன்மையும் அன்பும் நிரம்பிவழியும் இந்தியா போன்ற நாடுகளில் எதிர்வரும் காலத்தில் இத்தகைய அபாயம் நேர்ந்துவிடக்கூடாதென்று எண்ணி இந்தியா திரும்பி குஜராத் மதக்கலவரத்திற்கு எதிராக ஜனநாயக ரீதியிலான மக்கள் போராட்டங்களை ஒருங்கிணைத்து களப்போராளியாக பங்குபெறுகிறாள். குஜராத் கலவரத்தில் நிர்க்கதியாக தாய் தகப்பனை இழந்த பெண்ணை தனது மகனுக்கு மணம் முடித்து வைக்கின்றாள். என்று கதை முடிகின்றது.

இந்திய மதங்களும் தத்துவமரபும் அன்புவயப்பட்டது என்பதனை தனது வாழ்வியல் வழியாக உணர்கிறார் அது எக்காரணம் கொண்டும் சிதைந்துவிடக்கூடாது என்பதில் உறுதிகொண்டு போராட்ட களத்திற்கு பங்குகொண்டு வீதிக்கு வருகிறார். ஹிட்லர் பெயரால் நாஜிப்படைகள் நிகழ்த்திய சக மனிதர்களுக்கு எதிரான உலகஞ்சும் படுகொலைகளை இனி பூமிபந்தில் எவரும் இனமொழி மதம் சாதி என்று எதற்கொன்றாகவும் நிகழ்த்திவிடக்கூடாது அன்பொன்று மட்டுமே மனிதகுலம் தழைக்கும் அழகிய விதை என்பதை தனது நாவல் மூலம் எழுதிச் செல்கின்றார் நாவலாசிரியர். கன்னட மொழியில் எழுதப்பட்ட நாவலை மிகச்சிறப்பான கவித்துவம் பொங்கும் அடர்த்தியான மொழியில் மொழியாக்கம் செய்து வாசிப்புச் சுகத்தை நமக்கு தந்திருக்கின்றார் எழுத்தாளர் கே. நல்லதம்பி அவருக்கு பாராட்டுக்கள்.

செ. தமிழ்ராஜ்
வண்டியூர்
மதுரை-625020
9965802089

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 1 Comment

1 Comment

  1. இந்த புத்தகம் வெளிவந்த உடனே படித்துவிடடேன். தீக்கதிர் கொடுத்த அறிமுகமே உடனே வாங்கி படிக்க தூண்டியது. இன்று ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *