முன்னணி கன்னட எழுத்தாளர்களில் ஒருவரான நேமிசந்த்ரா கன்னடத்தில் எழுதிய நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு இந்நூல். சிறந்த தமிழ் மொழிபெயர்ப்புக்கான 2022 ஆம் ஆண்டின் சாகித்திய அகடமி விருதினைப் பெற்ற நூல்.
யாத் வஷேம் என்ற இடம் ஜெரூசலத்தில் இருக்கின்றது. நாஜிக்களால் கொல்லப்பட்ட 60 லட்சம் யூதர்களுக்கு அஞ்சலி செலுத்தும் இடம் அது.
1943 ஆம் ஆண்டில் நாஜி ஜெர்மனியிலிருந்து ஒரு யூதத் தந்தையும், மகளும் பெங்களூருக்கு அகதியாக வருகிறார்கள். இரண்டு ஆண்டுகளிலேயே தந்தை மாரடைப்பால் இறந்து விடுகிறார். தனித்து விடப்பட்ட ஹ்யானா என்ற அந்த யூதச் சிறுமியை பக்கத்து வீட்டில் வாழ்ந்த ஒக்கலிகா குடும்பமொன்று வளர்க்கிறது. காலப்போக்கில் ஹ்யானா அனிதாவாகி அந்தக் குடும்பத்தோடு இரண்டறக் கலந்து விடுகிறாள். அக்குடும்பத்தின் விவேக் அவளை விரும்பி திருமணம் செய்து கொள்கிறான்.
வேரோடு பிடுங்கி எறியப்பட்ட அனிதாவின் வாழ்க்கை பெங்களூரில் வேர் விட்டு வளர்கின்றது. ஆனாலும் அனிதாவால் அவளுடைய குடும்பத்தின் நினைவுகளை அழிக்க முடியவில்லை. அவளுடைய குடும்பம் பிரிக்கப்பட்ட 1942 ஆம் ஆண்டின் அந்த கருப்பு இரவை மறக்க முடியவில்லை. நாஜிக்களால் கொல்லப்படும் ஆபத்து உள்ளதை அறிந்து இரவோடு இரவாக தந்தை, தாய், ஹ்யானா, அவளுடைய மூத்த சகோதரி ரெபக்கா, தம்பி ஐசக் ஆகியோர் நள்ளிரவில் ஆம்ஸ்டர்டாம் நகரிலிருந்து தப்ப முயற்சிக்கிறார்கள். ஹ்யானாவும் அவளுடைய தந்தையும் ஒரு சந்தில் திரும்பும்போது ஜீப் சத்தம் கேட்கின்றது. ஜீப்பில் இருந்த நாஜி எஸ்.எஸ்கள் ஹ்யானாவின் தாய், சகோதரி, சகோதரன் ஆகியோரை ஜீப்பில் தூக்கிப் போட்டுக் கொண்டு சென்று விடுவார்கள். அம்மாவின் கதறலும், சகோதரியின் கூச்சலும் வாழ்நாள் முழுவதும் ஹ்யானாவின் மனதை பிசைந்து கொண்டே இருக்கின்றன.
தன்னுடைய கதையை தன் கணவரிடம் கூட அனிதா கூறியதில்லை. அவள் மனம் காயப்பட்டு விடுமோ என்று அவளுடைய கணவன் விவேக்கும் அவளைக் கேட்டதில்லை. அனிதாவின் மகனுக்கும் அனிதாவின் பின்புலம் தெரியாது.
தன் தாயும், அக்காவும், தம்பியும் எங்கோ வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற நம்பிக்கை அனிதாவுக்கு இருந்தது. அவர்களைத் தேடிச் செல்ல வேண்டும் என்ற ஆசையை அடி மனதில் புதைத்து வைத்து விட்டாள் அனிதா. ஒரு பள்ளிக்கூட ஆசிரியரான விவேக்குக்கு வெளிநாட்டுப் பயணம் என்பது எட்டாக்கனி.
அனிதா பெங்களூருக்கு வந்து 55 ஆண்டுகள் ஆகிவிட்டன. வெள்ளை வெளேரென்றிருந்த தோல் மங்கி விட்டது. நெற்றியில் பொட்டும், கழுத்தில் கருகமணித் தாலியுமாக கன்னடப் பெண்ணாகி விட்டாள் அனிதா. அனிதாவின் மகன் ஐஐடியில் படித்து மென்பொருள் பொறியாளராகி நிறைய பொருளீட்டுகிறான். அவளுடைய வெளிநாட்டுப் பயணத்துக்கு செலவு செய்வது மகனுக்கு பெரிய சிரமமல்ல.அவள் ஒளித்து வைத்திருந்த கனவுகள் நிறைவேறும் நேரம் வந்துவிட்டது.
தன்னுடைய 72 ஆவது வயதில் கணவரோடு பெர்லின் செல்கிறாள். அங்கே அவளுடைய குடும்பத்தைப் பற்றிய செய்தி எதுவும் கிடைக்காத நிலையில் அங்கிருந்து ஆர்ம்ஸ்டர்டாம் செல்கிறாள். தங்கியிருந்த வீட்டை அடையாளம் கண்டு விடுகிறாள். ஆனாலும் அவளுடைய குடும்பத்தைப் பற்றிய தகவலெதுவும் கிடைக்கவில்லை. அங்கிருந்து கடத்தப்பட்டவர்கள் டகாவ் வதை முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்ற ஒரு சிறிய தகவல் மட்டும் கிடைக்கிறது. டகாவும் செல்கிறாள். அங்கேயும் தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
அடி மனதில் கொழுந்து விட்டெரியும் தேடலின் வேட்கையோடு மிகுந்த சிரமப்பட்டு கணவருடன் அமெரிக்கா செல்கிறாள். சிகாகோ நகரிலுள்ள ‘மியூசியம் ஆஃப் டாலரென்ஸ்’ செல்கிறாள். துருப்பெதுவும் கிடைக்கவில்லை. வாஷிங்டனில் உள்ள ஹோலோ காஸ்ட் மியூசியத்திலும் அவள் தேடிய பெயர்களைப் பற்றிய எந்த தகவலும் இல்லை. ஆனாலும் அவள் நினைவில் பதிந்திருந்த அக்காவின் செருப்பைக் கண்டுபிடித்து விடுகிறாள்.
யாரோ ஒருவரின் வழிகாட்டுதலின்படி ஜெருசலேமுக்குச் செல்கிறாள். அங்குள்ள யாத் வஷேம் இந்த இடத்தில் 65 லட்சம் யூதர்களைப் பற்றிய தகவல்கள் இருக்கின்றன. யாத் வஷேமில் அக்காவைப் பற்றிய தகவல் கிடைக்கின்றது. 60 ஆண்டுகளின் தேடலுக்கான விடை கிடைக்கின்றது. அக்காவைச் சந்தித்து விடுகிறாள்.
டகாவ் வதை முகாமில் அக்கா சந்தித்த கொடுமைகளைக் கேட்டுக் கதறி அழுகிறாள் அனிதா. முகாமுக்கு வந்த முதல் நாளே வேலை செய்யப் பயனற்றவர்களாகக் கருதப்பட்ட ரெபக்காவின் தாயும், கைக்குழந்தை ஐசுக்கும் பிரிக்கப்படுகிறார்கள். வதை முகாமின் சட்டப்படி வேலை செய்யப் பயனற்றவர்கள் அழிக்கப்படுவார்கள். முகாமுக்குச் சென்ற அடுத்த நாள் காலையில் முகாமின் மறுபக்கத்தில் எழுந்த கரும்புகையில் வந்த மனித வாடை தன் தாயுக்கும், சகோதரனுக்கும் என்ன நடந்திருக்கும் என்பதை ரெபக்காவுக்கு தெரிவித்தது. வெறும் மனித உடலாக மட்டும் பார்க்கப்பட்ட ரெபக்கா பலமுறை சூறையாடப்படுகிறாள். அந்த மரணக் குழியில் இருந்து தப்பி வந்த தன் கதையை அனிதாவுக்குச் சொல்லுகிறாள்.
மனித வரலாற்றின் மிகப்பெரிய இனப்படுகொலையான ஹிட்லரின் யூத அழிப்பை ஒரு கொடுங்கோலனின் கொடூரம் என்பதாகப் பார்க்காமல், உலகம் முழுவதும் மதம், நிறம், சாதி என்ற பல்வேறு வேற்றுமைகளின் அடிப்படையில் மனிதர்களுக்கு இடையே நிலவும் வெறுப்பு; அந்த வெறுப்பினால் உண்டாகும் போர்கள்; படுகொலைகள் என்பதாக அனிதாவின் வாயிலாக தத்துவார்த்தமாகப் பார்க்கிறார் நூலாசிரியர்.
‘எல்லா மதங்களின் அடிப்படையும் அன்பு, கருணை, தயை, மன்னிப்புத் தான். இருந்தாலும் எல்லா மதங்களின் காலங்களிலும் போர்கள் இருந்தன. தாக்குதல்கள் இருந்தன. கிளர்ச்சிகள் இருந்தன. தோற்றவர்கள் மீது கொடூரமான செயல்கள் நடந்தன. மற்றொரு மதத்தை நிராகரிக்கும், தடை விதிக்கும், ‘என் மதமே புனிதமானது. என் கடவுள் ஒருவனே உண்மை’ என்ற விபரீத எண்ணங்கள் இருந்தன.’
என்று எழுதுகிறார் நூலாசிரியர்.
‘எல்லா மதங்களும் அறத்தை நிலை நிறுத்தும் பெயரில் ரத்த வெள்ளத்தையே ஓட விட்டன. அது குருசேத்திரத்தில் ஓடிய ரத்தமாக இருக்கலாம். ஜெரூசலேம் க்ருசேடர்கள் சிந்திய ரத்தமாக இருக்கலாம். இஸ்லாமைப் பரப்பும் உற்சாகப் போர்களாக இருக்கலாம். பத்ரில், உகுத் மலையில், கைபரில். அனைவரையும் படைத்த கடவுளை வெவ்வேறு சாதி, மதங்களின் பெயரில் பிரித்து சின்னா பின்னம் ஆக்கினோம்’ என்று கூறுகிறார் நேமிச்சந்த்ரா.
மதத்தின் அடிப்படையிலான அரசியல் உலகம் முழுவதும் மேலெழும்பி வரும் இன்றையச் சூழலில் ஒவ்வொரு இந்தியனும் படிக்க வேண்டிய நூலாக இருக்கின்றது இந்நூல். ஹிட்லர்கள் மீண்டும் மீண்டும் தோன்றுவார்கள் என்ற எச்சரிக்கையைத் தருகிறது இந்நூல்.
நாஜிக்கள் செய்த யூத இனப்படுகொலையை பற்றி ஆங்கிலத்தில் ஏராளமான நூல்கள் வந்திருக்கின்றன. பல மேலை நாட்டுத் திரைப்படங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. ஆனால் ஒரு இந்திய மொழியில் அந்த இனப்படுகொலை நடந்த சூழலில் இவ்வளவு ஆழமான ஒரு புனைவு வெளிவந்திருப்பது இதுவே முதல் முறை.
இந்த நூலை எழுதுவதற்காக 12 ஆண்டுகள் உழைத்திருக்கிறார் நேமிச்சந்த்ரா. கோரிப்பாளையத்தில் பார்த்த ஒரு யூதக் கல்லறை தான் இந்த தேடலுக்கான தொடக்கப்பள்ளி. ஹோலோகாஸ்ட் காலத்தில் தன் குடும்பத்தைப் பிரிந்த ஒரு யூதப் பெண்மணி, தன்னுடைய 72 ஆம் வயதில் 81 வயதான தன் அண்ணனை தேடிக் கண்டுபிடித்த உண்மை நிகழ்வு இக்கதைக்குத் தூண்டுதல். டகாவ் வதை முகாமுக்கும், சிகாகோவில் உள்ள மியூசியம் ஆஃப் டாலரன்ஸுக்கும், வாஷிங்டனில் உள்ள ஹோலோகாஸ்ட் மியூசியத்துக்கும் நேமிச்சந்த்ரா நேரில் சென்று வருகிறார். அனிதா தன்னுடைய சகோதரி ரெபக்காவை சந்திக்கும் காட்சிகளுக்கு உயிர் கொடுப்பதற்காக ஜெரூசலேத்திற்குச் சென்று யாத் வஷேமையும் பார்க்கிறார். 12 ஆண்டுகள் கால உழைப்பினால் உருவான இந்நூல் அரிய தகவல்களைத் தாங்கி வருகின்றது.
கே. நல்லதம்பி மொழிபெயர்ப்பு என்ற உணர்வு வராத அளவுக்கு மொழி பெயர்த்திருக்கிறார்.
வீட்டு நூலகத்தில் கண்டிப்பாக இருக்க வேண்டிய நூல்.
நூல் : யாத்வஷேம்
ஆசிரியர் : நேமிசந்த்ரா
தமிழில்: கே.நல்லதம்பி
விலை : ரூ.₹399
வெளியீடு : எதிர் வெளியீடு
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
bharathiputhakalayam@gmail.com
மருத்துவர். இரா. செந்தில்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

