நூல் : மகாத்மா மண்ணில் மத வெறி
ஆசிரியர் : ஜி.ராமகிருஷ்ணன்
விலை : ரூ.₹125
வெளியீடு : நக்கீரன்

தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

இந்துவும், இந்துத்துவாவும் வேறு வேறு

மதுரை, ஜூலை 18- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் எழுதிய, மகாத்மா மண்ணில் மத வெறி எனும் நூல் அறிமுக விழா மதுரையில் வடக்குமாசி வீதியில் உள்ள மணியம்மை மழலையர் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புரட்சிக்கவிஞர் மன்றம் சார்பில் நடை பெற்ற விழாவுக்கு மன்றத்தின் தலைவர் பி.வரதராசன் தலைமை வகித்தார். மதுரை நான்காம் தமிழ்ச்சங்க செயலாளர் ச.மாரியப்ப முரளி, உலகத்திருக்குறள் பேர வைத் தலைவர் கார்த்திகேயன் மணிமொழியன், திருவள்ளுவர் கழகப் பொருளாளர் ப.சந்தானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக கவிஞர் இரா.ரவி வரவேற்புரையாற்றினார். பைந்தமிழ் இலக்கியப் பேரவைத் தலைவர் வீ.அதிவீரபாண்டியன் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் நூல் அறிமுகவுரையாற்றிய தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ம.திருமலை பேசினார். அவர் தமது உரையில், “மகாத்மா மண்ணில் மதவெறி” என்ற தலைப்பில் மதுக்கூர் இராமலிங்கம், மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் பேசினார், என்னைவிட கூடுதலாகப் பேசுவார் கள். தற்போது எனக்கும் அந்த வாய்ப்புக் கிட்டியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. உலகி லேயே பயங்கரமான ஆயுதம் நாக்கு தான் என்பார்கள். இன்றைக்கு அதையும் தாண்டி “கருத்தியல்” முக்கியப் பங்காற்றுகிறது. ஆளும் வர்க்கங்கள் மக்களை பிரிப்பது, இணைப்பது என்பதையே தொடர்ந்து செய்துவருகின்றன. மகாத்மா காந்தி இந்தியா அமைதி, வளத்துடன் இருக்க வேண்டுமென விரும்பினார். இயற்கையைப் பயன்படுத்தி அதனோடு இயைந்து வாழ வேண்டுமென்றார். காந்தியைப் பற்றி அறிந்து கொள்ள ஏராளமான புத்தகங்களை பலர் எழுதியுள்ளனர். விடுதலைப் போராட்டத்தில் பொதுவுடைமை வாதிகளின் பங்களிப்பு குறித்து தோழர் ஜி.இராமகிருஷ்ணன் எழுதியுள்ளார். பொதுவுடைமை வாதிகளின் பங்களிப்பை அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார். குறிப்பாக, சார்பு நிலை எடுக்காமல், நடுநிலையோடு உண்மையைச் சொல்லியிருக்கிறார் தோழர் ஜி.ராமகிருஷ்ணன். நாட்டிற்கு இன்றைய தேவை கருத்தியல் ரீதியான பிரச்சாரம், வெவ்வேறு மதங்களைச் சேர்த்து ஒன்றிணைப்பது, அறிவியல் சிந்தனைகளை மக்களிடம் கொண்டு செல்வது. உண்மையற்ற தன்மையை உண்மையைக் கொண்டு சந்திப்பது ஆகியவைதான். அந்தப் பணியை வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டுமென்றார்.

ஜி.ராமகிருஷ்ணன்

இந்தியாவின் இறையாண்மை, மதச்சார் பின்மை, கூட்டாட்சித் தத்துவம் ஆகியவற்றை வேறுவிதமாக மாற்றுவதற்கு முயற்சிகள் நடைபெறுகிறது.  இதற்கெதிராக அனைவரும் ஓரணியில் திரள்வது இன்றையத் தேவை. காந்தியின் மண்ணிலிருந்து மதவாதத்தை அடியோடு ஒழிக்க வேண்டிய தருணம் இது என்று விழாவில் ஏற்புரை யாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார். 75-ஆவது சுதந்திரதினத்தை கொண்டாடவுள்ள நிலையில் விடுதலைக்காக போராடிய தலைவர்களின் நோக்கம், அபிலாஷைகள் நிறைவேறியிருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. அவர்களின் கனவு சிதைக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் இறையாண்மை, மதச்சார்பின்மை, கூட்டாட்சித் தத்துவம். பொருளாதார சுயச் சார்பு ஆகிய நான்கும் அழிக்கப்படுகிறது. ஒருவர் பிறப்பால் இந்துவாக, முஸ்லி மாக, கிறித்தவர்களாக இருக்கலாம். ஒருவர் ஒரு  மதத்தில் பிறந்துவிட்டார் என்பதற்காக அவர்களிடம் மத உணர்வை ஊட்டுகின்றனர். இந்த மத உணர்வு பலரை மத வெறியர்களாக மாற்றுகிறது. மதத்தின் பெயரால் நிகழும் எந்த வன்முறையையும் நாம் எதிர்க்க வேண்டும். இன்றைக்கு பாஜக-ஆர்எஸ்எஸ் அமைப்புகள் இந்து மதத்தில் பிறந்தவர்களை மதவெறியர்களாக மாற்றிக்கொண்டிருக்கிறது.

இந்து என்பது ஒருவர் அந்த மதத்தில்  பிறந்ததைக் குறிக்கிறது. ஆனால், இந்துத் துவா என்பது ஒரு அரசியல் திட்டம். இந்துத்துவா மனுநீதி, சனாதனம், மதத்தின் அடிப்படையில் நாடு, ஒரே தேசம், ஒரே மொழி  ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. இந்துவும்-இந்துத்துவாவும் வேறு வேறு. பாஜக-ஆர்எஸ்எஸ் அமைப்புகள் இன்றைக்கு இந்துத்துவாவை, சனாத னத்தை கட்டமைக்கின்றன. ஆர்எஸ்எஸ் அமைப்பு யாருடையது? அவர்கள் என்ன செய்வார்கள்? எப்படிப்பட்டவர்கள் என்பதை 1982-ஆம் ஆண்டு  மண்டைக்காட்டில் நடை பெற்ற கலவரம் உணர்த்தியது. இதில் ஆறு கிறிஸ்தவர்கள் பலியானார்கள். அன்றைக்கு முதல்வராக இருந்த எம்ஜிஆர் நீதியரசர் வேணுகோபால் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தார். அந்த ஆணையம் அளித்த அறிக்கை ஆர்எஸ்எஸ் செயல்பாட்டை அம்பலப்படுத்துகிறது.

ஆர்எஸ்எஸ், விஎச்பி அமைப்புகள் கூறுவது போல் “மனுவின்” அடிப்படையில் அரசியல் சாசனம் உருவாகியிருந்தால், மதத்தின் அடிப்படையில் நாடு கட்டமைக்கப்பட்டு, மதம் நாட்டை ஆட்சி செய்தால் இந்தியா இன்றைக்கு எப்படி மாறியிருக்கும் என்பதை நினைத்தாலே அச்சமாக உள்ளது. அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர், நாடு மதத்தின் அடிப்படையில் துண்டாடப்பட்டுவிடக் கூடாது என்பதை உணர்ந்து தான், சட்ட உருவாக்கத்தில் “மதச்சார்பின்மை, கூட்டாட்சி” ஆகியவற்றை முன்னிலைப்படுத்தியுள்ளார். ஆர்எஸ்எஸ் தலைவர்களில் ஒருவரான கோல்வால்கர், “இந்தியாவை மதம் தான் ஆள வேண்டும். அரசியல் இரண்டாவதாகத்தான்” இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

1992-ஆம் ஆண்டு மதுரையில் நடை பெற்ற ஆர்எஸ்எஸ்-விஎச்பி மாநாட்டில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் கலந்துகொண்டு, மனுநீதியைத்தான் அரசியல் சட்டமாக்க வேண்டுமென பேசியிருக்கிறார். “கல்வி காவிமயமானால் அதில் என்ன  தவறு” என துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, இந்தப் பொறுப்பிற்கு வருவதற்கு முன் பாஜக-வின் தலைவராக பேசினார். அது இன்றைக்கு நடை முறையில் உள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களில் துணைவேந்தராக யாரை நியமிப்பது என்பதை முதல்வர் தான் முடிவு செய்வார், ஆளுநரின் ஒப்புதலுக்காக மட்டுமே கோப்பு அனுப்பப்படும். ஆனால், இப்போது துணைவேந்தர்கள் நியமனத்தை ஆளுநரே செய்கிறார். கல்வி நிலையங்கள் காவிமயமாகிறது. ஆர்எஸ்எஸ் சார்பாளர்கள் அரசின் உயர் பொறுப்புகளில் அமரவைக்கப்படுகின்றனர்.

நாட்டை மதவாதம் என்ற இருள் சூழ்ந்துள்ளது. அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்து மதச்சார்பின்மையைப் பாதுகாப்போம். இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.

நன்றி: தீக்கதிர்
ஜீலை 18, 2022 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *