மணற்காடர் கவிதைகள் / இந்திரன் முன்னுரை
————————————————————————–
மெல்ல மெல்ல உருகிக் கொண்டிருக்கும் ஒரு மாபெரும் பனிக்கட்டியின் மீது நின்று கொண்டிருக்கிறார்கள் ஈழத்திலிருந்து பல்வேறு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த தமிழர்கள். காலுக்குக் கீழே இருக்கும் தமிழ்ப் பண்பாட்டு அடையாளம் எனும் பழமையான மாபெரும் பனிக்கட்டி , எதிர்பாராத வேகத்தில் உருகிக் கொண்டே வருகிறது என்பதை உணர்கிறார்கள்.
இதுவரை அறியப்படாமல் இருந்த பிற மொழிகளும் , பண்பாடுகளும் இன்று தங்கள் வாழ்க்கையின் தவிர்க்க முடியாத பகுதியாக மாறிப் போனதை அறிகிறார்கள். தாங்கள் பிரிந்து வந்த மண்ணும் மக்களும், மணலும் கடலும் , பனையும் பறவையும் எப்படித் தங்களின் தமிழ் ஆன்மாவின் சதையும் எலும்புமாக இருக்கின்றன என்பதை நினைத்துப் பார்க்கிறார்கள். இழந்த வாழ்க்கையின் தமிழ் அழகியலைத் தங்கள் கவிதைகளின் மூலமாக மீட்டெடுக்கிறார்கள். மணற்காடர் எனும் பெயருக்குள் ஒளிந்திருக்கும் கனடாவாழ் ராஜாஜி ராஜகோபாலனின் கவிதைகள் இதையே செய்கின்றன.
மணற்காடரை நான் காணொளியில்கூடப் பார்த்தது கிடையாது. அவரது எழுத்துப் பிரதிகளை மட்டுமே எனக்குத் தெரியும். அவரது எழுத்துப் பிரதிதான் அவரது பாஸ்போர்ட். அது என் கைவசம் இருக்கிறது. மணற்காடரின் பாஸ்போர்ட் அவரைப் பற்றிய புறச் செய்திகளை மட்டுமின்றி , அவரது ஆன்மாவைக் கட்டமைத்திருப்பவை எவை எனும் அகச் செய்திகளையும் நமக்குத் தெரிவிக்கிறது.
இலங்கை பருத்தித்துறையின் கீழைப் புலோலி கிராமத்தில் பிறந்து , கனடாவுக்குப் புலம் பெயர்ந்து சென்று, அந்நாட்டு சட்டத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்று , மூன்று தசாப்தங்களுக்கு மேலாக கனடாவில் வாழ்ந்து வரும் ராஜாஜி ராஜகோபாலன் எப்படி மணற்காடர் எனும் கவிஞராக உருத்திரிபு அடைகிறார்? 2014இல் “ஒரு வழிப்போக்கனின் வாக்குமூலம்” கவிதைத் தொகுதியையும், 2015இல் “ஒரு குதிரையில்லாத ராஜகுமாரன்” சிறுகதைத் தொகுதியையும் முன்வைத்த இவரது இன்றைய கவிதைகள் என்ன செய்கின்றன?
“பொட்டல்காடாக இருந்தால் என்ன
சொந்தமென்று சொல்ல
புழுதியாவது இருக்கிறதே.”
எனும் வலியுணர்த்தும் வார்த்தைகளில் தெரிந்து விடுகிறது ராஜாஜி ராஜகோபாலன் ஏன் மணற்காடர் எனும் கவிஞராக மாறினார் எனும் புதிருக்கான விடை.
தங்கள் மொழியின் இலக்கியப் பேழைக்குள் தங்களின் பூகோள அடையாளங்களையும் , மகிழ்ச்சியான மற்றும் துயரமான நினைவுகளையும், கடல், மணல் , மரம், செடி , கொடி , பறவைகள் ஆகியவற்றைப் பற்றியுமான கவித்துப் பதிவேடுகளை அவர்கள் பிரக்ஞைபூர்வமாக உருவாக்க இரவும், பகலும் உழைத்திருக்கிறார்.
பொன்னார் மேனியனே என்று பணம் எண்ணிக் கொண்டே பாடும் தாத்தா, , திருவெம்பாவை பாடி கோயிலுக்கும் கடைக்கும் ஒரே சேலை கட்டும் தோசைக்கடை மகேசு, சிரியா அகதிக்கு வீட்டைத் திறந்து விடும் ஏழடி உயர கென்ஷா, தானே எழுதியது போல் தனக்குப் பிடித்த புத்தகத்தை வாசித்துக் காட்டும் அக்கா என்று அவர் தன் ஞாபகக் குகையின் சுவற்றில் தீட்டப்பட்டிருக்கும் குகை ஓவியங்களை ஒவ்வொன்றாக தீப்பந்தத்தின் வெளிச்சத்தில் காட்டும்போது இந்த குகைக்குள் இத்தனைக் அனுபவப் புதையலா என்று நாம் வியக்கிறோம்.
இன்றைய இலக்கிய வயலில் டிராக்டர் ஓட்டும் இவரது கவிதைகள் மூலமாகக் கரைந்து வரும் பனிக்கட்டி மேலிருந்தபடி கரையாத அழுத்தமான தமிழ்ப் பண்பாட்டுத் தளம் ஒன்றை உருவாக்கி விடுகிறார். இத்தொகுதியில் இருக்கும் கவிதைகள் ஈழத்தின் தமிழ் வாழ்க்கையைச் சலியாது பேசுவதின் மூலமாக உருவழிந்து வரும் தமிழ்ப் பண்பாட்டு அடையாளத்தைப் புனர்நிர்மாணம் செய்கின்றன.
கனடாவில் மூன்று தசாப்தங்கள் வாழ்ந்த பிறகும் இவர் ஏன் தான் இழந்த வாழ்க்கையையே எழுதி வருகிறார்? இந்த கேள்வியைக் கேட்பவர்களுக்கு அமெரிக்காவில் முப்பது ஆண்டுகளாக வாழ்ந்த நோபல் பரிசு பெற்ற யூத எழுத்தாளர் ஐசக் பெஸ்விக் சிங்கர் சொன்னதையே பதிலாக கொடுக்க வேண்டியிருக்கிறது.: “ நான் இன்னமும் எனக்குச் சொந்தமான ஊரைப் பற்றியே கதை எழுதக் காரணம் , தனக்கென்று சொந்தமான ஒரு வீட்டின் மூலையும், அடுப்பும் இல்லாமல் ஜீவனுள்ள ஒரு கலைப் படைப்பை என்னால் உருவாக்க முடியாது என்பதுதான் .”
படிம தியானங்கள், உவமை உற்சவங்கள், உருவகச் சிற்பங்கள் என்று அலங்காரங்கள் எதுவும் எனக்கு வேண்டாம் போ என்று உதறித் தள்ளி, எனக்கு வாழ்க்கை தெரியும் அதை வைத்துப் பிழைத்துக் கொள்கிறேன் என்று சொல்கின்றன மணற்காடரின் கவிதைகள்.எளிய தமிழில் தோரணைகள் ஏதுமின்றி இயல்பாகக் கைவீசி நடக்கின்றன இவர் கவிதைகள்.
சுருக்கமாகச் சொல்வதெனில் மணற்காடர் எனும் மூத்த எழுத்தாளரின் இக்கவிதைகள் எந்தவித ஆடம்பரமும் இன்றி எளிமையாகப் பூத்து நுட்பமான கவித்துவ நறுமணத்தைக் காற்றில் விதைக்கும் காட்டுப் பூக்களைப் போல வாசகனை ஆச்சரியப்படுத்துகின்றன.


என்மீதுகொண்ட நட்பின் பேரால் மட்டுமல்ல இந்த நூலிலுள்ள கவிதைகளில் மனம் தோய்ந்துபோனதாலும் இதற்கு அணிந்துரையை எழுத உடன்பட்ட நண்பர் இந்திரனின் பேருள்ளத்தைப் போற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை.
“எளிய தமிழில் தோரணைகள் ஏதுமின்றி இயல்பாகக் கைவீசி நடக்கின்றன இவர் கவிதைகள்.” என்ற இந்திரனின் கூற்றை இன்னும் சில நாட்களில் வெளிவரவிருக்கும் இந்த நூலை வாசிப்போர் வரவேற்பார்கள் என்பது நிச்சயம்.