கண்விழித்தபோது சிரித்தே விட்டேன்
எல்லா கிரகங்களும் மேல்சுவற்றில்
ஒட்டிக் கொண்டிருந்தன
என்னாயிற்று உங்களுக்கெல்லாம்
கேள்விக்கு பதிலாக பயத்தின் சுவடுகள்
மழையாய் பொழிந்தன
நீயுமா சனி என்றேன்
என்னைத்தான் குறி வைக்கிறார்கள்
எல்லோரும்
சனியின் குரலில் குரோதத்தின் தொனி
இங்கிருந்து அங்கு
அங்கிருந்து இங்கு
கட்டங்கள் தாவி
கால்கள் வலிக்கிறது
விண்கலங்கள் வேறு
வழியெங்கும் நிற்கிறது
ரத்தம் சொட்ட நின்ற
செவ்வாயைப் பார்த்தேன்
விண்கலம் ஒன்று தந்த வீரக்காயம்
வந்திறங்கத் தெரியாமல்
வந்ததால் வந்தது என்றது
அதுசரி இங்கெதற்கு வந்தீர்கள்
என்றேன்
கடவுளே தேடி வந்தாலும்
கண்டு கொள்ளாத உன்னிடம்
தொந்திரவு இருக்காது என்ற நம்பிக்கை
பயத்தின் சாயல் மறைந்து
பக்கத்தில் வந்த
அத்தனை கிரகங்களுக்கும்
ஆளுக்கொரு குவளையில்
தேநீர் தந்தேன்
இன்றைய விடியல்
இப்படியாக
ஆத்மாஜீவ்

