நூல் வெளியீடு: சினிமாவில் பறந்த சிவப்புக் கொடி (எஸ். பி. ஜனநாதன் நினைவு மலர்)

Book Release Red Flag Flying in Cinema (SB Jananathan Memorial Flower) நூல் வெளியீடு: சினிமாவில் பறந்த சிவப்புக் கொடி (எஸ். பி. ஜனநாதன் நினைவு மலர்)நூல்: சினிமாவில் பறந்த சிவப்புக் கொடி S.P ஜனநாதன் நினைவு மலர்
தொகுப்பு: G.K.V. மகாராஜா முரளீதரன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: 300
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும். https://thamizhbooks.com/
தொடர்புக்கு : 044-24332924, 24332424


சினிமாவில் பறந்த சிவப்புக் கொடி S.P ஜனநாதன் நினைவு மலர் வெளியீடு.

சென்னை, டிச. 26 – மார்க்சிய பொருளாதாரத்தையும்  சமதர்ம கருத்துக்களையும் திரைப்படங்களில் கொண்டு வந்த மக்கள்  இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் நினைவாக சினிமாவில் பறந்த சிவப்பு கொடி என்ற சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் எஸ்.பி.ஜனநாதனின் முழு உருவச் சிலையை காணொளி காட்சி வாயிலாக விடுதலைப் போராட்ட  வீரர் தோழர் என்.சங்கரய்யா திறந்துவைத்துபேசுகையில், திரைப்படங்களில் உலக மக்களின் அரசியல், பொருளாதாரம், மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை  ஜனநாதன் பேசினார். அவரை பின்பற்றி  உழைக்கும் மக்களுக்கு சாதகமாக, சிந்தனையை தூண்டும் வகையில் படைப்புகளை இயக்குநர்கள் உருவாக்கவேண்டும் என்றார்.  உருவப்படம் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் உருவப்படத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு திறந்து வைத்து பேசுகையில், “ஜனநாதன் கம்யூனிச கருத்துக்களை எளிமையாக்கி திரைப்படங்கள் வாயிலாக மக்களிடம் கொண்டு சென்றார். அவரது வாழ்க்கையை வழிகாட்டியாகவும், படங்களை பாடமாகவும் எடுத்துக் கொள்வோம்” என்றார்.

நினைவுமலர்
பாரதி புத்தகாலயம்
பதிப்பித்துள்ள ‘சினிமாவில் பறந்த சிவப்புக் கொடி’ என்ற நினைவு மலரை காணொளி காட்சி வாயிலாக கவிஞர் கனிமொழி எம்.பி வெளியிட்டார். அப்போது பேசிய அவர், “திராவிட இயக்கம் திரைத்துறையை அகப்படுத்திக் கொண்டு தனது கருத்துக்களை பரப்பியது. அதேபோன்று ஜனநாதன் சமரசமின்றி, கம்யூனிச கருத்துக்களை திரைப்படங்கள் வாயிலாக கூறினார். கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் நாட்டை ஆட்சி செய்கின்றன. அதற்கு கீழ்தான் அரசியல்வாதிகள் உள்ளனர் என்பதை வெளிப்படுத்தினார்”  என்றார்.

மாற்றுப்பாதை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், “மார்க்சிய அடிப்படை கோட்பாடு, தத்துவத்தை முழுமையாக உள்வாங்கி கம்யூனிஸ்ட்டாக ஜனநாதன் இருந்தார். ஆழமான, செறிவான கருத்துக்களை கொண்ட பொருளாதாரத்தை எளியமையாக விளக்கினார். அவரது திரைப்படங்களில் ஆபாசம், பாலியல் கருத்துக்கள் கிடையாது. தமிழ்த்திரையுலகம் மாற்றுப்பாதையில் பயணிக்க தொடங்கியுள்ளது.

போராட்ட வரலாறு
மக்களின் மனசாட்சியை தட்டியெழுப்பும் வகையில் இயக்கிய ‘ஜெய்பீம்’ படத்தை த.செ.ஞானவேலுவும், மதம் மின்சாரம் போல் உள்ள நிலையில் அதை சரியாக கையாண்டு புளுசட்டை மாறன் இயக்கிய ‘ஆன்டி இந்தியன்’, உழைப்பாளி மக்களை குப்பைகள்போல் கொண்டு கொட்டப்படுவதை ‘ஜெயில்’ படமாக வசந்த பாலனும் இயக்கி உள்ளனர். அசுரன் போன்று தொடர்ச்சியான படங்கள் வந்துகொண்டுள்ளன. இதற்கெல்லாம் விதையாக இருந்தவர் ஜனநாதன். இந்த பாதையில் தமிழ்ச்சினிமா சாதனை படைக்கும். ” என்றார்.

உண்மை எது?
“செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதலில் மூவர்ண கொடியேற்றியதும், அரசு பயன்படுத்தும் பாரதியார் படத்தை வரைந்ததும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பாஷ்யம். முதன்முதலில் மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தியவர் சிங்காரவேலர் எனும் கம்யூனிஸ்ட். இத்தகைய உண்மைகளை மக்கள் உணரும்போது மாற்றம் உருவாகும். கண்டுபிடிப்புகள் அனைத்தும் மக்களுக்குதான். சினிமா என்ற கண்டுபிடிப்பையும் மக்களுக்காக பயன்படுத்தினார் ஜனநாதன். உலகத்தில் இறுதியில் இருக்கப்போவது கம்யூனிசம் மட்டும்தான். ஜனநாதனின் பாதை தமிழ்த்திரையிலும் வெற்றி பெறும்.தனது படைப்புகள் வாயிலாக ஜனநாதன் நிலைத்து நிற்பார் ” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறினார்.’

பயிற்சி தேவை
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், “அனைத்தையும் தன்வயப்படுத்தும் வணிக தளத்திலிருந்து, தத்துவார்த்த அரசியலை பேசியவர் ஜனநாதன். சிக்கல், கொள்கை, கோட்பாடு, தத்துவம் இவற்றை புரிந்து கொண்டு செயலாற்ற பயிற்சி தேவை. கம்யூனிஸ்ட் கட்சி சிக்கல்களை மட்டும் பேசாமல், தத்துவார்த்தத்தோடு பொருத்திப்பார்த்து பேசக்கூ டியவை. சர்வதேச பிரச்சனையோடு பொருத்திப்பார்த்து அணுகக்கூடியவை. மனித குல சிக்கல்களை தத்துவத்தோடு இணைத்துபார்த்து செயல்பட க்கூடியவை. அத்தகைய கம்யூனிச கருத்துக்களை எளிய மொழியில் மக்களிடம் கொண்டு சேர்த்தார் ஜனநாதன். 10 ஆண்டுகள் கூடுதலாக வாழந்திருந்தால் தமிழ்ச் சமூகத்தில் இடதுசாரி தாக்கம் இன்னும் அதிகரித்திருக்கும்” என்றார்.

இந்த நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்த திரைக்கலைஞர் விஜய் சேதுபதி பேசுகையில் “இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் செயல்பாடுகளில் இருந்து கம்யூனிசத்தை அறிந்து கொண்டேன். தான் ஏற்றுக்கொண்ட கொள்கையை அவர் எளிய மொழியில் மக்களிடம் கொண்டு சென்றார். ஆயிரம் வார்த்தைகளில் சொல்ல வேண்டியதை 5 வார்த்தைகளில் சொல்லும் அசாத்திய திறமை கொண்டிருந்தார். கொள்கைக்கும், நடைமுறை வாழ்க்கைக்கும் இடையே வேறுபாடு இல்லாமல் இருந்தார். அவரது முழு உருவச்சிலை பொருத்தமான இடத்தில் அமையும்” என்றும் அவர் கூறினார். இந்த நிகழ்வில், தோழர் எஸ்.பி.ஜனநாதன் வெண்கல உருவச் சிலையை தரமணியில் உள்ள திரைப்படக் கல்லூரி வளாகத்தில் அல்லது சென்னையில்  பொருத்தமான இடத்தில் வைக்க  அரசு அனுமதிக்கவேண்டும்  என்று இந்த  நிகழ்ச்சியில் கோரிக்கை விடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிபிஐ தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி.மகேந்திரன், பேரா.ஹாஜாகனி, மதிமுக துணைப்பொதுச் செயலாளர் மல்லை சத்யா, வழக்கறிஞர் அருள்மொழி, ஓவியர் சந்ரு, இயக்குநர்கள் அமீர், கரு.பழனியப்பன், திரைப்பட இணை இயக்குநர் ஜி.கே.வி.மகாராஜா முரளீதரன், முனைவர் பெ.அண்ணாதுரை உள்ளிட்டோர் பேசினர்.

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.