நான் நேற்று “துப்பாக்கிகள் ,கிருமிகள் ,எஃகு” நூல் குறித்து இங்கு அசைபோட்டேன் . மின்னஞ்சலிலும் நண்பர்களுக்கு அனுப்பி வைத்தேன் .அங்கு விவாதமே நடக்கிறது .
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் எஸ்.மோகனா இந்த விவாதத்தில் சொன்னார் ,
“தொற்று நோயகள் வருவதை தடுக்க முடியாது. உலகத்தில் மனிதன் எப்படி வாழவேண்டும் என்று நினைக்கிறானோ, அது போலவே அனைத்து உயிர்களும் தன்னைத்தானே தகவமைத்து சூழலுக்கு ஏற்றவாறு மாறி வாழ்தலை உறுதி செய்து கொள்ள முயற்சிக்கும்.
இந்த உலகம் மனிதனுக்கு மட்டும் சொந்தமானதன்று. மனிதன் இந்த உலகில் கடைசியாக உருவாக்கப்பட்ட உயிர். அவனுக்கு முன்பே வந்தவர்கள் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள். வைரஸ்கள் மூதாதையர்கள்.
வைரஸ்களை பொதுவாக உயிரற்றவை (inanimate ) என்று கூறுவார்கள். அது வாழ ஓர் உயிர் கிடைத்தால்தான் வாழும். இல்லை எனில் செத்துவிடும். தனித்து உலகில் பூச்சி புழுக்கள் போல வாழ முடியாது.
மேலும் வைரசுக்கு RNA மட்டுமே உண்டு. நாம் ரொம்ப ரொம்ப முன்னேறியவர்கள். இதனைத்தான் விஜயன் தோழர் தெளிவாகச் சொல்லியுள்ளார். இந்த RNA வை வைத்துக்கொண்டு, இந்த வைரஸ்கள் நம்மை மிரட்டி ஆட்டம் போடுகிறதென்றால், இவர்கள் உயிர் வாழ்தலுக்கான great கில்லாடிகள் என்று பாருங்கள். ”
கொஞ்சம் மூளையைக் கசக்க வைத்தாலும் ஆர்வத்தையும் கிளர்த்தியது . வழக்கம் போல் புத்தக ஷெல்ப்பை மேய்ந்தேன் . “ அனைத்தும் குறித்த சுருக்கமான வரலாறு : மனித அறிவித் தேடலின் புதிய கதை” எனும் நூல் தட்டுப்பட்டது .
பில் பிரைசன் எழுதியது . மொழியாக்கம் ப்ரவாஹன் .வெளியீடு பாரதி புத்தகாலயம் .640 பக்கங்கள் . முன்பே வாசித்தது . அப்போதே நூல் அறிமுகமும் செய்துள்ளேன் . இப்போதைய தேவைக்கு ஒரு பருந்துப் பார்வை வீசினேன் . சிக்கியதில் ஒரு சில உங்கள் பார்வைக்கும் .
”ஒரு போதும் மறவாதீர் !நாம் இல்லாமலே பாக்டீரியாக்கள் பல நூறு கோடி ஆண்டுகளாக இருந்து வந்துள்ளன .அவை இல்லாமல் ஒரே ஒரு நாள் கூட நாம் வாழமுடியாது .”
என்ன வியப்பாக இருக்கிறதா ? அதுவே உண்மை .
நான் ரொம்ப சுத்தம் என்கிறவரா நீங்கள் ! ” நல்ல உடல் நலத்துடனும் சுத்தம் குறித்த சராசரி விழிப்போடும் நீங்கள் இருப்பவராயின் ,உங்கள் உடலின் சதைப் பிடிப்பான இடங்களில் சுமார் ஒரு லட்சம் கோடி பாக்டீரியாக்கள் மேய்ந்து கொண்டிருக்கும் .”
மனிதர்களில் கேடிகளும் [ மோடிகள் என வாசித்தால் நாம் பொறுப்பல்ல] நல்லவர்களும் இருப்பதுபோல் பாக்டீரியாக்களிலும் உண்டு . நம்மை வாழ வைக்கும் பாக்டீரியாக்கள் பெரும்பான்மை .ஆனால் தீங்கு செய்யும் பாக்டீரியாக்கள் கொஞ்சம்தான் ,எனினும் அதன் ஆட்டம் தாங்க முடியாதது .
நோய் பரப்பும் பாக்டீரியா ,நோய் தடுக்கும் பாக்டீரியா என அதன் உலகம் விரிந்தது . நாம் எதையும் பகுத்துப் பார்க்காமல் மொத்தமாய்ப் போட்டு தாக்கிவிடுகிறோம் . பொதுவாய் எந்த நோய்க் கிருமியும் 14 நாட்களுக்கு மேல் வாழாதாம் .இன்னும் எவ்வளவோ நாம் தெரிய வேண்டும் .
பிரபஞ்சம் குறித்த – பிரபஞ்சத்திலுள்ள அனைத்தை யும் குறித்த – உயிரினம் குறித்த – மனிதன் குறித்த – சரியான உண்மைகளைச் சென்றடைய அறிவியல் உலகம் நடத்திய நெடிய வரலாற்றுப் பயணத்தின் கதையே இந்நூல்.
அது மட்டுமா? இந்த நூல் உருவான வரலாறே வியப் பூட்டக்கூடியது. முதல் இரண்டு அத்தியாயங்களுக் காக 19000 கி..மீ .பயணம். 17 அகழ்வாராய்ச்சிப் பகுதிகளுக்கு நேரடி விஜயம் . மேலும் டார்வின் பற்றி எழுத காலோப்பாகஸ் தீவுகளுக்கு 178 நாள் பயணம். கடல் உயிரி பற்றி அறிய 176 அருங்காட்சியகங்களில் விவர சேகரிப்பு. 200 வாழும் விஞ்ஞானிகளுடன் நேர்முக உரையாடல் . இப்படி பெரும் தேடலும் உழைப்பும் தன்னகத்தே கொண்டது இந்நூல். இதற்காக அவர் படித்த புத்தகங்கள் திரட்டிய தரவுகள் என அனைத் தும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.
உங்களின் அப்பா, அம்மா அவர்களின் அப்பா அம்மா இப்படி முப்பது தலைமுறை பின்னால் பயணித் தால் உங்கள் உறவினர்கள் எண்ணிக்கை 1, 073,741,824 இவர்களின் வாழ்வை கூர்ந்து நோக்கினால் ஏதாவது ஒருவகையில் தகாத உறவாகவே இருக்கும் என அதிர்ச்சிக் குண்டைத் தூக்கிப்போடுகிறார் நூலா சிரியர். நீங்கள் ஒரு பூங்காவில் இருக்கும் போது சுற்றி இருப்போரின் வரலாற்றைத் துருவினால் அனை வரும் உறவினரே. ஆசிரியரின் இக்கூற்றைச் சரியாக உள்வாங்கினால் சாதி மதச் சண்டை ஏன்?
உங்கள் மெத்தையை உருப்பெருக்காடியால் உற்றுநோக்கின் 20 லட்சம் சிறுபூச்சிகளின் வீடாக இருப்பதைக் காணலாமாம். இப்படி அனைத்தையும் உற்றும் ஆழ்ந்தும் விரிந்தும் பார்த்து, இரா. நட ராசன் கூறுவ தைப்போல “அறிவியலின் வரலாறும் ;வரலாற்றின் அறிவியலும் தொடும்சிகரமாக” இந்நூலைப் படைத் திருக்கிறார்.
நாம் வாழும் காலம் மிகவும் சிக்கலானது சவாலானது வரலாறு குறித்த அறிவியல் பார்வையும் , அறிவியல் குறித்த வரலாற்றுப் பார்வையும் இல்லாமல் எதையும் மிகச் சரியாக உள்வாங்கவே முடியாது . இந்நூல் வரலாற்றுப் பார்வையோடு நாம் வாழும் பிரபஞ்சத்தை அதன் தோற்றத்தை இருப்பை எல்லாம் அறிய உதவும் .
தொற்று நோய்களைப் பற்றிய வரலாறும் , தொற்றுநோய் குறித்த அறிவியல் பார்வையும் ; இவற்றோடு வினையாற்றும் அரசியலையும் இனங்காணத் தெரிய வேண்டும் .இல்லையேல் ஏமாளிகளாகிவிடுவோம்.
-சு.பொ அகத்தியலிங்கம்
Leave a Reply
View Comments