நூல் அறிமுகம்: எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணாவின் “எழுத்தாளன் முகவரி”-தமிழுக்குப் புதிய வரவு – பேரா.க.பஞ்சாங்கம்

நூல் அறிமுகம்: எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணாவின் “எழுத்தாளன் முகவரி”-தமிழுக்குப் புதிய வரவு – பேரா.க.பஞ்சாங்கம்

 

உன்னால் எழுதாமல் இருக்க முடியுமானால் இருந்து விடு. அதுதான் உனக்கு நல்லது என்று புகழ்பெற்ற எழுத்தாளர் ஒருவர் சொல்லியுள்ளதாக ஞாபகம். நல்ல எழுத்து என்பது எந்தக் காலத்திலும் எழுதுபவனின் உடலையும் உள்ளத்தையும் மட்டுமல்ல மொத்த வாழ்வையுமே விழுங்கி ஏப்பம் விடக்கூடியது. அத்தகைய எழுத்துத் தொழில் குறித்து நாகரத்தினம் கிருஷ்ணா நல்லதொரு நூலைத் தமிழுக்குத் தந்துள்ளார்.

நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை, மொழி பெயர்ப்பு என்று பலவாறு மொழியைக் கையாளும் திறம் கூடி வரப்பெற்றவர் என்பதால் தன் அனுபவத்தோடு வெளிநாட்டில் வெற்றி பெற்றபிற எழுத்தாளர்களின் அனுபவத்தையும் கலந்து கட்டுமானத்திற்கேற்ற ஒன்றாகத் தயாரித்துத் தந்துள்ளார். இத்தகைய எழுதுதல் குறித்த நூல்கள் பலவாறு வந்து தமிழில் வினைபுரியும்போது தான் தமிழ்ப் படைப்புக்களின் தரமும் படைப்பாளிகளின் தரமும் பன்மடங்கு உயரும் என்ற எண்ணம் நூலை வாசித்து முடித்த கணத்தில் தோன்றி மறைந்தது.அந்த அளவிற்குப் பதினெட்டு இயல்களில் விரிவாகவும் ஆழமாகவும் எழுதிக் கொண்டு போகிறார்.

எழுத்தாளர்களுக்கு இருக்க வேண்டிய காலம் குறித்த கவனம் எந்த அளவிற்கு அவசியம் என்பதை
நூலாசிரியர் அழகாக இப்படி எடுத்துரைக்கிறார்.

“காலம் பொன் போன்றது. கரந்த பால் முலைக்குத் திரும்பாதது என்பது போல் கழிந்த விநாடியைத் திரும்ப ஈட்ட முடியாது… இருபது வயதில் ஒருவனுக்குக் கிடைக்கும் ஒரு நிமிடத்திற்கும் அறுபது வயதில் கிடைக்கும் ஒரு நிமிடத்திற்கும் நிறைய வேறுபாடு உண்டு. இருபது வயது இளைஞனுக்குக் கிடைக்கும் ஒரு நிமிடம் அவனைப் போலவே ஆரோக்கியமானது. ஆடும், பாடும், ஓடும், உட்காரும், வீரியமும் அதிகம். அறுபது வயதில் அமையும் நிமிடம் தள்ளாடும், படுக்கும், உறங்கும், மூச்சு வாங்கும். பலருக்குப் பல்போன நிமிடமாகக் கூட இருக்கலாம்” என்றெல்லாம் எழுதும் போது வாசிப்பு சுகமாகிறது.

அறிமுகம் |
எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா

கடின உழைப்பு, தொடர்ந்து எழுதுதல், எழுதும் எழுத்தில் தான் இருத்தல், கூடுவிட்டுக் கூடுபாய்தல், மொழியிலும் பாணியிலும் புதுமை சேர்த்தல். கற்பனையோடு கருணை உணர்வு அல்லது அனுதாப உணர்வு மேலெழ எழுதுதல் என்று பலவாறு எடுத்துக்காட்டுகளுடன் சுவைபடச் சொல்லிக்கொண்டு போகிறார்.

ரொலான் பர்த் எழுத்தைக் கட்டுரை என்றும் படைப்பு என்றும் பிரிப்பதை எடுத்துக்காட்டுகிறார். கட்டுரை பெரிதும் மொழிக்குள் நின்று இயங்குவது. படைப்பெழுத்து மொழியைத் தாண்டிச்செல்ல முயல்வது. கட்டுரை நடை என்றால் படைப்பு நாட்டியம் என்று உணரவேண்டும் என்கிறார்.

மற்றொரு முக்கியமான கருத்தை எடுத்துரைக்கிறார். ஒரு படைப்பு என்பது தன்னோடு முடிந்து விடக் கூடிய ஒன்றல்ல. வாசகரின் வாசிப்பில் தான் அது நிறைவடைகிறது. அதாவது படைப்பைப் படைப்பாளி மட்டுமல்ல வாசகரும் சேர்ந்துதான் படைக்கிறார்கள். இதை உணர்ந்து எப்போதும் வாசகரோடு கூட்டணி அமைத்துக்கொள்ள வேண்டுமென்கிறார்.

தன்னிலை எடுத்துரைப்பு, படர்க்கை எடுத்துரைப்பு-ஆகியவை குறித்து அலசும் ஆசிரியர் இரண்டிலும் உள்ள சாதக பாதகங்களைப் பக்குவமாகப் பேசுகிறார். மேலும் படர்க்கை எடுத்துரைப்பினுள் கூடத் தான் எவ்வாறு தன்னிலை எடுத்துரைப்பைப் புகுத்தினேன் என்று அவர் பேசும்போது கதைசொல்லலின் நுட்பமும் கஷ்டமும் புரிகிறது. மேலும் உணர்ச்சிபூர்வமாகச் சொல்ல விரும்பும் எந்த எழுத்தாளரும் தன்னிலை எடுத்துரைப்பைத் தேர்ந்தெடுப்பர் என்று காஃப்கா சொல்லியுள்ளதையும் எடுத்துக்காட்டுகிறார்.

எழுத்தாளர்கள் பின்பற்ற வேண்டிய மற்றொரு கருத்தையும் நூலாசிரியர் நயம்படக் கூறுகிறார். அதாவது எந்த ஒரு படைப்பிற்கும் முதல் வாசகர் அந்தப் படைப்பாளிதான்.அது போலவே முதல் விமர்சகனாகவும் படைப்பாளியே செயல்பட வேண்டும் என்கிறார். வாசகரை ஈர்த்துத் தன் பிடிக்குள் இழுத்துப் போட்டு வெற்றிபெற வேண்டுமென்றால் ஈவிரக்கம் இல்லாமல் தன் எழுத்தைத்தானே விமர்சகனாக நின்று வாசித்துப் பிரதியை மாற்றி மாற்றி ஒழுங்குபடுத்தத் தயங்கக் கூடாது என்கிறார்.

இதற்கு மேல் ஒரு எடிட்டர் பார்வைக்கும் கொடுத்துச் செம்மை செய்ய வேண்டும் என்கிறார். தன்னுடைய முதல் நாவலான நீலக்கடல்-எடிட் செய்யப்பட்டு வந்திருந்தால் இன்னும் வீச்சாகத் தமிழ்ப்பரப்பில் பரவி இருக்குமென்றும் ஆதங்கப்படுவதன் மூலம் எந்த ஒரு எழுத்திற்கும் எடிட்டிங் எவ்வளவு முக்கியம் என்பதை வலுவாகச் சொல்லிவிடுகிறார்.

நீலக்கடல் | நாகரத்தினம் கிருஷ்ணா

நாவலில் மன நெகிழ்வைத் தரும் சம்பவங்கள் அவசியம் தேவை என்று சான்றுகளோடு பேசும் நூலாசிரியர், புத்திஜீவிகளுக்காக மட்டுமே எழுதப்படும் இறுக்கமான எழுத்துக்களில் கொஞ்சம் வெகுஜனத்தனமும் (உம்பர்ட்டோ இகோ போல) வெகுஜன எழுத்துக்களில் கொஞ்சம் புத்திஜீவித்தனமும் கலந்தால் அந்த எழுத்து மாபெரும்வெற்றிபெறும் என்று ஒரு மிகப்பெரிய ரகசியத்தை முன்வைக்கிறார்.

“பொதுவாக ஒரு நல்ல எழுத்தாளன் பிறருக்காக எழுதுவதில்லை. தன்னைச் சந்தோசப்படுத்திக் கொள்ளவே எழுதுகிறான் “என்று ஒரு மேற்கோளை எடுத்துக்காட்டும் கிருஷ்ணா மற்றொன்றையும் அதே நேரத்தில் வலியுறுத்துகிறார். எந்த ஒரு எழுத்தாளரும் தான் வாழுங்காலச் சமூகத்தின் பண்பாடு, புத்திக்கூர்மை, முரண், அரசு, சமூகம், சமயம், இவற்றின் கலவையால் நிகழும் நிகழ்வுகள் முதலிய அனைத்தையும் உள் வாங்கியவராக விளங்கவேண்டும் என்கிறார்.

பொதுவாக எழுத்தாளர்களைப்பற்றும் நோய்களெனச் சில இருக்கின்றன என்று விலங்குப் பிரியரான எழுத்தாளர் ரோஜெர் கூறுவதை எடுத்துக்காட்டுகிறார். மிகவும் ஆர்வம் தரத்தக்க இந்த இயலில் ரோஜெர் அந்த நோய்களாக மன அழுத்தம், சித்தபிரமை, தன்னிரக்கம், தலைப்பிடிப்பு, மேலும் இவை எல்லாம் கலந்த ஒரு கலவை நோய் எனப் பட்டியலிடுகிறார்..எனவே எழுத்துத் தொழிலுக்கு வந்தவர்கள் இந்த நோய்கள் குறித்து மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்கிறார். நமக்குள் தமிழ்ச் சூழலில் பல பேர் நினைவுக்கு வந்து போகிறார்கள்.

இந்த நூல் மற்றொரு முக்கியமான – விவாதத்திற்குரிய ஒரு கருத்தை முன்வைக்கிறது. அதாவது மேலை நாட்டில் எழுத்தாளராக மலர நினைப்பவர்கள் முறையாக மொழியில், தத்துவத்தில், ஊடகவியலில் உயர்கல்வி வரைப் படித்தறிந்தவர்களாகத் தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ளுகிறார்கள். அதனால் பெருந் சாதனைகளை உலக அளவில் அவர்களால் நிகழ்த்திக் காட்ட முடிகிறது. தமிழ்ச் சூழலில் அப்படி இல்லையே. ஜெயகாந்தன் போன்றோர் அப்படி மலர்ந்திருந்தால் இன்னும் எங்கேயோ போயிருப்பார்களே என்று தன் ஆதங்கத்தையும் முன்வைக்கிறார். இதில் பல விஷயங்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றன என்பது உண்மைதான் என்றாலும் கிருஷ்ணா கூறுவதைத் தமிழ் நவீன இலக்கிய உலகம் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றே சொல்லத் தோன்றுகிறது.

அமேசான் – கிண்டில் வெளியீடாக நூறு பக்கங்களுக்குள் வந்துள்ள இந்த நூலைத் தமிழில் இப்பொழுது எழுதிக் கொண்டிருக்கிற அனைவரும் ஒரு தடவையாவது வாசித்தால் தமிழ் எழுத்துலகத்திற்கு நல்லதாக அமையும்.

நாகரத்தினம் கிருஷ்ணா,

எழுத்தாளன் முகவரி,

(2020) அமேசான் – கிண்டில் வெளியீடு,

பக்:82. விலை ரூ 99. 

புத்தகம் வாங்க: https://www.amazon.iln/dp/B0882LVWMS/ref=cm_sw_r_wa_awdo_t1_kutSEbRZ14CB6

 

Show 2 Comments

2 Comments

  1. நா.வே.அருள்

    முனைவர் பஞ்சாங்கம் அவர்களின் நச் சென்று வந்திருக்கும் விமர்சனம். இந்த நூல் எழுத்தாளர்களுக்கான கையேடு என்பதில் ஐயமில்லை.

  2. ராமச்சந்திர வைத்தியநாத்

    அதாவது மேலை நாட்டில் எழுத்தாளராக மலர நினைப்பவர்கள் முறையாக மொழியில், தத்துவத்தில், ஊடகவியலில் உயர்கல்வி வரைப் படித்தறிந்தவர்களாகத் தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ளுகிறார்கள். அதனால் பெருந் சாதனைகளை உலக அளவில் அவர்களால் நிகழ்த்திக் காட்ட முடிகிறது.

    எனக்கு இவ்வரிகள் தெளிவாகவில்லை,
    மகத்தான சோசிலிச படைப்புகளை அளித்த சோலக்கோவ் ஐத்மாத்தவ்.குப்ரின். கார்க்கி ஆகியோரைத் தவிர்த்து
    என்நினைவுக்கு உடனடியாக வரக்கூடிய பிர்சிக். உசைனி. அப்டைக்.மெயிலர் . காப்கா. கேட்ச் 22 எழுதிய கெல்லர் இன்னும் பலரை குறிப்பிட முடியும், அவர்கள்
    இந்தப் பட்டியலுக்கு வரமாட்டார்கள், ஆயின் சாதனைகளை செய்தவர்கள்,
    இதையும் கணக்கில் எடுத்துக் கொண்டு வரையறை செய்ய வேண்டியிருக்கிறது,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *