நூல் வடிவம் பெற்றால்தான் ஒரு வெற்றிகரமான தொடரை விமர்சனம் செய்யலாம் என்ற விதி வகுக்கப்பட்டு இருக்கிறதா என்ன?
70அத்தியாயம் வரை வாசகரிடையே பெரும் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி, இன்னும் தொடர இருக்கும் எஸ் வி வி யின் ‘ இசை வாழ்க்கை’ தொடர் பற்றி என் மனதிற்குள் இன்ப மழை பொழியும் உணர்வுகளுக்கு எழுத்துவடிவம் கொடுக்கலாம் என்ற எண்ணம் பல நாட்கள் என்னை இம்சை படுத்தி இருக்கிறது. அந்த தருணம் இன்று அமைந்ததில், மகிழ்கிறேன்.

‘ ஈதல் இசைபட வாழ்தல்’ என்றார்கள். ஈகை செய்கிறார்களோ இல்லையோ இசை பட வாழ்கிறார்கள் என்று நம்பலாம். இந்தத் தொடருக்குக் கிடைத்திருக்கும் ஆதரவு அதை பறைசாற்றுகிறது. இசை ஞானி இளையராஜா வின் இசை நிகழ்ச்சிக்கு ஆங்காங்கே மக்கள் தன் எழுச்சியாகக் கூடும் கூட்டங்கள் இசைக்குள்ள வலிமையைக் காட்டுகிறதில்லையா?

இசையின் வகைகளில் செவ்வியல் இசை, மெல்லிசை மற்றும் நாட்டுப்புற இசை இவை எல்லாமே ஒவ்வொரு இதயங்களையும் அபகரிக்க்கவே மனிதன் என்னும் பிரமனால் படைக்கப் பட்டிருக்கிறது போலும். அறிவியலின் அபரிமிதமான வளர்ச்சி, கையடக்க கருவியில் எந்தப் பாடலையும், எந்த நேரத்திலும் கேட்டு அதை யாருக்கு வேண்டுமானாலும் பகிர்ந்து மகிழும் வாய்ப்பை தந்திருக்கிறது. வேறு எந்த இசையையும் விடவும் மெல்லிசையாம் திரைப் பாடல்களின் வீச்சும், ஆழமும் மிகப் பெரியது. இத்தகைய பாடல்கள் பற்றியும், அதன் மெட்டுக்கள்; பாடல் வரிகள்; பாடகர்; இசையமைப்பாளர்; இதை எல்லாம் நுட்பமாய் அறிந்து காத்திரமான தனது கவிதை நடையால் நம்மை கட்டிப் போட்டவர் நம் எஸ் வி வேணுகோபால்அவர்கள்.

ஒவ்வொரு ‘ இசை வாழ்க்கைக்கும்’ அவர் வைக்கும் தலைப்பே ஒரு தனி ரசனையோடு இருக்கும்.

‘ இசைபாடலாய் உரையாடல்” உடலும் உள்ளமும் இசைத்தானா?’

இசையின் திசை எல்லாம் நாமின்றி வேறில்லை’ இன்னும் எத்தனையோ சொல்லலாம். ஒவ்வொரு ‘ இசை வாழ்க்கை’யிலும் அவர் குறிப்பிடும் பாடலை நான் குழலில் வாசித்து அனுப்பி, என்னுடைய நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து வந்திருக்கிறேன். இசைப் பாடல் பிரபலமடைய முதலில் மெட்டு தான் முக்கியமாகிறது. பாடல் வரிகள் தெரியாத ஒருவர் ‘ ஹம்’ பண்ணுவது மூலம் பாடலின் சுகத்தை அனுபவிக்க முடியும். மெட்டை அனுபவிக்கும் போது வரிகள் பற்றிய ஞாபகமே எனக்கெல்லாம் எழுவதில்லை. ஆனால் எஸ் வி வி ஒரு பாடலை
கேட்கும் மாத்திரத்தில் மெட்டையும், பாடல் வரிகளையும் பாடல் பாடப்பட்ட விதத்தையும் விளக்கமாக எழுதுகிறார். படித்து நான் வியப்பதுண்டு. ஆஹா இந்தப் பாடலில் இவ்வளவு அற்புதமான வரிகளா? என்று.

பாடகர் பாடிய பாடலை படம் பிடித்ததைப் போலிருக்கும் அவரின் வர்ணனைகள். ‘ மனதில் உறுதி வேண்டும்’ திரைப் படத்தில்
‘கண்ணா வருவாயா?’ பாடல் பற்றி இப்படி எழுதுகிறார். ‘பல்லவியில் ஒவ்வொரு சொல்லுக்கும் அத்தனை சங்கதிகள்……அதிலும்’மாலை மலர்ச்சோ லை’என்ற இரண்டு சொற்களில் அத்தனை மயக்கவிசைகள் முடுக்குவார் சித்ரா ‘நதி…. யோரம்’அந்த ‘யோ…..’ அய்யோ! எத்தனை அழகாகத் கொடுப்பார்.’நடந்து’என்பதில் அந்த உகரம் பல்லவியின் சிகரம்’

இசை ஆர்வம் உள்ளவர்’ நன்றாகப் பாடக்கூடியவர். இசை கற்றவரில்லை. ஆனால் கேள்வி ஞானத்தையே கேள்வி கேட்பவர். இசை கருவிகளின் ஓசைகளைக் கேட்டே பாடலில் இன்னின்ன இசை கருவிகள் உபயோகப்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதை ‘இசை வாழ்க்கையில் ‘எழுதும் வல்லவர். அவரின் கவிதைகளில் கூட இந்தளவிற்குச் சொல்லாடல், சொற்சுவை பொருட்சுவைகளை நான் கண்டதில்லை. அத்தனை சுவை இவரின் எழுத்து நடை. இத்தொடர் நூல் வடிவம் பெறவேண்டும் என்ற விரும்புகிறவர்களில் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களும் ஒருவராக இருக்கிறாரென்றால் தொடரின் மேன்மை புரியும். 70 வது அத்தியாயம் வரை அவர் எழுதியது எத்தனையோ… அதில் சிறு துரும்பை மட்டும் நான் கிள்ளிப் போட்டிருக்கிறேன். இசை இருக்கும் வரைதான் இந்த உலகம்.

-ச.லிங்க ராசு

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



3 thoughts on “நூல் விமர்சனம்: ‘எஸ் வி வேணுகோபாலின்’இசை வாழ்க்கை – ச.லிங்க ராசு”
  1. விளக்கம் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்!
    மகாத்மா காந்தி சொல்வது போல ‘படிக்கும் நூல்கள் மனதில் நல்லுணர்வை ஏற்படுத்த வேண்டும் ” என்பது போல இந்த புத்தகம் இருக்கும் என்ற உறுதியை கொடுக்கிறது.

  2. சிறப்பான நூலினை பற்றிய கருத்து. ஒவ்வொரு கவிஞரும் ஒரு உணர்வை வெளிப்படுத்த உண்மை உணர்வுகளை பிரதிபலிக்கிறார்கள். உமாதேவி அரசகுமார் அவர்களுக்கு பாராட்டுகள். காலம் எல்லாவற்றையும் ஆற்றும். அறிமுகம் செய்த சங்கர் ஐயா அவர்களுக்கு நன்றி.” Poetic feathers ” the reality of experiences and expressions of life. இரா.காயத்ரி, தருமபுரி மாவட்டம்

  3. லிங்கராசு அவர்கள் சிறப்பாக எஸ் வி வி அவரது படைப்புக்களை விமர்சித்துள்ளது மிகச்சிறப்பு. ஐம்பது அத்தியாயம் முதல் தொகுதியாக வெளியிட்டால் நன்று. மகிழ்வுடன் ந. மனோகரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *