தணியாத கவிப்பற்றும்
தாய்மொழியாம் தமிழ் பற்றும்
சிந்தையெலாம் முற்போக்கும்
சீர்திருத்தத் தொலைநோக்கும்
சொந்தமென வந்தெனக்குள்
சந்தனமாய் மணப்பதற்கும்
பணியினில் நேர்மை
பழகுவதில் இனிமை
சேர்வதற்கும்
சொல்லிக் கொடுத்தவர்
என் தந்தை.
அவரின் வாழ்க்கைப் பாதையில் ஏற்பட்ட உள்ளத்து உணர்வுகள் உதட்டசைத்தபோது எழுந்த சொற்களின் அணி வகுப்பே இக்கவிதைத் தொகுப்பு
ஆலய வழியே!
இயற்கை பாடினால்!
சமுதாய வீதியிலே!
கதை கேட்க வாரீர்!
என்னும் பகுதித் தலைப்புகளில்
60 மரபுக் கவிதைகளை பல்வேறு தலைப்புகளில் வழங்கியுள்ளார்.
மேலும்
வெண்பா வனம்
என 61 தலைப்புகளில்
அமுத சுரபி இலக்கிய மாத இதழில் கொடுக்கப்பட்ட ஈற்றடிக்கு ஏற்ப எழுதப்பட்ட வெண்பாக்கள், வாழ்வில் உள்ளத்தை தைத்த நிகழ்வுகளைப் பாடிய வெண்பாக்களும்
இதில் இடம் பிடித்துள்ளன.
அத்தனையும் சொல்ல ஆசையிருந்தாலும்
நீளம்கருதி சிற்சில சொல்வேன்
ஆலய வழியே!
சக்திக் கனல்
தலைப்பில்
வாழும் உடலினில் மூச்சாவாள்! -அவள்
வண்ணத் தமிழ்நடை பேச்சாவாள்!
எனத் தொடங்கி
பரவும்அவள் பெயர் சக்தியன்றோ! -அன்னைப்
பதம் பணிந் திடுவோம்
என முடிக்கையில்
எங்கெங்கு காணினும் சக்தியடா எனும் கருத்து ஒளிர்கிறது
இறைவனைத்தேடி
தலைப்பில்
நல்லோர் இரக்கம் அவன் குணமே
நலிந்தார் நலிவும் அவனுரிமை
இல்லார் ஏக்கம் அவன் செயலே!
இனியவர் அன்பும், விளைநிலத்தில்
வல்லார் உழைப்பும், வழிநடைக்கு
வசதி பெருக்கிச் சாலையிட
பல்லோர் சிந்தும் வியர்வையெல்லாம்
பரமன் உயிர்ப்பே அறிகிலையோ!
எனப் பாடும்போது
வள்ளுவரும், வள்ளலாரும், தாயுமானவரும், தாகூரும் வகுத்தளித்த ஆன்மீகச் சிந்தனைகளை பந்தி வைக்கிறார்.
இயற்கை பாடினால்
பகுதியில்
உன்பெருமை பாடவா?
தலைப்பில்
இனிய தமிழ் புலவரிடையே -காதல்
எழில்பாட கருவாயினாய் – மதுரை
இறைவனவன் நேர் நின்று
புலவரிடம் வாதாடப்
பொருளாகி புகழ்மேவினாய்! -கீரன்
புகழ் மேவத் துணையாகினாய்!
எனவும்
பாரதம், சாணக்கியர், கவரி மா உட்படப் பல்வேறு சம்பவங்களையும், உண்மைகளையும் பாடு பொருளாக்கி தலையின் இழிந்த
மயிரின் பெருமையை
மாந்தர்க்குரைப்பது அழகு.
அணைத்தவள் யாரோ?
தலைப்பில்
ஏழை, பணக் காரனென்ற பேதமில்லை!
எதிரியிவன் நண்பனென்ற எண்ணமில்லை!
கோழையிவன் வீரனென்ற எண்ணமேதும்
கொண்டதில்லை! அன்னவட்குப் பெருமையெல்லாம்
மேழிபிடிப் போன்முதலாய் வீரம்காட்டும்
மேதினியின் மன்னர்வரை உயிரனைத்தும்
ஆழிசூழ் உலகிலவள் அடிமையென்னும்
ஆணவத்திலே எழுந்த எண்ணமொன்றே!
எனப் பாடுகிற பாவையவள்
யாரெனத் தெரிகிறதா?
உறக்க தேவியைத்தான் பாடுபொருளாக்கி நகைக்க வைக்கிறார்.
சமுதாய வீதியிலே
பகுதியில்
பெண்ணுரிமை எனும் தலைப்பில்
‘வாழ்புவியும் பெண்ணென்றீர் ‘
எனத்தொடங்கி
வாழவுமைப் படைத்தளித்த அன்னை, அன்பை
வாரியுமக்கீந்த உடன்பிறப்பு, இன்பம்
சூழ உமைத் தொட்டணைத்த மங்கை, பாசம்
சூழ்ந்தொலிக்கும் மழலைமகள் இவர்களெலாம்
வாழ்வளிக்கும் பெண்களன்றோ? தெய்வமன்றோ?
எனத் தொடர்ந்து
அழிந்திடுவீர் வையகத்தீர் அணங்கின் நீதி
அழித்திடவே நீர்முயன்றால்! அன்பு கொள்வீர்
எழுந்திடுவீர் இதுகாறும் நாம்படைத்த
இருநீதி இன்னலெலாம் களைவதற்கே!
என முடிக்கையில்
முண்டாசுக் கவிஞன் பாரதியையும்
புரட்சிக் கவிஞன் பாரதிதாசனையும்
கண்முன் நிறுத்துகிறார்
அச்சம் தவிர்
எனும் தலைப்பில் உலகில் வாழ,
அச்சமிலா உலகு படைக்க ஆயிரம் விதிமுறைகள்
இச்சகம் தன்னில் இயற்றிய பாரதியின் ஞான முழக்கங்ளை கவிதையாக்கியிருக்கிறார்.
அந்தோ நம்பிக்கையே
எனும் தலைப்பில்
சமுதாயச் சந்தையிலே
மூடத்தனங்களுக்கு முதுகெலும்பில் தொட்டில்கட்டி
கேடத்தனைக்குள்ளும் கிழடுதட்டிப் போகின்ற மூடப் பழக்கங்ளைச் சாடுகிறார்.
கவிதைக்கு ஏன் தலைப்பு?
எனும் தலைப்பில்
கொல்லர், உழவர், கொத்தனார், தொழிலாளர், சிற்பிகள் எனச் சமுதாயக் கோட்டைக்குச் சரித்திரத்து கதவுகளாய் இருக்கும் தொழிலாளர் மேன்மையைப் பாடுவதோடு
பல்லுலகும் பலஉயிரும் படைத்தளித்துப் பரிவுடனே காத்து நிற்கும் பேருழைப்பில்
எல்லையறு பரம்பொருளின் கருவியாக
இவ்வுலகச் சமுதாயம் காத்து நிற்கும்
தொல்லையினை ஏற்றிருக்கும் தோழர் தம்மைத்
தொடருவதோ வறுமையிவண்? தோள்உயர்த்தி
வல்லவர்கள் வாருங்கள்! நீங்கள் இன்று
வழங்குகின்ற நீதிக்கு (கவிதைக்கு) ஏன் தலைப்பு?
என மே தின அறைகூவல் விடுக்கிறார்.
கதை கேட்க வாரீர்
எனும் பகுதியில்
அன்னை சினந்தாள் என
நதியின் வரலாறை க(வி)தையாக்கியிருக்கிறார்.
வெண்பா வனம்
பாழ்த்த அரசியலும் பண்பிலா வன்முறையும்
வீழ்த்த முடியா தொருநாளும் – காழ்ப்புடைய
பொல்லார் பகையும் புறங்காணும் பாரதம்
நல்லார் குடியிருந்த நாடு
என தாய்நாட்டையும்
நன்னூல்தொல் காப்பியமும் நந்திக் கலம்பகமும்
தொன்னூல் சிலம்பும் தொகைநூலும் – பின்னாளில்
பக்தி இலக்கியமும் பாரதியின் தீந்மிழும்
தித்திக்கும் மாம்பழத் தேன்
என மொழியின் சிறப்பையும்
ஊழல் பெருகி உருக்குலையும் பாரதத்தை
வாழ்விக்க வாராயோ, வாலிபமே- தாழ்வகற்றி
சாந்திபெற நேர்மைச் சரித்திரத்தை மீட்டெடுக்க
காந்திவழி நாம்நடப்போம் வா!
என காந்தியின் பெருமையையும்
சுற்றம் வருந்தித் துயர்ப்படினும், அன்புமனை
முற்றும் இகழ்ந்து முகஞ்சுடினும்- கொற்றம்
குறையா யொறுக்கக் குறித்திடினும், குற்றம்
புரியா நிலையே அருள்
என நேர்மை வழி இறைவேட்டலையும்
இளையோர்க்கு
வெண்பா வழி உரைக்கின்றார்.
பத்துமணித் துளிக்குள் பாற்கடலை வற்றப் பருகும் சிறுகுருவி உண்டா?
ஒரு குத்து மதிப்பாக ஆற்று மணலெண்ணி குவித்த நபரெவரும் உண்டா?
சொன்னவை சில
சொல்லாதவைப் பல
மொத்தத்தில் இந்நூல் 305 பக்கங்களில்
எந்தை எனக்களித்த அறிவுசார் சொத்து.
பெற்றமகன் கற்றோரின் பேரவையில் பாராட்டுப்
பெற்றநாள் காணப் பெரிதுழைத்த பெற்றோரைச்
சிந்தையில் வைத்துத் தினம்தொழும் மைந்தர்க்கு
தந்தைசொல் மந்திரமே தான்!
தோழமையுடன்
சீனி.சந்திரசேகரன்
நடந்து வந்த பாதையிலே
கவிதை நூல்
மல்லை அன்பு மணி

