நூல் அறிமுகம்: ஹாலாஸ்யனின் “எக்காலம்” – அன்பூ எக்காலம்
ஹாலாஸ்யன்
பார்வதி பதிப்பகம்
இரண்டாம் பதிப்பு 2019
பக்கங்கள் 116
விலை 100
பள்ளிக் காலத்தில் பலரையும் அலறவைக்கும் அறிவியலையும், வாழ்க்கைப் பாடத்தில் சிந்திக்க வைக்கும்  தத்துவங்களையும்…
காதலின் நுண்ணுணர்வுகளுக்குள் புகுத்தி… கவிதையாய்ச் சமைத்துத் தருகையில்…
புரியாததும் தெரியாததுமாய் வெகு அழகாய் மட்டுப்படுதலில்… கசப்பானதொரு மருந்தினைத் தேனில் குழைத்தூட்டும் அன்னையின் கைங்கர்யத்தை உணரவைக்கிறார் கவிஞர் ஹாலாஸ்யன்.
ஒவ்வொரு தலைப்பின் கீழும்
ஒரு அறிவியல் தகவலொன்றையோ…
தத்துவமொன்றையோ
கவிதையுருவில் காதலாய்க் கைசேர்க்கும் விதத்தில்… இதுவொரு
முற்றிலும் மாறுபட்ட அனுபவமாக
நமக்குள் ஒரு மெல்லிய நுண் அலையினை… அதிர்வினை தொட்டெழுப்பிச் செல்கிறது.
இதுவரை தெரிந்து கொள்ளாத பல அறிவியல் உண்மைகளையும்
பூரணமாக்கி… மேல்மாவுக்கு காதலைப் பிசைந்தெடுத்து கவிதைக் கொழுக்கட்டையாக்கி…
தித்திப்பாய்ப் படையலிடுகிறார் கவிஞர்.
அந்த வகையில் வாசிப்போருக்கு
அறுசுவை விருந்து தான் #எக்காலம்
என்றால்… அதில் மிகையேதுமில்லை என்பதை வாசித்தலில் உணரலாம்.
நின்றுபோன ஒரு காதலின் வடிகாலாய்த் தான்…
தான் கவியெழுதத் தொடங்கியதாய்க் கூறும் கவிஞர்…
இதில் வடித்திருக்கும் அத்தனை கவிதைகளிலும் காதலாக்கித் தந்திருக்கும் அந்த முகம் தெரியா சகியின் மீது….
“இவன் இழப்பில் நீ இழந்தது கொஞ்சநஞ்சமல்ல…
உன் இழப்பில் இவன் பெற்றதும்
கொஞ்சநஞ்சமல்ல”… இப்படித்தான் தோன்றுகிறது.
மொத்தம் 58 தலைப்புகளில்
116 பக்கங்களில் வாசிப்பின் பசியாறக் கிடைக்கும் இந்த #எக்காலம் எவரும் தவறவிடக்கூடாததொரு புத்தகம்.
வாய்ப்புக் கிடைப்பின் வாசித்துப் பாருங்கள் நண்பர்களே. நிச்சயம் ஒரு மாறுபட்ட அனுபவத்தினைச் சுவைப்பீர்கள்.
உள்ளங்கைக்குள் குழம்பூற்றிச் சோதிக்கும் சுவையைப் போல… சில தலைப்புகளை இங்கே தந்திருக்கிறேன்… சுவைத்துப் பாருங்கள்..


எக்காலம்
இழுவிசைப் படகு அவள்
பல ஆயிரம் எடை கொண்ட ஒரு கப்பலை இழுத்து நிறுத்துவதற்கு…
தன் எடைக்கும் வெளிப்படுத்தும் குதிரை சக்திக்குமான விகிதம் அதிகமாக இருக்குமொரு இழுவிசைப்படகின் அத்தியாவசியத்தைக் கூறும் அறிவியலை…
துறைமுகத்தில் நுழைய முடியாது என்னை இழுத்துப் போய் நிறுத்தும் இழுவிசைப் படகாய் நீ ஆதல் எக்காலம் சகியென்று…
 காதலோடு தன் சகிக்கு இப்படிப் பொருத்துகிறார்…
/ அறைந்திழுக்கும் ஆழ்கடல் அலைகலத்தை மெல்லவே
துறைக்கிழுத்துப் போய்விடும் விசைமிகுந்த படகென பிறைநுதற்றுப் பெண்பிளாய் பெருங்கலமென் வாழ்வினை
முறைப்படிநீ இழுத்துபோய் நிறுவலெந்தக் காலமோ/
சீட்டாட்டச் சீரழகி
பெரிய விசயங்களல்லாது… வாழ்வின் மீச்சிறு விசயங்களில் தலைகாட்டிச் சிரிக்கிறது கணிதத்தின் ஆச்சரியம். ஒவ்வொரு முறை சீட்டுக்கட்டைக் குலுக்குகையிலும்
சரித்திரம் இதுவரை காணாததொரு புத்தம்புது சீட்டு வரிசை அமைதலான ஒரு சுவாரசியத்தை….
நித்தமொரு அழகாய் என் வாழ்வில் நீ இருத்தல் எக்காலம் சகியென்று
இப்படிப் பொருத்துகிறார்… காதலுக்குள்…
/ கத்தைப் பணம்புரளும் சீட்டாட்டக் குலுக்கலினில் புத்தம் புதுவரிசை பெறுதற்போல், உடனின்று நத்தை எனப்பொழுது நகர்த்துகிற நங்காஅய்
நித்தம் புதுவனப்போ(டு) உடனிருத்தல் எக்காலம்/
பல்லாங்குழிப் பாவை
வெறுங்குழி துடைத்துப் பாண்டி அள்ளிக்கொள்ளும் பல்லாங்குழியின் கணக்கீட்டை….
வெறுங்குழியாய்ப் பசலை துடைத்துப் பாண்டியாயுனை அள்ளிக் கொள்வதெக்காலம் சகியென்று… அத்தனை அழகாய்க் காதலோடு நெய்து தருதலில்
நெகிழ்கிறது நம் இதயம்…
/ குறுங்கத்திச் சுழியதிரச் சிரிப்பினிலே கட்டுண்டு உறங்காமல் தினமென்னை உருளச்செய் பெண்பிள்ளாய் வெறுங்குழியாய் வண்பசலை துடைத்துன்னைப் பாண்டியென நறுங்குழலீ நானடையும் நாள்வருவ தெக்காலம்/


காட்டர் பின் காரிகை
சர் ருடால்ஃப் காட்டர் என்பரால் கண்டுபிடிக்கப்பட்ட…
அசைகிற, அதிர்வு ஏற்படுத்தும் பொருள்களிலுள்ள மரைகள் கழன்றுவிடாது பாதுகாக்கும் கம்பியான காட்டர் பின்(மின்விசிறி மாட்டுவதற்கு)…னின் அத்தியாவசியத்தை…
அப்படியொரு கம்பியாய் எனை விலகியோடாது நிறுத்த வருதல் எக்காலம் சகியென்று… எப்படிக் காதலாக்குகிறார் பாருங்கள்…
/ தடதடத்த படியோடும் பொறிகளிலே மரையெல்லாம் இடத்திருந்து கழலாமல் விலகாமல் இருப்பதற்கென்(று) இடுபொறியாய் என்வாழ்வு விலகாமல் இருத்தத்தான் தடந்தோளாய் நீவந்து திகழ்ந்திடுதல் எக்காலம்/
தேன்மொழியாளும் தத்துவமும்
ஒரு விசயத்தை நம்புபவன் தான் அதை நிறுவ வேண்டுமேயன்றி…
நம்பாதவருக்கு அதை நிறுவும் சுமையில்லை எனும் தத்துவத்தை…
இப்படியாகக் காதலை நித்தம் நித்தம்
நிறுவ வேண்டிய தேவையை ஏற்றுக்கொண்டு பளு நீக்குதல் எக்காலம் சகியென்று…
காதலுக்குள் நோகாமல் திணிக்கிறார் கவிஞர்…இப்படி..
/ குறுக்கு வினாக்கேள் கண்ணினால் நெஞ்சில் உறுத்தி உவகை தருகிற பிள்ளாய் முறுவல் வரச்செய் மையலை நித்தம் நிறுவும் பளுவை நீக்கலெக் காலம்/
ஆக்கக் குறுக்கீடும் அணங்கும்
இரு அலைகள் சந்திக்கையில் இரண்டும் ஒன்றோடொன்று ஊடாடிப் பெரிதாக மாறும் அல்லது இது அதை எதிர்த்துச் சமன் செய்துவிடக்கூடிய….  ஆக்கக் குறுக்கீடு, அழிவுக் குறியீடு என்பதனை…
என் வாழ்வலையோடு பொருந்தி ஆக்கக் குறுக்கீடாய் என் வாழ்வில் ஆகுதல் எக்காலமென்று…
காதலோடு இழுத்துவைத்துக் கவியாற்றுகிறார்… இப்படி…
/ தேக்கு நீரெறிகல் துவக்குகிற அலைமுகங்கள் போக்கில் பொருதியவை பெருகற்போல் நெஞ்சத்தில் நீக்க மறநீறை நங்காஅய் என்வாழ்வில் ஆக்கக் குறுக்கீடாய் ஆகிடுதல் எக்காலம்/
பூனைப்பிடி
வாயில் கவ்விக்கொண்ட தன் குருளையோடு( குட்டி) பூனை… மரத்துக்கு மரம் ஏறும் தாவும் ஓடும்..
எனினும்.. அந்தக் கவ்வுதலில் குட்டிக்கு ஒரு சேதாரமும் இருக்காது எனபதனை…
சேதாரமில்லாது குரங்கொன்று
தன் குருவளைக் கவ்விச் சுமத்தலாய்..
என்னை நீ பதமாய்ச் சுமந்து திரிதல்
எக்காலம் சகியென்ற வரிகளினூடாக
நம்மை வசியம் செய்கிறார்… இப்படி…
/ கடிவனக் குரங்கின் குட்டி கெட்டியாய் தாய்பற் றல்போல் கடிமனம் உன்னைப் பற்றி அடிக்கடி அயர்ந்து போகும் கடிபடா வாறேத் தான்கொள் குருளையைப் பற்றும் புலியாய் மடவரல் மாதே யெந்தன் மனங்கொளும் நாளெக் காலம்/


போர் செய்தல்
போர்க்களத்தின் காட்சிகளை நிகழ்வுகளைக் கவனிக்கும் வசதியாக…போர் நடக்கும் தருணத்தில் அதற்கான அரண்களும் வியூகங்களுமாகப் போர்த்தளத்தின் கோட்டைகள் மலைமேல்..உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கும்.
இதை அப்படியே காதலுக்கு எப்படிப் பொருத்துகிறார் பாருங்கள்…
/ நாடு காக்கின்ற தானையது எல்லையிலே மேடு நிலமிருந்து முழுவதையும் காணற்போல் பாடல் பலகொள்ளும் பேரழகை அருகிருந்து பாடி அமைத்தேநான் பார்த்திடுதல் எக்காலம்/
அப்படி உன்னழகை மொத்தமுமாய் நான் காணும் நிலைவருதல் எக்காலம் சகியென்று கூறும் கலிவிருத்தத்தில்… காதல் களிப்பில் கட்டிப்போட்டுவிடுகிறார் நம் மனதை.
அடிவழித்த அடிசிலாய் வா
குழந்தைக்குச் சோறூட்டும் போது… கடைசியாய் ஊட்டிய பாத்திரத்தை நான்கு விரல்களால் வழித்தெடுத்து
அதை லாவகமாகக் கட்டை விரலுக்கு
நகர்த்தியூட்டும் அந்தக் கடைசித் துளியூட்டலின் நிறைவை…
/ வடிவினால் வனப்பால் நித்தம் வெள்ளமாய்ச் சொற்கள் பொங்கி முடிவிலாக் கவிகள் தந்து மனந்தனில் நிறைந்த மாதே படிநிறைச் சோறுண் டாலும் பாங்குற நாவில் நிற்கும் அடிவழிச் சோறா யுன்னை அடைந்திடும் நாளெக் காலம்/
அந்த அடிவழிச் சோறாயென் வாழ்விற்கு  நீ நிறைவாதல் எக்காலம் சகியென்ற வரிகளை…
வாசிப்போருக்கு அடிவழிச் சோறாக்கி
அள்ளியூட்டுதலில் …
நிறைகிறது வாசிப்பின் பசியேறித் தவிக்கும் நம் மனமும்.
அரசியாய் ஆக வா
போர்த் திட்டமிடுதலையொத்த சதுரங்க விளையாட்டில்… எல்லாத் திக்குகளிலும் முன்னும் பின்னுமாய் நினைத்த தொலைவு ஊடுறுவிச் செல்லும் வல்லமையுடையது அரசி காய்… என்னும் சுவாரசியத்தை…
/ கட்டத்துள் காய்நகர்த்தும் ஆட்டத்துள் காலாட்காய் முட்டுமரண் முறிப்பதனால் முகிழ்ந்தரசி யாதற்போல் வெட்டியரண் வீழ்த்திட்ட் நங்காய்நீ அரசியென கிட்டிப்பின் உன்னோடு களித்திருத்தல் எக்காலம்/
இப்படியாய்.. என் வாழ்வில் முழுக்க முழுக்க ஊடுருவி எனக்கு நீ அரசியாதல் எக்காலம் சகியென்று சதுரங்கத்தின் அரசியைச் சகியோடு பின்னுகிற பாங்கில்…
உருகுகிறது நம் மனமும்.