மாயவரம்
பொதுவாக வரலாறு பற்றிய நமது புரிதல் கொஞ்சம் கோளாறாகத் தான் இருக்கிறது. வரலாறு என்பது பல நூற்றாண்டுகள் பழமையான விஷயங்களைப் பற்றிப் பேசும் ஒன்று என்பதாக நினைக்கிறோம். வரலாறு என்றால் டில்லி, பாடலிபுத்திரம், மதுரை, காஞ்சிபுரம், மாமல்லபுரம், அஜந்தா, எல்லோரா, ஹம்பி பற்றி எழுதுவது என்றுதான் நினைக்கிறோம். இப்போது சமீபகாலமாக பௌத்த, சமண குகைகள் இருக்கும் சிற்றூர்கள் பற்றி கொஞ்சம் லேசாக எழுதப்படுகின்றன. ஆனால் மனிதர்கள் வாழும் ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு வரலாறு இருக்கிறது. அந்த இடத்தின் ஒவ்வொரு தெருவிற்கும், ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு வரலாறு இருக்கிறது. அந்த இடத்தில் வளர்ந்த அல்லது அழிந்த கலைகள், கட்சிகள், இயக்கங்கள், சினிமா தியேட்டர்கள், வடைக்கடைகள் என்று ஒவ்வொன்றிற்கும் ஒரு வரலாறு இருக்கிறது. அந்த அடிப்படையில், தான் மிகவும் நேசித்த தனது சொந்த ஊரான மாயவரம் பற்றி சந்தியா நடராஜன் எழுதியிருக்கும் நூல்தான் மாயவரம்.
ஒரு படத்தில் சூரியாவை ஜோதிகா, “ஒரு மெக்கானிக்க மெக்கானிக்னு கூப்பிடாம வேற எப்படி கூப்பிடறது மெக்கானிக்?“ என்று கேட்பாள். அது போல் மாயவரம் பற்றிய நினைவுகளை மாயவரம் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்லி அழைப்பது? கனவில் சிக்கிய காந்த நகரம் என்பது மாதிரி ஏதாவது பெயர் வைக்காமல், நேரடியாக இப்படி மாயவரம் என்று பெயர் வைத்திருப்பதே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது !
மாயவரம் என்ற சிறு நகரம், அதன் கோவில்கள், ஆறு, தெருக்கள், பள்ளிகள், மருத்துவமனைகள். அரசியல் பிரமுகர்கள், கல்யாண மண்டபங்கள், சினிமா தியேட்டர்கள் என்று பலப் பல அம்சங்களையும் பேசும் அழகான கட்டுரைகள். ஒரு கட்டுரையை நூலாசிரியரின் மாமனாரும், மற்றொன்றை அவரது நண்பரும் எழுதியிருக்கிறார்கள். அவர்களும் நூலாசிரியரைப் போலவே அந்த ஊரின் மீது தீராத காதல் கொண்டவர்கள். இப்படிச் சொல்லிச் செல்லும் கட்டுரைகள் வழியே ஊரின் வரலாறு மட்டுமின்றி, ஒட்டு மொத்த தமிழ்நாட்டின் வரலாற்றின் பல்வேறு போக்குகளையும் காட்டுகிறார் நடராஜன்.
நான் ஒரு தகவல் கொண்டாடி என்பதை இந்தக் கட்டுரையின் வழியே மீண்டும் ஆயிரத்து முப்பத்தி மூன்றாவது முறையாகச் சொல்லிக் கொள்கிறேன். தகவல்களை நிறைய நிறைய சேகரித்து, அவை முழுவதையும் தேவை, தேவையின்மை கருதாமல் எழுதும் தாளில் கொட்டித் தீர்ப்பவர்களை எனக்குப் பிடிக்காது. மிக மிக அவசியமான தகவலைத் தருவது, சில சமயங்களில் மட்டும் தேவை கருதி என்று இல்லாமல், இலக்கிய நயம் கருதி ஒரு தகவலை போகிற போக்கில் போட்டு விடுவது என்று எழுதப்படுபவைதான் எனக்குப் பிடிக்கும். அந்த வகையில் இந்தப் புத்தகம் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது.
ஞானக்கூத்தன் மாயவரத்துக் கார்ர். அதை இப்படியே சொன்னால் ஒன்றும் தப்பில்லை தான். ஆனால், அப்படி எழுதுவது, நான் என் அலுவலகத்தில் எழுதி வைக்கும் ஆஃபீஸ் நோட் மாதிரி ஆகிவிடும். நடராஜன் சொல்வதைப் பாருங்கள் –
சின்னப் பாலத்திற்கு அருகில் ரங்கநாதர் படித்துறை. ஆற்றில் குளித்துவிட்டுப் படியேறி வந்தால் கல் மண்டபம். பின்னால் ஒரு திறந்த வெளி. அதற்கடுத்து நாலுகால் மண்டபம். இது வெறும் நான்கு இரும்பு தூண்கள் கொண்ட கூரை மண்டபம். அவ்வளவுதான். இந்தத் திறந்த வெளி மைதானத்தில்தான் அநேகமாகக் கவிஞர் ஞானக்கூத்தனின் கவிதையில் வரும் கமலா, சைச்கிள் ஓட்டி இருப்பாள்.
ஞானக்கூத்தன் மாயவரத்தில் வாழ்ந்தவர்.
ஆஹா… ஆ ஹா…
இப்படித்தான் ஓரிடத்தில் கல்கியின் கள்வனின் காதலி பற்றிய குறிப்பு வருகிறது. ந.முத்துசாமியின் ஊர் பற்றி சொல்லப்படுகிறது. காபி, பன்னீர் புகையிலை, மூக்குப்பொடி பற்றிய கட்டுரைகள் எல்லாம் பிரமாதம்.
புத்தகத்தில் காட்டப்படும் கால மாற்றம் மிக அற்புதமானது. அது வெறும் மாயவரத்தின் கால மாற்றம் மட்டுமல்ல. என் மதுரையின் கால மாற்றமும்தான். அதைப் படிக்கும் ஒவ்வொரு வாசகரின் இளமைக்கால ஊரின் காலமாற்றமும் தான். ஸ்டெப் கட்டிங் பற்றி ஒரு கட்டுரை, மாயவரம் வேதநாயகம் பிள்ளை பற்றிச் சொல்லும்போதே, எடின்பரோ நகரம் திரும்பிய இடமெல்லாம் இது வால்டர் ஸ்காட்டின் நகரம் என்று எழுதி வைத்துக் கொண்டாடுவதைச் சொல்வது, இதயத்தைத் தந்திடண்ணா என்ற கலைஞரின் கவிதையையும், வேதநாயகர் சுப்ரமணிய தேசிகருக்கு எழுதிய கவிதையையும் ஒப்பிடுவது, விஜய் ஆன்டனி வேதநாயகம் பிள்ளையின் கொள்ளுப் பேரன் என்று போகிற போக்கில் சொல்லிச் செல்வது, ஒருவரது பெயரைச் சொல்லும் போதே, இவரது முன்னோர்கள் சமணர்களாக இருந்திருக்க வேண்டும், இவர்களுக்கு பெயரில் நயினார் என்ற பின்னொட்டு இருந்திருக்கிறது என்று சொல்வது இப்படி நிறைய விஷயங்கள் என்னை மேலும் புதிய விஷயங்களைத் தேட வைக்கும் தூண்டுகோல்களாக இருக்கின்றன.
உள்ளூர் வரலாறு என்பது ஒருவகையில் இந்த நாட்டின் ஒட்டுமொத்த வரலாறுதான். தங்கராசு என்ற பெரியார் தொண்டர் பற்றிய கட்டுரையில் எஸ்.எம்.டி என்ற தனியார் பேருந்தில் அந்தக் காலத்தில் பிராமணர்களுக்கு மட்டுமே இருக்கைகள் இருந்தது பற்றியும், அதை எதிர்த்து தங்கராசு போராடியது பற்றியும் வருவது மாயவரத்தின் கதை மட்டுமா என்ன?
அதே போலத்தான் மாயவரத்தின் தெரு விளக்குகள் பற்றிய பத்தி. “பெட்ரோமாக்ஸ் லைட்டுகள் நார்வேயில் தயாரிக்கப்பட்டு இறக்குமதியானவை. வீடுகளில் விறகு அடுப்புகளுக்குப் பதில் கொரோசினில் எரியும் பம்ப் ஸ்டவ்கள் உபயோகத்திற்கு வந்தன. அவை சுவீடனில் தயாரிக்கப்பட்டவை. குழாய்க் குடிநீர் வரவில்லை. ஹேண்ட் பம்புகள், அடிபம்புகள் இருந்தன. அவற்றில் மேட் இன் இங்கிலாந்து என்று பொறிக்கப்பட்டிருக்கும். விவசாயத்திற்குப் பயன்படும் டீசல் என்ஜின்களும் இங்கிலாந்திலிருந்து கொண்டு வரப்பட்டவையே. சர்வம் ஐரோப்பிய மயம். எங்கும் பிரிட்டிஷ் காற்று. “

“ஆனால் அந்த பிரிட்டிஷ் காற்றுக்கு மத்தியில் சுதேசிக் காற்றும திராவிடக் காற்றும் சுழன்று சுழன்று அடித்தன.“
உலகமயம் ஏதோ மிகச் சமீபத்திய ஒரு விஷயமல்ல. அது காலம் காலமாக வேறு வேறு பெயர்களில் இருந்து கொண்டேதான் இருக்கிறது. அதை எதிர்க்கும் சக்திகளும் பலப் பல வடிவங்களில் எதிர்த்துக் கொண்டேதான் இருக்கின்றன என்று சொல்லாமல் சொல்லும் கட்டுரைகள் உண்டு.
பாதை தெரியுது பார் படத்தில் உதவி இயக்குனராக இருந்து மருத்துரானவரின் வீட்டிற்கு ஈழப் போராளிகள் பத்மநாபாவும், வரதராஜப் பெருமாளும் வந்து சென்றது, திராவிடர் கழக்க் கூட்டத்தின் ஊர்வலத்தில் எம்,ஆர். ராதா குதிரை மேல் அமர்ந்து வருவது எல்லாம் எல்லா ஊர்களிலும் நடக்கக் கூடியவையா என்ன?
ஒவ்வொரு ஊருக்கும் சில தனிச் சிறப்புகள், சில அருமையான பழம்நினைவுகள் இருக்கும். அவற்றை “எங்க காலத்துல எல்லாம் எப்படி இருக்கும் தெரியுமா?“ என்ற பெருசுகளின் புலம்பலாக இல்லாமல், ரசிக்க்க் கூஎடியதாய், சில வரிகளை வாசிக்கும் போது நின்று யோசிக்கக் கூடியதாய், சில சமயங்களில் லேசான புன்சிரிப்போடு அந்த வரிகளைத் திரும்ப வாசிக்கக் கூடியதாய் எழுதியிருக்கிறார் சந்தியா நடராஜன்.
நல்லதொரு வாசிப்பு அனுபவத்தைத் தந்ததற்காக அவருக்கு என் நன்றியும், வாழ்த்தும்….
மாயவரம் சில நினைவுகளும், சில நிகழ்வுகளும்
சந்தியா நடராஜன்
சந்தியா பதிப்பகம்

