PENALITY FOR PROGRESS
முனைவர். நீதியரசர் A.K.ராஜன்
வெளியீடு: யுனிவர்சிட்டி பிரஸ்
தயாரிப்பு: பாரதி புத்தகாலயம்
விலை : ரூ.130/-
புத்தகம் வாங்க க்ளிக் செய்க: https://thamizhbooks.com/product/penalty-for-progress-dr-justice-a-k-rajan-rs-130/
சென்னை உயர்நீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதியும், சட்ட அறிஞரும், சமூகநீதி கருத்துப் போராளியுமான டாக்டர். நீதியரசர். A.K.ராஜன் மருத்துவக் கல்வியில் அகில இந்திய இட ஒதுக்கீடு தொடர்பாக ஆங்கிலத்தில் ஒரு நூல் எழுதியிருக்கிறார். மருத்துவக் கல்வி மதிப்புமிக்க ஒரு கல்வியாக இருப்பதால், இட ஒதுக்கீடு அதில் எப்போதும் முக்கியத்துவம் பெறுகிறது. அதிலும் குறிப்பாக அகில இந்திய இட ஒதுக்கீடு தொடர்ந்து போராட்டக் களமாக இருக்கிறது. மருத்துவப் படிப்பில் அகில இந்திய இட ஒதுக்கீடு எப்படி ஏற்பட்டது? இந்த நூல் அதிலிருந்துதான் தொடங்குகிறது!
சில மாநிலங்களில் மருத்துவக் கல்லூரிகள் குறைவாக இருந்ததால் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வது மாணவர்களுக்குப் பெரும்பாடாய்ப் போனது. இதனால் ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் ஒரு ஏற்பாட்டிற்கு வழி வகுத்தது.அதன்படி எல்லா மாநிலங்களும் தங்கள் மாநிலத்தில் உள்ள மருத்துக் கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களில் 15 விழுக்காட்டை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இதுதான் அகில இந்திய ஒதுக்கீடு என்று அழக்கப்பட்டது. அகில இந்திய ஒதுக்கீட்டில் பட்டியல் சாதியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட போதும், இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. மண்டல் கமிஷன் வழக்கிற்குப்பின் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27% விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. அதாவது இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. இப்போது இது சம்பந்தமான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டு தீர்ப்பு வந்திருக்கிறது. அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும். என்றும், எவ்வளவு தர வேண்டும் என்பனவற்றையும் மற்றும் அவை சார்ந்தவைகளையும் தீர்மானிக்க ஒரு குழு அமைக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நீதியரசர் A.K.ராஜன் தன்னுடைய நூலில் ஒரு முக்கியமான சட்டப் பிரச்சினையை எழுப்புகிறார். அகில இந்திய ஒதுக்கீடு என்பதே தவறானது என்கிறார். அகில இந்திய ஒதுக்கீடு என்பதே உச்ச நீதிமன்றத்தால் அரசமைப்புச்சட்ட 142வது கூறின் கீழ் பிறப்பிக்கப்பட்டது. இந்தக் கூறின் கீழ் பிறப்பிக்கப்படும் ஆணை தற்காலிகமானதுதான். இந்தப் பிரச்சினை சம்பந்தமாக நாடாளுமன்றம் சட்டம் இயற்றும்வரைதான் இந்த ஆணை பயன்படும். சட்டம் இயற்றப்பட்ட பின் அச்சட்டமே அப்பிரச்சினையைப் பார்த்துக் கொள்ளும். உச்ச நீதிமன்றத்தின் இந்த ஆணைக்குப் பிறகு இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் இயற்றப்பட்டது.

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை பற்றி இந்த சட்டத்தில் பேசப்பட்டுள்ளது. எனவே உச்ச நீதிமன்றத்தின் முந்தைய ஆணை பயனற்றதாகிவிட்டது. மேலும் மருத்துவ கவுன்சில் சட்டத்திற்குப் பிறகு இப்போது தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் வந்துவிட்டது. இனி இந்தச் சட்டம் தான் இட ஒதுக்கீட்டை ஒழுங்கு படுத்த வேண்டுமே தவிர தற்காலிகமாகப் போடப்பட்ட உச்ச நீதிமன்ற ஆணை அல்ல எங்கிறார் நீதியரசர் A.K.ராஜன் ஆனால் அகில இந்திய ஒதுக்கீடு வழக்கில் நீதியரசர் சொல்லும் நிலையை எடுத்து வழக்கு நடத்தப்படவில்லை. எதிர் காலத்தில் இந்த நிலை எடுத்து புதிய வழக்கு வருவதற்கு வாய்ப்பு உண்டு.
அகில இந்திய ஒதுக்கீடு சம்பந்தமான வழக்குகளை எல்லாம் தொகுத்து, அவற்றை இணைப்பாகச் சேர்த்திருக்கிறார் ஆசிரியர். உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை கடும் விமர்சனத்திற்கும் உட்படுத்தியிருக்கிறார் உச்ச நீதிமன்ற ஐந்து நீதிபதிகள் அடங்கிய தீர்ப்பைப் (D.P.ஜோஷி வழக்கு) பின்பற்றாமல், மாறுபட்ட தீர்ப்பை மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு எடுத்ததையும் சுட்டிக் காட்டியிருக்கிறார். (டாக்டர் பிரதீப் ஜெயின் வழக்கு) அந்த வழக்கிலும் மூன்று நீதிபதிகளின் இரண்டு நீதிபதிகளே ஒத்த கருத்தைத் தெரிவித்தனர். மேற்கண்ட தீர்ப்பு குழப்பத்த ஏற்படுத்திவிட்டது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார். இவ்வாறு ஆங்காங்கே தன் விமர்சனங்களால் உச்ச நீதிமன்றத்தின் பார்வைக்குச் சூடு வைக்கிறார். முன்னேற்றத்திற்கு தண்டனையா என்ற கேள்வியை ஆசிரியர் முன்வைக்கிறார். “சமூகநீதி -பன்முகங்கள்” என்ற ஏற்கனவே வெளிவந்த நூலின் தொடர்ச்சியாக இந்த நூலைப் பார்க்க வேண்டும். சமூக நீதிக்காகப் போராடும் அனைவர் கையிலும் கட்டாயம் இருக்க வேண்டிய நூல் இது.
PENALITY FOR PROGRESS
முனைவர். நீதியரசர் A.K.ராஜன்
வெளியீடு: யுனிவர்சிட்டி பிரஸ்
தயாரிப்பு: பாரதி புத்தகாலயம்
விலை : ரூ.130/-
புத்தகம் வாங்க க்ளிக் செய்க: https://thamizhbooks.com/product/penalty-for-progress-dr-justice-a-k-rajan-rs-130/