நூல் அறிமுகம்: தமிழ்ப் பிரபா “பேட்டை” – நா.வே.அருள்தமிழ் நாவல்களுக்கு யோகம் அடிக்க ஆரம்பித்திருக்கிறது. இலக்கியத்தின் திசைக்காட்டியில் புதுப் புதுத் திசைகள் முளைக்கத் தொடங்கிவிட்டன. சென்னையை அச்சு அசலாக அதன் பிரத்தியேக மொழிப் பிரயோகங்களுடன் கதை ‘சொல்லிக்றார்’ தமிழ்ப்பிரபா.
சின்ன தறிப் பேட்டை எப்படிச் சிந்தாதிரிப் பேட்டை ஆனது என முதல் அத்தியாயத்தில் தொடங்கும் நாவல் முடிகிற வரை மனிதர்களின் வித விதமான சித்திரங்களை சென்னையின் சிறப்பு ஒலிக் குறிகளோடு ‘பிச்ருக்கார்’.
பலப் பல அதிர்ச்சியின் சித்திரங்கள் அடுக்கிவைக்கப்பட்ட நாவல்தான் பேட்டை. அங்கு வாழ்பவர்களுக்கோ இவை யாவும் அன்றாடம் நிகழக் கூடிய அலுப்பூட்டும் வாழ்க்கைக் குவியல்கள். அதிகாலையில் அவர்கள் எடுத்துக் கொள்கிற டீ பொறையிலிருந்து ராத்திரி “சர்க் அடிச்டு வர்ற வரைக்கும்” எந்த நேரத்திலும் ஆபத்துகளை எதிர்கொள்பவர்களாக இருக்கிறார்கள்.
“கிரேன் கொக்கி பின்னந்தலையில் அடிச்சி தொர்சாமி…”
“த்தா உனுக்கு ன்னா தைரியந்தா தீபா மேல கை வெப்பே? ன்னொரு வாட்டி அவ மேல கை வெச்சே த்தா டாரா கீச்சிடுவேங்”
“பெரிய கல்லைத் தூக்கி வந்து அவர் வயிற்றின் மீது போட்டான். மலம் மொத்தமும் ரத்தத்துடன் குழைந்து விநோதப் பிராணியைப் போல வாய் கோணி மரித்துப் போனார்”
இவையெல்லாம் சாம்பிள்கள்.
சென்னையில் எந்த நெரிசலான தெரு முனையிலும் அல்லது மருத்துவ மனை முக்கில் கூடையை எதிரே வைத்து சாப்பாடு விற்கிற அகலப் பொட்டு வைத்து கிளியாம்பாளைச் சந்தித்திருக்க முடியும். குடித்துவிட்டுத் தள்ளாடிப் போகும் குணசீலனையும்தான். கூடவே குணசீலனுடன் காலம் முழுக்கக் குப்பைக் கொட்டுகிற ரெஜினா. நாலைந்து அராத்துகள் சேர்ந்து சுற்றினால் அண்டா சுருட்டியாய், பாலுவாய், ரூபனாய், சௌமியனாய் இருக்கக்கூடும். எல்லோரும் சந்திக்கிற இந்த மனிதர்களுக்குத் தன் பொம்மலாட்டத்தில் விதவிதமான கயிறுகளைப் பிணைத்துவிடுகிறார் தமிழ்ப்பிரபா. ஆனால் பேட்டை என்னும் பொம்மலாட்டத்தில் அவரது கைக் கட்டுப்பாட்டை மீறித்தான் வேஷங்கட்டி ஆடுகிறார்கள் இந்த மனிதர்கள். தமிழ்ப்பிரபா கூப்பிட்டாலும் வரமாட்டார்கள். யோசேப்பையும், ஆமோஸையும் பார்க்க வேண்டுமென்றால் நாம் டாஸ்மாக்குக்குத்தான் போயாக வேண்டும்.
ஆபத்துகளை அவர்கள் எதிர்கொள்ளும் விதமும் அலாதியானது. காலம் காலமாகப் பொத்திப் பொத்தி வளர்த்த பிள்ளை மிக மோசமாக போதையில் வழிமாறி திடீரென அப்பாவுக்கு முன்பே செத்தும் போகிறான். மகனை இழந்தாலும் நோய்ப் படுக்கையில் கிடக்கும் கணவனுக்குச் சொல்லக் கூடாது என்னும் உறுதி அசாத்தியமானது. சாப்பிடத் தொடங்கும் முன் சில பருக்கைகளைத் தரையில் போட்டுவிட்டு “சௌமிக்குப் பா” என்று மூக்கை உறிஞ்சிவிட்டுத் தின்ன ஆரம்பித்தாள். ஆபத்துகளையும் அதிர்ச்சிகளையும் அலட்சியமாகக் கடக்கத் தெரிந்திருக்கிறார்கள். பூங்கொடிக்குத் தன் துயரம் பழகிவிட்டது என்று நாவலாசிரியர் எழுதுகிறார். பூங்கொடிக்கு மட்டுமல்ல, அங்கு வாழ நேர்ந்த எல்லோருக்குமே துயரம் பழகிப் போகிறது.
அப்பா லாரன்ஸ் மிகவும் கிரிட்டிக்கலான கண்டிசனில் மருத்துவ மனையில் கிடப்பார். மகன் சௌமியன் ரூபனிடம்…“ன்னா சர்க்கு அடிக்கலாமா?” என்பான்.
“அயிய. அடிக்கலனா வேலிக்காவாதுப்பா” சௌமியனே சொல்வான்.
சௌமியனின் மரணத்திற்குத் தானும் ஒரு வகையில் காரணம் என்று நினைத்தது ரூபனை வெகுவாகப் பாதித்தது. இந்த வரியிலிருந்து நாவலின் மிக முக்கியமான திருப்பம் தொடங்குகிறது. நண்பனுக்கான உண்மையான நேசிப்பு ரூபனின் வாழ்க்கையை அடியோடு மாற்றிப்போட்டது. ஒரு வகையில் ரூபனை அவனது காதல்தான் காப்பாற்றுகிறது என்று சொல்லலாம்.
“நான் சாவறதுக்கு முன்னாடி நீ வெள்ளக்காரங்ககூட மேடையில எறி பிரசங்கம் செய்ணுங். அதப் பார்த்துட்டுத்தாங் என் கட்ட வேவுங்” என்று சொன்ன சௌமியன் எப்படி ஹார்ட் அட்டாக்கில் செத்துப் போனான் என்று திரும்பத் திரும்ப ரூபன் தனக்குத் தானே கேட்டுக்கொள்கிறான். குடியிருப்புகளில் சர்வ சாதாரணமாக இருக்கும் நட்பின் அடர்த்திதான் “மச்சாங் நம்ம தவுடாசோறு பாலு வேர்ல்ட் டைட்லு ரன்னர் அஷ்டான்டா தெரிமா தெரியாதா?” என்று யோசேப்பு ரூபனிடம் சொல்ல வைத்தது.
திறமையின் உச்சத்திலிருந்த மனிதர்களை அவரவர்களுக்கான சிகரங்களை ஏறவிடுவதில்லை இப்படியான குடியிருப்புகள். இல்லையெனில் அவ்வளவு தத்ரூபமாக வரையும் பூபாலனால் சூழலை மீறி வாழவே முடியாது. எல்லோரையும் சாராயமும் போதையும் விழுங்கி ஏப்பம் விட்டுவிடுகின்றன. கடலில் ஒருவகை மீன் மனிதர்களின் சதைகளை பிய்த்துத் தின்றுவிட்டு வெறும் எலும்பு மிச்சங்களை விட்டுவிடுமாம். இப்படியான மீன்களால் நிறைந்தவைதான் இவ்வகையான குடியிருப்புகள். அதனால்தான் தன் மகனை யாருடனும் பழக விடாமல் பாதுகாப்பாக வளர்க்க நினைக்கிறார் லாரன்ஸ். மகன் நண்பனுடன் சேர்ந்து கஞ்சா, ஊசி, பி.எஸ் என விதவிதமான போதைகளுக்கு அடிமையாகிறான். மிகப் பிரபலமான கேரம் சாம்பியன் வாழ்க்கையின் ஆட்டத்தில் தோற்றுப் போகிறார். பிழைக்க முடியாது என்று தெரிந்தும் முப்பத்தெட்டு லட்சத்தை விழுங்குவதற்காக மனசாட்சிக்கு மரணஊசி போடுகிறது மருத்துவமனை.
மக்களின் சுக துக்கங்களில் கலந்துகொண்டு முதல் யேசு சபையைக் கட்டிய பாதிரியாருக்கு அடுத்தபடியாக வருபவனோ சுயநலமும் காமக் குரோதமும் மிக்கவனாக இருக்கிறான்.
நாவலில் குறுக்கும் நெடுக்குமாக ஏராளமான நிகழ்வுகள். விதவிதமான சித்திரங்கள். சென்னை நகரத்தின் விளிம்பு நிலை மனிதர்களின் அச்சு அசலான வாழ்க்கை பதிவாகியிருக்கிறது ரத்தமும் சதையுமாக. குற்றமும் தண்டனையுமாக. பரிவும் பாசமுமாக. நட்பும் நக்கலுமாக. அந்தப் பகுதியில் மொத்தம் இருபத்தியாறு சபைகள் இருந்தும் அவர்களது பாவங்கள் கழுவப்படுவதற்கு எந்த யேசுவும் தனது ரத்தம் தரத் தயாரில்லை போலும்.
தமிழ்ப்பிரபா - Tamil Prabha (Author of பேட்டை)
தமிழ்ப்பிரபா – Tamil Prabha (Author of பேட்டை)
சென்னை மாகாணத்தை ஆளுநர் பிட் நிர்வகிக்கிற போதுதான் லண்டனில் காலிக்கோ பிராண்டு வகைத் துணிகளுக்கு மவுசு கூடியது. டன் கணக்கில் துணிகள் தேவை. அதற்காகத்தான் கிராமங்களிலிருந்து நைச்சியக் கட்டாயத்தின் பேரில் நெசவாளர்கள், நெசவாளர்களுக்குத் தோதாக துணி வெளுப்பவர்கள், சாயம் தோய்ப்பவர்கள், பூஜைகள் செய்ய பிராமணர்கள், சதிராட்டக்காரர்கள், நாடகக் கணிகைகள், நூல் நூற்பவர்கள், மற்ற ஏவலாளர்கள், கழிவு அள்ளுபவர்கள் ஆகியோரைக் கூட்டிவந்து குடியமர்த்தினார்கள்.
பெரியமேட்டிற்குத் தெற்குப் பகுதியில் கூவத்துக் கரையோரம் சின்னச் சின்னத் தறிக்காரர்களுக்காக உருவான இன்றைய சிந்தாதிரிப் பேட்,டை முன்பொரு காலத்தில் சுங்கு ராமருக்குச் சொந்தமாக இருந்தது. அவரிடம் ராமர் தோட்டத்தைப் பறித்துக் கொண்டதால் குனிந்து கைநிறைய மணலை அள்ளி வீசுகிறார். மண்ணில் புரண்டார். பெருங்குரலெடுத்துக் கூவிய அவரது குரல் இன்று சிந்தாதிர்ப் பேட்டை முழுக்க ஒவ்வொருவர் குரலிலும் எதிரொலிக்கிறதோ?
சிந்தாதிரிப் பேட்டை அனுபவத்தைச் சென்னை நகர் முழுவதுக்குமாக விரித்தெடுக்கிறபோதுதான் இந்த நாவல் வெற்றியடையும். சிந்தாதிரிப்பேட்டை அனுபவம் என்பது சென்னை நகரில் கூவத்து ஓரம் வசிக்க நேர்ந்தவர்களின் அனுபவம் அன்றி வேறென்ன?
வரலாற்றைத் தீர்மானிக்கும் விளிம்புநிலை மக்களுக்கு வரலாற்றில் இடமிலலை. தமிழ்ப்பிரபா பேட்டையின் மூலம் தன் இலக்கியத்தில் இடமளித்திருக்கிறார்.


நூல்: பேட்டை
ஆசிரியர்: தமிழ்ப் பிரபா
விலை: ₹371.00 INR*·
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
நா.வே.அருள்