‘ஆணுரிமை பேசமாட்டீர்களா?’ என்ற கேள்வியோடு ஆண்களோடு பேச ஆரம்பிக்கிறார் ச.தமிழ்ச்செல்வன். ‘எசப்பாட்டின்’ ஒவ்வொரு பக்கங்களும் பத்திகளும் தொடர்களும் சொற்களும் எழுத்துகளும் ஆண்களோடு பேசுகின்றன; முகப்பு அட்டையும் கூட. சிலபோது கடுமையான கோபத்துடனும் சிலபோது மென்மையான எடுத்துரைப்புகளுடனும் ஆண்களை அணுகியுள்ளார். தமிழ்ச்செல்வன். இனி தோழர். தமிழ் இந்து – திசையின் ஞாயிறு இணைப்பிதழான பெண் இன்று இதழில் 52 வாரங்கள் எழுதிவரப்பட்ட தொடரின் தொகுப்பாக எசப்பாட்டு இன்று நமது கையில். முதல் பதிப்பு 2018லேயே வெளிவந்திருந்தாலும் கால, சூழல், அரசியல் தேவை கருதி 2019 ஏப்ரலில் மீண்டும் பாரதி புத்தகாலயம் இதனை மறு அச்சிட்டுள்ளது.

பெண்கள் பேசும், பெண்களைப் பற்றிப் பேசும், பெண்களுக்காகப் பேசும் பல நூல்கள் நமது கவனத்திற்கு வந்திருக்கலாம்; நமது கருத்தை ஈர்த்திருக்கலாம். ஆனால் எசப்பாட்டு ஒரு புதிய முறையில் பெண்ணியக் கருத்துக்களை முன்வைக்கிறது. ஆண்கள் பெண்ணியம் பேசலாமா? அவ்வாறு பேசினாலும் ஆணாதிக்கக் கருத்துநிலைதானே அதில் வெளிப்படும் என்று பொதுவான குற்றச்சாட்டு அங்கு வைக்கப்படுவதுண்டு. ஆனால் முற்றிலும் மாறுபட்ட நிலையில் பெண்கள் பற்றி மிகுந்த நுண்ணுணர்வோடு உள்ளார்ந்த அனுபவங்களின் பிணைப்போடு ஒவ்வொரு பகுதியிலும் அவர் பேசிச் செல்வதை எசப்பாட்டு வாசகனால் நிச்சயம் உணர முடியும்.

எதைக் கோடிட்டுக் காட்டுவதென்றே தெரியாத அளவிற்கு எசப்பாட்டின் ஒவ்வொரு தலைப்பினுள்ளும் தோழர் நிறைய பேசுகிறார். இயல்பான மணவாழ்க்கையைத் தனது துணையோடு ஆரோக்கியமாகப் பங்கிட்டுக் கொள்ள விரும்பும் எந்த ஒரு ஆணும் – பெண்களும் கூட கட்டாயமாகப் படித்திருக்கவேண்டிய புத்தகப் பட்டியலில் நாளை எசப்பாட்டுக்கு நிச்சயம் இடம் இருக்கும். தன்னையறியாமல் சமூகத்திற்குள்ளே வாழும் பெண்கள் பெண் ஆண் பற்றிய புரிதலை மேலும் தெளிவுபடுத்திக்கொள்வதற்கும் எசப்பாட்டு நிச்சயம் உதவும்.

பெண்கள் பாதுகாப்புக்கு இணையாக ஆண்கள் பாதுகாப்பு சங்கங்களும் முளைவிட்டு கிளைபரப்பி வருகின்ற இன்றைய சூழலில் இலக்கியங்களும் இதயங்களும் பேசாது தவிர்த்தவற்றை பேசத் தவறியவற்றை பேசவேண்டிய தேவை எழுந்துள்ளது. பெண்களுக்கு எதிராக வெற்று முழக்கங்கள் எழுப்பும் ஆண்கள் பாதுகாப்பு சங்கங்களின் செயலை, இதுவரை அடங்கிப்போனவர்கள் எழத்துடிக்கும்போது கேட்கும் கனத்த ஒலியில் காதடைத்துப்போன அடக்குமுறைவாதிகள் எரிச்சலடைந்து தங்கள் குரலை உயர்த்துவதாகத்தான் புரிந்துகொள்ளமுடிகிறது.

இந்தக் கோபம், இந்த எரிச்சல், இந்த வன்மம் அடிப்படையில் எங்கிருந்து தோன்றுகிறது என்பதற்கான காரணத்தை கண்டறிவது அவசியம். ‘உணர்வு பந்தம்’, ‘பண்பாட்டு அழுத்தம்’ காரணமாகக் கட்டிக்காக்கப்படும் குடும்பம் என்கிற அமைப்பில் ஆண்கள் எப்போதும் சிம்மாசனவாதிகளாகவும் பெண்கள் சேடிகளாகவுமே தங்கள் வாழ்க்கையை வாழ்ந்துவருகிறார்கள். பெண்கல்வி மூலம் சாத்தியமான சுயசார்ப்பு பெண்ணின் புழங்கு வெளிகளை அகலப்படுத்தினாலும் ஆண் மன அடுக்குகளில் படிந்துள்ள கறைகள் பெண் இனத்தைச் சக உயிரியாகப் பார்க்க அனுமதிப்பதில்லை என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

எப்போதும் கணவன்மார்கள் மீது வசவுச் சொற்களை வாரி இறைக்கும் பெண்கள் பற்றி இந்நூலின் பகுதி ஒன்றில் தோழர் கூறிச்செல்கிறார். பெண்கள் ஏன் எப்போதும் சுடுசொற்கள் பேசுகிறார்கள்? சில நேரங்களில் மிகக் கடுமையான ஆயுதமாக அவை எதிரே இருப்பவரைத் தாக்கிவிடுகிறதே என்ற கேள்வி நம் எல்லோர் மனதிலும் எழுவதுண்டு. விளிம்புநிலைப் பெண்களுக்கு அவர்களது சொற்களே ஆயுதங்கள் என்று எழுத்தாளர் பாமா குறிப்பிட்டது இங்கு நினைவுக்கு வருகின்றது. தங்கள் இணையர் மீது மற்றவர் பரஸ்பரம் காட்டும் வெறுப்பும் ஏதோ ஒரு விதத்தில் அவர்களுக்குள் உணர்வுப்பூர்வமான பிணைப்பை உருவாக்கும் என்கிற உண்மை இதன் பின்னால் ஒளிந்துள்ளதாக இதனை நாம் புரிந்துகொள்ளலாம்.

‘நீங்கள் பெண்ணாகப் பிறந்துவிட்டோமே என்பதற்காக உங்கள் வாழ்க்கையில் மிகவும் வருந்திய தருணம் எது?’ என்று தோழர் கேட்கும்போது ஒன்றல்ல நூறு என்று ஒவ்வொரு பெண்களும் தன்னிலை விளக்கம் கூறத் தயாராகுவதைத் தவிர்க்கமுடியாது. பல ஆண்டுகாலப் போராட்டங்களுக்குப் பிறகு பெண் இனம் குடும்பம் என்ற புதைசேற்றுக்குள்ளிருந்து தன்னைத் தானே விடுவித்துக்கொண்டு வெளிக்கிளம்பி, பொருளாதாரத் தற்சார்பு கொண்டவளாகத் தன்னை மாற்றிக்கொள்ளும் அளவிற்கு உயர்ந்துள்ளது.

ஆனாலும் ‘சிம்மாசனத்தை விட்டு இறங்காத ஆண்களால்’ அங்கும் சில சிக்கல்களை அவர்கள் எதிர்கொள்ளத்தான் செய்கின்றனர். தன்னை எஜமானர்களாகவே பாவித்து இயங்கும் ஆண்களால் இதனை ஏற்க முடிவதில்லை. பெண் தனது சார்பின்மையை வெளிப்படுத்தும் சூழல்களைச் சில ஆண்கள் வெறுப்புணர்வு மூலமும் சில ஆண்கள் பச்சாதாபத்தின் மூலமும் கையாள்கிறார்கள். பெண் இனம் மீண்டும் அதே சேற்றுக்குள் தன்னைப் புதைத்துக்கொள்ளும் அபாயம் இங்கு ஏற்பட்டுவிடுகிறது.

இன்று திருமணங்கள் சமூகத்திற்குள் மட்டுமே உயிர்ப்புடன் உள்ளன. அப்படியான திருமணங்கள் பற்றிப் பேசும்போது ‘இயக்கங்கள் நடத்திவைக்கும் திருமணங்கள் மனுசனுக்கும் மனுசிக்குமானவையாக அமைவதுண்டு’ (2019:32) என்கிறார் தோழர். மிகச் சிறிய வரிகள். ஆனால் மிகப்பெரிய அர்த்தப்பொருண்மையுடைய வரிகள். மனிதகுலத்துக்குத் தற்போது தேவைப்படுகின்ற வரிகள்.

சல்லேகனை என்கிற சமண சித்தாந்தத்தைப் பற்றித் தோழர் பேசும்போது, இதற்கான இடம் இதுவா என்று நம் சிந்தனை விரிவடைவதற்குள் பெண் உடல் பற்றிய ஆணின் வடிவமைப்புகளை அல்லது செதுக்கல்களையும் அதற்கு இடம் கொடுக்கும் பெண்ணின் அகமன உணர்வுகளையும் விரித்துப் பேசுவதாகக் கட்டுரை அகலம் கொள்கிறது. நமது அன்னையரோ, சகோதரிகளோ உணவு உண்ணாமல் பட்டினிக்கிடப்பதைப் பல சூழல்களில் பார்த்துப் பழகிய நமக்கு அதன் பின்னணியில் உள்ள கோபத்தை, அதிருப்தியை, எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கான ஆயுதமாகப் பெண்கள் இதனைக் கையில் ஏந்துவதை எடுத்துக்காட்டுகிறார்.

‘கொஞ்சிப் பேசுவது, சிணுங்கிச் சாதிப்பது, திட்டிச் சண்டை போடுவது, வீட்டு வேலைகளை வழக்கமான ஒழுங்கில் செய்யாமல் ஏனோ தானோ என்று செய்வது, பேசாமல் மௌனத்தில் உறைந்து கிடப்பது…’ (2019:36) என்று அவர்கள் கைப்பிடிக்கும் ஆயுதங்களை வீட்டு ஆயுதங்களாக அடையாளப்படுத்துகிறார். இதை இப்படியெல்லாம் கூடக் கூறலாமா என்ற எண்ணம் நமக்குத் தோன்றுகிறது. நூலில் மௌனம் குறித்தும் ஒரு பகுதி அமைந்துள்ளது. மௌனம் எப்போதும் வலிமையான ஆயுதம்தான் அதை யார் பயன்படுத்தினாலும் இருவரையும் தாக்கும் வல்லமை அதற்கு உண்டு என்பதைப் பல சான்றுகள் வழியே விளங்கச் செய்கிறார். இப்போது ’மொளனிகள்’தான் பெருகிவருகிறார்கள்.

பேசிப்பேசிச் சலித்துப்போய் நடைமுறை வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் காணப்பெறா பகுதிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடும் ஒன்று. இதில் என்ன பேசிவிடப்போகிறார், புள்ளிவிவரங்களுக்குள் நம்மைப் புதைத்துவிடப்போகிறாரோ என்று பக்கங்களைப் புரட்டும் நமக்கு ஆண்கள் பொதுவெளிகளை அடைத்துக்கொண்டதற்கும் பெண்களின் புழங்குவெளி சுருங்கிப் போனதற்குமான காரணத்தை வரலாற்றுக் கண்ணோடு அறிவியல்பூர்வமாக நமது பார்வைக்குக் கொண்டுவருகிறார்.

பொதுவெளிகளை ஆண்கள் முழுமையாக அபகரித்துக்கொண்டது ஒரு காலத்தில் என்றால் இடமெடுத்து ஆக்கிரமித்துக்கொண்டது மற்றொரு காலத்தில். இப்படியான சூழலுக்குள் பழகிய பெண்கள் தங்களையும் தனக்கான தேவைகளையும் சுருக்கிக் கொள்வதைத் தவிர வேறு வழி அறியாதவர்களாய் உள்ளனர். ‘பெண்ணுக்குரிய இடத்தை இந்த நூற்றாண்டிலேனும் திருப்பித் தந்துவிட வேண்டும் என்கிற நியாய உணர்வுக்கு ஆண் மனம் திரும்ப வேண்டும்’ (2009:46) என்கிற எதிர்பார்ப்பு, ஆசை நமக்குள்ளும் எழுகிறது.

பல நூறு ஆண்டுப் பழக்கத்தைத் தவிர்க்கமுடியாமல் தவிக்கும் ஆண்முறைப்புப் பற்றிக்கூடப் பேசுகிறார். இந்த ஆண்முறைப்பு, பெண்முறைப்பு என்ற சொற்களைத் தமிழ்ச் சமூகத்திற்கு தோழரின் கொடையாகக் கருதமுடியும். இந்தச் சொற்களில் எத்தனைத் தலைமுறைகளின் உளவியல், பண்பாட்டு ஒடுக்குமுறை, பெண் உணர்வு வெளிப்பாட்டின் செதுக்கப்பட்ட சித்தாந்தங்கள் எவ்வளவு நுண்மையாக மறைத்துவைக்கப்பட்டுள்ளன.

‘தாய்மையின் அழித்தொழிப்பில்தான் பெண்மை உயிர்த்தெழும்’ (2009:52) என்ற முழக்கம் புதுயுகப் பெண்களின் குரலாக இருந்தாலும் இதனை இயல்பாக நம்மால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. பெண்பிறப்பு பற்றிப் புளகாங்கிதம் அடைந்த கவிமணியின் குரல் இங்கு அடிபட்டுப்போய்விடுமே என்பதற்காக அல்ல. பெண்மையின் மேன்மையை அதன் உண்மையை மழுங்கடிக்கும் பம்மாத்துக் குரலாகவே தாய்மை ஒழிப்புக் குரல் நமக்குக் கேட்கிறது. பெரியார் பெண்களைத் தங்கள் கருப்பையை வெட்டிஎறியச் சொன்னதற்கும் இவர்களின் குரலுக்கும் இடையே உள்ள தொனி மாற்றம் நாம் புரிந்துகொள்ளக்கூடியதுதான். இதற்கு ‘இசங்களின்’ அரசியலை அறிந்திருக்கவேண்டிய அவசியம் இல்லை.

‘குழந்தையைப் பத்துமாதம் சுமந்து பெற்றுப்போடுவது, தாய்ப்பால் ஊட்டுவது ஆகிய இந்த இரண்டு வேலைகளைத்தவிர, குழந்தை வளர்ப்பின் பாக்கி அத்தனை வேலைகளையும் கணவன் தன் வேலையாக மனப்பூர்வமாக ஏற்கவேண்டும். சமையல் மற்றும் வீட்டு வேலைகளில் சரிபாதியை ஆண் ஏற்க வேண்டும் (இவையெல்லாம் கற்றுக்கொள்ள முடியாத தொழில் நுட்பங்கள் இல்லையே) அப்போதான் கல்யாணம். இதைச் சட்டம் ஆக்கி நடைமுறைப்படுத்தவேண்டும்’ (2009:53) என்ற தோழரின் வாசகங்களைப் படிக்கும்போது இப்படியெல்லாம் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்.

ஆனால் ஆண் மனம் மாறுவதற்குப் பல யுகங்கள் ஆகுமே. ஆனால் அங்கும் ஒரு சிக்கல் ஏற்படும். இதனை ஆண் அடிமைத்தனம் என்று குரல்கொடுத்துக் கிளம்பிவிடுவார்கள் அல்லவா. ‘தாய்மை நிலை என்று சொல்ல வந்தால் இரு கட்சிக்கும் அதனைப் பொதுவில் வைப்போம்’ (2009:53) இந்த வரிகளுக்காகத் தோழருக்கு ஒரு ‘ஸ்மைலி’  போடலாம் என்று கைகள் குறுகுறுக்கின்றன.
ஆண்களின் சிந்தனை, எண்ண ஓட்டம், மன உணர்வு பற்றியெல்லாம் இவ்வளவு பேசிவிட்டாரே என்ற எண்ணம் தோன்றும்போது நாம் புத்தகத்தின் சில பத்துப் பக்கங்களைத்தான் கடந்திருப்போம். இன்னும் எதைப்பற்றிப் பேசிவிடப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பும் பேசவிருக்கும் செய்திகள் குறித்த வியப்பும் நமக்கு நெற்றி நெகிழ்வை ஏற்படுத்துகிறது.

‘சந்தேகம் பெண்ணுக்கு வந்தால் வார்த்தைகளாகவும் வசவுகளாகவும் அழுகையாகவும் வெளிப்படுகிறது. ஆணுக்கு வந்தால் அது எளிதாக வன்முறை வடிவம் எடுக்கிறது ஏன்?’ என்கிறார் தோழர். அதிகாரபலம் உள்ள ஆண் எதையும் குற்ற உணர்வு இல்லாமல் மனம்போனபோக்கில் செய்யும்படியான ஆதிக்கநிலையைப் பெற்றிருப்பதை இதற்குப் பதிலாக அளிக்கத்தோன்றுகிறது. நமது முந்தைய, பிந்தைய, இன்றைய தலைமுறையினரோடு ஆழமான உரையாடலுக்கு உட்படுத்தவேண்டிய ஒரு முக்கியமான கேள்வியை தோழர் முன்வைக்கிறார்.

பெண்விடுதலைக்கு ஆண்மை என்கிற தத்துவம் அழிக்கப்பட்டால் மட்டும் போதுமா?, ‘பெரியவனாகப் பெரியவனாக ஆணுக்கு வீட்டிலும் வெளியிலும் கிடைக்கும் சுதந்திரத்தின் அளவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஆனால் பெண் குழந்தை பெரியவளாகப் பெரியவளாக அவள் சுதந்திரம் குறுக்கப்படுகிறது’ (2009:71) இந்தத் தலைகீழ் மாற்றம் ஏன் என்று சிந்திக்கவேண்டும்.
பெண்களின் உடையை ஆண்கள்தான் தீர்மானிக்கணுமா? இக்கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு பல்வேறு விவாதங்களினூடாக வெவ்வேறு வகையான பதில்கள் வெளிவந்துள்ளன.

வந்துகொண்டும் இருக்கின்றன. பெண்கள் என்ன உடை அணிந்தாலும் ஆடவர் திரும்பிப் பார்க்காத வண்ணம் ஆண்களின் கண்களைப் பழக்கிவிட முடியும் என்பதற்குச் சீனாவை ஒரு சான்றாகக் காட்டுகிறார் தோழர். கம்யூனிசச் சித்தாந்தத்தில் ஊறித் திளைத்த சீனா அந்த நிலையை எட்டுவதற்கு எதிர்கொண்ட புரட்சிகள் அதன் பின்னணியில் இருப்பதை நாம் இங்கு நினைவுபடுத்திக்கொள்வோம். ஆனால் அதே வேளையில் இந்தியா போன்ற நாடுகளில் ஆண்களின் கண்களைப் பழக்குவதற்குள் நாம் இன்னும் எத்தனைக் கூட்டுப்பாலியல் வன்புணர்வுகளைக் கடக்கவேண்டியுள்ளதோ என்ற பயமும் நம்மைத் தொற்றிக்கொள்கிறது.

தோழர் கூறுவதுபோல, பெண்களின் ஆடைக்கும் ஆண்களின் பாலியல் தூண்டலுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. நான்கு வயதுப் பெண் குழந்தையைப் பாலியல் வன்முறை செய்கிற நாட்டில் ஆடையில் என்னதான் இருக்கிறது?’ (2009:68). விருப்பத்தேர்வு செய்து நவீன ஆடைகளை உடுத்தும் பெண்கள் சிலர் அதற்குமேலே துப்பட்டாவையோ ‘கோட்’ மாதிரியான மேலாடைகளையோ அணிந்துகொள்வதும் இசுலாமியப் பெண்கள் தங்களை நன்கு அலங்கரித்துக்கொண்டு இறுதியில் புர்காவிற்குள் தங்களை ஒளித்துக்கொள்வதற்கு ஒப்பான செயல்களும் இங்கு நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

கணவன் சார்ந்த உறவுகள் பற்றிப் பேசும்போது, ‘உறவுகள் எனும்போது மாமியார் – மருமகள், நாத்தனார் என்கிற இந்த உறவுகள் பகை உறவுகளாகவே காலம் காலமாக நம் சமூகத்திலும் இலக்கியங்களிலும் சித்தரிக்கப்பட்டு வருகின்றன. கணவன் என்கிற ஆணைச் சார்ந்தவைதான் இந்த உறவுகள் என்பது எப்போதும் சொல்லப்படுவதே இல்லை. அந்தச் சிக்கலிலிருந்தும் ஆணுக்கு விடுதலை கொடுத்துவிடுவார்கள்’ (2009:72) இதுகுறித்து நமது குடும்பங்களுக்கள் பேசியாகவேண்டும்.

‘யாரும் பார்க்கவில்லை என்கிற சூழலில் ஒன்றாகவும், மற்ற நேரங்களில் ஒன்றாகவும் இரட்டை நிலையில் ஆண்மனம் இயங்குகிறது’ (2009:77) என்று தோழர் குறிப்பிடுவதைச் சற்றுத் தெளிவுபடுத்தி/ திருத்தம்செய்து கூறலாம் என்று தோன்றுகிறது. இங்கு ஆணை மட்டும் குற்றவாளியாக்கிக் கூண்டில் ஏற்றவேண்டிய அவசியமில்லை. இந்தப் கட்டற்ற பாலியல் உணர்வு வெளிப்பாட்டிற்குப் பெண்களும் விதிவிலக்கல்ல என்பதற்குச் சான்றுகாட்டும் விதாமாகச் சம்பவங்கள் பல நம் காதுகளுக்கு எட்டுவதை இங்கு கவனப்படுத்திக் கொள்ளவேண்டும். இது மனித இயல்பாகவே இன்று மாறியுள்ளது.

சொல்லப்போனால் விலங்குகளும்கூட அப்படித்தான். ஆனால் ஆணினம் தன் மன அவசத்தை உடனுக்குடன் தீர்த்துக்கொள்ளும்படியாகப் பன்னெடுங்காலமாகப் பழக்கப்பட்டுவிடபடியால் இப்படியான சம்பவங்களின் குற்றப்பட்டியலில் ஆண் முதன்மையான இடத்தில் இருக்கிறான். இந்தப் பழக்கத்தை மாற்றிக்கொள்வதற்கான பயிற்சியை அளிக்கவேண்டியது அவன் சார்ந்த குடும்பம் சமூகத்தின் கடமை என்பதில் நமக்கு மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.

ஆண்களின் கவனத்திற்கு வராத பெண்களின் உடலியல், உடல்நலம் சார் பிரச்சனைகளையும் எசப்பாட்டில் நமது கவனத்திற்குக் கொண்டுவருகிறார். ‘குழந்தைகளுக்கும் வீட்டுத்தலைவருக்கும் உடம்பு முடியாமல் போனால் உடனே மருத்துவமனைக்குப் போவதும், மனைவிக்கு முடியாமல் போனால் பதறி ஓடாமல் கைப்பக்குவம் பார்ப்பதும் எங்கள் குடும்பத்தைப் போலவே பல குடும்பங்களின் ஆளும் பண்பாடாக இருப்பதைப் போகப்போக அறிந்துகொண்டேன்’ (2009: ) என்ற தோழரின் வார்த்தைகளுக்குச் சரியான புரிதல் என்று ஒரு சபாஷ்போடலாம். இவர் வருந்துவதைப் போல ஆண்களின் கவனத்திற்கு வராத ஆனால் ஆண்/ கணவன்/ தந்தை/ சகோதரர்களின் சிந்தனா தூரத்திற்குக் கொண்டு சேர்த்துவிடவேண்டும் என்று முயன்று தோற்றுப்போன பிரச்சனைகள் பல இன்னும் பெண்களைச் சுற்றித்தான் வட்டமடித்துக்கொண்டிருக்கின்றன.

’காமம்’ பொதுவெளியில் பேசத்தகுதியற்றது என்ற எல்லையைக் கடக்கும் முயற்சியில் தாம்பத்தியம் பற்றியும் பேசுகிறார் தோழர். தாம்பத்தியத்தில் சமத்துவம் ஜனநாயகம் என்பதெல்லாம் இல்லாத நாடு இந்தியா என்று கூறுவதில்தான் இந்திய தமிழ்ப் பண்பாடு அடங்கியுள்ளது என்ற குரல்களால் வழிநடத்தப்பட்டவர்கள் நாம்.

ஆனால் உழைக்கும் பெண்களிடம் வெளிப்படும் பாலியல் உணர்வுசார் வெளிப்பாடுகள்கூட மேல்வர்க்கப் பெண்களுக்கு வாய்க்கவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. சமூகத்தில் அவர்களின் மீது கட்டப்பட்டுள்ள உயர்ந்தவர் என்ற பிம்பம்தான் அதனை இயக்குகிறது. அந்தத் திரையை விலக்கித் தன்னை வெளிப்படுத்த அந்தப் பெண் இனம் தயக்கம்காட்டுகிறது; அல்லது அந்த உணர்வு சில வேளைகளில் ஆதிக்க உணர்வால் தடுக்கப்படுகிறது.

பல்வேறு கருத்துநிலைகளில் பெண் ஆணுக்கு இணையானவள் அல்ல என்ற கருத்தாக்கம் பலநூறு ஆண்டுகளாக நமது மூளைச் சுவர்களில் பதியவைக்கப்பட்டுள்ளது பற்றியும் பேசுகிறார் தோழர். ‘வரலாற்றில் பெண்களும் பெண்களின் வரலாறும்’ என்பதாக அவர் அதனை வடிவமைத்துக் கொண்டுள்ளார். ஆண்கள் வெளியிலும் பெண்கள் வீட்டிலும் புழங்கப் படைக்கப்பட்டவர்கள்; அதுவே இயற்கையின் தகவமைப்பு என்று நம்பப்படுகின்ற கருத்தாக்கங்களுக்கு மத்தியில் இதனை மறுதலித்துப் புறப்படும் பெண் உலகின் செயல்பாடுகள் நிகழ்த்தரிய சாதனைகளாக அதீதப் புனைவுகளாக்கப்படுகின்றன.

இவை பெண்களை பலவீனமானவர்களாகக் கொண்டு நிறுத்தும் மாய வலைகள். இந்தப் போக்கிற்கு மனிதன் கடந்துவந்த 15,000 ஆண்டுகால வரலாறுதான் பின்னணியாக இருக்கிறது. எனவே தோழர் கூறுவதுபோல வரலாற்றை நேர்செய்வது அவசியம்.

எது அழகு? என்ற கேள்வி கொடுக்கப்பட்டால் கலவையான பதில்கள் நம்மிலிருந்து புறப்படும். ஆனால் பெண் தன்னை அழகுபடுத்திக்கொள்வதுகூட ஆணாதிக்கத்தின் ஒரு அம்சமா? என்று கேள்வி கேட்பவர்களுக்கு ஆம் என்று தோழரோடு சேர்ந்து நானும் ஆமோதிப்புக் குரலெழுப்பவே விரும்புகின்றேன். ஏனென்றால் அழகு பற்றிய நமது கற்பிதங்கள் பெண் தன்னை பலமானவளாக உணர்வதற்கான கருவிகளுள் ஒன்றாக பார்ப்பதற்கு உதவுவதில்லை; அந்தப் பிரக்ஞை இன்று பலருக்கு இல்லை.

அது ஆணின் உடைமைப் பொருளாகப் பெண்ணைப் பார்க்க அல்லது அவனுடனான பிணைப்பை மேலும் ஸ்திரப்படுத்திக் கொள்வதற்கான ஆதாரமாக மட்டுமே பார்க்கப்படுகிறது. சாமுத்திரிக லட்சணம் என்ற உடலுறுப்புகள் அமைந்திருக்கவேண்டிய அமைப்பு குறித்த தத்துவத்தை விளக்கும் நூல் பெண்களைக் குறிவைத்து எழுதப்பட்டது என்பதை நம்மால் மறுக்கமுடியாதல்லவா. ஏன் ஆணுக்கும் இத்தகைய இலக்கணம் எழுதப்பட்டிருந்தாலும் அது ஆண் அழகின் அளவுகோலாக, பேசுபொருளாக ஆக்கப்படுவதில்லை.

சர்வ லக்ஷணமும் பொருந்தியவளாக, ‘சாமுத்திரிகா பட்டு உடுத்தியவளாக’ பெண் மட்டுமே ஏன் தொடர்ச்சியாக அடையாளப்படுத்தப்படுகிறாள்? என்று நாம் என்றுமே கேள்வி கேட்க விழைந்ததில்லை. அழகு என்பது தனது உள்ளார்ந்த மனம், எண்ணம் சார்ந்த வடிவமாகத் தன்னை வெளிப்படுத்துவதிலிருந்து தனக்கு விலக்கு அளித்துவிடுவதைப் பெண்ணே உணராத அளவிற்குப் பெண்களின் ஆழ்மனதிற்குள் அதன் உண்மை முகங்கள் புதைக்கப்பட்டுவிட்டன.

‘மேலே குறிப்பிட்ட கதைகளில் எல்லாம் பெண்கள் ஆண் வேடம் பூண்ட பின்னர்தான் வீரத்தைக் காட்ட முடிந்தது’ (2009:99) இந்த வரிகள் அவ்வளவு எளிதாக நாம் கடந்து செல்லக்கூடிய வரிகள் அல்ல. ஜோன், வெள்ளையம்மாள், மணலூர் மணியம்மாள், ஜான்சிராணி லட்சுமியாய், கிட்டூர் ராணி சென்னம்மா என்று முந்தைய வரலாறுகளை எடுத்துக்காட்டும் தோழரின் குறிப்புகளை நின்று நிதானித்து கவனித்து அவர்களோடு சமகாலப் பெண் தோழர்களையும் ஒப்பிட்டுப்பார்க்கும்போது இதனை நம்மால் உணரமுடியும்.

ஒரு பெண் சமூகத்தின் அங்கமாக சமூகத்திற்குத் தன் பங்களிப்பை அளிக்கவிரும்பினாலோ அல்லது சமூகத்தோடு சேர்ந்து இயங்க விரும்பினாலோ குடும்பம் என்ற கட்டுக்குள்ளிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. மேலும் அவர்கள் புனைந்துகொள்ளும் உடை தன்னுடைய பெண் என்ற அடையாளத்தை மறைத்து அவளை பலமுடையதாக மாற்றுவதாக எண்ணிய உளவியல்தான் இதன் மையச் சரடு.

‘பெண்ணின் உடல் என்பது ஒரு இனத்தின், ஒரு மதத்தின் ஒரு சாதியின், மானத்தின் அடையாளமாக இன்றுவரை புரிந்துகொள்ளப்படுகிறது. அவள் உடல்மீது செலுத்தப்படும் வன்முறை அவளுடைய இனத்தின் மீது செலுத்தப்படும் வன்முறையாகப் புரிந்துகொள்ளப்படுகிறது’ (2009:102).

இப்படி நாம் அறியாத அல்லது நம்மால் மறக்கப்பட்ட பெண் உடலின்மீது எழுப்பப்பட்ட வரலாறுகளை கோடிட்டுக் காட்டுவதன் மூலம் பல ஆண்களின் மனதில் தோழர் கல்லெறியத் தவறவில்லை. ‘நம் முழுச் சக்தியையும் திரட்டிக் காரி உமிழ்வோம் இந்த வரலாறுகளின் மீது’ (2009:104). பெண்உடல்மீது எழுதப்பட்ட வரலாற்றின் மீதான தோழரின் பெருங்கோபத்தை வெளிப்படுத்தும் வரி. வாய்ப்புகள் இழந்தவர்களாக முகமிழந்தவர்களாகப் பயணிக்கும் பெண்ணினம் பற்றிய வரலாறுகள் மிகுந்த கவனத்தோடு மறைக்கப்பட்டுள்ளன.

ஆணை மையப்படுத்தும் ஆண்களால் எழுதப்பட்ட வரலாறுகளில் பெண் இனம் ஆகுதி செய்யப்பட்டதால் அவர்கள் பயணித்த தடங்களை வரலாற்றின் பக்கங்களில் நம்மால் பார்க்க முடியவில்லை.

தோழரால் எப்படி இப்படி ஆண் மன இயல்புகளை அச்சடித்து ஒளிப்படமெடுத்ததுபோல பேசமுடிந்தது என்று மருண்டுபோகவேண்டிய அவசியமில்லை. பாலின அரசியல் அழிக்கப்படவேண்டும் என்று எண்ணுகிற ஆண்களின் வரிசையில் முதலாவதாக நிற்கும் ஆணின் குரலாகத்தான் நாம் இதைப் பார்க்கவேண்டும்.

இப்படி இன்னும் பல பத்துக் குறிப்புகள் ஒவ்வொருவரும் படிக்கவிருக்கும் எசப்பாட்டின் பக்கங்களில் கவனமாகக் குறித்துவைக்கப்பட்டிருக்கும். அவை மற்றொரு தருணத்தில் வெளிப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையோடு சேர்ந்திசைப்போம் எசப்பாட்டு.
l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *